LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

பணம் காசுகளுடன் உறவுகள் இனி இருக்காதோ?

      பெட்ரோல் பங்க் அருகாமையில் நான்கைந்து நண்பர்களுடன் பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடன் பங்க் மேலாளரும் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் பெட்ரோல் விலை உயர்வை பற்றி காரசாரமாக பேச பங்க் மேலாளர் அமைதியாக சார் நீங்க என்னதான் விலை உயர்வை பற்றி காரசாரமாக பேசினாலும், மக்கள் அதை பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை என்றார்.

       அவர் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே ஒரு கார் வேகமாக உள்ளே வந்து நிற்க

காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண் வாயே திறக்காமல் ஐந்து விரல்களை காட்ட பங்க் பையன் ஐநூறு ரூபாய்க்கு பட்டனை அழுத்தி காருக்கு பெட்ரோல் ஊற்றினான். அந்த பெண் அந்த “பெட்ரோல் மானியை” கூட பார்க்காமல் இடது கையால் “கிரிடிட் கார்டை” காட்டினாள்.  பக்கத்தில் இருந்த மற்றொருவர் “ஸ்வைப்பிங்க் மிஷினில் அதை வாங்கி உரசி, அந்த பெண்ணிடம் இரகசிய நம்பரை அழுத்த சொன்னார். ஐந்து நிமிடங்களில் அவர் போலாம் என்று தலை ஆட்ட காரை எடுத்து கொண்டு பறந்தாள்.

இதை பார்த்துக்கொண்டிருந்த எங்கள் கூட்டத்தில், நண்பர் ஒருவர் ஒரு தகவலை சொன்னார். இன்று மனிதர்கள் (அது ஆண் பெண் ஆகட்டும்) அவர்கள் காசு பணத்தின் மீது ஒரு பற்றில்லாமல் இருக்கிறார்களோ என்று சந்தேகப்படுவதாக கூறினார். அதற்கு அவர் சொல்லும்

காரணங்களும் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில்தான் இருந்தது.

       முன்னர் எல்லாம் நமக்கு ஊதியம் என்பது கவரில் வைக்கப்பட்டோ, அல்லது கையிலோ கொடுப்பார்கள். அதையும் பலமுறை எண்ணி சரி பார்த்து நமக்கு கொடுப்பார்கள். நாமும் அதை பல முறை எண்ணி எண்ணி பார்த்து (தடவி பார்த்து) மகிழ்வோம். அதை பத்திரமாய் நாம் கொண்டு வந்த டிபன் பாக்சிலோ, அல்லது கால்சட்டை பையிலோ பத்திரமாய் சுருட்டி வைத்துக்கொள்வோம்.

       இத்தனையும் செய்து பாதுகாத்து வீட்டுக்கு கொண்டு போன சம்பள பணம் நம் மனைவியிடம் கொடுக்கும்போது மனைவியால் மீண்டும் பல முறை எண்ணப்பட்டு செலவு வாரியாக பிரித்து வைக்கப்படும். இந்த சம்பள பணம் வருவதற்கு முன்பே கணவனும், மனைவியும் உட்கார்ந்து இன்னென்ன செலவுகள் என்று பட்டியலிட்டு அதன்படி செலவுகள் பிரித்து எழுதி வைத்துக்கொள்வர். அப்பொழுதெல்லாம் இந்த அளவு அதிகப்படியான செலவுகள் வந்திருந்ததாகவும் தெரியவில்லை. பொழுது போக்கு என்று பார்த்தால் சினிமா, நாடகம், புத்தகங்கள், இவைகளுக்கு பணம் ஒதுக்கி வைப்பர். செய்தித்தாள் கூட ஒரு மாதம் வாங்கினால் மறு மாதம் செலவில் துண்டிக்கப்பட்டு மீண்டும் புதிப்பிக்கப்படும்.

       மற்றபடி அவர்களுக்கு மாதாந்திர செலவுகளில் இழுபறியாக வைப்பது உறவினர்களின் திடீர் வரவு, குழந்தைகளின் சுப செலவு, அல்லது வீட்டில் உள்ளோர் யாருக்கேனும் வைத்திய செலவு, இவைகள்தான் பிரதான செலவுகளாக சம்பள பட்டியலில் செலவுகளாக இடம் பிடித்து விடும்.

