LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 12

 மனிதர்களுக்கெல்லாம் நடமாட்டத்தில் ஆசை. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பது முடியாத காரியம். அடைபட்டுக் கிடப்பது சிறைவாசம் போல. கண்ணுக்குப் புதிய காட்சி, காதுக்குப் புதிய குரல்கள், காலுக்கு நடமாட்டம், ரத்தத்துக்கு ஓட்டம், உள்ளத்துக்குப் புத்தம் புதிய உணர்ச்சிகள் – இவை மனிதனுக்குத் தேவை. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தால் கால் ’மரத்துப் போய்விட்டது’ என்று சொல்லி, அதை நீட்டவும் மடக்கவும் உதைக்கவும் செய்கிறார்கள்.

மனத்துக்கும் நடமாட்டம் வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் ’மரத்து’ப் போகும். பாரதியாருக்குப் புதுச்சேரிவாசம் சிறை வாசத்தைப் போலவேதானிருந்தது. எவ்வளவு காலம் ஒரேவித முகங்களைப் பார்த்துக் கொண்டு, ஒரே ’ஸெட்’ ஆள்களோடு பேசிக்கொண்டிருப்பது? புதுச்சேரி அரசியலில் பிரிட்டிஷ் இந்திய தேசபக்தர்கள் கலந்துகொள்ளக்கூடாது. துடிதுடிக்கும் உள்ளம் படைத்தவர்கள், இத்தகைய நிபந்தனைகளுடன் சுகமாகக் காலந்தள்ள முடியாது; மனம் தாழ்ந்துபோகும்.

அற்ப மனிதர்களுடன் பேச்சுச் சல்லாபம் வைத்துக் கொள்வதைக்காட்டிலும் மௌன விரதம் மேலானது என்று ஓர் அறிஞர் கூறியிருப்பது உண்மை. வார்த்தைகளுக்கும் கருத்துகளுக்கும் லட்சியத்துக்கும் கௌரவம் கெட்டுப்போகும். சுகம் என்றால் பிறரை வஞ்சித்துத் தனக்கு மட்டும் தேடிக்கொள்ளும் சுகம் என்று அற்பன் எண்ணுகிறான். உலக சுகம் என்றால் அது ஏமாற்று வேலை, ஏமாற்றுக்கருத்து என்று எண்ணுகிறான் மூடன். கவிதை என்றால் கூத்துப்பாட்டு என்ற ஆபாச எண்ணம் அவன் மனத்தில் தோன்றுகிறது. சுதந்தரம் என்றால் உயிரை இழப்பதற்கு எற்பட்ட தற்கொலைச் சந்தர்ப்பம் என்று அவன் மயங்குகிறான்.

இந்தக் கேவலமான நிலையில் மனிதர்கள் இருப்பார்களாகில், மேதாவிகள் என்ன செய்வது? இந்த நிலையில் மூன்று காரியங்கள் செய்யலாம். ஒன்று, மௌனமாய் இருக்கலாம்; அறிவிலிகளின் அவதூறைப் பொருட்படுத்தாமல், பிடிவாதமாகத் தங்கள் கருத்தை உலகத்துக்குத் தெரிவிக்கலாம்; களைத்துச் சோர்ந்து போகுங்காலத்தில், இயற்கைத் தாயினிடம் சரண் புகலாம். இந்த மூன்று காரியங்களையும் பாரதியார் செய்தார்.

தோட்டங்களில் வசிப்பது, கடற்கரைக்குப் போய், கடலின் ஓய்விலா அலை ஒலியில் ஊடுபட்டுத் தம் கவலையை மறப்பது; சிறிது காலம் மௌன விரதம் கொள்ளுவது; தம் கருத்தை வெளியிடுவது—இவைகளைப் பாரதியார் செய்து வந்தார்.

பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் மரஞ்செடி கொடிகளுள்ள தோட்டத்தைக் காணுவதில், அதில் வசிப்பதில், பாரதியாருக்கு அளவில்லாத ஆனந்தம். வளர்ச்சியில் சுரணையில்லாதவர்களுடைய முகங்களைப் பார்ப்பதைக்காட்டிலும் வளருகிற கொடியைப் பார்த்து ஆனந்தமடையலாம் என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவார். ”ரோஷமில்லாத முகத்தை எப்படி ஓய் பார்த்துக்கொண்டேயிருப்பது ?” என்று நொந்துக்கொண்டு சொல்லுவார்.

