LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 16

 ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்துகொண்டிருந்தது. சிலர் வேதமந்திரம் ஜபித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆசனத்தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்துகொண்டிருந்தான். புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள்.

என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரோபஸரைக் கேட்டேன். “கனகலிங்க“த்துக்ப் பூணூல் போட்டு, காயத்ரீ மந்திரம் உபதேசமாகிக்கொண்டிருக்கிறது“ என்றார். “உட்கார்ந்திருப்பது ஹரிஜனக் கனகலிங்கம்தானே! அதிலே சந்தேகமில்லை,“ என்று மறுபடியும் அவரைக் கேட்டேன். “சாக்ஷாத் அவனேதான்! அவனுக்குத்தான், பாரதி காயத்ரீ மந்திரம் உபதேசம் செய்தகொண்டிருக்கிறார்“ என்றார் புரொபஸர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான், என் பூணூலை எடுத்துவிடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார். அவரோ, வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார். தமது பூணூலை எடுத்துவிட்டு, என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்குத் திடீரென்று வைதிக வெறி தலைக்கு ஏறி விட்டதாக என்று எண்ணினேன்.


மௌனமாக உட்கார்ந்திருந்தேன். பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு, “கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்; எதற்கும் அஞ்சாதே; யாரைக் கண்டும் பயப்படாதே. யார் உனக்குப் பூணூல் போட்டுவைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டுவைத்தான் என்று அதட்டியே பதில் சொல். எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்துவிடாதே“ என்று பாரதியார் அவனுக்கு வேறு வ்கையில் உபதேசம் செய்தார்.

இதைக் கேட்டு, யாரேனும் வாய்க்குள்ளாகவே சிரிக்கிறார்களோ என்று பார்த்தேன். பாரதியார் சொன்னதை ஆமோதிப்பதைப் போல, அவர்கள் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த வைபவத்துக்கு வந்தவர்கள், தாம்பூலம் வாங்கிக்கொண்டு, பாரதியாரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். கனகலிங்கமும் போய்விட்டான். யாரோ ஒருவனைக் கூப்பிட்டு, “நீ கனகலிங்கத்துடன் கூடப்போய், அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா“ என்று பாரதியார் சொன்னார்.

எல்லோரும் போனபின், பாரதியார் தாம் போட்டுக் கொண்டிருந்த பூணூலை எடுத்துவிட்டார். ‘என்ன ஓய்!‘ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். “இரண்டு பத்தினிமார்கள், பதினாயிரம் கோபிமார்கள் இவர்களோடு லீலைகள் புரிந்த கண்ணனுக்கு நித்ய பிரம்மசாரி என்ற பெயர் வந்த கதையாக இகுக்கிறதே, உங்கள் பிரம்மேபதேசம்“ என்றேன். “நாடறிந்த பர்ப்பானுக்குப் பூணூல் எதற்கு ? உமக்கும் எனக்கும் வேண்டா. புதுப் பார்ப்பான் கனகலிங்கத்துக்குப் பூணூல் தேவை. எப்பொழுது நான் அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தேனோ, அப்பொழுது எனக்கும் பூணூல் இருக்க வேண்டும். அது முடிந்துவிட்டது இனிமேல் எனக்கு என்னத்துக்குப் பூணூல் –“ என்று பேச்சை அழகாக முடித்துவிட்டார் பாரதியார்.

இதைப்பற்றி வேறு எதுவும் பேச இடங்கொடுக்காமல், புரொபஸர் சுந்தரராமனோடு கீதை சம்பந்தமாக நடத்திய விவாதத்தில், அன்றைக்கு எழுதிய கட்டுரையைப் பாரதியார் படித்துக் காண்பித்தார்.

கீதா விவாதம் வேடிக்கையான விவாதம். அப்பொழுது சென்னையிலே, ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்‘ என்ற தினசரி இங்கீலீஷ் பத்திரிகை ஒன்று நடந்து வந்தது. அதற்கு ஸ்ரீராம சேஷய்யர் ஆசிரியர். ஸ்ரீ சுந்தரராமனுக்கும் பாரதியாரக்குமிடையே, கீதையைப்பற்றிய விவாதத்தை அவர் எப்படியோ தூண்டிவிட்டார். ஸ்ரீ சுந்தரராமன் சம்பிரதாய முறைப்படி கீதைக்கு வியாக்கியானம் செய்து, விவாதத்தை நடத்தி வந்தார். எதிலும் நவீன சம்பிராதாயத்தை நாட்ட வந்த பாரதியார், தமது மேதை காண்பித்த போக்கில் விவாதத்தை நடத்தினார்.