       அடுத்ததாக கடை வீதிக்கு செல்வது கணவன் மனைவியாகவோ, குழந்தைகளுடனோ ஒரு சினிமா, கண்காட்சிக்கு செல்வது போல இருக்கும். அன்று ஒரு நாள் மட்டும் கடையில் உணவு உண்டுவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இதில் கூட பணம் நம் கையில் இருந்து செலவு செய்து கொண்டிருப்பதால் ஒரு பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

       அதை விட வீட்டு பெண்கள் அந்த மாதாந்திர செலவில் கடைவீதி செலவு என்று இருக்கும் பணத்தில் தனித்து எடுத்துக்கொண்டு வெளியே வருவார்கள். இதனால் அந்த பணம் முழுவதும் செலவானாலும், அது இதற்காக ஒதுக்கி வைத்த பணம்தானே என்று ஆறுதலும் இருந்தது. சில புத்திசாலி பெண்கள் அதையும் மிச்சம் பிடித்து வீட்டுக்கு கொண்டு போய் விடுவார்கள்.

       இப்படி எல்லாம் பணம், எதிலும் பணம், ஆனால் கையில்தான் செலவுகள் செய்து கொண்டிருந்ததால், அந்த பணம், காசுகளுடன் நமக்கு ஒரு அந்நியோன்யமான உறவுகள் இருந்து கொண்டே இருந்த்து.ஒவ்வொரு காசுகளையும் செலவு செய்யும் போது நம்மை விட்டு ஏதோ ஒன்று பிரிந்து போவது போலவே இருக்கும். இதனால் முடிந்தவரை சிக்கனத்தையே கடை பிடித்து வாழ முயற்சிகள் செய்து கொண்டிருந்தோம்.

       இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பதை சற்று சிந்தித்து பார்த்தால் நாமே நம் பணத்தை மதிக்காமல் இருக்கிறோமே என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் பணம் என்பது நாம் கண்ணால் காண முடியாத பொருளாகி விட்டது  ஏனென்றால் நமக்கு கிடைக்கும் ஊதியம் நேரடி வங்கிகளில் போடப்பட்டு நம் கடன் பட்டுவாடாக்கள் எல்லாமே ஆன் லைன் மூலமாகவும், மின் கட்டணம், வங்கி கடன், மற்றும் வரவு செலவுகள் எல்லாமே “டெபிட் கார்டு, கிரடிட் கார்டு” என்னும் அட்டைகளின் மூலமே புழங்க ஆரம்பித்து விட்டோம்.இதனால் பணம் என்று ஒன்று நம் கையில் இல்லாததால் அதனுடனான ஒட்டுறவை இழந்து விட்டோம்.

அதனால் அதன் மீது கொண்ட பாசம் குறைந்து நாம் வாங்கும் பொருட்களின் விலையை கூட எவ்வளவு விலை என்று கூட கவலைப்படுவதில்லை. அப்படியே எவ்வளவு விலை சொன்னாலும் “டெபிட்” அட்டை மூலமோ, “கிரிடிட்” அட்டையின் மூலமோ உரசிக்கொள்ளலாம் என்று எண்ணத்திற்கு வந்து விட்டோம். இதனால் விலை வித்தியாசம் நம் கண்ணுக்கு காணாமலே அட்டை உரசல் மூலமே வியாபாரத்தை முடித்து கொள்கிறோம்.

இந்த கருத்து டிஜிட்டல் திட்டத்துக்கு எதிரானது அல்ல. பணம் என்பது நம்மை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி போய் விட்டது என்பதை குறிப்பிடுவதற்காகவே. சொல்லப்படுகிறது

இதனால் என்ன விளைவுகள் ஆகும் என்ற கேள்வி எழுகிறது. எப்படி கூட்டு குடும்பம் என்பது இன்று பல குடும்பங்களாகவும், “ஹாய்” ஹாய்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி உறவுகளிடம் விலகி நிற்க கூடிய நிலையில் உள்ளோம் என்பதும் நமக்கு தெரியும். அது போல பணம், காசு, இவைகள் நம்முடன் ஒட்டி உரசி, இருந்தால் நாம் அதனுடைய கதகதப்பில்

இது நம்முடையது, என்ற எண்ணங்களில் வாழலாம். இது பத்தாம்பசலித்தனமாக தோணலாம்.

