LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 10

துத்துக்குடியில் சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று (1906 இல் என்று என் நினைவு) ஏற்பட்டது. அந்தக் கம் பனிக்கு உயிர்நாடி, தேசபக்த ஜாம்பவான் ஸ்ரீ வ.உ. சிதம்பரம் பிள்ளை. அந்தக் கம்பெனி பி.ஐ.எஸ்.என். என்ற இங்கிலஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக நிறுவப்பட்டது என்பது கொள்ளைக்கார வியாபார கோஷ்டியாரின் எண்ணம்.

பி.ஐ.எஸ்.என். கப்பல் கம்பெனிக்கு கப்பல் கட்டணத்தை எவ்வளவோ குறைத்துப் பார்த்தும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் வெள்ளைக்காரக் கப்பலில் ஏறுவதுமில்லை. சாமான் அனுப்புவதுமில்லை. இந்தச் செய்தியை விஸ்தாரமாக வர்ணித்துப் பேசுவதில் பாரதியாருக்கு மிகுந்த உற்சாகம். ”நம்ம ஜனங்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு யாதொரு குறையும் ஏற்படாது” என்று ரிஷிகள் வரங்கொடுப்பதைப் போலப் பேசுவார்.

பின்னர், சிதம்பரம் பிள்ளை சிறை சென்றதும், கம்பெனி நிர்வாகம் ஊழல் நிறைந்து உடைந்து போனதும், திருநெல்வேலி கலகக் கேஸ் நடந்ததும் பழங்கதை. கடைசியாகச் சுதேசிக்கப்பல் கம்பெனிக்கு மிகுந்து இருந்தது ’கோயாலண்டே’ என்னும் கப்பல் ஒன்றுதான்; இதை யாரிடம் விற்பது, எப்படி விற்பது?’ என்ற நிலைமைக்கு வந்துவிட்டது கம்பெனியின் நிர்வாகம்.

பிரெஞ்சு இந்தியாவில் ஒரு ஸ்தலமாகிய சந்திர நாகூர் என்னும் பட்டினத்தில் (இது கல்கத்தாவுக்கு மேற்கில் இருக்கிறது.) வசித்து வந்த புதுச்சேரி சட்டசபை மெம்பரான வங்காளி ஒருவரின் மூலமாய், இந்தக்கப்பலை விற்பதற்குப் பேரம் நடந்தது. இது 1913 இல் என்று நினைக்கிறேன்.

எந்த செள்ளைக்காரக் கம்பெனி, சுதேசிக் கப்பல் கம்பெனியின் சீர்குலைவுக்கு முக்கிய காரமாணமாயிருந்ததோ, அதே பி.ஐ.எஸ்.என். கம்பெனியிடம் சுதேசிக்கப்பலை விற்கும்படி நேர்ந்ததது. இதைப்பற்றிப் பேசும் பொழுது பாரதியாருக்கு ஆத்திரமும் துக்கமும் அடைத்துக்கொள்ளும்.

”ஏதோ ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு விற்று, இந்தத் தேசத்தின் நஷ்டத்தைப் போக்க இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ? மானங்கெட்டவர்கள்! கப்பலைச் சுக்குச் சுக்காய் உடைத்துக் கடலில் மிதக்க விடுகிறதுதானே! இந்தத் தேசம் தாங்கும். மானம் பெரிது, மானம் பெரிது ” என்று உள்ளம் பொங்கித் துடிப்பார் பாரதியார்,
” நடிப்புச் சுதேசிகள் ’ என்று பாதியார் பாடியிருக்கும் பாட்டுகளில் மானம் மானம் என்று அதையொன்றையே அவர் அழுத்திக் கூறியிருக்கிறார். மனிதனுக்கு உயிரைக்காட்டிலும் மானம் பெரிது என்று இடித்திடித்துச் சொல்லுவதில் பாதிரயாருக்கு அலுப்புத்தட்டுவதேயில்லை. ”மானமில்லாதவனுக்கு மரியாதை தெரியாது. அவன் ஒருநாளும் வளர மாட்டான் ” என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.

