LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 17

பாரதியாரின் கவிதை ‘பரவாயில்லை‘ என்று சொன்ன காலம் போய், அதற்குப் சமானமான கவிதை இந்நாட்டிலோ, அல்லது வேறு எந்த நாட்டிலோ இருக்குமோ, இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இப்பொழுது எற்பட்டிருக்கிறது. பாரதியாரின் கவிதைக்குச் சமானமான கவிதை இருப்பது அபூர்வம் என்ற உறுதி சிறிது காலத்துக்கள் ஏற்பட்டுவிடும் என்பது நிச்சயம்.

இந்த நாட்டிலும் சரி, அயல் நாடுகளிலும் சரி, கவிகள் பெரும்பான்மையில் கலைஞர்களாய் இருந்தார்கள். அதாவது கலைஞர்கள் அழகையோ, அவலட்சணத்தையோ, அநீதியையோ கண்டு, அதைச் சொல்சித்திரத்தில் வரைந்தார்கள். சரியாய்ச் சொன்னால் அவர்கள் கட்சிக்காரர்களாய் இருக்கவில்லை; சாட்சிக்காரர்களாய் இருந்தார்கள். ‘கவிதை உள்ளம்‘ என்ற சரக்கு அவர்களிடம் நிறைந்திருக்கவில்லை.

அப்படியானால் கவிதை உள்ளம் என்பது என்ன? படைப்பில் எல்லா ஜீவராசிகளோடும் அவைகளின் சலனத்தோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மைக்குக் ‘கவிதை உள்ளம்‘ என்று பெயர். கலைஞன் தன்னுடைய சித்திரத்தை வரையும்போழுது, தான் வேறு, சித்திரம் வேறு என்ற உணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், கவிஞனுக்கு அப்படிப்பட்ட நிலைமையே இருக்க முடியாது.

கவிஞன் புயலைப்பற்றிக் கவிதை எழுதினால், அவன் புயலோடு புயலாய் ஒட்டிக்கொண்டிருப்பான்; அன்பை வர்ணித்தால், அவன் அன்பு மயமாக ஆய்விடுவான்; அநீதியைத் தாக்கினால் அவன் உள்ளம் சீறி எழும். கவிஞன் ஓர் ஆளையோ ஒரு பொருளையோ கேலி செய்தால், அது அவன் தன்னைத்தானே கேலி செய்துகொண்டமாதிரி இருக்கும். அதாவாது கவிஞனின் உள்ளம் இரண்டறக் கலக்கும் உள்ளமாகும். அவன் கட்சி பேச முடியுமே ஒழிய, சாட்சி சொல்ல முடியாது.

அப்படிப்பட்ட கவிஞர்கள்தான் முதல்தரமான கவிஞர்கள். அவர்கள்தான் ‘உலக மகாகவி‘ என்றபெயருக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். பாரதியாருக்கு இப்பேர்ப்பட்டட ஸ்தானம் வெகு எளிதிலே கிடைக்கும். ஏனென்றால், அவர் ஈடு ஜோடி இல்லாத கவிதை உள்ளத்தைப் படைத்தவர். இந்தக் கவிதை உள்ளத்தைப் பாஷையிலே உருவாக அமைத்துக் காண்பிப்பதற்கு, இந்நாட்டு மேதாவிகள் சில வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வழிகளுக்கு ‘நவ ரஸங்கள்‘ என்று பெயர். கவிதை உள்ளம் சரளமாக ஓடும் பாதையை, ஓடும் வேகத்தை, ஓடும் தன்மையை அவர்கள் ரஸம் அல்லது சுவை என்ற பெயரால் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாரதியாரின் கவிதை உள்ளம் நவரஸங்கள் வழியாக வழிந்தோடி வெள்ளப் பெருக்கொடுத்திருப்பதை அவருடைய பாடல்களில் காணலாம். கவிஞர்களில், ரஸத்தை உடைத்து உடைத்துப் பின்னப்படுத்திக் காண்பிக்கும் பேர்வழி அல்லர் பாரதியார். அந்தந்த ரஸத்தின் சாயையை அல்லது மூர்ச்சை ஸ்தானத்தை மட்டும் பாரதியார் காண்பிக்க மனங்கொள்ளார். அவைகளின் பூரண உருவத்தையும் தன்மையையும் வலிவுடனும் பொலிவுடனும் வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர் பாரதியார்.

