LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

முதல் பாகம் - கோடை-ஸ்ரீதரன், பி.ஏ.

                                                    ஸ்ரீதரன், பி.ஏ.

சாவித்திரி, அப்பாவினுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மனம் ஸ்ரீதரன் என்னும் உருவம் தெரியாத தெய்வத்தைப் பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டது.

     ஸ்ரீதரன்!-எவ்வளவு அழகான பெயர்! அவர் எப்படி இருப்பாரோ? பி.ஏ. பாஸ் பண்ணியவர் என்றல்லவா அப்பா சொன்னார்? சென்ற வருஷத்தில் நெடுங்கரைக்கு வந்திருந்த பி.ஏ. கணபதி என்பவரின் ஞாபகம் சாவித்திரிக்கு வந்தது. அந்தக் கணபதி அவருடைய பெயருக்கு விரோதமாக உயரமாய் ஒல்லியாய் இருந்தார். தலையில் உச்சிக் குடுமி வைத்திருந்தார். கிராமாந்தரத்தில் அந்தக் காலத்தில் வாலிபர்கள் தலை நிறையக் குடுமி வைத்திருப்பது சாதாரண வழக்கம். பட்டணங்களுக்குப் படிக்கப் போனவர்கள் அந்த வழக்கத்துக்கு விரோதம் செய்தார்கள். சிலர் கிராப் செய்துகொண்டார்கள்; வேறு சிலர் அதற்கு நேர்மாறாக உச்சிக் குடுமி வைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். பெரும்பாலும் கலாசாலைப் படிப்பை முடித்தவர்கள்தான் இம்மாதிரி செய்தார்கள். இதனால் அந்தக் காலத்தில் உச்சிக் குடுமிக்கு, 'பி.ஏ. குடுமி' என்று பெயர் ஏற்பட்டிருந்தது. மேற்படி கணபதியின் உச்சிக் குடுமியை, 'பி.ஏ. குடுமி' என்று ஊரில் எல்லாரும் சொன்னார்கள்.

     ஆகவே, ஸ்ரீதரன் தலையிலும் உச்சிக் குடுமிதான் இருக்கும் என்று சாவித்திரி நினைத்தாள். மேற்படி கணபதியின் உச்சிக் குடுமி பார்ப்பதற்கு நன்றாயில்லையென்று மற்றக் குட்டிகளுடன் சேர்ந்து தானும் பரிகாசம் பண்ணியதை நினைத்தபோது சாவித்திரிக்குத் தன் பேரிலேயே கோபம் வந்தது!

     சீச்சீ! குடுமிதான் பெரிய காரியமாக்கும்! குடுமி எப்படியிருந்தால் என்ன? அவர் முகம் எப்படியிருக்குமோ? ஒரு வேளை மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பாரோ? போட்டுக் கொண்டிருந்தால், பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும். போட்டுக்கொண்டிராமற் போனால், இன்னும் ரொம்ப நல்லது. முகத்தின் லட்சணம் எங்கே போய் விடும்?-இந்த மாதிரி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள் சாவித்திரி.

     ஏறக்குறைய அதே சமயத்தில், என்.ஆர்.ஸ்ரீதரன், பி.ஏ. சென்னை தம்பு செட்டித் தெருவில் இருந்த ஒரு ஹோட்டலில் மாடி அறையில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி, தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிப் பகற்கனவு கண்டுகொண்டிருந்தான். அவன் மார்பின்மேல் சார்லஸ் கார்விஸ் நாவல் ஒன்று கிடந்தது. 

     ஆமாம்; அவன் கண்டது பகற்கனவுதான். ஏனெனில், அவன் கண்கள் மூடியிருந்தனவே தவிர, அவன் உண்மையில் தூங்கவில்லை. மனோராஜ்யந்தான் செய்து கொண்டிருந்தான்.

     ஏறக்குறையச் சென்ற ஐந்தாறு மாத காலமாக அதாவது அவன் நரசிங்கபுரத்திலிருந்து உத்தியோகம் தேடும் வியாஜத்துடன் சென்னைக்கு வந்ததிலிருந்து அவனுடைய நேரமெல்லாம் பெரும்பாலும் இத்தகைய மனோராஜ்யத்திலேயே சென்று கொண்டிருந்தது.

     இவ்வளவு நாள் யோசனைக்குப் பிறகும் அவன் ஒரு திட்டமான முடிவுக்கு வரவில்லையென்பது உண்மைதான். முக்கியமாக, தனக்கு வரப்போகும் மனைவியின் முகம் எப்படியிருக்க வேண்டுமென்று அவனால் பூரணமாகக் கற்பனை செய்ய முடியவில்லை. ரொம்ப அழகாயிருக்க வேண்டும்; ரொம்ப ரொம்ப அழகாயிருக்க வேண்டும்; தான் இதுவரையில் பார்த்திருக்கும் அழகான முகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் அழகாயிருக்க வேண்டும்! இப்படிப் பொதுவாக நினைக்கத்தான் முடிந்ததே தவிர, அது எப்படியிருக்க வேண்டுமென்று அவன் மனத்தில் பிடிபடவேயில்லை.