அரவிந்தர், பாரதியாரின் கட்சி வாதத்தை ஆதரித்தார். விவாதம் ரஸாபாசமாகப் போகும் நிலைக்கு ஸ்ரீ சுந்தரராமன் அதைக் கொண்டு வந்து விட்டார். பாரதியார் விவாதத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. இந்த விவாதம் நடக்கையில், விஷயம் செதரிந்த புதுச்சேரி நண்பர்கள் ஆச்சரியப்பட்டது ஒரு சங்கதியைப் பற்றித்தான்.

“ பாரதியாருக்கு இவ்வளவு சமஸ்கிரதம் தெரியுமா? பாரதியார் இங்கிலீஷில் இவ்வளவு அழகாகவும் வன்மையோடும் எழுத முடியுமா?“ என்று அவர்கள் தலையை அசைத்துக்கொண்டு ஆச்சரியப்பட்டார்கள். உலகம் மதிக்கிற விதமே இப்படித்தான். தங்களுக்குப் பக்கத்திலிருப்பவர்களிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது, இருக்க முடியும் என்று பெரும்பான்மையோர் எண்ணுவதேயில்லை. இத்தகைய விபரீதத்துக்கு விமோசனம் என்றைக்கு ஏற்படப் போகிறதோ!

கடுமையான விவாதத்தில் பாரதியாருக்கு எவ்வளவு ஆர்வம்! தமது கட்சி செயிக்க வேண்டும் என்பதற்காக அல்ல! எப்படியாவது உண்மை விளக்கம் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவரது ஆவல். இவ்வளவு ஆவல், வேடிக்கை செய்வதிலும் அவருக்கு உண்டு.


புதுச்சேரி, ஈசுவரன் தருமராஜா கோயில் தெருக்கோடியில் (கடற்கரைப் பக்கத்தில்) ஒரு சத்திரம் இருக்கிறது. ஒரு சமயம் அங்கே கதா காலட்சேபம் நடைபெற்றது. கதை செய்யும் பாகவதர் நிரம்ப மோசம்! தமது தொழிலில் திறமை போதாதவர். எனவே, கூடியிருந்தவர்களால் கதையை இரசிக்க மடியவில்லை. அங்கே பாரதியாரும் நானும் இருந்தோன். கூட்டத்தில் எல்லோரும் சத்தம் போட்டுப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

சப்தத்தை அடக்குவதற்குப் பாகவதருக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்போலிருக்கிறது. அடிக்கொரு தரம் அவர் ‘கோபிகா ஜீவன ஸ்மரணே‘ என்று சொல்வதும், இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் (வழக்கமாகச் சொல்வது போல) ‘கோவிந்தா கோவிந்தா‘ என்பதும் ஓயாத சம்பவமாகிவிட்டது. பாகவதருக்குக் கதை மேலே ஓடவில்லை. பாரதியாருக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை! வெளியே வந்துவிட்டார்.

வந்து சும்மா இருக்கவில்லை, பொன்னு முருகேசம் பிள்ளைக்குக் கோவிந்தன் என்று ஒரு வேலைக்காரன் உண்டு. அவனைக் கூப்பிட்டு, “கோவிந்தா! இன்னொரு தரம் ஜனங்கள் ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று கோஷம் செய்து முடிந்ததும், நீ சபைக்குள்ளே போய், ‘ஏன் எல்லோருமாகச் சேர்ந்து என்னைக் கூப்பிடுகிறீர்கள்‘ என்று கேள்“ என்று தயார் பண்ணிவிட்டுவிட்டார்.

கோவிந்தன் இந்தக் தமாஷாவில் பூரணமாகக் கலந்துகொண்டான்; பாரதியார் சொன்னது மாதிரியே செய்தான். சபையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ( பாகவதரும் அவரது பக்கவாத்தியக்காரர்களும் நீங்கலாக) கொல்லென்று சிரித்தார்கள். பாகவதர் சீக்கிரமாகக் காலட்சேபத்தை முடித்துவிட்டார். சன்மானமும் அதற்குத் தகுந்தாற்போலத்தான் என்று சொல்ல வேண்டுமா?