இந்த மாதிரி, வெறி பிடித்தாற்போலப் பேசும் காலத்தில் பாரதியார் வீட்டுக்குள் இருக்க இசைவதில்லை; யாரையேனும் அழைத்துக்கொணடு, நண்பர் கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்துக்குப் போய்விடுவார்; அல்லது புதுச்சேரிக்கு அடுத்த வில்லியனூருக்குப் போவார்.

தோட்டத்தில் மரங்களையும் செடிகளையும் குளத்தையும் சின்னஞ்சிறு குருவிகளையும் பார்த்தவுடனே, பாரதியாரின் அலுப்பு சலிப்பு எல்லாம் எங்கேயோ மாயமாய்ப் பறந்து போய்விடும். ரஸிகத்தன்மை படைத்த உயிருள்ள தோழர்களுக்கு நடுவே இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வாரோ என்னவோ?

ஸரிக-க-காமா என்று அவர் வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்பை வெளியே தள்ளி, தலையைஎவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம்நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ-ஸஸ்ஸ-ஸஸ்ஸ என்று மூச்சுவிடாமல், உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப்போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மௌனம். ”சொல் ஆழி வெண் சங்கே ” என்ற கூக்குரல், கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று, ”மத்தகஜம் என வளர்த்தாய்”என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா.

குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனைதான். உற்சாகமும் சோர்வும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லிவிடலாம். புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முரித்துவிடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவ களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது.
கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துகளை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடு படுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ள முடியாது. புதுக் கருத்து ஒன்று-ஜீவ களை நிறைந்த கருத்து; தர்க்கவாதம் நிறைந்த கருத்தல்ல-மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள், அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப் பிராணனாகச் செய்துவிடுகிறது. உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை.

இந்த மாதிரி அவர்கள் ஏன் உயிரை விடவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அது இயற்கைத் தாயின் கொடிய விதி. இயற்கைச் சட்டத்தை ஏளனத்தால் கொல்ல முடியாது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்குப் பால் சரப்பதைத் தடுக்க முடியுமா? குழந்தைகளைப் பல ஏராளமான மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்குமளவும், மேதாவிகள், நிமிஷம் தவறாமல் உள்ளத்தில் பிரசவ வேதனைப்பட வேண்டியதுதான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், பக்தியின் பலவித பாவங்களை அனுபவிப்பதற்காக, பல வகை சிருஷ்டிகளாகத் தம்மைப் பாவித்துக்கொண்டாராம். கிருஷ்ணனிடம் ராதைக்கு இருந்த காதல் பக்தியை உயர்ந்ததாகச் சொல்லுவதுண்டு. அதை அனுபவிப்பதற்காகச் சேலையுடுத்திக்கொண்டு, தம்மைப் பெண்ணாகப் பாவித்து, நடந்துகொண்டாராம். ராமனிடம் ஹனுமானுக்கு இருந்த இணையற்ற விசுவாச பக்தியை உணரும்பொருட்டு, வாலைக் கட்டிக்கொண்டு, மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, ராமநாமம் ஜபிப்பாராம். இவை ராமகிருஷ்ணரது கேலிச் சேஷ்டைகளல்ல; நாடகமேடை வேஷங்களல்ல.

படைப்பு, கவிதை மயம், கவிதை உள்ளத்தைப் பெறாவிடில், படைப்பின் நுட்பத்தையும் ரகசியத்தையும் அறிய முடியாது என்று பாபு விபின சந்திரபாலர் அபூர்வமான உண்மை தரிசனத்துடன் சொல்லியிருக்கிறார். கவிகளின் உள்ளம் கபடம் இல்லாமல் ஒட்டிக்கொண்டு உறவாடும் பான்மை, கவிகளுக்கு மிகுதியும் உண்டு,

புகழேந்திக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சண்டை. புகழேந்தி அபூர்வமான கவி. ஒட்டக்கூத்தரை அகராதிக்கவி எனலாம். பல ரகங்களான வார்த்தைகளைக் கொட்டுவதில் ஒட்டக்கூத்தர் சமர்த்தர். சோழ ராஜனுக்கு இருவர் பேரிலும் பிரியம். பாட்டுப்பாடவேண்டும் என்று அவர்களிருவரையும் அரசன் வேண்டிக்கொண்டான். ஒட்டக்கூத்தர் முதலிலே பாடினார். பின்பு, அதை ”வெட்டிப் பாடவோ, ஒட்டிப் பாடவோ ?” என்றார் புகழேந்தி. ”ஒட்டிப் பாடுக” என்றான் அரசன் ஒட்டக்கூத்தரை ஒட்டிப் புகழேந்தி பாடியதாகக் கதை.