ஆனால் உளவியலாக நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நம் கண் முன்னால் ஒரு பொருளோ, இல்லை ஆட்களோ காணப்பட்டால், நாம் அவைகளை (அவர்களை) பொருட்டாக கருதவில்லை என்றாலும், அவைகள் திடீரென்று இல்லாமல் போகும்போது நமக்கு ஒரு வெறுமை தோன்றுமே, அது போலத்தான் நம்முடைய பாக்கெட்டில் இருக்கும் பணம் கண்டிப்பாய் நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தோற்றுவிக்கிறதா இல்லையா?

அறிவியல் முன்னேற்றம் எப்படி இருந்தாலும், நம் பணம் நம் கையில் இருப்பது போன்ற சுக உணர்வுகள் நம்மை விட்டு போய் விட்டது.. சிறு வயதில் பத்து பைசா பாக்கெட்டில் இருந்து கொண்டு நம்மை எந்தளவுக்கு சந்தோசப்படுத்தி இருக்கிறது என்பது

அந்த அனுபவத்தை பெற்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இன்று அனைவருமே விற்பனை கடைகளில்  இந்த பொருளின் விலை என்ன? என்று விசாரிப்பதற்கே தயங்குகிறோம், அது ஒரு அவமான நிகழ்வு என்று கூட ஒரு சிலர் நினைக்கிறார்கள். இதற்கு அவர்கள் மேல் குறை சொல்ல முடியாது., காரணம் அவர்கள் கையில் டெபிட், அட்டையும், கிரெடிட் அட்டையுமே அவர்களை தைரியப்படுத்துகிறது..

பணம் என்று ஒன்று அவர்கள் கையில் இருந்தால் அதனை எண்ணி கொடுப்பதற்கு கண்டிப்பாய் அவர்களுக்கு வருத்தம் வரத்தான் செய்யும்.

       இது மேல் தட்டு மக்களுக்கு சங்கடமாக தெரிந்தாலும், நம் நாட்டில் எழுபது சதவிகிதத்துக்கு மேல் நடுத்தர மக்கள்தானே. இவர்கள் மாதாந்திர வருமானத்தை நம்பித்தானே

வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.. இப்பொழுது இவர்கள் கையில் “கார்டுகள்” சட்டை பையில்

இருந்தால் செலவுகள் “வரை முறைக்கு” மேல்தானே இருக்கும். மனக்கட்டுப்பாடு இருந்தால் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பொதுவாக மனித மனம் என்பது ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் கண்ணை மூடிக்கொண்டு அதனை பின்பற்றுவது. இந்த பழக்கம் சிறு சம்பவம் மூலமே காணலாம். பக்கத்தில் இருக்கும் கடைக்கு

(அதாவது நடக்கும் தூரம்) பொருட்கள் வாங்க வேண்டி இருந்தால் கூட இரு சக்கர வாகனத்தில் சென்றுதான் வாங்குகிறார்கள். சைக்கிளில் சென்றால் கூட போதும், இதற்கும் இவர்கள் வீட்டில் சைக்கிளும் இருக்கும், இருந்தாலும் பெட்ரோல் செலவு செய்து அந்த கடைக்கு பொருட்கள் வாங்குவது வழக்கமாகவே வைத்திருப்பர். (இவர்கள்தான் உடம்பை குறைக்க, உடற்பயிற்சிக்காக நீண்ட தூரம் நடப்பர்)

       இப்பொழுது கூட பணத்தை கண்ணால் காணவேண்டுமென்றால், “டாஸ்மார்க்” கடையில்தான் பார்க்க முடிகிறது. காரணம் அங்கு கடனோ, கார்டோ ஏற்றுக்கொள்ள படுவதில்லை. மற்ற எல்லா இடங்களிலும் கார்டுகளை உரசுவதன் மூலமே

பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

       வங்கிகளுக்கும், அரசாங்கத்திற்கும் வேண்டுமானால் இந்த முறை மிகுந்த பயனுள்ளதாக இருக்கலாம். நமக்கும் கூட பண பாதுக்காப்பு கிடைக்கும் என்றும், கடனோ, பொருட்கள் வாங்கவோ பரிவர்த்தனைகள் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

       இந்த கட்டுரை சொல்ல வருவதன் நோக்கமே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறோம்

என்றுதான்.