தமிழர்களின் ஜனசுமுதாயத்தைப் புனர் நிர்மாணம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பாரதியாருக்கும் இந்த மாதிரி வேடிக்கை செய்வதற்கு மனமும் பொழுதும் இருந்ததா என்று சிலர் ஆத்திரத்தோடும், பலர் ஆச்சரியத்தோடும் கேட்கலாம். நகைச்சுவை இல்லாதவர்கள்தாம் ஆத்திரப்படுவார்கள். பாரதியாரிடம் அபரிமிதமான நகைச்சுவை இருந்தது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

“நகைச்சுவை இல்லாவிடில் நான் எவ்வளவு காலத்துக்கு முன்பேயோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்“ என்று காந்தி சொன்னது, எல்லாப் பெரியார்களைப்பற்றியும் சொன்ன உண்மையாகும். பெரிய பிரயத்தனங்களைச் செய்து படுதோல்வி அடையுங்காலையில், மனிதன் மனம் உடைந்து போகமாட்டானா? தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் அவனுக்கு அப்பொழுது தோன்றும். இந்த விபத்திலிருந்து அவனை விலக்கக்கூடியவை இரண்டே இரண்டுதான். ஒன்று, கடவுளிடம் பக்தி; இன்னொன்று அபரிமிதமான நகைச்சுவை. பாரதியாருக்கு இரண்டும் நெருக்கடி காலங்களில் துணையாக நின்றன.

பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும் சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால், இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. அய்யர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்துவிடுவார். “ அய்யரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத்தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை குட்டிகள் பிறக்கா” என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார். அய்யருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக்காய்கள்! பாரதியாருக்கோ, காய்கள் குழந்தைகள் மாதிரி.

சீட்டிலே, கர்னாடக ஆட்டமான ஓர் ஆட்டந்தான் பாரதியாருக்குத் தெரியும். 304 (முந்நூற்று நான்கு ) என்கிறார்கள், அதுதான். அதுவும் நன்றாக ஆடத்தெரியாது. பாரதியார், என்னைத் தவிர வேறு யாரும் தமது கட்சியில் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவதில்லை. தமக்கு வந்த சீட்டுகளில் குலாம் என்ற ஜாக்கி ஒன்றோ இரண்டோ இருந்தால், பாரதியார் குதூகலப்படுவார்; கையைத் தூக்கித் தமது கட்சிக்காரனுக்கு ஜாடை காண்பிப்பார். சதுரங்கத்தில் அய்யரிடம் தோற்கும் படுதோல்வியை, எப்படியாவது சீட்டாட்டத்தில் அவருக்குத் திருப்பிக் கொடுட்ததுவிட வேண்டும் என்று பாரதியார் மிகுதியும் ஆசைப்படுவார்.

கணக்கில் அகப்படாத மேதையைப் படைத்த பாரதியார், இப்படிக் குழந்தை மாதிரி இருக்கிறாரே என்று எனக்குச் சிரிப்பு வரும். அய்யரும் சீனிவாசாச்சாரியாரும் ஒரு கட்சி. பாரதியாரும் நானும் எதிர்க்கட்சி. அவர்கள் தோற்றுப் போய்விட்டால், பாரதியார் செய்கிற ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க வேண்டுமே!

“அய்யரே! இது நெப்போலியன் தலைகுப்புற வீழ்ந்த வாட்டர்லூ சண்டையாக்கும். இனிமேல், நீர் ஸென்ட் ஹெலீனாவுக்கு (ஸென்ட் ஹெலீனா என்பது நெப்போலியனைப் பிரிட்டிஷார் காவலில் வைத்திருந்த தீவு) போக வேண்டியதுதான்! “ என்று சொல்லிக் கும்மாளம் போடுவார்.

பாரதியாருக்குக் கடலில் நீந்த வேணடும் என்ற ஆசை; அனால், நீந்தத் தெரியாது. அய்யரும் நானும், மற்றவர்களும் கடலில் நீந்தினால், பாரதியார் கரையில் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார். காவேரி ஆற்றில் நீந்தி எனக்குப் பழக்கம் அதிகம். எனவே, கடலில் வெகுதூரம் போய்விடுவேன். அய்யர் பின்தங்கிவிடுவார். நாங்கள் கரைக்கு வந்ததும், “அய்யரே, என் கட்சிக்காரரிடத்தில் உம்ம ஜம்பம் செல்லவில்லையே!“ என்று சொல்லிச் சொல்லிக் கைகளைக் கொட்டுவார் பாரதியார்.

