LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பஞ்சபாண்டவர்கள் - முதல் அத்தியாயம்

பஞ்சபாண்டவர்கள் 


“சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்” 


என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன். 


இருபது வயதுக்குரிய இளமையும், அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம். அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன். 


“சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள். இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார். 

 

Jothiji


வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா?” என்று சைகையால் கேட்டேன். அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார். 


“பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம். நிறுவனத்தில் மொத்தமாக ஐந்து இயக்குநர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. மனிதவளம், நிதி, நிர்வாகம், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) என்று ஒவ்வொருவரும் அவரவர் துறையில் கில்லாடி ரங்காவாக இருப்பது பிரச்சனையல்ல. பேசியே கொன்று விடுவார்கள். அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எனக்கு எப்போதும் செயலாக்கம் முக்கியம். பேசும் நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்து விடலாமே? என்று பரபரப்பாய் செயல்படுவேன். 



ஆனால் அவர்களோ ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்  வித விதமான அறிக்கையை (ரிப்போர்ட்) எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கின்ற அறிக்கைகள் இல்லாமல் வாயைத் திறந்தால்  தயவு தாட்சண்டயமில்லாமல் 'கெட் அவுட்' என்பார்கள். 


அவர்கள் விருப்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்த போதிலும் நான் பணிபுரியும் சூழ்நிலையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் என்னை அவர்கள் விரும்பும் நடைமுறைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாய் இருப்பார்கள். என்னால் அவர்கள் வட்டத்தில் பொருத்திக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறி வேர்த்து விறுவிறுத்து விக்கிப்போய் நிற்பேன்.  


அவர்கள் விரும்பும் நிர்வாகம் மேலைநாட்டு முறையைச் சார்ந்தது. ஆனால் உள்ளே நிறுவன செயல்பாடுகளோ கூவம் நதிக்கரையின் ஓரத்தில் கூவிக்கூவி காய்கறி விற்கும் நிலையில் இருக்கும். இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான பிரச்சனை ஒன்று உண்டு. உற்பத்திக்கான இயக்குநர் என்ற பதவியில் இருந்த பெண்மணி நிறுவன முதலாளியின் மனைவி. அவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். இயல்பாகவே அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். 


அவர் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்வார். "அதற்கு வாய்ப்பில்லை. இப்படித்தான் நடைமுறையில் சாத்தியமாகும்" என்பேன். அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். 


"நான் ஐஈ (INDUSTRIAL ENGINEER) துறையிடம் கேட்டுவிட்டேன். அவர்கள் சாத்தியமே என்கிறார்கள். ஏற்றுமதி தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று ஐஈ. அவர்களின் முக்கியமான பணி என்பது ஒரு ஆடையை எத்தனை பேர்கள் வைத்து தைக்க வேண்டும். எத்தனை மணி நேரத்தில் தைத்து முடிக்க வேண்டும்? எத்தனை எந்திரங்கள் கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கணக்கீடுகள் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து என்னைப் போன்ற உற்பத்திப் பிரிவில் உள்ள உயர் பதவியில் உள்ளவர்களிடம் கொடுக்க அவர்கள் சொல்வதை இம்மி அளவு கூட பிசகாமல் நிறைவேற்ற வேண்டும். காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை விட அது குறித்து எவரும் கவலைப்படவே மாட்டார்கள். தொழிலாளர்கள் வந்தார்களா? வராமல் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தார்களா? போன்ற நடைமுறை எதார்த்தங்களைக் குறித்து கவலைப்படாமல் எல்லாமே ‘புள்ளிவிபரப்புலி’ போலவே கணக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று நினைக்கும் புத்திசாலிகள் அடங்கிய கூட்டமது. எனக்கு இந்த இடத்தில் தான் பிரச்சனைகள் உருவாகும். ஐம்பது பேர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகளை எப்படி முப்பது பேர்களால் முடியும்? என்று கேட்டால் அது உன்பாடு? என்று ஒதுங்கி விடுவார்கள்.


இயக்குநராக இருக்கும் பெண்மணிக்கு ஐஈ கூட்டம் சொல்வது தான் வேதவாக்காக இருக்கும். வாக்குவாதம் செய்தால் "நான் சொல்வதை மட்டும் செய்" என்பார். நானும் விடாப்பிடியாக "அப்படியென்றால் என் பதவியில் நீங்க சொல்வதைக் கேட்கும் நபரை வைத்திருக்கலாமே?" என்பேன். 


