LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

பாட்டினியல்பு

    முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவாராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.

    உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டுவியந்த வண்ணமாய் மீன்வலையடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

    அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத் தாம் மரநழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

    காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தொறுந் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளி லிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந்தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர் தலையும் விரும்பிக்கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

    சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.

    அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.

    இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.

    இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், "பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்"1 என்று உரை கூறினார். இது நிற்க.

    இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப்பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

    புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னவென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

    இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொறு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திரிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின் மேல் மிக வருந்தி முயன்று எழுதிக் காட்டல் வேண்டும். இ·து அவனுக்குப் பெருநாள் வினையாக முடியும். நல்லிசைப்புலவனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெரு வியப்புணைர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இ·து இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லராயின நற்பெரும்புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் "சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்" காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப்படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.