LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

பாவும் பாட்டின் நடையும்

    இனி, இச் செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப்பட்டதொன்றாம். இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சீரும் இரண்டு அசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புலவன் தான் கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வகவற்பாவினும் இசைவானது பிறிதில்லை. எதுகை யின்பமும் மோனையின்பமுந் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றை மொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ் வெதுகைநயம் மோனைநயங்களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப் புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே சொற்கள் தொடர்கள் நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாராயினர். பொருளழுங்கு முதிரத் தங் கருத்துக்களை இணக்கி வைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளியவாய்த் தோன்றும் எதுகை மோனைகளையே அமைப்பர்; எதுகை மோனைகளுக்கு ஏற்பப் பொருள் பொருத்துவாரல்லர்.

    பிற்காலத்தில் அகவற்பாப் பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடியிலும் முதற்சீரும் மூன்றாஞ் சீரும் எதுகை பொருந்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை இணையக்கொளுவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதி வரையில் ஒரே ஓசையாய் நடந்து கேட்போர்க்கு வெறுப்புணர்வினைத் தோற்றுவியா நிற்கின்றன.

    மற்றுப், பண்டைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இணங்க ஓசை மாறி மாறி நடந்து கேட்பார்க்குக் கழிபேர் உவப்புணர்வினைப் பயந்து நிற்கின்றன. இவ் வாசிரியர் நப்பூதனார், சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்தவைத்தும், வேறுசிலவற்றில் முதலும் நான்கும் எதுகை பொருந்தச் செய்தும், மற்றுஞ் சிலஅடிகள் இரண்டடியாய் முதற்சீரில் அவ்வாறு எதுகை பொருந்தக் கொளுவியும், பின்னுஞ் சிலவற்றில் அதுதானுமில்லாமல் யாத்தும் இப்பாட்டினைப் பலவகையால் ஓசையின்பம் மாறி மாறி வரத் தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இணங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும், இடையிடையே தெற்றுப்பட்டுஞ் செல்கின்றது; பாடிவீடு இயற்றும் இடத்தில்மோசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையினுள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசை மெதுவாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்து வருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி ஆராய்ந்து உணர்ந்துகொள்க.

    இனி, இப் பாட்டினுளின் இடைச்சொற்களையும் வேற்றுமையுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக்குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் 'நேமி' 'கோவலர்' 'படிவம்' 'கண்டம்' 'படம்' 'கணம்' 'சிந்தித்து' 'விசயம்' 'அஞ்சனம்' என்னும் ஒன்பதும் வடசொற்கள் ; 'யவனர்' 'மிலேச்சர்' இரண்டும் திசைச்சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேதாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிறசொற்கள் புகுந்தன என்றறிக; ஏனைய வெல்லாந் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்.

    இனி, இம் முல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இ·து ஏனையவற்றைப்போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப்படையில் வந்த,

    "துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
    பராரை வேவை பருகெனத் தண்டிக்
    காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை"

    என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது, மதுரைக்காஞ்சியிற் போந்த,

    "மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க
    ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
    எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப"

    என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம் முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இ·து ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாயிருக்கின்றது. ஏனைப் பாட்டுக்களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றோம். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையுந், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யத்தமையானுந், துறவோர் கருவிகளை உவமை எடுத்துக்காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும்.

    இப்பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

    இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன. இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங் கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற்சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர். அரசன் போர்மேற் செல்லும் போது பெண்களும் வாள்வரிந்த கச்சுடனே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இங்ஙனம் அரசரோடு உடன் சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கம்மவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவகசிந்தாமணியிலுந் "தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே" என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமை காண்க. மிலேச்ச தேயத்திலுள்ள ஊமைகளை வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறை அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லாரை அங்கு வைப்பின் அரசன் பல்ளியறைக்கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளியிடுவரெனவும், ஒருவரோடொருவர் சிற்சில பொழுது கூடி முணுமுணுவென்று பேசுதலுஞ் செய்வாராதலால் அதனால் அரசன் துயில் கெடுவுமெனவுங் கருதிப்போலும் ஊமைகள் அங்ஙனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாராயினர்! இன்னும் ஏழடுக்கு மாளிகை முதலிய உயர்ந்த கட்டிடங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிறவளங்களும் பழந்தமிழ்நாட்டு மன்னர் உடையராய் இருந்தனரென்பதும் பிறவும் இப்பாட்டினால் இனிது விளங்குகின்றன.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.