‘என்ன குழந்தை, பாரதியார்!‘ என்று அப்பொழுதும் எனக்குச் சிரிப்பு வரும். விளையாட்டுக் குழந்தை மனப்பான்மை கொண்டிருப்பது மேதையின் லட்சணமோ என்னவோ? கணக்கில் மகாமேதாவி என்று கொண்டாடப்பட்ட காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீராமானுஜம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிட்டிற்று. மிகச் சாதாரணம் என்று கருதப்படுவதைக்கூட அவர் கேட்டால், குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, ‘அப்படியா!‘ என்பார். கிண்டலுக்காக அப்படிச் செய்கிறாரோ என்று முதலில் நான் சந்தேகப்பட்டேன். கணிதத்தில்தான் அவர் மேதாவி! மற்ற எல்லா விஷயங்களிலும் பச்சைக்குழந்தை மாதிரி என்பதைப் பிறகு தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டேன்.

ராமானுஜத்தைப் போலவே, பாரதியாரும் சில விஷயங்களில் குழந்தையாய் இருந்தார்.

பாரதியாருக்கு ஸயன்ஸில் அபாரப் பிரியம். டெலஸ்கோப் என்ற தூரதிருஷ்டி பூதக்கண்ணாடி மூலமாக வானத்தைப் பார்த்துப் பார்த்து அவர் பரவசமடைந்ததை எழுத முடியாது. சந்திரன் பூமிக்குப் பக்கததில் இருப்பது மாதிரி தெரிந்ததாம். புள்ளி புள்ளியாகத் தோன்றிய நக்ஷத்திரங்களும் கிரகங்களும் மிகப் பெரியவையாகக் கண்ணில் படவே, அவைகளைக் கண்டு பாரதியார் குதூகலமடைந்தார். தாம் பார்த்ததோடு நில்லாமல், தம்முடைய மனைவி, குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுபோய், டெலஸ்கோப் மூலமாக ஆகாயத்தைப் பார்க்கச் செய்தார்.

இலேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தப்பிரமை, அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்குப் பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்று சங்கற்பம் செய்துகொண்டார்; “பைத்தியம் என்பது மனத்தைப் பிடித்த கோளாறுதானே? பார்த்துக்கொள்ளலாம்“ என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார்.

பையனை அநேகமாக எப்பொழுதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழவகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில் ஊட்டவும் செய்வார்; இரவில், தம்முடன் கூடவே, தம் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்; கொஞ்சுகிற மாதிரி ‘என்ன கண்ணு! என்ன ராஜா!‘ என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான். பையனுடைய சித்தப் பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்களுடைய அழுத்தமான எண்ணம்.

பாரதியார் இல்லாத இடங்களில், இல்லாத காலங்களில், நாங்கள் ஒருவரை ஒருவர், ‘என்ன கண்ணு சாப்பிடடி அம்மா! தங்கமோன்னோ! தாமரமோன்னோ! அட கப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்!‘ என்று பேசி, நையாண்டி பண்ணிக்கொண்டிருப்போம். சித்தப் பிரமை சிகிச்சை, சுமார் ஒரு மாதத்துக்குமேல் மிகவும் சிரமமாக நடந்து வந்தது.

கடைசியில், நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த எங்களைப் பாரதியார் அடிமுட்டாள்களாக ஆக்கிவிட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்துபோய், அவன் நல்லபடியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால், வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அகம்பாவக்குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை. இந்த நாள்களில், ஈசுவரப் பிரார்த்தனைதான் மிகவும் வலுவாக இருந்தது.

பையனுடைய பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்; சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பாரதியாரை வாழ்த்தினார்கள். அசடு தட்டின முகங்களை வைத்துக்கொண்டு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

எட்டையபுர ராஜா பழக்கி வைத்த தாது புஷ்டிலேகியத்தை (அபினை) வெகு காலம் பாரதியார் மறந்திருந்தார். புதுச்சேரிக்குப் போய், மூன்று நான்கு வருஷங்கள் வரையில், அதாவது 1911 ஆம் வருஷம் வரையில், அபினைப்பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஆனால், முழு ஜாதிக் காயை வாயில் போட்டு அடக்கிக்கொண்டு, அதை ஊறவைத்துச் சுவைத்துக் கொண்டிருப்பார்.

புரெபஸர் சுப்பிரமணிய அய்யருக்கு ஒன்றுவிட்ட தங்கை, புதுச்சேரிக்கடுத்த வில்லியனூரில் வாசம் செய்து வந்தார். அந்த அம்மாள் விதவை. பாரதியாரின் பாடல்களை, அவர் பாடக் கேட்பதில், அந்த அம்மாளுக்கு நிரம்ம ஆசை, ஏகதேசம் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை, பாரதியார் புஷ் வண்டியில் வில்லியனூருக்குப் போவார்; ஒரு தடவை, என்னை அழைத்துக் கொண்டு போனார்.