இயற்கையே ஓர் அற்புதமான ஒட்டு வேலை. ஜீவராசிகள் அனைத்தும் தனித்துத் தனித்து நிற்பதாகத் தோன்றினாலும், அவை யாவும் சூட்சமமாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றன. மனிதனுடைய தேகத்தையே எடுத்துக்கொள்வோம். காலோடு தலை ஒட்டிக்கொண்டிருக்கின்ற அற்புதம் எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது! தலையின் தொழிலென்ன! காலின் வேலையென்ன! தினையளவுகூடப் பொருத்தமில்லாத வேலைகள்! என்றாலும், இவை இரண்டுக்குமிடையே இருக்கும் ஒட்டுதலைப் பார்த்தால் பிரமிக்கும்படி இருக்கிறது. பாரதியார் பாடுகிறார்.

” காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும், எங்கள் கூட்டம் !
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம் !”

இதுதான் கவிகள் உலகத்துக்கு எடுத்து உபதேசம் செய்யும் மூலமந்திரம். ஜீவராசிகளுக்குள் இந்த ஒட்டுதல் எப்படியெல்லாம் புகுந்து கிடக்கிறதென்பதை நவரஸங்களும் ததும்ப, விஸ்தாரமாக, விதரணையுடன் பேசவதே கவிகளின் வேலை.

”நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி, அவனுக்குப் பகைமை கிடையாது; எனவே, பலவீனம் துளிக்கூடக் கிடையாது. ”நோக்கக் களியாட்டம் ” அவனுக்கு ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது?

முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல – வெறிகொண்டவனைப் போல – சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாக, பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும்பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா? குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயந்தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும்.

குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்துபோய், மண் தரையில் படுத்துக்கொள்வார்; தலைக்குயரமாய் எதையும் வேண்டார். எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை. இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்!

சிறிது நேரம், கண்ணயர்ந்தது போலப் பாரதியார் படுத்துக்கொண்டிருப்பார். அப்பொழுது அவர் உள்ளத்தில் என்ன நிகழுமோ தெரியாது. தூக்கி வாரிப் போட்டாற்போல எழுந்திருப்பார். சேங்கன்றை நினைத்துக்கொண்டு மேய்ச்சல் தரையிலிருந்து அம்மா என்று அலறிக்கொண்டு ஓடிவரும் பசுவாக அப்பொழுது பாரதியார் என் கண்ணுக்குப் படுவார். சேங்கன்றைப் பார்த்தபின், அல்லது அதன் குரலைக் கேட்டபின்தான் பசுவின் தாபம் தணியும். சிறிது நேரத்துக்குமுன் நிகழ்ந்த இயற்கையின் ஆவேசம் கெட்டு மடிந்து போயிற்றோ என்ற அச்சத்தால், பாரதியார் திடீரென்று எழுந்திருப்பாரோ, என்னவோ? இத்தகைய சந்தர்ப்பங்களில் பாரதியாரின் முகவிலாசம் மிகவும் வசீகரம் கொண்டதாயிருக்கும். அகம்பாவம், மாச்சரியம் முதலிய சேஷ்டை உணர்ச்சிகளின் சின்னத்தை முகத்தில் காணவே முடியாது.