இடையே, நீலகண்ட பிரம்மசாரி என்பவர் புதுச்சேரிக்கு வந்தார். இவர் பாரதியாருக்கு எப்படிப் பழக்கமானார் என்பது எனக்குத் தெரியாது. பின்னர், திருநெல்வேலி சதியாலோசனை வழக்கில் இவர் முக்கிய எதிரியாயிருந்ததைச் சர்க்கார் தஸ்தாவேஜில் காணலாம். இந்த நீலகண்டர் – இவருக்குக் கண்டம் மட்டும் கறுப்பல்ல; உடம்பு முழுவதுமே அட்டைக் கரி – புதுச்சேரியில் ’சூர்யோதயம்’ என்ற பத்திரிகையை நடத்தினார். இந்தப் பத்திரிகைக்குப் பாரதியார் கட்டுரை தந்து உதவி செய்து வந்தார்.

நாங்கள் ( பக்தர்களும் நண்பர்களும் கூடி ) ஒரு நாள் பாதியாரோடு வாதாடினோம். ” நீங்கள் ஏன் உங்கள் பழைய ’சுதேசமித்திரன்’ பத்திரிக்கைக்கு எழுதப்படாது? ” என்று கேட்டோம். ”எழுதலாம்” என்றார். ”எழுதுகிறததானே ?” என்றோம். எழுத முடியாது என்று முடித்துவிடுவதைப் போலக் கண்டிப்பாய்ப் பேசினார்.

பாரதியாரிடம் எங்களுக்கு அன்பு பாத்தியம், பக்தி பாத்தியம் ஏராளமாய் உண்டு. அவர் சொன்ன ஜவாப்பு எங்களுக்குத் திருப்தி உண்டாக்கவில்லை. மறுபடியும் கிளறிக் கேட்டோம். ”பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா ?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார். ”ஆமாம்” என்று சொல்லி, நாங்கள் இன்னும் அழுத்தமாக வாயை மூடிக்கொண்டோம்.
”நீங்கள் பச்சைக் குழந்தைகள்; உங்களுக்குச் சங்கதி தெரியாது; ’சுதேசமித்திரன்’ பழைய காலத்துப் பத்திரிக்கை பாரதி எழுத்தைப் பிரசுரித்து, அது தன்கௌரவப் பெயரைக் கெடுத்துக்கொள்ளுமா?” என்று சொல்லி சிரித்தார். இநத்க் கேலி சமாதானத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அடுத்தகேள்விக்கு இடம் வைத்துக்கொள்ளாமல் பாரதியார் சொன்னார்: ” எனக்கும் ’சுதேசமித்திர’ னுக்கும் கொள்கையில் வேறுபாடு, என் எழுத்தை உங்கள் பத்திரிகையில் போடுங்கள் என்று நான் அவர்களிடம் சொல்லுவது நியாயமாகுமா? மேலும், இப்பொழதோ தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ’ நித்திய கண்டம்.’ என் ஓர் எழுத்தின் மூலமாய்ச் சுதேசமித்திரனுக்கு ஆபத்து வந்தால் என்ன செய்கிறது? நான் எங்கெங்கே எழுதுகிறேனோ அதையெல்லாம் சர்க்கார் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ’சுதேசமித்திரன்’ பேரில் அவர்கள் ’லபக்’ கென்று பாய்ந்தாலும் பாய்வார்கள். இப்பொழுது ஒழுங்காக நடக்கிற பத்திரிகை ’சுதேசமித்திரன்’ ஒன்றுதான். என்னால் அதற்கு ஏன் ஆபத்து வர வேண்டும்?”

எங்களில் ஒருவருக்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தி; ”அவர்கள் உங்களை எழுதும்படி கேட்டார்களா ?” என்றார் அவர். கேட்காதவற்றைச் ’சுதேசமித்திரன்’ நிர்வாகிகளின்பேரில் போட்டாலொழிய, அந்த நண்பருக்கு மனச்சமாதானம் உண்டாகாது போலத்தோன்றிற்று.

பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார்; யாரையும் கண்டிப்பார். ஆனால், எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதுறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிகூடக் கிடையாது. ’சுதேசமித்திரன்’ ஆபிசிலிருந்து எனக்கு ஏன் எழுத வேண்டும்? நீங்கள் அவர்கள்பேரில் வீண் பழி சுமத்தப் பார்ப்பது தவறு. பாரதி உங்களுக்குப் பெரியவன். அவர்களுக்கும் பெரியவனாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? உலகமறியாத பச்சைக் குழந்தைகள் ” என்று முடித்தார்.
இந்தப் பதில் எங்களுக்கு ஒருவாறுதான் சமாதானத்தைத் தந்தது, பாதியார் ’சுதேசமித்திரன்’ நிர்வாகிகளை ஆதரித்துப் பேசினாலும் அவருக்கிருந்த மனக்குறையை அந்தப் பேச்சு ஒருவாறு வெளிக்காண்பித்துவிட்டது. எங்களுக்கோ ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. ஆனால் என்ன செய்கிறது?

1910 – 1911 ஆம் வருஷங்களில், பாரதியாரின் பெயரும் கீர்த்தியும் நாடு முழுவதும் பரவவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவர் என்று மட்டும் தெரியும். இலக்கியத்தையும் அரசியல் போராட்டத்தையும் பிரித்துப் பார்த்து, பாரதியாரின் இலக்கியமேதையை, கல்வித்திறனை அளந்து பார்க்க அப்பொழுது முடியாமற்போனால், அதைப்பற்றி இப்பொழுது யாரும் நிஷ்டூரம் பேசலாகாது. ரொமென் ரோலண்டு என்ற பிரெஞ்சு ஆசிரியரின் மேதையை உலகம் ஒப்புக்கொள்ளச் சுமார் நாற்பது வருஷங்கள் செல்லவேண்டியிருந்தது. 1905 – 1910 இந்த வருஷங்களுக்குள் பாரதியாரின் மேதையைத் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்ளாதது பெருந்தவறாகாது.

முன்னொரு காலத்தில், சென்னையில், ’ஸ்டாண்டர்ட்’ என்ற ஆங்கிலத் தினசரி ஒன்று நடந்து வந்தது. அதற்கு ராமசேஷய்யர் என்பவர் அதிபர். இந்தபப் பத்திரிகையைத்தான், பின்னர் ’நியு இந்தியா’ என்ற பெயருடன் ஸ்ரீ அன்னிபெஸண்டு நடத்தி வந்தார். ’ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையில் பாரதியாருக்கும் கும்பகோணம் புரரொபஸர் சுந்தரராமய்யர் அவர்களுக்கும் அத்வைதத் தத்துவ தரிசனத்தைப்பற்றிச் சுமார் நான்கு மாத காலம் வரையில் வாதம் நடந்து வந்தது.

இந்த வாதத்தில் ஒரு ஸ்வாரஸ்யம். தத்துவத்தின் வியாக்கியானத்தில் இரண்டு பேருக்கும் அபிப்பிராய பேதம் வந்துவிட்டது. சுந்தரராமய்யருக்குச் சாஸ்திர ஆராய்ச்சிப் பழக்கம் நிரம்பவும் உண்டு. பாரதியாருக்கு அவ்வளவு பழக்கமில்லை. இவர்களுடைய வாதம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவனிக்க இந்தக் கட்டுரைகள் வரும் பத்திரிகையை எதிர்பர்த்த வண்ணமாய், நாங்கள் துடிதுடித்துக்கொண்டிருப்போம்.

சுந்தரராமய்யருக்குப் பக்க பலம் அவருடைய நூல் பயிற்சி. பாரதியாருக்குப் பக்க பலம் அவருடைய நுண்ணிய அறிவும் மேதையும் ஆவேசமுமாகும். இரண்டு மத்தகஜங்கள் மோதிக்கொண்டால் அது எப்படி இருக்கும்? வீரனுடைய தன்மையை இன்னொரு வீரன்தான் அறிய முடியும்; சுந்தரராமய்யர் படித்த புலவர்; பாரதியாரோ மேதாவி. ஆச்சாரிய சங்கரருடைய தத்துவம் எளிதிலே பாரதியாருக்குப் பிடிபட்டுப் போய்விட்டது.

