LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 6

 பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தமது புதய ஆத்திசூடியில் பெரிதினும் பெரிதுகேள் என்று அவர் எழுதியிருக்கிறார். இதையே அவரது வாழ்க்கைத் தத்துவமாகவும் வைத்துககொள்ளலாம். பெரிதினும் பெரிதை விரும்பும் பாரதியாருக்கு, சுதேசிமித்திரன் பத்திரிகையில் இடம் இல்லாமல் போனது ஆச்சரியமல்ல.

சுதேசமித்திரன் புரட்சியை நாடும் பத்திரிகையாக அக்காலத்திலும் நடத்தப்படவில்லை. அக்காலத்துக் காங்கிரஸ் கொள்கையையும் முறையையும் அது ஆதரித்து வந்தது. அக்காலத்துக் காங்கிரஸ், மிதவாத காங்கிரஸ் திலகர் நாளிலே, காங்கிரஸுக்குப் புதிய உணர்ச்சி உண்டாயிற்று. அந்தப் புதிய உணர்ச்சியின் சிறு பகுதி கல்கத்தா காங்கிரஸிலும், பெரும் பகுதி சூரத் காங்கிரஸிலும் வெளித்தோன்றிற்று.

1906ஆம் ஆண்டில், அப்பொழுது வைஸ்ராயாக இருந்த கர்ஸன் பிரபு வங்காளத்தை மேல் வங்காளம், கீழ் வங்காளம் என்று இரண்டு கூறுகளாகப் பிரித்தார். வங்காளிகள் இந்த ஏற்பாட்டை ஆத்திரத்துடன் எதிர்த்தார்கள். இந்தக் கிளர்ச்சியினின்றும் பிறந்ததுதான் சுயராஜ்யக் கிளர்ச்சி.

வங்காளப் பிரிவைனக் காலத்துக்குச் சிறிது முன்னும் அதை ஒட்டியும், பாரதியார் தமது தேசபக்தித் துடிதுடிப்பைத் தாங்க முடியவில்லை. அந்தத் துடிதுடிப்பின் முடிவு சிறைதான் என்று ஜி.சுப்பிரமணிய அய்யருக்கு நன்றாய்த் தெரியும். எனவே, இரண்டு பேரும் மனம் ஒப்பிய பிறகே, பாதியார் சுதேசமித்திரன் பத்திரிகையை விட்டு விலகிக்கொண்டார். பாரதியாரிடம் சுப்பிரமணிய அய்யருக்கு இருந்த பிரேமை, அய்யர் சாகும்வரையில் இருந்து வந்தது.

பாரதியார் மனக்கசப்பால் சுதேசமித்திரனை விட்டார் என்ற வதந்திக்கும் ஆதாரம் இல்லை. ஜி.சுப்பிரமணிய அய்யர் கோகலேயைப் போல மிதவாதி அல்லர்; காந்தியைப் போலப் புரட்சிக்காரருமல்லர். எனவே, அரசியலில் அதி தீவிர புரட்சி மனப்பான்மை கொண்ட பாரதியார், அய்யரின் காரியாலயத்தினின்றும் வெளியேறியது ரொம்பப் பொருத்தமுள்ளதாகும்.

சுதேசமித்திரனை விட்ட பாரதியார் சும்மா இருக்கவில்லை; பல நண்பர்களின் உதவியைக்கொண்டு இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். சிவப்பு நிறம், அபாயக்குறி என்ற கொல்லுவதுண்டு. இந்தியா பத்திரிகை சிவப்புத்தாளில் அச்சிடப் பெற்றது. வாரத்துக்கு ஒரு முறையானாலும் அந்த நாளில், இந்தியா மிகவும் ஆவலுடன் படிக்கப் பெற்றது. நாலாயிரம் பிரதிகளுக்கு மேல் செலவழிந்ததாம். இது 1906 ஆம் ஆண்டில் நடந்தது.
இந்தியா பத்திரிகையின் நூதனங்கள் எனனவெனில் (1) உள்ளதை உள்ளபடியே, அஞ்சாமல் அழகாக, வலிமையுடன் எடுத்து உரைக்கும் எழுத்து, (2) பாட்டு, (3) கேலி செய்யும் கூடார்த்த படங்கள், (4) பெரியார்களின் ஜீவிய வரலாறு ஆகும். அவ்வப்போது, சிற்சில ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வந்துகொண்டிருந்தன. இந்தியா பத்திரிகை ஆரம்பித்த சிறிது காலத்துக்குள் பாரதியார் பெயர் பரவலாயிற்று.

வங்காளப் பிரிவினை கூடாது என்று வங்காளிகள் கிளர்ச்சி செய்தார்கள் என்றேனே, அதன் பயன்கள் என்னவெனில், நவசக்தி, யுகாந்தரம், வந்தேமாதரம், நியூ இந்தியா முதலிய புரட்சிப் பத்திரிகைகள் வங்காளத்தில் தோன்றின. வங்காளத்தில் எழுந்த சுயராஜ்ய உணர்ச்சியும் கோஷமும் இந்தியா தேச முழுதும் சூழ்ந்து போயின.

