LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

பல்லி சொல்கிறது!

                                     பல்லி சொல்கிறது!

அபிராமியின் குழந்தை உள்ளமாகிய மகாராஜ்யத்தில் முத்தையன் ஏக சக்ராதிபதியாக அரசு புரிந்து வந்தான்.

     பால் மனம் மாறாத ஒரு பெண் குழந்தை, தன்னுடைய தாயார், தகப்பனார், பாட்டன், பாட்டி, மாமன், மாமி, சித்தி, அத்தை முதலிய உறவினர் எல்லாரிடத்தும் செலுத்துவதற்குரிய அவ்வளவு நேசத்தையும் அவள் தன்னுடைய அண்ணன் மீதே செலுத்தி வந்தாள்.

     தட்டுத் தடுமாறி நடக்கும் சின்னஞ் சிறு வயதிலே அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது இவள் தானும் போவேனென்று அழுவாள். அவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது, இவள் தான் வாசல் கதவைத் திறக்க வேணும். வேறு யாராவது திறந்து விட்டால் அன்று வீடு ரகளைப்பட்டுப் போகும்.

     வீட்டில் தனக்குப் பட்சணம் கொடுத்தால், அதைத் தின்ன மாட்டாள். பத்திரமாய் வைத்திருந்து, அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு, அவனுக்குக் கொடுத்து விட்டுத்தான் தின்பாள். இராத்திரியில் அவன் கையால் பால் கொடுத்தால் தான் குடிப்பாள்.

     அவன் வைதாலும் அடித்தாலுங்கூட அவளுக்குச் சந்தோஷமே. அவள் பொறுக்காத விஷயம் ஒன்றே ஒன்று தான். முத்தையன் தன்னுடன் 'காய்' விட்டு விட்டால் அதாவது பேசமாட்டேனென்று சொன்னால் அதை மட்டும் அவளால் சகிக்க முடியாது! தாங்க முடியாத துக்கம் வந்து விடும்; அழுது கண் சிவந்து போய்விடும். 

     ஏற்கனவே இவ்வாறு இரத்த பாசத்தினால் பிணைக்கப்பட்ட இந்தக் குழந்தைகள், உலகத்திலே அநாதைகளாக விடப்பட்டதனால், அவர்களுடைய பரஸ்பர வாத்ஸல்யம் ஆயிரம் மடங்கு அதிகமாயிருந்தது.

 

*****

     இப்படியாகத் தன்னுடைய குழந்தை இருதயத்தின் அன்பு முழுவதையும் உரிமை கொண்ட அண்ணன் இப்போது கொஞ்ச நாளாக ஏதோ ஒரு மாதிரியாயிருந்து வருவதை அபிராமி உணர்ந்தாள். அவனுக்கும் தனக்கும் இடையில் ஏதோ ஒரு விதமான மானஸீகத் தடை ஏற்பட்டு வருவதாக அவளுக்குத் தோன்றிற்று.

     அடிக்கடி முத்தையன் சிந்தனையில் ஆழ்ந்துவிடுவான். அபிராமி சொல்வது அவனுடைய காதில் விழாது. "என்ன அண்ணா யோசிக்கிறாய்?" என்று கேட்டால், "உனக்கு ஒன்றும் இல்லை போ!" என்பான். இவள் ஏதாவது விளையாட்டாய்ப் பேசினால், "என்ன விளையாட்டு? சும்மா இரு!" என்பான். சிரித்தால், கூடச் சிரிக்க மாட்டான்.

     அபிராமிக்கு உலகம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்திருந்த சமயம். தங்களுடைய குடும்ப நிலை சரியில்லை, அண்ணனுக்கு உத்தியோகம் கிடைக்கவில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அதனாலெல்லாம் தன்னிடம் அவன் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன?

     இளம் வயதிலே அவள் காதில் விழுந்த சில வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தன. "இந்தத் துக்கிரி அபிராமி பிறந்தது முதல் குடும்பத்துக்குக் கஷ்ட காலந்தான்." ஒரு வேளை இது உண்மையாயிருக்குமோ? அண்ணன் கூட அப்படி நினைக்கிறானோ?

     புத்தியிலும் யுக்தியிலும், சாமர்த்தியத்திலும் தன்னுடைய அண்ணனுக்கு நிகர் இந்த உலகத்தில் எங்குமே கிடையாதென்பது அபிராமியின் எண்ணம். ஆகவே, அவனுக்கு உத்தியோகம் கிடைக்காததற்குக் காரணம் தன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்ற தீர்மானத்துக்கே அவள் வந்து விட்டாள்.