அவர் முகம் சிவந்து விடும். அவர் கணவர் குறுக்கிடுவார். மனைவியின் பெயரைச் சொல்லி ஆங்கிலத்தில் மென்மையாகச் சொல்வார். "அவர் ஏற்கனவே டென்சன் பார்ட்டி. நீ அவருக்கிட்டே பேசப் பேச அவரும் பேசிக் கொண்டே தான் இருப்பார். உனக்கு என்ன வேண்டுமோ? அதை மட்டும் கேட்டுப் பழகு? மற்ற விசயங்களை அவரே முடிவு செய்யட்டுமே?" என்பார். மற்ற இயக்குநர்களும் எனக்கு ஆதரவாகக் களத்தில் இறங்குவார்கள். 


கணவர் சொல்லி நிறுத்தியதும் அவர் முகம் மாறத் தொடங்கும். ஏற்கனவே கோதுமை நிறத் தோலில் இருக்கும் அவரின் முகப் பொலிவில் ரத்த ஓட்டம் அதிகமாவதைப் பார்க்க முடியும். இதன் காரணமாகப் பெரும்பாலான கூட்டத்திற்கு என்னை அழைத்தால் அவர் இருக்க மாட்டார். என் திமிர்த்தனத்தையும் இந்தப் பாஞ்ச் கூட்டம் பொறுத்துக் கொள்ள முக்கியக் காரணம் ஒன்று உண்டு. அவர்கள் கேட்கும் உற்பத்தியை விட இரண்டு மடங்கு எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு. 


உற்பத்தி இயக்குநரின் அடுத்த நிலையில் இருந்த எனக்குக் கொடுத்திருந்த பதவி 'உதவி உற்பத்தி இயக்குநர்'. ஒரு பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் புரொடக்சன் மானேஜர், பேக்டரி மானேஜர் என்ற இரண்டு பதவிகள் உண்டு. அதற்கு மேலே உற்பத்திக்கான பொது மேலாளர் (ஜெனரல் மேனேஜர்) என்ற பதவியும் உண்டு. 


ஜி.எம். பதவிக்குப் பதிலாக இங்கே இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியிருந்தார்கள். முதலாளியின் பெண்மணிக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்ததே தவிர அவர் அலங்கார பொம்மையாகத்தான் இருந்தார். அவரை நான் தான் இயக்கிக் கொண்டிருந்தேன். 


இந்த சமயத்தில் ஒரு கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து விடுகின்றேன். திருப்பூர் பற்றி சில தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளுங்களேன். 


திருப்பூர் என்றால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவுக்கு வரும்? சிலருக்குப் பள்ளியில் படித்த திருப்பூர் குமரன் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு பனியன் ஜட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் என்று தோன்றும். ஆனால் இந்தியாவின் அந்நியச் செலவாணியைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான ஊர் திருப்பூர். 


ஏறக்குறைய வருடந்தோறும் 15000 கோடிகளுக்கு மேல் திருப்பூர் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்த ஊர் நம்பியிருப்பதும், நம்பிக்கையுடன் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நம்பி கை வைத்திருப்பது பஞ்சின் மேல் மட்டுமே. பஞ்சு தான் நூலாக மாறுகின்றது. நூல் தான் விதவிதமான அளவுகளில் ஆடைக்குத் தேவையான துணியாக மாற்றம் பெறுகின்றது. வண்ணங்கள் சேர இறுதியில் வெட்டி தைக்கப்பட்ட ஆடைகள் உலகில் உள்ள முக்கியமான அத்தனை நாடுகளுக்கும் விமானம்/கப்பல் வழியாக போய்ச் சேருகின்றது. 


இந்தியாவில் பஞ்சு விளைச்சல் அதிகமுள்ள மாநிலம் குஜராத். அதனைத் தொடர்ந்து ஆந்திரா. “எல்லாமே பஞ்சு பஞ்சாய் பறந்து போச்சு” என்று பேச்சு வாக்கில் பலரும் சொல்லக் கேட்டு இருப்பீங்க? இந்தப்பஞ்சு பல கோடி வர்த்தகத்தை ஆளக்கூடியது. பல கோடி மக்களையும் இந்தியாவில் இந்தத் துறை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. 


இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விளையக்கூடிய பஞ்சுப் பொதிகள் தான் திருப்பூரை வாழ வைத்து மக்களை வாழ்வில் உயர வைத்துக் கொண்டிருக்கின்றது. விளைச்சலில் வந்த பஞ்சுப் பொதிகளை தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி பொது சந்தைக்கு கொண்டு வருகின்றார்கள். பஞ்சு தன் பயணத்தை தொடங்குகின்றது. பல தொழில் நகரங்களுக்குச் செல்கின்றது. 


பல நிலைகளில் சுத்தப்படுத்தப்படுகின்றது. வகை வகையாக தரம் பிரிக்கப்படுகின்றது. பஞ்சாலைக்குச் சென்று இறுதியில் தரம் வாரியான நூலாக மாறுகின்றது. இறுதியில் இந்த நூல் தான் திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வருகின்றது.


திருப்பூருக்குள் இரண்டு விதமான உலகம் உண்டு. ஒன்று உள்நாட்டுக்கு (LOCAL MARKET) மட்டும் என்று செயல்படும் பனியன், ஜட்டி சம்மந்தப்பட்ட தயாரிப்பு வகைகள். மற்றொன்று ஹொசைரி கார்மெண்ட்ஸ் (HOSIERY GARMENTS) என்றழைக்கப்படும் (EXPORT MARKET) வெளிநாட்டு வர்த்தகம். 


இந்த வர்த்தகத்தில் பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளது. ஒவ்வொன்றைப்பற்றியும் படிப்படியாகப் பார்ப்போம். 


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடைத் தொழில் இருந்த போதிலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் திருப்பூர் என்ற ஊரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் இன்றுவரையிலும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது கசப்பான உண்மை. தொடக்கத்தில் கோயமுத்தூர் மாவட்டத்திற்குள் ஒரு சிறிய ஊர் என்கிற அளவில் இருந்த திருப்பூர் 2009 முதல் தனி மாவட்டம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்து இன்று மாநகராட்சி என்ற நிலைக்கு மாறியுள்ளது. 


ஒவ்வொரு காலகட்டத்திலும் திருப்பூர் மாறிக் கொண்டே தான் வந்துள்ளது. அதேபோலச் சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவும் மாறியுள்ளனர். இன்றைய சூழலில் பின்னலாடைத் தொழில் (KNITS) என்பது சர்வதேசத்துடன் போட்டியிட்டே ஆக வேண்டிய தொழிலாக உள்ளது. 


உலகளாவிய போட்டியில் வெல்ல வேண்டிய பலதரப்பட்ட சவால்கள் இந்தத் தொழிலுக்கு உள்ளது. சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய திருப்பூர் பின்னலாடைத் தொழில் என்பது திருப்பூரில் எப்படியுள்ளது? 

Tiruppur Jothiji

இங்குள்ள நிறுவனங்களின் நிர்வாக முறைகள், அணுகுமுறைகள் மாறியுள்ளதா? காலத்திற்கேற்ப இந்தத் தொழில் வளர்ந்துள்ளதா? இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலை எப்படியுள்ளது? இந்திய அரசாங்கம் திருப்பூரை எப்படி பார்க்கின்றது?  போன்ற பல கேள்விக்குறிக்கான பதிலை நாம் தேட வேண்டும். 


யோசித்துக் கொண்டே என் அறையை விட்டு வெளியே வந்து முதல் தளத்திற்குச் செல்லும் மாடிப்படியில் ஏறத் தொடங்கினேன்.


முதல் தளத்தில் தான் அலுவலகம் சார்ந்த முக்கியக் கூட்டங்கள் நடக்கும் அறையுள்ளது. அதே அறையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுடன் கூடிய கலந்துரையாடலும் நடக்கும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பையர் ( BUYER ) என்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கின்ற ஒப்பந்தங்களை ஆடர் (ORDER) என்கிறார்கள். பையர் என்றால் திருப்பூர் முதலாளிகளுக்கு கடவுள் என்று பெயர். பலரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்த கடவுளே காரணமாக இருப்பார்.


பஞ்சபாண்டவர்கள் எதற்காக நம்மை அழைக்கின்றார்கள்? என்பதை யோசித்துக் கொண்டே மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த நிறுவனத்திற்குள் வந்த கதை என் மனதிற்குள் நிழலாடியது. 