1906இல் கல்கத்தா காங்கிரஸில் தாதாபாய் நவரோஜி தலைவர்; வயதான கிழவர். என்றாலும், அவர் கல்கத்தா காங்கிரஸில், சுயராஜ்யம் என்ற மூல மந்திரத்தைத் துணிவுடன் ஜபித்தார். முக்கியமான நான்கு தீர்மானங்கள் காங்கிரஸில் நிறைவேறின. சுதேசி, அந்நிய நாட்டுச் சாமான் பகிஷ்காரம், நாட்டுக் கல்வி, சுயராஜ்யம் – இவைகளைப்பற்றி ஆணித்தரமான தீர்மானங்கள் நிறைவேறின. மிதவாதிகளும் அரசாங்கத்தாரும் ஏக காலத்தில் பயப்பட்டுப் போனார்கள்.

நாளது வரையில் ஒழுங்காகத் தடையின்றி நடைபெற்று வரும் தேச பக்தர்களின் சிறைவாசத்துக்கக் கல்கத்தா காங்கிரஸே காரணமாகும். மிதவாதிகள் அரசாங்கத்தாருக்கத் துணை; மிதவாதிகளுடன் சேராத தேசபக்தர்களுக்குச் சிறை. இது மாமூல்.

கல்கத்தா காங்கிரஸ் நிறைவேற்றிய ஆணிவேர்த் தீர்மானங்களை மாற்ற வேண்டும் என்பது மிதவாதிகளின் முயற்சி. இதற்குச் சர்க்கார் தூண்டுதலும் உண்டு. அதுவரையிலும் சர்க்காருக்கு மனுப்பண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ் தன் சொந்த சக்தியுடன் தலைநிமிர்ந்து நிற்கலாமா என்பது சர்க்காரின் மூளையைக் கலக்கின பிரச்சினையாகும்.

காங்கிரஸின் புதுக் கொள்கையைத் தாங்கி பாரதியார் இந்தியா பத்திரிகையில் எழுதி வந்தார்; வாராவாரம் புதுக் கட்சி உற்சாகமே, நாடெங்கும் உற்சாகம். இநதச் சமயத்தில் வங்காளத்திலிருந்து விபின சந்திர பாலர் சென்னைக்கு விஜயம் செய்தார். சென்னையில் அவர் செய்த ஐந்து பிரசங்கங்கள் தமிழர்களின் அரசியல் பொக்கிஷமாகும்.

விபின பாபுவின் சென்னை விஜயத்துக்கு, பாரதியாரும் அவருடைய நண்பர்களுமே காரணஸ்தர்கள். வங்காளத் தலைவரை வரவேற்க, பழைய சென்னைத் தலைவர்கள் மிகுதியும் அஞ்சினார்கள். பாரதியாரின் ஷ்டியார் சிரமம் எடுத்துக்கொண்டு வேலை செய்திராவிடில், விபின பாபுவின் சென்னைப் பிரசங்கங்கள் நடந்திருக்க முடியாது. பாபுவின் முதல் பிரசங்கத்துக்கு தலைமை வகிக்க வந்த பெரிய மனிதரும் சம்மதிக்கவில்லை. அவ்வளவு பயம். ஸ்ரீமான் ஜி.சுப்பிரமணிய அய்யர் மட்டும் இசைந்தார்; அய்யர், சமயத்தில் தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றினார். சுப்பிரமணிய அய்யர் சம்மதத்திற்குப் பாரதியார் காரணம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அந்நிய நாட்டுத் துணிகளுக்கு முதன் முதலில் தீ வைத்தவர் காந்தியல்லர். சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், விபின பாபுவின் பிரசங்க காலத்தில்தான் முதலில் தீ தோன்றிற்று. நல்ல நல்ல ஆல்பாக்கா சட்டைகளும் உயர்ந்த குல்லாக்களும் நூற்றுக்கணக்கில் தீயில் விழுந்தன. சென்னை நகரத்தினரின் அரசியல் மனப்பான்மையில் திடீரென்று புரட்சி ஏற்பட்டது.

சென்னையில் மகாஜன சபை என்று ஒன்று இருந்தது. அக்காலத்தில் அதன் அங்கத்தினர்கள் சர்க்க்ர் பக்தர்கள்; உருப்படியான எந்த வேலையையும் செய்யத் துணிந்ததில்லை. எனவே, பாரதியார் சென்னை ஜன சங்கம் என்று ஒன்றை ஸ்தாபிக்க முயன்றார். சங்கமும் ஸ்தாபிக்கப்பட்டது. அது தோன்றி அழியும் வரையில், போலீசார் அதன்மேல் கடைக்கண் பார்வை செலுத்துவதை நிறுத்தவில்லை.