ஆகவே, எந்தக் கவிஞன் நவரஸங்களையும் வெகு லாவகமாகக் கையாளுகின்றானோ, கையாள முடிகிறதோ, அவனே உலக மகாகவி என்ற பீடத்தில் அனாயாசமாக, எவருடைய உதவியுமின்றி, எவருடைய சிபர்சையும் கோராமல் ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.

அப்படியானால், பாதியாருக்கு உலக மதிப்பு ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்று கேட்கலாம். அரச மரத்தைப் பிடித்த பிசாசு பிள்ளையாரையும் பிடித்துக் கொண்டது என்பார்கள். அது உண்மை என்றே தோன்றுகிறது. அது போலவே பாரதியாருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் தற்போதைய தாழ்வடைந்த, அலங்கோலமான, குறியில்லாத, நெறியில்லாத வாழ்க்கைதான் பாரதியாருக்கு உலக மதிப்பு வராததன் காரணம்.

இன்னொரு காரணமும் உண்டு. உலகம் இப்பொழுது கவிஞனைப் பாராட்டாமல், கொலைஞனைப் பாராட்டும் கோரமான தெழிலில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மனப்பான்மையில் மயங்கிக் கிடக்கும் உலகம். கவிதைக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடியாது.

பாரதியார், எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களில் சிரேஷ்டமானவர். இதை அடிக்கபடி நம்முடைய மனத்தில் சிந்தனை செய்துகொண்டு, நாம் பெருமையும் தைரியமும் கொள்ளவேண்டும்.

பாரதியாரின் பாடல்களில் அவருடைய கவிதை உள்ளம் எப்படி அழகாக மலர்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இப்பொழுது சில வரிகளைத் தருகிறேன்.

“ காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ “

பாரதியார் உயிருள்ள, உயிரில்லாத பொருள்களோனடு எப்படி ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றார் என்ற ஆச்சரியத்தை நீங்கள் காணவில்லையா?

“ இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம் !“

பாரதியாரின் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருவதை இங்கே காணலாம்.

“ நல்லறும் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள்தாய் – அவர்
அல்லவ ரரியின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள் “

சரித்திர உண்மையை இவ்வளவு அழகாக வேறு யார் இதுவரையிலும் வர்ணித்திருக்கிறார்கள்?

“ கண்ணிரண்டும் விற்றுச்
சித்திரம் வாங்கிடில்
கைகொட்டிச் சிரியாரோ? “

என்ன அழகான, ஆணித்தரமான சித்திரம்!

“ தாதரென்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநிகர் சமான மாக
வாழ்வ மிந்த நாட்டிலே “

பாரதியாரின் நம்பிக்கையும் உறுதியும் ஒரு நாளும் பொய்யாகப் போவதில்லை.

“ புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென
மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோல“

கொடுங்கோலர்கள் சரிந்து வீழ்ந்த இந்தச் சித்திரத்தைச் சிந்தனை செய்து பாருங்கள். “ காடெல்லாம் விறகான செய்தி“-
பாரதியார்தான் இந்த மாதிரி எழுதமுடியும்.

“ தனி ஒருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.“

இவ்வளவு அன்பும் ஆத்திரமும் பொங்கி வழிந்த கவிஞனை (பாரதியாரைத் தவிர) நீங்கள் பார்த்ததுண்டா, அல்லது கேள்விப்பட்டதுண்டா? எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் சக்தி பாரதியாரின் தனிப் பொக்கிஷமாகும்.

“ கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்“

என்ன பிரயாசை இல்லாத முற்றுமோனை ! அர்த்தத்துக்கு ஆபத்தாய் வாராத முழு முற்று மோனை!