     ஒரு நாள், இதைப்பற்றி முத்தையனிடம் பேசத் தொடங்கினாள். ஐயோ! அதனுடைய விபரீதமான விளைவை இப்போது நினைத்தாலும், அபிராமிக்கு உடம்பு நடுங்கிற்று. "அண்ணா! முன்னேயே எல்லாரும் சொல்லியிருக்கா, நான் பிறந்ததனாலேதான் உனக்கு எல்லாக் கஷ்டமும்? நான் தானே உன் துரதிர்ஷ்டத்துக் கெல்லாம் காரணம்?..." என்று அவள் சொல்ல ஆரம்பிக்கவும், முத்தையன் தன் சாவிக்கொத்தில் தொங்கிய பேனாக் கத்தியைச் சட்டென்று பிரித்துக் கொண்டு "அபிராமி! இதோ பார்! இந்த மாதிரி வார்த்தை இன்னும் ஒரு தடவை சொன்னாயோ, உன்னையும் கொன்று விட்டு நானும் செத்துப் போவேன்!" என்றான்.

     அதற்குப் பிறகு அபிராமி அந்தப் பேச்சை எடுப்பதில்லை. ஆனாலும் அண்ணன் 'ஒரு மாதிரி' யாயிருப்பது மட்டும் அவளுக்கு அளவிலாத மன வேதனையை யளித்துக் கொண்டிருந்தது. முக்கியமாக இப்போது சில நாளாய் அவனுடன் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச அவள் துடிதுடித்துக் கொண்டிருந்தாள். கல்யாணியை முறைப் பிரகாரம் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, கல்யாணிக்கு வேறு இடத்தில் கல்யாணம் நிச்சயமான செய்தி அபிராமிக்கு அளவில்லாத ஆத்திரத்தை மூட்டிற்று. அதைப் பற்றி முத்தையனிடம் பேச வேண்டுமென்றும், கல்யாணியையும் கல்யாணியின் தாயார் தகப்பனாரையும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவனையும் வாயார, மனமாரத் திட்டவேண்டுமென்றும் அவளுக்கு ஆத்திரமாயிருந்தது. ஆனால், முத்தையன் தான் இப்போதெல்லாம் அருகில் நெருங்கினாலே எரிந்து விழுகிறானே?

 

*****

     முன் அத்தியாயத்தில் சொன்ன சம்பவம் நடந்து இரண்டு நாள் முத்தையன் வீட்டிற்குள்ளேயே உடம்பு சரிப்படவில்லையென்று படுத்துக் கொண்டிருந்தான். மூன்றால் நாள் காலை எழுந்து வெளியே போய், வெகு நேரம் ஆறு, குளம், வயல் எல்லாம் சுற்றிவிட்டு வீடு திரும்பினான்.

     அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், அபிராமி அவன் எதிரில் வந்து, "அண்ணா! என்னுடைய கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறேன்? சொல், பார்க்கலாம்" என்றாள். அவளுடைய கைகளை முதுகுக்குப் பின்புறத்தில் கோத்துக் கொண்டிருந்தாள்.

     "சொன்னால் எனக்கு என்ன தருகிறாய்?" என்றான் முத்தையன்.

     "சொன்னால் என் கையில் உள்ளதை உனக்குத் தந்து விடுகிறேன். சொல்லாவிட்டால், நீ எனக்கு ஒரு கிராம போன் வாங்கித் தரவேணும்; சரிதானா?"

     "ரொம்ப சரி!"

     "அப்படியானால் சொல்லு, என் கையிலே என்ன இருக்கு?"

     "நிச்சயமாகச் சொல்லி விடுவேன்."

     "சொல்லிவிடேன், பார்க்கலாம்."

     "உன் கையிலே விரல் இருக்கு! - கொண்டா, விரலைத் தனியாய் எடுத்துக் கொடு."

     அபிராமி, கொஞ்சுகின்ற குரலில், "போ அண்ணா! உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான். எனக்கு ஒரு கிராமபோன் பெட்டி வாங்கித் தரேன், வாங்கித் தரேன் என்று எத்தனை நாளாய் ஏமாற்றிக் கொண்டு வருகிறாய்?" என்று சொல்லி, தன் கையிலிருந்த இரண்டு கடிதங்களையும் அவன் கையில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் சென்றாள்.

     முத்தையன் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கடிதங்களில் ஒன்றைப் பிரித்தான். அதன் உறையில் தபால் முத்திரை எதுவும் போட்டிருக்கவில்லை. அதற்குள் ஒரு கல்யாணக் கடிதம் இருந்தது. அதைப் பார்த்ததும் முத்தையனின் முகத்தில் கோபம் பொங்கிற்று. அந்தக் கடிதத்தைத் துண்டு துண்டாய் ஆயிரத்தெட்டு சுக்கலாகக் கிழித்துப் போட்டான். பிறகு, இன்னொரு கடிதத்தைப் பிரித்துப் படித்தான். அதைப் படித்த போது அவனுடைய முகம் மலர்ந்தது.