ஸ்நானம் செய்தவற்கு முன், முழு ஜாதிக்காய் ஒன்றை – அது நல்ல பருமனாகவே இருந்தது – என்னிடம் கொடுத்து, அதைச் சாப்பிடச் சொன்னார். பாதி ஜாதிக்காயைக் கடித்துத் தின்றிருப்பேன். எங்கேயோ, ஆகாயத்தில் பறப்பது மாதிரி தோன்றிற்று, கால்கள் நிதானம் தவறிவிட்டன. எனக்கு ஒன்று கொடுத்துவிட்ட, பாரதியார் இரண்டைத் தமது வாயில் போட்டு அடக்கிக்கொண்டார் அந்தப் பாழாய்ப்போன ஜாதிக்காய் அவரை ஒன்றும் செய்யவில்லை.

தமது பாடல்களைத் தமிழர்கள் ஏராளமாக ரசிக்க முன்வரவில்லையே என்ற வருத்தத்தாலோ அல்லது புதுச்சேரியில் தமக்குச் சரியனா தோழமை இல்லை என்ற எண்ணத்தாலோ, பாரதியார் மீண்டும் அபின் பழக்கத்தைப் பிடித்துக்கொண்டார். அவர் அபின் சாப்பிடுவது எனக்குத் தெரியவே தெரியாது. ‘ஹோமத்துக்குச் சாமக்கிரியை வாங்கிக்கொண்டு வா‘ என்று ஒரு நாள் அவர் பாஷையில் ஒரு பக்தனிடம் சொன்னார். அந்தப் பக்தனிடமிருந்துதான் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்.

’நீங்கள் இந்தப் பழக்கத்தை வைத்துக்கொள்ளக் கூடாது‘ என்று பாரதியாரிடம் சொல்ல, எங்களில் ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை. அபின் பழக்கம் நாளாவர்த்தியில் அவருடைய உடம்பை நிரம்பவும் கெடுத்துவிட்டது.

புதுச்சேரியில் பாரதியார் நடத்திவந்த அல்லது பாரதியாருக்காகவே நடந்து வந்த பத்திரிகைகள் நடக்கமுடியாத நிலைமையைப் பிரெஞ்சு சர்க்கார் எற்படுத்தி விட்டார்கள். சைகோன் சின்னையாவுக்கு நல்ல அச்சுக்கூடம் ஒன்று இருந்தது. சின்னையாவுக்குப் பாரதியாரிடம் நிரம்பப் பிரியமும் பக்தியும். புதுச்சேரி பிரெஞ்சு சர்க்கார் காண்பித்த மனோபாத்தாலும் எடுத்துக்கொண்ட நடவடிக்கையினாலும் சின்னையாகூடப் பயந்து போனார். எனவே, பாரதியாரின் நூலையோ பத்திரிகையையோ, சின்னையாவின் அச்சுக்கூடத்தில் அச்சடிக்க வழியில்லாமல் போய்விட்டது.

பத்திரிகைப் பிரசுரம் பாரதியாருக்கு மூச்சுக்காற்று போன்றது. அந்தப் பிராணவாயு இல்லாமல் அடித்து விட்டால், பாரதியார் என்ன செய்வார்? சென்னையில் பிரசரம் செய்யும் வசதி இல்லை. இந்த மாதிரி மனம் வாடிக்கொண்டிருக்கிற சமயத்திலே, காலஞ்சென்ற எ.ரங்கசாமி அய்யங்கார் ‘சுதேசமித்திரன்‘ பத்திரிகைக்கு அரசியல் கலப்பில்லாத கட்டுரைகளையும் பாடல்களையும் தந்து உதவும்படி பாரதியாரை வேண்டிக்கொண்டார்.

கட்டுரைக்கோ பாடலுக்கோ இவ்வளவு பணம் என்று நிர்ணயம் கிடையாது. மாதம் முப்பது ரூபாய் மொத்தமாகக் கொடுத்துவிடுவதாக அய்யங்கார் தெரிவித்தார்; மாதம் முழுவதும் பாரதியார் எதுவும் எழுதாவிட்டாலும், இந்த முப்பது ரூபாய் புதுச்சேரியில் அவரது கதவைத் தட்டிக் கொண்டு வந்து சேரும் என்று சொல்லி அனுப்பினார்.