எவனும் ஈசுவரத்தன்மையை அடையலாம் என்பது பாரதியாருடைய கட்சி. எல்லாம் ஈசன் என்பது அய்யருடைய வாதம். பார்வைக்கு இரண்டும் ஒன்று போலத்தோன்றும். எல்லாம் ஈசன் என்பது காகிதத் தத்துவம் என்பார் பாரதியார். மனிதன் ஈசுவரத் தன்மையை அடைவதாவது என்று அய்யர் ஏளனம் செய்வார். எங்களுக்குப் பாரதியாரிடம் அளவு கடந்த பிரேமை. எனவே, அவர் சொல்லுவதுதான் சரி என்பது எங்களுடைய எண்ணம். இரண்டு பேருடைய ஆராய்ச்சி வாதங்களையும் சீர்துக்கிப் பார்த்து, முடிவுக்கு வரவேண்டிய தேவையே எங்களுக்குக் கிடையாது,

ஆனால், தெளிந்த தெரிந்த இடத்தில் இதைப் பற்றிப் பேச்சு வந்தபொழுது, நாங்கள் நினைத்தது சரியென்ற முடிவுக்கு வந்தோம். அதாவது, இதைப்பற்றி அரவிந்தரின் பங்களாவில் சம்பாஷணை பிறக்கும். சுந்தரராமைய்யருக்கு உண்மையில் அனுபூதி கிடையாத என்று அரவிந்தர் சொல்லுவார். ’ தத்துவத்தைத் தர்க்கத்தால் காண முடியாது. அதை அனுபவிக்க வேண்டும்’ என்பார் அரவிந்தர். பெரும்பாலும் நூல் பயிற்சியுள்ள பண்டிதர்களுக்குத் தத்துவ அனுபவம் இருப்பதில்லை. அவர்கள் தர்க்க ஆராய்ச்சி கஜக்கோலால், மகத்தான உண்மைகளை அளக்கப் பார்க்கிறார்கள்.
மிதவாத கோகலேக்கும், லோகமான்ய திலகருக்கும் வித்தியாசம் என்ன? சரித்திரத்தில், பொருளாதாரத்துறையில், இலக்கியத்தில், பேச்சில், கோகலே இணையற்றவர், ஆனால், லோகமான்ய திலகர்தானே, தேசத்தாரின் உணர்ச்சியையும் சக்தியையும் ஒன்றுகூடச் செய்தார்? விமர்சனத்தில் கைதேர்ந்தவன், நூல் எழுதவேண்டுமென்பதுண்டா? கோகலே இயற்கையின் பணியாள் திலகர் இயற்கையின் புதல்வன், ஈசனுடைய தன்மை நந்தனாருக்குத் தெரியும். நந்தனாரின் ஆண்டைக்குத் தெரியுமோ? நந்தனாரின் ஆண்டை, எத்னையோ வண்டி சாஸ்திரங்களை ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்திருக்கிறார். என்றாலும், கடைசியில் ஆண்டை நந்தானாரை அடிபணிய வேண்டியிருந்தது.

தமிழ்நாடடுக் கணித சாஸ்திரி மேதாவி ராமானுஜம் யாரிடம் கணித சாஸ்திர சிட்சை பெற்றார்? ஆக்ஸ்போர்ட சர்வகலாசாலை நிபுணர் ஹார்டி அவர்களுக்கு ராமானுஜம் கணக்குப் போட்ட வழி புலப்படுவதற்கே நீண்ட காலமாயிற்று. குழந்தைக்குப் பாலிருக்கிற இடம் தெரியும். மற்றவர்களுக்குப் பாலே தேவையில்லை பாலைப்பற்றித் தர்க்கவாதந்தான் தேவை.

சுந்தரராமய்யர் பாரதியாரின் ஆங்கிலப் புலமையைப் போற்றினாரேயொழிய, பாரதியாரின் வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதே சுந்தரராமய்யர், அரவிந்தர் எழுதிய ’ கீதை கட்டுரைகளை’ அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார், வாதமும் கண்டனமும் புலவர்களின் பொழுதுபோக்கு. உண்மையை நாடுவதும் அதற்காக உயிரை விடுவதும் மேதாவிகளின் கடமை.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.