  1. செலவுகள் பற்றி திட்ட வரைவுகள் செய்ய முடிவதில்லை (முன்னெல்லாம் மாதாந்திர பட்ஜெட் போடப்பட்டு அதன் பின்னரே செலவுகள் செய்யப்படும்)
  2. கடன் வாங்குவதை பற்றி அச்ச உணர்வே நம்மை விட்டு போய் விடுகிறது

(பணம் வங்கியின் மூலம் பரிவர்த்தனை என்பதால் ஒரு வித அலட்சிய மனப்பான்மை வந்து விடுகிறது)

  1. வாங்கும் பொருட்களின் விலையை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

(பெட்ரோல் விலையை எடுத்துக்கொண்டாலும் வாகனத்தின் உபயோகத்தை குறைப்பதற்கு தயாராவதில்லை)

  1. பொதுவாக கணவன் மனைவியின் அன்னியோன்யம் குறைகிறது (திட்ட வரைவுகள்

(பட்ஜெட்) இருவரும் கலந்து பேசி இருவரின் சம்பளத்தொகைகள் ஒன்றாக்கி அதன் பின் செலவுகள் கணக்கிடப்படும்) இது குறைந்து கொண்டிருக்கிறது.

  1. இருவருக்கும் தனித்து பரிவர்த்தனை செய்வதால் தைரியமும் தன்னம்பிக்கையும் வருகிறது என்று சொன்னாலும் எனக்கு விருப்ப பட்டதை நான் வாங்கிக்கொள்வேன்

என்னும் பிடிவாத்த்தை வளர்த்து விடுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் உரசல்கள் வர வாய்ப்புக்கள் ஏற்படுகிறது.

  1. உங்களுடைய வணிக பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுவதாக தோன்றலாம்.


டிஜிட்ட;ல் மயம் என்று நாம் மார்தட்டி கொண்டாலும், பகிர்மானங்களும், வர்த்தகங்களுக்கும் சுலபமானது என்று வாதிட்டாலும், எதிர்காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயம் என்னும் நிலைமை வந்து விட்டாலும், உளவியல் ரீதியாக நாம் பணம், காசு இவைகளுடனுனான பாச பிணைப்பை இழந்து விடுவோம் என்றுதான் தெரிகிறது.

       மேல்நாட்டில் இருப்பது போல் எல்லாமே கார்டு பரிவர்த்தனை என்று வந்து விட்டால்

நாமும் அவர்களும் ஒன்றுதானே. அவர்களுடைய வாழ்க்கை முறையில் பாசப்பிணைப்பை பெரிய விசயமாக எடுத்து கொள்வதில்லை. தனித்து வாழ்வது அவர்கள் கலாச்சாரம். நம்மால் அப்படி இருக்க முடியுமா?

Rupees, Coins now not touch relation with me
by Dhamotharan.S   on 01 Aug 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நூற்றாண்டு காணும் அமுதுப் புலவர் -சபா. அருள்சுப்பிரமணியம் நூற்றாண்டு காணும் அமுதுப் புலவர் -சபா. அருள்சுப்பிரமணியம்
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை
உவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து... உவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...
தில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல் தில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல்
வாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு... வாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு...
தாயுமானவர் சமரச நெறி  -முனைவர்.மு. வள்ளியம்மை தாயுமானவர் சமரச நெறி  -முனைவர்.மு. வள்ளியம்மை
ஏன் இலக்கியம் வாசிக்கவேண்டும்? - ஜெயமோகன் ஏன் இலக்கியம் வாசிக்கவேண்டும்? - ஜெயமோகன்
காலக்கண்ணாடி-அசோகமித்திரனின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் காலக்கண்ணாடி-அசோகமித்திரனின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்
கருத்துகள்
11-Oct-2018 08:42:45 ஷிபானா said : Report Abuse
நல்ல கருத்து மேலும் தொடரட்டும் உங்கள் பணி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.