1907இல் சூரத்தில் காங்கிரஸ் கூடியது. இதற்குள் வங்காளத்தில் வெடிகுண்டு உதயமாயிற்று. துப்பாக்கிச் சத்தமும் கேட்கும் என்று தோன்றிற்று. நாடு முழுவதும் பரபரப்பு, கல்கத்தாவிற்குப் பின், காங்கிரஸ் நாகவுரியிலே கூட வேண்டும், ஆனால் கல்கத்தா காஙகிரஸின் மூல தீர்மானங்களில் சாத்த்தைகளை மாற்றி, சாரமில்லாமல் அடித்துவிட வேண்டும் என்பது மிதவாதிகளின் தீர்மானம். இந்த ஆவலுக்கு, நாகபுரி காங்கிரஸ்வாதிகளில் பெரும்பான்மையோர் இடங்கொடுக்கவில்லை.

மிதவாதக் கோட்டையென்று அப்பொழுது கருதப்பட்ட சூரத் நகருக்கு !இந்த நகரம் குஜராத்திலிருக்கிறது; காங்கிரஸை மாற்றிவிட்டார்கள் மிதவாதிகள். தேசபக்தர்களுக்கு ஆத்திரம். தியாகம் செய்யத் துணிந்த தேச பக்தர்களுக்கு லோகமான்ய திலகர் தலைவரானார். சூரத் காங்கிரஸில், கல்கத்தா தீர்மானங்களை எள்ளளவும் மாற்றக் கூடாது என்பது திலகர் கோஷ்டியாரின் பிடிவாதம். திலகருக்குச் சாதகமாக பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட நூறு தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் சூரத்துக்குச் சென்றார்கள்.

சூரத் காங்கிரஸிலே, மிதவாதிகளின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்குச் செருப்படி விழுந்ததும், நாற்காலிகள் முடிந்ததும், கைக்குத்துச் சண்டை கலவரம் எழுந்து பொங்கியதும், காங்கிரஸ் நடைபெறாமல் போனதும் பழங்கதை. சூரத் காங்கிரஸ் உடைந்தது. தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளின் முரட்டுத்தனத்தால்தான் என்று அக்காலத்தில் கூரப்பட்டது. சூரத் காங்கிரஸ் உடைபட்டது நாட்டு நன்மைக்காயின் அந்தப் பெரிய புண்ணியத்தைத் தமிழர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஆனால், அவ்வாறு நேர்ந்தது தமிழர்களால் அல்ல என்று ஸ்ரீமான் எஸ்.துரைசாமி அய்யர் சொல்லுகிறார். துரைசாமி அய்யர் பாரதியாரோடு சூரத்துக்குச் சென்றிருந்தவர். சென்னையிலிருந்து சூரத் வரையிலும், தமிழ்ப் பிரதிநிதிகளின் வழிப்பிரயாண உற்சாகத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது என்கிறார் அய்யர். பாரதியார் இருக்கிற கூட்டத்தில் உற்சாகக் குறைவு இருக்க முடியுமா?

ஒரே ஒரு சமயம், அதைக் குறிப்பிட்டுவிட்டு, இந்த அத்தியாத்தை முடித்துவிடுவோம். பாரதியார் சூரத் காங்கிரஸுக்கு முன் திரகரைப் பார்த்ததில்லை. பார்க்க ஆவல். காங்கிரஸ் சமயத்தில் சூரத்தில் கனத்த மழை; காங்கிரஸ் கொட்டகைக்கும் பிரதிநிதிகள் தங்கியிருந்த இடத்துக்கும் இடையே நல்ல பாதையில்லை. செப்பனிடப்பட்ட பாதையும், மழையால் சீர்குலைந்து போய்விட்டது. அந்தப் பாதையை ஆள்களைக் கொண்டு செப்பனிட்டுக்கொண்டிருந்தார் திலகர். அந்த மகானுக்க எந்த வேலை சிறிது, எந்த வேலை பெரிது?

திலகரைக் காண வேண்டுமென்ற ஆவலினால், பாரதியார் தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே போய் விசாரித்தார். திலகர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல யாருக்கும் தெரியவில்லை. கசந்த மனத்துடன், பாரதியார் குறியில்லாமல், காங்கிரஸ் பாதையில் நடந்து சென்றார்; நூறு ஆள்கள் வரையிலும் பாதையைச் செப்பனிடுவதைக் கண்டார்; கிட்டே நெருங்கினார். குடை பிடித்துக்கொண்டு, தலைமை மேஸ்திரியாக ஒருவர் பாரதியாரின் பார்வைக்குப் பட்டார். பின்னர் நடந்ததைப் பாரதியார் பின் வருமாறு என்னிடம் சொன்னார்: “போய்க்கொண்டிருக்கையில், குடையின் பின் பக்கத்தைக் கண்டேன்; எதிரே போனேன்; அந்த மனிதனுடைய கண்களைப் பார்த்தேன். அவை உயிர்த்தணலைக் கக்கும் குண்டுகளைப் போல் என் பேரில் பாய்ந்தன. ஒன்றும் பேசாமல், அவர் பாதத்தைத் தொட்டு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன்!”

லோகமான்யரின் தீ விழிகளைக் கண்டவர், பயபக்தி கொள்ளாமலிருக்க முடியாது. இந்தியாவின் சுதந்தர தாகமும் சக்தியும் லோகமான்யரின் அக்கினி ஜுவாலைக் கண்களில் பிரகாசித்ததில் ஆச்சரியம் உண்டா?

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.