இயற்கையோடு ஒட்டிக் கொண்ட உள்ளத்தில் சிறுமை இருக்குமோ? எனவே, அதன் சின்னம் முகத்திலே எப்படித் தோன்றும்? ஆயிரம் வருஷங்கள் உயிரோடிருந்தாலும், பாரதியாரின் இந்த அற்புத முகத் தோற்றத்தை நான் மீண்டும் எப்போது பார்க்கப் போகிறேன்? கவிதை பிறக்குந்தருணத்தில் காட்சியளிக்கும் பாரதியாரின் ஜோதி முகத்தைத் தமிழர்களில் ஆயிரம் பேர் பார்த்திருந்தாலும் போதுமே? நம் நாடு நிச்சயமாய் இதற்குள் கடைத்தேறி இருக்குமே? எனக்கு ஏற்பட்ட பாக்கியம் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்றுதான் என் நெஞ்சம் வருந்துகிறது.

’பாரதி தாஸன்’ என்ற புனைபெயருடன் ஆச்சரியப்படத்தக்க தமிழ்க்கவிதை எழுதும் வாத்தியார் கனகசுப்புரத்தினத்தைப்பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கின்றேனல்லவா? அவர் பாரதியாருக்குத் தோழன்; சிஷ்யன். மேற் சொன்ன தோட்டத்தைப்பற்றி அவர் அதிசயமான சேதியொன்றைச் சொன்னார்.


”காற்றடிக்குது கடட்ல குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!”

என்று பாரதியார் பாடியிருக்கிறாரே, அது புதுச்சேரியில் அடித்த பெரும்புயல் சம்பந்தமாகத்தான். இன்றைக்குச் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன், புயல் அடித்தது. தமிழ்நாடு முழுவதும் வெள்ளமும் புயலுமானது உடைத்துக்கொள்ளாத ஆறுகள், ஏரிகள் இல்லை. .மரங்கள் சடசடவென்று சரிந்து வீழ்ந்தன. ”காடெல்லாம் விறகான செய்தி ” ஆயிற்று நாடு முழுவதும்.

புதுச்சேரி கடற்கரை நகரம்; புயலால் நேர்ந்த சேதத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. ஒதியஞ்சாலை என்ற தோட்டத்திருந்த அழகான மரங்கள் எல்லாம் தலைகுப்புற வீழ்ந்தன; தந்திக் கம்பங்கள் முரிந்து போயின; கட்டடங்கள் சரிந்தன; கூரைகள் அப்படியே கூடாரம் அடித்ததுபோல உட்கார்ந்துவிட்டன. நகரம் முழுவதும் ’ பேய் மேய்ந்த ’ காட்டைப் போலத் தோற்றம் அடைந்தது.

இவ்வளவு பயங்கரமான சேதத்திற்கு நடுவே, முத்தியாலுப்போட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலிருந்த மரங்கள் மட்டும் விழவில்லை என்று பாரதிதாஸன் சொன்னார். எனக்கும் அவருக்கும் அற்புதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், நிகழ்ந்ததை நம்பித்தானே ஆக வேண்டும? இந்த மரங்கள் தப்பித்துக்கொண்ட காரணத்தை முழுவதும் ஆராயாமல், அற்புதம் என்று அதைக் கொள்ள என் மனம் கூசுகின்றது. தனது ரகசியத்தைப் பாரதியாருக்குப் போதித்த இடம் கெடாமல் இருக்கவேண்டும் என்பது இயற்கைத் தாயின் விருப்பமோ, என்னவோ என்று கற்பனை கலந்து பேசலாம். ஆனால், மனிதனுடைய அறிவிலே அற்பமும் மகத்துவமும் கலந்து நிற்கின்றன. இயற்கையின் சூதை அற்ப அறிவினால் அளக்க முடியாது; அளப்பதற்குக் கவிதை உள்ளம் வேண்டும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தோ பதினொன்றோ, சரியாக நினைக்கவில்லை; அந்த வருஷ மத்தியில் தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் புதுச்சேரிவாசிகளான பிரிட்டிஷ் இந்திய தேசபக்தர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சென்னை மாகாணப் போலீசாரின் சூசனை.

பாரதியாரைப்பற்றிச் சென்னை அரசாங்கத்தால் சத்தேகப்படுவதற்கே காரணமில்லை. மான்டோலோ வெடிகுண்டு வழக்கில் எதிரியாக இருந்த அரவிந்தரும் ( அரவிந்தர் மேற்படி வழக்கில் விடுதலை அடைந்தார்) பாரிஸ்டர் ஸவார்க்கரோடு நெருங்கிப் பழகிய வ.வே.சு அய்யரும் புதுச்சேரியில் இந்தக் காலத்தில் வாசம் செய்து வந்ததுதான் மேற்சொன்ன சந்தேகத்துக்குக் காரணம் என்று சொல்லிக்கொண்டார்கள்.