“ துன்பமே இயற்கை யனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டிநிற்போம் “

ஆமாம், ‘உலகம் மாயை‘ என்ற போலித் தத்துவத்தைப் பாரதியார் அடித்து வீழ்த்தும் அற்புதத்தைப் பாருங்கள்.

“ காவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம் !“

இது ஜெய பேரிகை கொட்ட வேண்டிய செய்திதான்;
சந்தேகமே இல்லை.

“ பானையிலே தேளிருந்து
பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி
மேல்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட
பன்னிரண்டாம் நாளென்பார்“
சேவர்களுடைய குறும்புகளைப் பாரதியார் நகைச் சுவையோடு வர்ணிக்கும் விந்தையே விந்தை !

“ சின்னஞ் சிறுகிளியே – கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே“

* * * *

‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே “

எத்தனை அண்டுகள் தவங்கிடந்தாலும் வேறு எவராலும் இந்த மாதிரிச் சித்திரம் வரைய முடியாது. குழந்தை பேசும் பொன் சித்திரமே! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் !

“ அழகுள்ள மலர்கொண்ட
வந்தே – என்னை
அழஅழச் செய்துபின்
கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன்‘
என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத்
தோழிக்கு வைப்பான் “

குறும்புக் காதலை இதைக்ககாட்டிலும் அழகாக வர்ணிக்க முடியுமா?

“ காதலடி நீஎனக்கு – காந்தமடி நானுனக்கு
வேதமடி நீஎனக்கு – விந்தையடி நானுனக்கு “

காதலன் காதலி ஒன்றியிருக்கும் இந்த உலகத்தைப் பாரதியார் நமக்குப் பரிசாக அளித்திருக்கிறார். இணையில்லாத கற்பனை!

குயில் பாட்டில் ஆரம்பம் முதல் கடைசி வரையில் இன்ப மயமான நகைச்சுவைப் அதிலே எதை எடுத்து, எதை விடுவித்துக் கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவையின் சிகரத்தில், அதாவது பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்காத நகைச்சுவையின் சிகரத்தில், பாரதியார் ஏறி உட்கார்ந்திருக்கிறார்.

பாஞ்சாலி சபதத்தில், வீரரசம் ஊடுருவிப் பாய்ந்து கொண்டே போவதைக் காணலாம். பாஞ்சாலி சபதத்தை, பாரதத்தின் மொழி பெயர்ப்பு என்று பாரதியார் அடக்கத்தடன் சொல்லிக்கொண்டார். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் காணப்படும் கம்பீரமும், வீரமும், துடிதுடிப்பும், சொல்வன்மையும், கருத்தமைப்பின் அழகும் வியாபாரத்தில் இருக்குமோ என்று பாஞ்சாலி சபதத்தைப் படித்த அன்பர்கள் பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். வழிநூல், முதல் நூலையே அமிழ்த்தித் தள்ளும்படியாக இருந்தால், அதை வழிநூல் என்று சொல்லலாமா?

ஊழிக்கூத்தைப் படித்தால், பயங்கர உணர்ச்சி விறுவிறு என்று உடம்பில் ஏறிவிடும். “ஊழிக்கூத்தைப் போன்ற கவிதையை வெள்ளைக்கார நாட்டு இலக்கியத்தில் தாங்கள் கண்டதுண்டா?“ என்று ஆங்கில இலக்கிய நிபுணரான தமிழர் ஒருவரை நான் கேட்டபொழுது அவர் ‘இல்லை‘ என்று சொன்னதோடு, ‘ என்ன ஆச்சரியமான கவிதை ! ஊழி நர்த்தனந்தான். அதில் சந்தேகமே இல்லை ‘ என்று பெருமூச்சு விட்டார்.

நவரசங்களையும் அனாயாசமாயக் கையாண்ட பாரதியாருக்கு உலக மகா கவிகளுக்குள் எந்த ஸ்தானம் கொடுப்பது என்று தெரியவில்லை. இதற்கென்று தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனி நூலாக அந்த ஆராய்ச்சியை வெளியிடவேண்டும். அதை யார் செய்யப் போகிறார்களோ, பார்க்கலாம்.