     இச்சமயத்தில் வாசற் புறத்தில் மோட்டார் வண்டிகளின் குழல் ஊதும் சப்தமும், இன்னும் கட்டை வண்டிகள் பூட்டப்படும் சப்தமும் ஆரவாரமாய்க் கேட்கவே, அபிராமி உள்ளேயிருந்து வந்தாள். கூடத்தில் சற்று நின்று, முத்தையன் கல்யாணக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்துப் போட்டிருப்பதை வியப்புடன் கவனித்தாள். தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு வாசற்புறம் சென்றாள். ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "அண்ணா! இங்கே ஓடி வாயேன்! வந்து பாரேன்! கல்யாணப் பெண்ணுக்கு மோட்டார் வண்டி வந்திருக்கிறது. எல்லாரும் கல்யாணத்துக்குக் கிளம்புகிறார்கள் போலிருக்கிறது. வாயேன் வந்து பாரேன்!" என்று கத்தினாள்.

     அதைக் கேட்ட முத்தையன் பரபரப்புடன் எழுந்து போய், வாசற்படிக்கு அப்பால் நின்ற அபிராமியைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளினான். வாசல் கதவை படீரென்று தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு வந்து ஊஞ்சலில் உட்கார வைத்தான். அபிராமி கண்ணைக் கசக்கிக் கொண்டு அழத் தொடங்கினாள். 

     "சீ! அசடே! என்னத்திற்காக அழுகிறாய்?" என்றான் முத்தையன்.

     "நீதான் வெறுமனே வெறுமனே என்னிடம் கோபித்துக் கொள்கிறாயே? நான் என்ன தப்பு செய்து விட்டேன்..."

     "அடடே, இதற்காகத்தானா? உன் பேரில் எனக்கு ஒரு கோபமும் இல்லை, அபிராமி! நீ வாசலில் போய் நின்றால், அந்தத் தரித்திரங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளும். அந்தப் பீடைகளின் முகத்தில் நீ விழிக்க வேண்டாமென்று தான் அழைத்து வந்தேன்."

 

*****

     அபிராமி கண்ணைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன், "இல்லை அண்ணா, நம்ம கல்யாணி அக்காவுக்குத்தானே கல்யாணம்? பார்த்தால் என்ன என்றுதான்..." என்பதற்குள், முத்தையன் மிகவும் கடுகடுப்புடன் "கல்யாணி, கல்யாணி, கல்யாணி...உனக்கு வேறே பேச்சே கிடையாதா? அது கிடக்கட்டும், அபிராமி! நாம் இந்த ஊரை விட்டே போகப்போகிறோம், தெரியுமா? எனக்கு வேலை கிடைத்து விட்டது!" என்றான்.

     "வேலையா? என்ன வேலை, அண்ணா! கலெக்டர் வேலையா?"

     "கலெக்டர் வேலைக்குத் திருடப் போகணும். நான் கலெக்டர் வேலை பார்ப்பதாயிருந்தால் அப்பா ஏன் செத்துப் போகிறார்? உன்னை நாளைக்குக் கட்டிக் கொள்ள வருகிறவன் கலெக்டர் வேளை பார்ப்பான். எனக்குக் கணக்குப் பிள்ளை வேலைதான் கிடைத்திருக்கிறது. திருப்பரங்கோயில் மடத்தில். இதோ பார், உடனே புறப்பட்டு வரும்படி கடிதம் வந்திருக்கிறது" என்று சொல்லிக் கடிதத்தை அபிராமியிடம் கொடுத்தான்.

     அபிராமி கடிதத்தைப் படித்துவிட்டு, "எந்தத் திருப்பரங்கோயில் அண்ணா? முன்னே அப்பா இருக்கிற போது தெப்ப உற்சவத்துக்குப் போனோமே, அதுதானே? ராட்டினத்திலே ஏறிச் சுத்திவிட்டு, மருக்கொழுந்து மிட்டாய் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தோமே, அந்த ஊர்தானே?" என்றாள்.

     "ஆமாம்! அந்த ஊரேதான். இந்தச் சனியன் பிடித்த பூங்குளத்தைவிட்டு நாம் நாளைக்கே கிளம்பிப் போய் விடலாம். இங்கே திரும்பியே வரவேண்டாம்; இந்த ஊர் முகத்திலேயே விழிக்க வேண்டாம்!" என்றான் முத்தையன்.

     'டுக் டுக் டுக்' என்று அப்போது சுவரிலிருந்த பல்லி சப்தித்தது.

     "பல்லி சொல்கிறது, அண்ணா! நல்ல சகுனம்" என்றாள் அபிராமி.

     உலகத்திலுள்ள ஜீவராசிகள் எல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டன என்று மனிதன் கருதுகிறான். உண்மையில், அந்தப் பல்லி அப்போது முத்தையனுடைய வருங்காலத்தை அறிந்து சொல்லிற்று என்று ஒப்புக்கொள்வோமானால், அது அவனைப் பரிகசித்துச் சிரித்தது என்றல்லவா வைத்துக் கொள்ளுதல் பொருந்தும்? 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.