அந்தச் சந்தேகம் எப்படித் தொலைந்து போனாலும் போகட்டும்; அதைப்பற்றி நாம் அதிகமாகக் கவலைப் பட வேண்டியதில்லை. அந்தச் சந்தேகத்தின் விளைவுதான் விபரீதமாகப் போயிற்று.


இந்தக் கொலைக்குப் பிறகு சென்னை மாகாணப் போலீசார் புதுச்சேரியை முற்றுகை போட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். புதுச்சேரிக்குள்ளேயே நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் இந்தியப் போலீசார், பாரதியார் வீடு, அய்யர் வீடு அரவிந்தர் வீடு – இவைகளின் பக்கத்திலே, கும்பல் கும்பலாக உட்கார்திருப்பதை அக்காலத்தில் காணலாம்.

எல்லாம் பொம்மலாட்ட வேடிக்கையப் போல நடக்கும். தேசபக்தர்கள் வீட்டுக்குடள் இருந்தால், போலீசார் பக்கத்து வீடுகளில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வெளியே சென்றால், போலீசார் எழுந்திருந்து, அவர்களைப் பின் தொடர ஆரம்பித்துவிடுவார்கள். தேச பக்தர்களுக்கு முதலில் ஏற்பட்ட அவஸ்தை பின்னர், அவர்களுடைய புதுச்சேரி நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

இந்த மாதிரிப் பின் தொடர்ந்து போவதில் பல சில்லறை வேடிக்கைகள் நடைபெறும். இந்த வேடிக்கைகளைத் தேசபக்தர்கள் செய்வதில்லை; அவர்களுடைய புதுச்சேரி நண்பர்கள் செய்து ஆனந்தமடைவார்கள்.

போலீசாரால் பின்தொடரப்பட்ட நண்பர்களில் சிலர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அதன் பின்புறமாய் வெளியே போய்விடுவார்கள். உள்ளே நுழைந்த ஆள் வெளியே வருவார் என்று, வெளியே இருக்கும் போலீசார் காத்துக்கொண்டிருந்து, அலுத்துப் போவார்கள்.

ஆணை விட்டுவிட்டால், ’பிளாக் மார்க்’ வருமே என்று லபோலபோவென்று பரிதாபமாகக் கூக்குரலிடவார்கள். நண்பர்கள் செய்யும் இந்தச் சேஷ்டைகளைப் பாரதியார், அய்யர், அரவிந்தர் – மூவரும் கண்டித்திருக்கிறார்கள். ” இது என்ன அற்பத்தனமான காரியம்?” என்று பாரதியார் அடிக்கடி கண்டித்துப் பேசுவார்..

இது சம்பந்தமாகப் பாரதியாருக்கும் ஒரு நண்பருக்கும் வாதம் நடந்தது.


நண்பர் : தாங்கள் எங்களைக் கண்டிப்பது நியாயமில்லை. போலீஸ்காரர் எங்களைப் பின்தொடரும்படியாக நாங்கள் என்ன செய்தோம்?

பாரதியார் : நீங்கள் எங்களோடு பழகுகிறதுதான் நீங்கள் செய்கிற குற்றம். சகவாச தோஷத்துக்குப் பாலன் கிடையாதா ?

நண்பர் : புத்தகத்தைத் தலையணையாக வைத்துப்படுத்துக்கொண்டிருந்தால், சகவாச தோஷத்தினால் படிப்பு வரும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே!

பாரதியார் : ஓய்! நாங்கள் அச்சுப் புத்தகங்களல்ல. நாங்கள் உயிருள்ள புத்தகங்கள். இது சர்க்காரின் மதிப்பு நாங்கள் என்ன செய்கிறது?

நண்பர் : நல்ல மதிப்பு இது! காத்தானுக்கு வியாதி வர, தீத்தானுக்கு மருந்து கொடுத்தார்களாம்! புத்திசாலிகளோட பேசக்கூடாது என்றுகூடச் சர்க்கார் உத்தரவு போட்டாலும் போடுவார்கள் போல இருக்கிறதே!