பாரதியார் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்த தினத்தைத் தமிழர்கள் வருஷா வருஷம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் நியாயமாகவும் பெருமையோடும் செய்ய வேண்டிய காரியங்களில் இது ஒன்று. ஆனால், தமிழ்ப் பாஷையின் மாண்பையும், பாரதியாரின் பெருமையையும் தமிழர்கள் சரியாகத் தெரிந்துகொண்டார்களா என்பது சந்தேகந்தான்.

ஒரு மகான் எந்தத் துறையில் வேலை செய்தாலும், அவரது ஜீவிய காலத்திலேயே, அவருக்கு எற்ற பெருமையுடன் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. உலக மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரை அவருடைய காலத்தில் மதித்தார்களா? ‘மான் திருடி‘ என்று அலட்சியமாக அவரைப்பற்றிப் பேசிய மனிதப்பதர்கள்தாம் அவரது காலத்தில் அதிமாயிருந்தார்கள். இன்றைக்கோ ஷேக்ஸ்பியர் என்றால் உலகம் பரம ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறது. பெரியவர்கள் எல்லாருமே அவரவர் காலத்தில் மிகுதியும் ஏளனத்துக்கு உள்ளானதைத்தான் உலகம் இதுவரையிலும் கண்டிருக்கிறது ( இந்த விதிக்கு விலக்கு, காந்தி.) ஆகவே, பாரதியாரின் பெருமையைத் தமிழர்கள் சரிவர உணரவில்லையென்று வருத்தப்பட்டுக் கொள்ளுவதில் பயனில்லை.

தீர்க்கதரிசிகளாக இருப்பவர்கள், தங்கள் தீர்க்க தரிசனத்தைக்கொண்டு எக்காலத்தும் எந்த நிலைமைக்கும் பொதுவான, தேவையான, அழிவில்லாத உண்மைகளைக் கண்டுவிடுகிறார்கள். ஆனால், அவைகளை மனிதர்கள் நேரே உணர்ந்துகொள்ளுவதில்லை.

சாப்பாட்டு ராமனுக்குச் சோற்றிலே குறி. திருடனுக்குத் திருட்டிலே குறி, விடனுக்குப் பெண்ணின் பேரிலே கறி. மோசக்காரனுக்கு முட்டாள்பேரில் குறி. இப்படிப்பட்ட கீழ்த்தரமான மக்கள் அதிகமாகப் பரவிக் கிடக்கும் காலத்தில் பெரியார்களின் திருவாக்கு, மதிப்புக்கு உரியதாகப் பாவிக்கபடுவதில்லை.

இதைப் போலவே பாதியாரைப் பற்றியும் சிறிது காலம் மதிப்பு இருந்து வந்து. பாரதியார் இலக்கணம் அறியாக் கவிஞன் என்று பண்டிதர்கள் ஆதாரமும் பொருளுமின்றிப் பேசினார்கள். பாரதியார் வெறும் தேசியக் கவி என்று பலர் பேசிக்கொண்டார்கள். பாரதியார் பெண் விடுதலை நண்பன் என்று சிலர் ஆத்திரப்பட்டார்கள். மற்றும் பலர் ஆர்வத்துடன் பேசினார்கள். பாரதியார் வெறுங்கஞ்சாப் புலவர் என்று ஏசினதையும் என் காதால் கேட்டிருக்கிறேன். ‘மார்க்கெட்டில் ஒன்றும் வாங்கத்தெரியாமல், ஒரு கூடைக் கிரையை வாங்கின பாரதிதானே?‘ என்று சிலர் புரளி செய்வதைக் கேட்கும் துர்பாக்கியமும் நான் பெற்றதுண்டு. ஆனால், இவைகளெல்லாம் யோசிக்காமல் ருசுவில்லாமல் எதையும் பேச முடியும் என்பதற்கு அத்தாட்சிகள் ஆகின்றனவே அல்லாமல், பாரதியாரைப் பற்றிய விமர்சனம் ஆகமாட்டா.