பாரதியாருக்குச் சன்மானத்தைப்பற்றியே கவலை இல்லை. பிரசுரத்துக்கு ஒரு சாதனம் கிடைத்ததே என்று குதூகலமடைந்தார். ரங்கசாமி அய்யங்கார் பாரதியாருக்கு முப்பது ரூபாய்தானா கொடுத்தார் என்று யாரும் அசட்டுத்தனமாகக் கேட்க வேண்டா. அய்யங்கார் ‘சுதேசமித்திரன்‘ வாங்கி நடத்துகையில், அது நஷ்டத்தில்தான் நடந்து வந்தது. மேலும், அப்பொழுது முப்பது ரூபாய் என்பது இப்பொழுது நூறு ரூபாய்க்குச் சமானம். ஜீவாதாரமாக மாதம் முப்பது ரூபாய் பாரதியாருக்குக் கொடுத்து வந்து, அவரது பாடல்களைப் பிரசுரம் செய்த ரங்கசாமி அய்யங்காரைத் தமிழர்கள் எக்காலத்திலும் மறக்கலாகாது. அவரையும், அவரது ஜீவ நாடியைப் போல விளங்கி வந்த ஸி.ஆர். ஸ்ரீனிவாசனையும் தமிழ்நாடு முழுமனத்துடன் பாராட்டி வாழ்த்த வேண்டியதுதான் நேர்மையான கடமையாகும்.

மாதந் தவறாமல் வந்துகொண்டிரந்த முப்பது ரூபாய், குடும்பத்துக்குத் தேவையான மூலப்பொருள்களின் பஞ்சத்தை ஓட்டிவிட்டது. வேதாரண்யத்தில் பிள்ளையார் கோயிலில், தாயுமான ஸ்வாமிகள் பாடிய பாடல்கள், அவரது பக்தராக விளங்கிய அருளையர் (வீரசைவர்) இல்லாவிடின், வெளிவந்திருக்க முடியுமா? அந்தப் பாடல்களைப் படிக்கும் பாக்கியமே தமிழ் நாட்டுக்கு எற்பட்டிருக்காது. அருளையரைப் போல், ‘சுதேசமித்திரன்’ பாரதியாருக்குத் தொண்டு புரிந்தது என்று சொல்வது மிகையாகாது.

தம்முடைய பாடல்களை, ஆண் பெண் அடங்கலும் தமிழ்நாட்டில் பாட வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. ராகம், தாளம் எல்லாம் தெளிவாக இருக்கவேண்டும் என்று, புரொபஸர் சுப்பிரமணிய அய்யரின் தம்பி சாமிநாதனுடைய உதவியைக் கொண்டு அதை அழகாகச் சீர்படுத்திவிட்டார். பாரதியார் ஒரு பாடலை ஒரு ராகத்தில் பாடியிருப்பார். ஆனால், இந்த ராகத்தில் இன்ன தாளத்தில் அதைப் பாடினால், எழுச்சியுடன் எடுப்பாகவும் இருக்கும் என்று ‘தம்பி‘ சொன்னால், அதைத் தட்டவே மாட்டார்; ஆப்தர்கள் நிபுணர்களாயிருந்தால், அவர்களுடையை யோசனையைப் பாரதியார் நிராகரிக்கவே மாட்டார்; அட்டியில்லாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்.

முதல் தரமான சங்கீத வித்வானைப் போலப் பாட வேண்டும் என்று பாரதியார் முறையாகச் சுரம் பாடுவதில் சிக்ஷை சொல்லிக்கொண்டார்; நினைத்த பொழுதெல்லாம் அசர சாதகம் செய்வார்; பக்கத்தில் யார் இருக்கிறார், இல்லை என்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல், பாடத் தொடங்கிவிடுவார்; ராத்திரியில் வெகுநேரம் வரையில் பாடிக்கொண்டிருப்பார். அக்கம் பக்கத்துக்காரர்கள், பாட்டு நிற்கப்படாதே என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டே, பாரதியாரின் சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

‘மகா வைத்தியநாதய்யர், புஷ்பவனம் – இவர்களுடைய சாரீரங்களைக்காட்டிலும் நயமாகவும் எடுப்பாகவும் பாரதியாரின் சாரீரம் இருக்கிறது‘ என்று விஷயம் அறிந்தவர்கள்ள சொல்லக் கேட்டிருக்கிறேன். பியாக், சகானா முதலிய துக்ககடா ராகங்கள் பாரதியாருக்குப் பிடிக்காத ராகங்கள்.

ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதியில், புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் வீட்டுத் திண்ணையிலும், அதை ஒட்டியிருக்கும் தாழ்வாரத்திலும் பாரதியா இரவு வெகுநேரம் வரையில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பார். எலிக்குஞ்சு செட்டியார் போன்றவர்கள் – பாரதியார் எழுதிய கட்டுரைகளில் பிரகாசிக்கின்றார்களே – அவர்கள் எல்லோரும் உண்மையான போர்வழிகள்தாம். அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள்.