பாரதியார் : புத்திசாலி சும்மா இருப்பானா? சும்மா இருக்க முடியுமா? தன் கட்சியை வலுப்படுத்தத்தான் பார்ப்பான். எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் தேசக்தியைப் புகட்டுவிடுவோம் என்று சர்க்கார் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் இயற்கைதானே? அந்தப் பயங்கூட அவர்களுக்கு இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பேது? ஜனங்களுக்கு எங்களிடம் இயற்கையாகத்தோன்றாத மதிப்பை, சர்க்கார் எங்களுக்கு வருவித்துக் கொடுக்கிறார்கள். சென்னைச் சட்டசபை மூலமாய்ச் சர்க்காருக்கு வந்தனமளிப்பு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை.

இப்படிப் பாரதியர் சொல்லவும், அந்த நண்பர் தமது பெரிய சரீரத்தைக் குலுக்கிக் குலுக்கிச் சிரிப்பார். பிரஸ்தாப நண்பர் புதுச்சேரிக் கல்லூரியொன்றில் ஆச்சாரியார்; நல்ல சங்கீத ரஸிகர்; பிரெஞ்சுப் பாஷையில் நிபுணர்; சரித்திரத் துக்கடாக் கதைகள் சொல்லுவதில் சமர்த்தர்; ஹாஸ்யமாகப் பேசுவதில் திறமைசாலி ; பரம ரஸிக சிரோமணி. அவருடைய பெயர் சுப்பிரமணிய அய்யர்.
ஒழிந்த நேரங்களில் அவருடன் சம்பாஷணைச் சல்லாபம் செய்வதில் பாரதியாருக்கு ரொம்பப் பிரியம். அவரும் பாரதியாரின் பாடல்களைக் கேட்டு ஆனந்த பரவசமடைந்தார். தினம் ஒரு தடவையேனும் பாரதியார் அவரைக் கண்டு யோகஷேம சமாசாரம் விகாரிக்காமலிருக்க மாட்டார். பாரதியாருக்குப் பிரெஞ்சு உச்சரிப்பிலும் பாஷையிலும் சந்தேகமிருந்தால், சுப்பிரமணிய அய்யரிடந்தான் சந்தேக நிவர்த்தி செய்துகொள்ளுவார்.

இந்தப் போலீஸ் அமளிக் காலத்திலே, பாரதியாரின் வீட்டில் சில வினோதங்கள் நிகழும்.

இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து, பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், அய்யருக்குங்கூட உண்டு.

ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம் வருமாறு:

ஹே! கவிச்சக்கரவர்த்தி! தங்களுடைய திவ்வியமுகமண்டல ஜோதியைக் கண்டும், தங்களுடைய அமிருத வர்ஷதாதைகளான பாடல்களைக் கேட்டும் ஆனந்தப்படுவதற்காக, கையில் காசில்லாமல், ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி, டிக்கெட்டில்லாமல் கடைசியாகப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன். இப்பொழுது ஓர் இடத்தில் மறைந்துகொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணிக்குத் தங்கள் வீட்டுக்கு வருகிறேன் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைத்துக் கொண்டிருந்தால் நல்லது.

தங்கள் பக்தன்,
இலக்கியப் பிரியன், திருநெல்வேலி அன்பன்,


” ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி வந்த பக்தன், இலக்கியப்பிரியன், திருநெல்வேலி அன்பன் ’ ஏழு மணிக்கு வந்தார். ஆனால், பாரதியார் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைக்கவில்லை; ’’ மறவர் பாட்டு” என்ற தமது பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தார். அந்தப் பாட்டிலே, ” நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ” என்று ஓர் அடி இருக்கிறது. ஏழு மணி அடிக்கிற சமயத்தில், இந்த அடியைப் பாரதியார் பாடிக்கொண்டேயிருந்தார். வந்தவரும் இதைக்கேட்டுக்கொண்டே வந்தார்.

” நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு! சீ, சீ, சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு !” என்று உரக்கப் பாடினார் பாரதியார்.

வந்தவர் நல்ல தேக அமைப்புள்ளவர், தலை மொட்டை; விவேகானந்தரைப் போல, கழுத்து முதல் கால்வரையில் காவிச் சட்டை. முகத்திலே நேர்த்தியான குங்குமப்பொட்டு.