( பயணம் தொடரும்........)

by Swathi   on 31 Jul 2014  21 Comments
Tags: Tiruppur Jothiji   Oru Tholitchalaiyin Kurippugal   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்              
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
13-Sep-2014 04:08:57 செந்தில் said : Report Abuse
இந்தியாவின் அன்னியச் செலாவணியை தாங்கிப் பிடிக்கிறதா திருப்பூர்? இன்று இந்தியாவின் ஒரே ஒரு மென்பொருள் நிறுவனம் ஈட்டும் அன்னியச் செலாவணியின் அளவு பல திருப்பூர்களுக்குச் சமம். உண்மையில் பலாயிரம் விவசாயிகளின் வாழ்வை அழித்த ஊர் தான் திருப்பூர். இன்றும் ஏராளமான திடக் கழிவைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் ஊர் அந்த வெடி குண்டு எப்பொழுது வெடிக்கும் என்ற அறிவு சிந்தனை இல்லாத மக்கள் பணம் இருந்தால் போதும் என்று வாழ்கிறார்கள்
 
31-Aug-2014 05:11:55 ஜெ.பாண்டியன் said : Report Abuse
சிறப்பான எழுத்தாக்கம் .. எனது பெரியப்பா சில வருடங்கள் இங்கே பணியாற்றியதுண்டு அவர் சில நெஞ்சை உருக்கும் கதைகள் கூறுவார். உங்களது இந்த தொடர் மேலும் பல உண்மை நிலைகளை அறியச் செய்யும்.. நன்றி தொடர்ந்து பயணிப்போம்..
 
18-Aug-2014 00:29:05 துளசிதரன் தில்லைஅகத்து/கீதா said : Report Abuse
அருமையான ஆரம்பம். எழுத்தின் நடையும் அற்புதம். எங்களோடு பேசுவது போன்ற ஒரு நெருக்கம் உள்ளது. எவ்வளவு உழைப்பு! உங்களின் அபாரமான ஆளுமைத்திறன் உங்கள் தொழிலிலும், எழுத்திலும் பளிச்சிடுகின்றது! வாழ்த்துக்கள்! இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளோம். தொடர்கின்றோம்.
 
17-Aug-2014 18:17:57 மைதிலி கஸ்தூரி ரெங்கன் said : Report Abuse
உண்மையில் இந்த ரிப்போர்ட் தயாரிக்கிற விஷயம் ரொம்ப தான் எரிச்சலானது அண்ணா! அட! எனக்கும் கூட அப்படிதான் தோன்றும். மனதுக்கு நெருக்கமான நடை எப்பவும் போல!!
 
17-Aug-2014 05:37:48 ரத்னவேல் said : Report Abuse
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் - முதல் அத்தியாயம் - திரு ஜோதிஜி - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி.
 
17-Aug-2014 04:27:13 சுரேஷ்பாபு said : Report Abuse
சுவாரஸ்யமாகவும் இருக்கிறது! நிறைய தகவல்களும் பொதிந்து கிடக்கிறது! அருமை! தொடர்கிறேன்! நன்றி!
 
14-Aug-2014 07:25:57 தி தமிழ் இளங்கோ said : Report Abuse
இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். இதுநாள் வரை கொங்குநாட்டு மண்ணின் மைந்தர்கள்தான் திருப்பூர் தொழில் இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தேன். பஞ்ச பாண்டவர்கள் பற்றிய குறிப்பு வட இந்தியர்களும் உண்டு என்பதை கட்டியம் கூறியது.
 
05-Aug-2014 22:23:22 கார்த்திக் said : Report Abuse
எளிய நடை எதார்த்தமான சொற்கள்..... உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்..... அடுத்த அத்தியாயத்திட்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.......
 
01-Aug-2014 10:32:43 ஜோதிஜி திருப்பூர் said : Report Abuse
நண்பர்களின் உற்சாகம், விமர்சனம், கருத்துரைகள் அனைத்தும் வலைத்தமிழ் நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும், இதற்காக என்னை விரட்டி வேலை வாங்கிய நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கே சேரும். தயை செய்து உங்கள் உண்மையான விமர்சனத்தை அது எந்த அளவுக்கு இருந்தாலும் தயங்காமல் இங்கே எழுதி வையுங்கள். அதன் மூலம் தான் நான் அடுத்தடுத்த அத்தியாங்களில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். வெறும் வாழ்த்துரை மட்டும் தேவையில்லை என்பதை நண்பர்கள் அனைவரும் உணர்வீர்களாக. உங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.
 