மனித வர்க்கத்துக்கு உய்வு, கலையும் கவிதையுந்தாம். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் கவிதைதான். தத்துவத்திலே தர்க்கம் நிறைந்திருக்கலாம். பௌதிக சாஸ்திரத்திலே அறிவு மிதந்து கிடக்கலாம். மதத்திலே பக்தி பூரித்து நிற்கலாம். காதலிலே கனிவும் கீதமும் குழைவும் மண்டிக் கிடக்கலாம். கலையிலே அழகும் ஆனந்தமும் விம்மி விழிக்கலாம். ஆனால், இவை எல்லவற்றையும் தனக்கு அங்கங்களாகக் கொண்டிரக்கும் கவிதையைக் கடவுள் என்று நான் போற்றுகின்றேன். ஒப்புயர்வில்லாத கவிதையைப் பாடியவர் சப்பிரமணிய பாரதியார் என்று நான் உரக்கக் கூவுகிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, உலகத்துக்குக் காட்சியளிக்கும் வளர்பிறை பாரதியார் என்று சொல்லுகிறேன். வானை நோக்கிக் கைகள் கூப்பித் தொழுது நிற்கும் பக்தர்களுக்கும் உயிரும் உற்சாகமும் அளித்து உரப்படுத்தும் சூரியன் பாரதியார் என்று வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிதர்கள் உறுமினாலென்ன? பாமரர்கள் உறங்கினாலென்ன? இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் இறுமாப்பினால் உளறினாலென்ன? பாரதியார் இன்னல் வாய்ப்பட்டு அகால மரணம் அடைந்தாலென்ன?

‘அவர் தொடாதது ஒன்றும் இல்லை. தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை‘ என்ற டாக்டர் ஜான்ஸன், கோல்ட்ஸ்மித் என்ற மேதாவி எழுத்தாளரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதையே இன்னம் அதிகமான அழுத்தத்துடன் பாரதியாரைப் பற்றிச் சொல்ல முடியாதா? பாப்பா முதல் பாட்டி வரையில், காதலன் முதல் காதகன் வரையில், குரங்கு முதல் குயில் வரையில், பதிதன் முதல் பக்தர்வரையில், காலிமுதல் கவி வரையில், கசடன் முதல் காந்தி வரையில், அன்பன் முதல் அரக்கன் வரையில், வம்பன் முதல் கம்பன் வரையில், பாரதியார் யாரை, எதைத் தொட்டு அழகு செய்யவில்லை?

பாரதியாரின் கவிதை, ஆழமும் கரையும் காணமுடியாத கடலாகும். பாரதியாரைப் போகியும் போற்றுவான், யோகியும் போற்றுவான். ஆகாத்திலிருந்து விழும் நீர்த்துளிகள் யாவும் எப்படியோ கடலுக்குப் போய்ச் சேர்ந்துவிடுவது போல, பல்வேறு தன்மைகள் கொண்ட மனித உள்ளங்கள், மகாகவி என்ற அலையிலாப் பெருங்கடல் உள்ளத்தில் போய் அடங்கிவிடுகின்றன. ஆகவே, மகாகவி எல்லோருக்கும் சொந்தம்; எல்லா நாடுகளுக்கும் பொது. இங்கிலீஷில் எழுதியதால் ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் மகாகவிகள் ஆகவில்லை; எல்லோருடைய உள்ளங்களையும் கவர்கின்ற தன்மை அவர்களிடம் இருப்பதால்தான் அவர்கள் மகாகவிகள்.

பாரதியாரின் கவிதையிலே நகைச்சுவை வேண்டுமா? இருக்கிறது. சோகம் வேண்டுமா? உண்டு. அற்புதம் வேண்டுமா? அபரிமிதமாக உண்டு. ஆத்திரம் வேண்டுமா? கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கும். ஆறுதல் வேண்டுமா? ஏடு ஏடாயிருக்கிறது. வேதாந்தம் வேண்டுமா? பத்தி பத்தியாய்ப் பார்க்கலாம். வளர்த்திக்கொண்டு போவானேன் ! எது இல்லை?