சபை கூடிவிட்டால் சபாநாயகரும் பிரசங்கியாரும் பாரதியார்தான். புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் மட்டும் இடையிடையே ஏதேனும் சொல்லுவார்; பொருத்தமாக ஒன்றைச் சொல்லி, மேன்மேலும் பேசப் பாரதியாரைத் தூண்டுவார். மற்றவர்கள் யாவரும் பாரதியார் பொழிவதைக் கேட்டு அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். பிரெஞ்சுப் பாஷையில் பாரதியாருக்குச் சந்தேகம் வந்தால், சுப்பிரமணிய அய்யரையும் பொன்னு முருகேசம் பிள்ளையையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவார்.

அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்த புதிதில், அவர் வீட்டிலே ‘சுதேசி’கள் கூடிப் பேசுவார்கள். இந்தச் சம்பாஷணைகள் தெவிட்டாத அமுதமாகும்.

ராஜாஜி சமீபத்தில் எழுதியிருக்கும் ‘அச்சமில்லை‘ என்ற சிறு புத்தகத்தில், பாரதியார் தேசபக்தராக வாழ்க்கையைத் தொடங்கி, கவிதையாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்திருக்கிறார் என்பது போலக் குறிப்பிட்டிரக்கிறார்; இந்த மாறுதல் இந்த நாட்டின் பண்பாட்டைத் தழவியதேயாகும் என்று முத்திரையும் வைத்திருக்கிறார்.

லோகமான்ய திலகர் ஒன்று சொல்வதுண்டு. தேசபக்தன் ஒருவன் தீவிரவாதியாகவோ புரட்சிக்காரனாகவோ தனது வாழ்க்கையைத் தொடங்கி, தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றியைக் காணமால் போனால், அவன் மிதவாதியாகிவிடுகிறான்; அல்லது ராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து, வெள்ளக்கஷ்ட நிவாரண வேலையிலும் பஞ்ச நிவர்த்தி வேலையிலும் ஈடுபடுகிறான் என்று திலகர் மனக் கிலேசத்தோடு சொல்லுவதுண்டு.

ராஜாஜி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது (நல்ல எண்ணத்தோடு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்) லோகமாண்யர் சொன்னதை ருசுப்டுத்துகிறது. இந்த மாறுதல் பாரதியாருக்குப் பிடித்ததுமல்ல. இந்தியாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு வருகிறார் அரவிந்தர் என்று அவரிடத்தில பாரதியாருக்கு அளவு கடந்த பிரேமை. ஆனால், அரவிந்தர் அரசியல் போராட்டத்தை விட்டு விலகிக்கொண்டு போவதாகத் தெரிந்ததும், பாரதியார், கொஞ்சங்கொஞ்சமாக அவரை அணுகுவதையே நிறுத்திக்கொண்டார்.

பாரதியார் ஆத்ம விசாரம் செய்யும் கழைக்கூத்தாடியல்லர். அவர் சாகா வரம் கேட்டால், அது இந்த மண்ணில் கீர்த்தியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான். விரைவில் பரலோக யாத்திரை சித்திக்க வேண்டும் என்று ஜபம் செய்துகொண்டிருக்கும் சோம்பேறிகளின் கூட்டத்தைக் கண்டால், பாரதியார் சீறி விழுவார். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகம் இருப்பது எதற்காக என்று கேட்ட பாட்டை, பாரதியாரின் வாழ்க்கையில் கடைசிப் பாட்டாக வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தப் பாட்டிலே, அசட்டு வேதாந்தம் எதுவுமில்லை. ‘எல்லோரும் இந்நாட்ட மன்னர்‘ என்று பிரகடனம் செய்யும் பாரதியார், தோல் ஆண்டி அல்லர். வையத் தலைமையை வேண்டுகின்ற பாரதியாரை ராஜாஜி அர்த்தமில்லாமல், வேதாந்த வீணர்களின் கோஷ்டியில் சேர்ப்பது வருந்தத்தக்கது.

பாரதியார் கடைந்தெடுத்த தேசபக்தர். அவருக்குக் கலைகளில் அபரிமிதமான நம்பிக்கை. “கவிபெருக்கும் கலைப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்!“ என்று கணீரென்று பாடியிருக்கும் பாட்டில் அசட்டு வேதாந்தம் ஏதேனும் தொனிக்கிறதா?

வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கையான மாயையைக் கண்டால் பாரதியார் சீறி விழுவார். “தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி; நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தான்; நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூரித்தான்; நமது குழந்தைகளை வளர்த்தால். அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவளிடம் கேட்கிறேன்; குழந்தைகள் பொய்யா?“ என்று பாரதியார் ஆத்திரத்தோடு கேட்கிறர்ர். எனவே, பாரதியாரை வேதாந்தி என்று அழைப்பது பெரும்பிழையாகும்.

மேலும், இந்த நாட்டில், ஒருவர் இறுதியில் தேவதாந்தியாகப் பாழுப்பது இந்நாட்டுப் பண்புக்கு ஒவ்வினது என்று சிலர் சொல்லுகிறார்களே, அதனால் எத்தனையோ பிரீதங்கள் விளைந்துவிட்டன. தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் போய், தோல்வியையே அடுத்தடுட்தது அனுபவிக்க நேர்ந்தால், அப்பொழுது ஒவ்வொருவனும் தோல்வி மனப்பான்மை என்ற பேய்க்கு ஆளாகின்றான். அந்தப் பேயின் மூலமாகத்தான் அவன் வேதாந்தியாகப் பழுக்கிறான் போலும்!

ஒன்று அகப்படாததால் ஏற்படும் வியாதிக்கு ஒழிவு என்று பெயர் கொடுக்க முடியாது. அது ‘சீ சீ! இந்தப் பழம் புளிக்கும்‘ என்று கிடைக்காத பழத்தைப்பற்றி நரி விரக்தியோடு பேசின கதையைப் போன்றதுதான். ஒன்றைப் பூரணமாக அனுபவிப்பதன் மூலமாக ஏற்படும் ஒழிவுதான் உண்மையான ஒழிவு.

நமது நாட்டில் தரித்திரந்தான், அதாவது எளிமையான வாழ்க்கையும் விரக்தியுந்தான் நமது நாகரிக்த்தின் அடிப்படை என்றும், அப்பேர்ப்பட்ட நாகரிகத்துக்கு உலகத்திலேயே ஈடு எதுவும் இருக்க முடியாது என்றும் மேடைப் பீரங்கிகள் சொல்லுவது தவறு. வெள்ளைக்காரர்கள் செல்வ நாகரிகத்தையும் சுகபோகக் கருவிகளையும் இந்த நட்டுக்குக் கொண்டுவந்ததும், நமது பண்டைய எளிமை வாழ்க்கையும் விரக்தியும் எங்கேயோ பறந்து போய்விட்டன.

எனவே, விரக்தி வழியை இந்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், அது அவர்கள்மீது கட்டாயமாகச் சுமத்தப்பட்டபடியால், திக்கற்ற நிலைமையில், அதை அவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தூக்கித் திரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதென்பதும், தக்க சமயம் வந்தவுடன் விரக்தி வழியை உதறித் தள்ளிவிட நம்மவர்கள் தயாராயிருந்தார்கள் என்பதும் இப்பொழுது வெட்டவெளியாகிவிடவில்லையா?

எல்லாம் மாயை என்ற தத்துவத்தின் மூலமாக, இந்நாட்டு மக்கள் மதி மயங்கிக்கொண்டு, பல நூற்றாண்டுகளாக, இகலோகப் பிரவிருத்திகளுக்கும் பரலோ விரக்திக்கும் ராஜி செய்துகொண்டு வாழ எத்தனித்து, அது முடியாமல்போய் மனந்தடுமாறி, செய்யும் காரியம் இதுதான் என்று தெரிந்துகொள்ள வகையறியாமல், பராதீனப்பட்டுப் போய், சுதந்தரததை இழந்து வாழ்கிறார்கள். இது சரித்திரம்.

எனவே, தோல்லிவ மனப்பான்மையின் மூலமாக யாரும் வேதாந்தியாகப் பழுக்க வேண்டா என்று ஹிந்துக்களின் பல நூற்றாண்ளு அடிமை வாழ்வு அவர்களை எச்சரிக்கை செய்கிறது. விதுரன் திருதராஷ்டிரனைப் பற்றிச் சொன்னதைப்போல ‘அண்ணே! கேட்கும் காதையும் இழந்துவிட்டால்?!‘

பாரதியார் ஆஷாடபூதி வேதாந்தியே அல்லர். அவர் மகாகவி; இணையற்ற கலைஞன்; உலகத்தை ஆண்டு அனுபவிக்க வந்த உத்தமன். எனவே, ராஜாஜி போன்றவர்கள் செப்பிடுவித்தை செய்து, பாரதியாரை வேதாந்தச் சிமிழிலே போட்டு அடைக்க வேண்டா.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.