LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்

முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - கடல் தந்த குழந்தை

                            கடல் தந்த குழந்தை

 

       பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது. 

     "மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே! அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே!" என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள்.

     அப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, "கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும்! இதை நான் கனவிலே கண்டேன்!" என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.

     ஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது! கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன! ஆ! என்ன பயங்கரம்! தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே! சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே! புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே!

     கப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள். 

     அத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல. நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம்! நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம்! நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன? இல்லை, சூரியன் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை அது! பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம்! அத்தனை தேஜஸ்! ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா? ஒருவேளை...? ஆகா! இருக்கிறது. உயிர் இருக்கிறது! புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது 'களுக்' என்று சிரிக்கிறது! 

     படகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட்டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது! படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.

     கரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது. கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள்.

     தீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, "நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான்! இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்" என்று கூறுகிறார். ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.

     திரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், 'இளந்திரையன்' என்று பெயர் இடுகிறார். "தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்" என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வெளிவருகிறது.

     வடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் 'பல்லவராயன்' என்று நாமகரணம் செய்கிறார்.

     அதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் 'போத்தரையன்' என்று பெயர்த்துக் கூறுகிறார்.

     கவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். "இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா? 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான்!" என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.

     பிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. "கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான்! சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்!" என்று கற்பனை செய்து கூறுகிறார்கள்.

     வடமொழி புலவர்களோ, "பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்!" என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.)
     பல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது. அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.

     பல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது. 

     மகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார். முதன்முதலில் அத்துறைமுகத்தில் சிற்ப வேலைகள் தொடங்கவேண்டும் என்று தந்தையும் குமாரரும் சேர்ந்து எந்த இடத்தில் தீர்மானித்தார்களோ அதே இடத்தில், சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த தினத்துக்கு மறுநாள் பிற்பகலில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள். 

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.