பாரதியாரை நினைத்தால் எனகுப் பயமாயிருக்கிறது. ஏன்? நேற்றைக்குப் படித்த கவிதையை இன்றைக்குப் படித்தால் புதிது புதிதாக அழகும் பொருளும் சுவையும் கண்ணுக்குத் தென்படுகின்றன. நாம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்துகொண்டு போகிறோமோ, அதற்குத் தகந்தாற்போல, பாரதியாரின் கவிதை என்ற சங்கப்பலகை நீண்டுகொண்டே போய், நமக்குத் தங்குமிடம் கொடுக்கிறது. இது என்ன விசித்திரமான கவிதை!

மேற்சொன்ன மாதிரி, நான் எவ்வளவு காலத்துக்கு முன்பேயோ எழுதினேன். 1943 ஆம் வருஷ பாரதியார் கொண்டாட்ட வைபவ வாரத்தில் ராஜாஜி சொன்னதாவது : “மாகாண பாஷைகளில், அதாவது வங்காளி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி போன்ற பாஷைகளில், சென்ற முந்நூறு வருஷ காலமாக, பாரதியாரைப் போன்ற கவி தோன்றவில்லை. பாரதியார் தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்தது தமிழர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.“

நிகரில்லாத தமிழ்ப்புலவர் திரு.வி. கல்யாணசுந்த முதலியார், “ இது பாரதி சகாப்தம். தமிழர்களின் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் பாரதி, உன்னதமான புரட்சியை உண்டாக்கிவிட்டார். பாரதியாரின் கவிதை, டாகூரின் கீதாஞ்சலியைக்காட்டிலும் உயர்ந்தது. பாரதி உலக மகாகவி “ என்று சொன்னார்.

பாரதியார் உலக மகாகவி என்று சொல்ல இந்தப் பெரியார்களுக்கு இருபது வருஷம் பிடித்தது. இப்பொழுதேனும் கூச்சப்படாமல் அவர்கள் வாய்விட்டுச் சொன்னார்களே!

பாரதியாரின் கவிதைகளைத் துண்டு துண்டாகவும், பிரிவு பிரிவாகவும் வகுத்து நான் இந்த நூலில் ஆராய்ச்சி செய்யப் புகவில்லை. அதை வேறு புத்தகமாக எழுதினால்தான் நியாயமாக இருக்கும்.

பாரதியாரின் வாழ்க்கையில் சில குறிப்புகளைத் தந்து அவரைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைக் கொண்டுதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது.

ஒன்றைமட்டும் தமிழர்கள் அனைவரும் நன்றாகக் கவனிக்க வேண்டும். வங்காள பாஷையிலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் இப்பொழுது ஏராளமாகக் கதைகளைத் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் என்ன? தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்பதா? பாரதியாரின் வழிபற்றி, அதிசயிக்கத்தக்க திறமையுடன் எழுதும் எழுத்தாளர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் தமிழுக்கு ஏன் இன்னும் சரியான மதிப்பு ஏற்படவில்லை?

ஜாதிப்பிரிவினையும் சில்லறைப் பொறாமையுந்தாம் இதற்குக் காரணங்கள் என்று திட்டமாகச் சொல்லிவிடலாம். தமிழ் இலக்கியத்தின் மூலமாகத்தான் தமிழர்களின் மனத்தைப் பண்படுத்த முடியும் என்பதைப் பாரதியார் வெகு அழகாக எடுத்துக்காண்பித்திருக்கிறார். அதற்காகத்தான், ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்‘ என்று பாரதியார் தமிழர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதைத் தலைமேல் கொண்டு உலகத்திலுள்ள எல்லா ரஸமான விஷயங்களையும் தமிழில் கொண்டுவந்து சேர்க்க நம்மில் ஒவ்வொருவரும் அரும்பாடுபட வேண்டும். பாரதியார்தான் தமிழ். பாரதியாரிடம் பக்தி செலுத்துபவர்கள், தமிழுக்கும் தேசத்துக்கும் தொண்டு செய்யத்தான் வேண்டும்.

இதுதான் எனது வேண்டுகோள்.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.