     ஆனால், வேறு சில அம்சங்களில் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றி, அவனுக்குத் திடமான அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. அவள் படித்த நாகரிகமான பெண்ணாயிருக்க வேண்டும். சந்தேகமில்லை. பதினெட்டு முழப்புடவையைப் பிரிமணை மாதிரி சுற்றிக் கொள்ளும் பட்டிக்காட்டுத் தரித்திரங்கள் முகத்திலும் அவனால் விழிக்க முடியாது. நடை உடை பாவனைகள் எல்லாம் ஜோராக இருக்க வேண்டும்.

     கல்கத்தாவிலும் சென்னையிலும் தான் பார்த்திருக்கும் நாகரிகமான பெண்களை அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டான். அப்போது அவனுடைய சிநேகிதன் நாணாவினுடைய மனைவி ஸுலோசனாவின் ஞாபகம் வந்தது. அதிர்ஷ்டக்காரன் நாணா! ஸுலோசனாதான் என்ன நாகரிகம்! என்ன படிப்பு! அவள் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பாடினால், அப்ஸரஸ் பூமிக்கு வந்து பாடுவது போலல்லவா இருக்கிறது?

     தான் நாணாவுக்கு ஒருநாளும் குறைந்து போகக் கூடாது என்று எண்ணமிட்டான் ஸ்ரீதரன். அதைக் காட்டிலும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப் போகலாம். ஸ்ரீதரன் நரசிங்கபுரத்திலிருந்து சென்னைக்கு வந்ததற்கே முக்கிய காரணம் இதுதான். அங்கே இருந்தால், யாராவது பட்டிக்காட்டுப் பேர்வழிகள் வரன், கிரன் என்று ஜாதகத்தையும் கீதகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து சேர்வார்கள். அம்மாவும், அப்பாவும் மாற்றி மாற்றிப் பிராணனை வாங்கி விடுவார்கள்! அந்தத் தொந்தரவே வேண்டாமென்றுதான் அவன் சென்னைக்கு வந்திருந்தான்.

     எல்லாம் சரிதான்; ஆனால் அவனுடைய எண்ணம் நிறைவேறுவது எப்படி? தாயார் தகப்பனார் பிரயத்தனம் செய்யவேண்டாமென்றால், பிறகு கல்யாணம் நடப்பது தான் எவ்வாறு? இந்தப் பாழாய்ப்போன தேசத்தில் மனதுக்குப் பிடித்த ஒரு பெண்ணைக் கண்டோ ம், காதலித்தோம், கல்யாணம் செய்துகொண்டோ ம் என்பதற்கெல்லாம் எங்கே இடம் இருக்கிறது?

     ஐயோ, தான் ஐ.சி.எஸ். படிப்பதற்காகச் சீமைக்குப் போவதாகச் சொன்னதை அம்மா மட்டும் அப்படிப் பிடிவாதமாய்த் தடுத்திராவிட்டால்! "நீ சீமைக்குப் போனால் நான் உயிரை விட்டுவிடுவேன்!" என்றல்லவா சொல்லித் தடுத்துவிட்டாள், பாவி! ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாயிருப்பதில் இது தான் கஷ்டம்.

     சீமைக்கு மட்டும் போயிருந்தால்!... ஸ்ரீதரன் அந்த நிமிஷம் மனோராஜ்யத்தில் கப்பல் பிரயாணம் செய்யலானான். கப்பல் மேல்தளத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாய் உலாவுகிறான். அப்போது எதிரில் நவநாகரிகத்திற் சிறந்த ஒரு பெண் வருகிறாள். அவள் யாரோ சுதேச ராஜாவின் மகளாகவோ, அல்லது பெரிய வடக்கத்திப் பிரபுவின் மகளாகவோ இருக்க வேண்டும். அவர்களுடைய கண்கள் சந்திக்கின்றன. பிறகு அவர்களுடைய கரங்கள் சந்திக்கின்றன. தங்களுடைய அழியாத காதலுக்கு அறிகுறியாக அவர்கள் தங்கள் கைவிரல்களில் உள்ள மோதிரங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள்.

     ஆகா! நாணாவும் அந்தக் கப்பலில் இருந்து இந்தக் காட்சியை மட்டும் பார்த்தானானால், என்ன செய்வான்? வயிறெரிந்து கடலில் குதித்து விட மாட்டானா?...

     ஸ்ரீதரனுடைய மனோராஜ்யம் இவ்வளவு ரஸமான கட்டத்துக்கு வந்திருந்தபோது, அவனுடைய அறையின் கதவைத் தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. அதே சமயத்தில் நாணாவின் குரல், "ஏண்டா, இடியட்! உனக்குக் கல்யாணமாமேடா! எந்த மடையண்டா உனக்குப் பெண்ணைக் கொடுக்கப் போகிறான்?" என்று முழங்கிற்று. 

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.