LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

பாடினியின் வடிவழகு! - வ.கோபால்ராசு

கரிகாற்பெருவளத்தானின் சிறப்புகளை 248 அடிகளில் விவரிக்கும் நூல் பொருநராற்றுப்படை. ஆற்றுப்படை என்பது, ஒரு வள்ளலிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் ஒரு புலவன், எதிர்ப்பட்ட வேறொரு புலவனை, தான் பரிசில் பெற்ற தலைவனின் இயல்பு, கொடை முதலியவற்றைக் கூறி அவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவது ஆகும்.


அந்த வகையில், கரிகாலனிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் பொருநன் ஒருவன், பரிசில் நாடிவரும் பிரிதொரு பொருநனை கரிகால்பெருவளத்தானிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறான். இந்நூலின் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இவரை பெண்பாற் புலவர் என்று ஒரு சிலரும், இவர் ஆண்பாற் புலவர்தான் என்று ஒரு சிலரும் கூறுவர். இவர் சிறந்த இசைஞானம் உள்ளவர். தமிழர்களின் பழமையான - சிறந்த இசைக்கருவியான யாழ் குறித்து தம்முடைய பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பாடினியின் வடிவழகு குறித்து இவர் பாடலைப் படித்தால், தற்கால திரையிசைப் பாடல்கள் எவ்வளவு தரம்தாழ்ந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

 பெற்ற தாய்க்கும் பிள்ளைக்கும் உயிர் தொடர்பாக இருந்துவரும் கொப்பூழ் குறித்து, இப்பாடலில் எவ்வளவு நயமாய் உவமைப்படுத்தியிருக்கிறார் புலவர். அதுமட்டுமல்ல, ஒரு பெண்ணை எவ்வளவு நளினமாக விரசமில்லாமல் அழகுற வர்ணிக்க வேண்டுமோ, அப்படி வர்ணித்துச் செல்கிறது அப்பாடல். பாடினியின் வடிவு குறித்த அப்பாடல் இதோ!

 ""வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
 சீருடை நன்மொழி நீரொடு சிதறி
 அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
 கொலை வில் புருவத்து, கொழுங்கடை மழைக்கண்
 இலவு இதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்
 பல உறு முத்தின் பழிதீர் வெண்பல்
 மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
 பூங்குழை ஊசற் பொறை சால் காதின்
 நாண் அடச்சாய்ந்த நலம் கிளர் எருதின்
 ஆடு அமைப்பணைத் தோள் அரிமயிர் முன்கை
 நெடுவரை ஒப்பின் ஒளிவிடு வள் உகிர்
 அணங்கு என உருத்த அணங்கு அணி ஆகத்து
 ஈர்க்கு இடை போகா ஏர் இள வனமுலை
 நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
 உண்டு என உணரா உயவும் நடுவின்
 வண்டு இருப்ப அன்ன பல்காழ் அல்குல்''
 இப்பாடினியின் வடிவழகை வர்ணித்துச் செல்லும் பாடலில் பாடினியின் பாதத்தின் அழகை,
 "வருந்து நாய் நாவின் வருந் தகு சீறடி' என்று வர்ணிக்கிறார்.
 இப்பாடலின் பொருள் எண்ணி எண்ணி சுவைக்கத்தக்கது.

 பாட்டிசைக்கும் பாடினி அழகுறப் பாடினாள். அவள் புது வெள்ளம் ஓடி வடிந்த ஆற்றில், நெளிநெளியாகப் படிந்து கிடக்கும் திட்டைப்போன்ற அழகிய கூந்தலை உடையவள். ஒளி உமிழும் அழகிய பிறைபோன்ற நெற்றியை உடையவள். கூர்மையான அம்பை உடைய வில்லைப்போன்ற விழிகளால் ஆடவரைக் கொல்லும்படியான விழியழகை உடையவள்; இலவமலர் போன்ற இதழ்களை உடையவள்; சிவந்து கிடக்கும் இதழ்களிடையே முத்துப்போன்ற பற்களை உடையவள்; மயிர் வெட்டும் கத்தரியின் கைப்பிடி போன்ற அவள் அழகிய காதில் மரகதக் குழைகள் ஒளிரும்; வெட்கத்தால் கவிழ்ந்து கிடக்கிற கழுத்து, அடையும் மூங்கில் போன்ற தோள், முன்கையில் படிந்த அழகான மயிரொழுங்கு, பெரிய மலை உச்சியிலுள்ள காந்தள் மலர் போன்ற விரல், கிளியின் வாய்போன்ற ஒளிவிடும் நகம், பார்த்தவர் மனம் துளைக்கும் பொன்னிற கொங்கைகள், நீரிடத்துத் தோன்றும் சுழிபோன்ற இலக்கணம் பொருந்திய கொப்பூழ், உண்டென்று பிறரால் உணர இயலாது வருந்துகின்ற இடை - இப்படியே கேட்டவர் மலைக்கும் வண்ணம் அழகுற வர்ணித்தபடியே பாடினியின் அழகை, பாடல் வர்ணித்துச் செல்கிறது.

 பாடினியின் பாதத்தின் அழகை வர்ணிக்கும்போது உவமையின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார் புலவர். உவமைக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வண்ணம், ஓடி ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்று சிவந்து, நீண்ட வடிவுகொண்டு விளங்குகிறது என்று வர்ணித்துச் செல்கிறார். சங்கத் தமிழ்ப்பாடல்கள் எப்போது படித்தாலும் தேனாய் இனிக்கிறதே...

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.