01-Aug-2014 09:44:18 ராமு said : Report Abuse
நல்ல துவக்கம், வாழ்த்துக்கள்...
 
01-Aug-2014 08:00:10 கு.முருகபூபதி said : Report Abuse
படைப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
 
01-Aug-2014 06:45:37 சம்பத் எஸ் said : Report Abuse
அசத்தலான துவக்கம், நல்ல நடை - எங்கள் அரசுத்துறையில் தான் அதிகாரிகள் பேப்பரில் சீனி என எழுதி இனிப்பை உணருவது போல் (!) ரிப்போர்ட் களாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். தனியாரிலுமா அப்படி ? தொடருங்கள் வாழ்த்துக்கள்
 
01-Aug-2014 05:30:54 ச.பார்த்தசாரதி said : Report Abuse
தொழிற்சாலைகளின் வெளியிலும்- உள்ளேயும் உள்ள சூழ்நிலைகளை மிக நேர்த்தியாகத் தாங்கிவரும் இந்தத் தொடர் பலருக்கு பயன்படும்.. உங்கள் கட்டுரையை ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
 
01-Aug-2014 04:55:06 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
பஞ்ச பாண்டவர்களுடனான உங்கள் சந்திப்புப் பற்றிய அசத்தலான அறிமுகத்துடன் தொடர் விறுவிறுப்பாக ஆரம்பமாகியிருக்கிறது. முதலாளிகள் எப்போதுமே கனவுலகில் சஞ்சரிப்பவர்கள். அவர்களை சந்திக்கப் போகும்போதே திருப்பூர் பற்றிய அறிமுகம், உங்கள் பழைய நினைவுகள் என்று முதல் பதிவிலேயே வாசிப்பவர்களை கட்டிப்போட்டு விட்டீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்!
 
01-Aug-2014 04:02:13 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
ஜாலியாக ஆரம்பித்திருந்தாலும் பின்னால் வரப்போவது சுனாமி என்று உங்கள் எழுத்தை வாசித்து வருபவர்களுக்குத் தெரியும். தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பாராட்டுகள்.
 
01-Aug-2014 03:46:58 கருணாகரன் said : Report Abuse
உங்களின் எழுத்தாக்கம் வெகு அருமை. உங்களை தொடர்பவர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள். அப்பப்பா உங்களிடிம்தான் எத்தனை விழயங்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.-- --கருணாகரன்
 
01-Aug-2014 03:46:51 கருணாகரன் said : Report Abuse
உங்களின் எழுத்தாக்கம் வெகு அருமை. உங்களை தொடர்பவர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள். அப்பப்பா உங்களிடிம்தான் எத்தனை விழயங்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.-- --கருணாகரன்
 
01-Aug-2014 01:20:03 Vஅரடரட்ஜலௌ .ப said : Report Abuse
அற்புதமாக நடையில் வழங்குகிறீர்கள். தொடர்வேன்
 
01-Aug-2014 01:16:34 krishnamoorthy said : Report Abuse
இளமையுடன் தொடர் கதவை தட்டியிருக்கிறது ... பொதுவாக நீங்கள் சொன்னமாதிரி தலைமைகளின் நடைமுறை சிக்கலிருந்து பல கம்பனிகள் இன்னும் வெளியே வரவில்லை . அரசாங்கத்ஹ்டின் ஒத்துழைப்பை தரவில்லை என்கிறீர்கள் அது ஒரு பக்கம் சோகம் சென்றால் ஒரு கம்பெனி ஆரம்பிக்க அரசு அதிகாரிகளுடன் சந்திக்கும் அவஸ்த்தை இருக்கே அதுவே போதும் ! உங்களின் அற்புதமான எழுத்து நடைவீச்சு கவர்கிறது ( ஆஃப் தி ரெக்கார்டு - உங்களால் எடுக்கப்பட்ட அழகான படங்கள் இடை இடையே கொஞ்சம் சேர்த்து கொள்ளலாமே)
 
31-Jul-2014 22:02:02 பாலராஜன்கீதா said : Report Abuse
ஆவலுடன் தொடர்கிறோம்.
 
31-Jul-2014 20:32:11 நிகழ்காலத்தில் சிவா said : Report Abuse
திருப்பூரில் தொழிலாளர்கள் விருப்பத்திற்கேற்பத்தான் உற்பத்தி நடக்கிறது என்பது கசப்பான உண்மை..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.