பாரதியர் பாட்டை நிறுத்தினார். வந்தவர் கும்பிட்டார். ”ஆஹா! தர்மம் நாசமாய்ப போகிறதே! கிருஹஸ்தன் நமஸ்காரம் செய்யணும். சந்நியாசி ஆசீர்வதம் செய்யணும். தலைகீழ்ப் பாடமாய்ச் செய்துவிட்டீர்களே!!” என்று அவரைப் பார்த்துப் பாரதியார் கேலி செய்தார்.

வந்தவர் சிரிக்கவேயில்லை. மடியில் கனம் போலிருக்கிறது. பாரதியாரின் சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. ”சரி! என்னைப் பார்த்தாய்விட்டது, போய்விட்டு வாருங்கள்” என்றார் பாரதியார். அன்பர் லேசிலே விடுகிற பேர்வழியல்ல. ஹிந்தி, இங்கீலீஷ், தமிழ் மலையாளம் முதலிய பாஷைகளில் ஒன்றுவிடாமல் பேசித் தீர்த்து விட்டார். பாரதியாருக்கு அடங்காத கோபம்.

” அரவிந்தரை எப்பொழுது பார்க்க முடியும்?” என்றார் அன்பர். ”அய்யரைப் பார்த்தாகிவிட்டதோ. இலையோ?” என்று பாரதியார் ஆத்திரத்துடன் கேட்டார். வந்தவருக்கு அப்பொழுதுதான் பாரதியாரின் ஆத்திரமும், சூட்சுமப் பேச்சும், பாட்டும் விளங்கின. வந்தவர் உத்தரவு கேட்டுக்கொண்டு வெளியே போகுமுன், ”ஓய்! அர்ஜுன சன்னியாசி ! உசிதமாய் வாழும்! உயரமாய் வாழும் ! மட்டத்திலே ஆசை வைக்காதேயும்” என்று சொல்லிப் பாரதியார் அவரை வழியனுப்பபினார்.

சன்னியாசி வேஷம் மட்டுமா? ஒரு நாள் நவரத்ன வியாபாரி ஒருவர் வந்தார். வியாபாரி வேஷம் அவருக்கு நன்றாகப் பலித்திருந்தது. கற்கள் ஏதேனும் வேண்டுமா?” என்றார் அவர் பாரதியாரிடம். பாரதியார் அவரை ஏற இறங்கப் பார்த்தார். பாரதியரின் சுடர் விழிப் பார்வையைக் கண்டு அவர் ஆச்சமடைந்தார். ”ஓய்! என்னிடத்தில் கொஞ்சம் நவரத்தினங்களிருக்கின்றன. அவை விலைபோகும்படியாக, உங்கள் சர்க்காரிடம் கொஞ்சம் சிபார்சு செய்யுங்களேன். உம்மிடம் போலீஸ் டயரி இருக்கிறதா?” என்றார் பாரதியார்.

ரத்ன வியாரிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ”பெரியவாளுக்கு நமஸ்காரம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சில சமயங்களில், பலாத்காரப் புரட்சியைப்பற்றிப் பாரதியார் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை அறியத் தலைப்பாகை, கோட், ஷர்ட் முதலிய அங்கங்களுடன் சில இங்கிலீஷ் படித்த ’வித்வான்கள்’ வருவார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் இரகசியப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். பாரதியாரின் கண்கள் இவர்களின்பேரில் அம்புகளைப் போலப் பாயும்.

ஆனால், வந்தவர்களெல்லோரும் பாரதியாரின் பெருமையை உணராமல் போனதில்லை. சில சமயங்களில் அவர்களுடன் பேசாமல் பாரதியர் பாடிக் கொண்டேயிருப்பர். எந்த வேஷம் போட்டுக்கொண்டாலும், எந்த மனிதனாவது நாட்டை மறக்க முடியுமா? வயிற்றப் பிழைப்பு மனிதனைச் சாறாகப் பிழிந்து சக்கையாக அடித்துவிடுவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்குக்கூடப் பாரதியாரைக் கண்டதும் இயற்சையான மனித சுபாவம் திடீரென்று வந்துவிடும். அந்த நரம்பில் ’கைவைத்து’ அழுத்தப் பாரதியாருக்குத் தெரியும்.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.