LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 9

பாரதியார் சுந்தர ரூபன், மாநிறம், ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம். அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு. அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப்பட்டதைப் போலிருக்கும். அந்த அழகிய நாசி, ஸீஸர், ராஜகோபாலச்சாரியாருடையவை போல, கருட மூக்கல்ல ஸீஸர் மூக்கு நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி, கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும். பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போலிருக்கும். நீண்ட நாசி, அந்த நீளத்தில் அவலட்சணம் துளிகூட இருக்காது.

பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜுவலிப்பன போலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.
அவருடைய நெற்றி, பரந்த நெற்றி. நெற்றியின் இரண்டு கங்குகளிலும், நிலத்தைக் குடைந்துகொண்டு போயிருக்கும் கடலைப் போல, முகம் தலைமயிரைத் தள்ளி குடைந்துகொண்டு போயிருக்கும். கங்குகளின் மத்தியில், முகத்தின் நடு உச்சியில், மயிர் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும். நெற்றியிலே இந்தச் சேர்மானம் அவருக்கு வர்ணிக்க முடியாத அழகைக் கொடுத்தது. பேர் பாதிக்கும் அதிகமாக அவர் தலை வழுக்கை.

இந்த வழுக்கையை மறைத்து மூடுவதற்காக, கங்குக் கேசத்தை இரண்டு பக்கங்களிலுமிருந்து உச்சந்தலைக்குக் கொண்டுபோய் அதைப் படியச் செய்யும் பாரதியாரின் கவலை நிரம்பிய முயற்சி, சிறு பிள்ளைகளுக்குச் சிரிப்பை உண்டாக்கலாம். தலைமயிரைச் சிங்காரிப்பதில், அவர் அரை மணி நேரத்தக்குமேல் செலவழிப்பார். நாளுக்கு ஒரு மாதிரியாக அணிவகுப்பு.

பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்ஸர் மீசையல்ல; கத்தரிக்கோல் பட்ட ’தருக்கு’ மீசையல்ல. தானாக வளர்ந்து பக்குவப்பட்டு, அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை எழுதாத நேரங்களிலெல்லாம் அனேகமாய் மீசையிலிருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு ’டிரில்‘ பழக்கிக் கொடுப்பது போலத் தோன்றும்.

சில சமயங்களில் தாடி வைத்துக்கொண்டிருந்தார். அனால், அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி மீசை மட்டுந்தானிருந்தது. ஒரே ஒரு சமையந்தான் மீசை இல்லாமலிருந்தார் என்பது என் நினைவு. அவருடைய நடுநெற்றியில் சந்திர வட்டத்தைப் போலக் குங்குமப்பொட்டு எப்போழுதும் இருக்கும். குங்குமப்பொட்டு இருப்பதில் அவருக்கு ரொம்பக் கவனம்.

இடுப்பிலே, ’தட்டுச் சுற்று’ வேஷ்டி. சாதாரணமாய்ச் சொல்லப்படும் ’சோமன் கட்டு’ அவர் கட்டிக்கொள்வதில்லை, சில சமயங்களில் ’சோமன் கட்டு’ கட்டிக்கொண்டிருந்து, அலுத்துப் போய், அதை விட்டு விட்டார்.

உடம்பிலே எப்பொழுதும் ஒரு பனியன் சட்டை இருக்கும். வேஷ்டிகளையோ, சட்டைகளையோ, அவர் சலவைக்குப்போட்டு நான் பார்த்ததில்லை. யாராவது ஒரு பக்தனோ, வீட்டு வேலைக்காரியோ துவைத்துக்காய வைத்திருப்பார்கள். பனியனுக்குமேல் ஒரு ஷர்ட்டு. அது கிழிந்திருக்கலாம். அனேகமாய்ப் பித்தான் இருக்காது. இதற்குமேல் ஒரு கோட்டு. அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார்.

ஷர்ட்டின் இடப்பக்கப் பித்தான் துவாரத்தில் ஏதாவது ஒரு புதிய மலர் செருகி வைத்துக்கொள்வார். ரோஜா, மல்லிகைக் கொத்து முதலிய மணங்கமழும் பூக்கள் அகப்பட்டால் நல்லதுதான். இல்லாவிட்டால் வாசனையில்லாத புதுப்பூ எது அகப்பட்டாலும் போதும். வேப்பம்பூவாயிருந்தாலும் பரவாயில்லை. ’நாள் மலர்’ ஒன்று அந்தப் பித்தான் துவாரத்தில் கட்டாயமாக இருந்துதான் ஆக வேண்டும்.

இடக்கையில் ஒரு நோட்டுப் புஸ்தகம், சில காகிதங்கள், ஒரு புஸ்தகம் – இவை கண்டிப்பாய் இருக்கும். கோட்டுப்பையில் ஒரு பெருமாள் செட்டி பென்சில் இருக்கும். பவுண்டன் பேனா அவரிடம் தரிப்பதில்லையோ என்னவோ, பவுண்டன் பேனாவிவினால் அவர் எழுதி, நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் பென்ஸில் எழுத்துதான்.

எழுத்து குண்டுகுண்டாயிருக்கும். ஓர் எழுத்தின் பேரில் இன்னொரு எழுத்து படாது; உராயவும் உராயாது. க-வுக்கும் ச-வுக்கும் வித்தியாசமில்லாமல் நம்மில் பலர் எழுதுகிறார்களே, அத்தகை அலட்சியப் புத்தியைப் பாரதியார் எழுத்தில் காண முடியாது. ஒற்று எழுத்துக்களுக்குமேல், நேர்த்தியான சந்தனப் பொட்டைப் போல, புள்ளி வைப்பார். அவர் எழுத்தை அட்சராப்பியாஸம் ஆரம்பிக்கும் குழந்தைககள் கூடப் படிக்கலாம். ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் இடையே தாராளமாக இடம் விட்டு எழுதுவார். காகிதத்தின் இரண்டு கங்குகளிலும் போதிய இடம் விட்டுவிடுவார்.

உடை விஷயத்தில் ஒன்று பாக்கி. வடநாட்டு சீக்கியர்களைப் போல முண்டாசு கட்டிக்கொள்வதில் அவருக்கு ஆசை அதிகம். அந்தத் தலைபாகையுடன்அவர் ஹிநதுஸ்தானி பேசினால், அவரைத் தமிழன் என்று யாருமே சொல்ல முடியாது. அவ்வளவு தெளிவான உச்சரிப்பு.

பாரதியாரின் வெளிப் புறப்பாட்டுக்கு இத்தனை அங்கங்களும் தேவை. இவ்வளவோடு சேர்ந்த குதுஹலமான குமரிச் சிரிப்பு. சங்கீத வித்வான்கள் ரவை புரட்டுவது போல, பாரதியாரின் சிரிப்பில் அபரிமிதமாக ரவை புரளும்.

பாரதியார் இடக்காலைக் கூசாமல் தரையில் வைக்க மாட்டார். இடக்கால் பாதத்தில் அவருக்கு முக்கால் பைசா அகலத்தில் ஆணி விழுந்திருந்தது. சில சமயங்களில் கவனக்குறைவால் அவர் இடக்கால் கல்லிலோ வேறு கடினமான பொருளிலே பட்டுவிட்டால், அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்துவிடுவார்.

பாரதியார் கனிந்து நடந்ததே கிடையாது. ” கூனாதே கூனாதே” என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார். கொஞ்சங்கூடச் சதையே இல்லாத மார்பை, பட்டாளத்துச் சிப்பாய் போல முன்னே தள்ளித் தலைநிமிர்ந்து, பாடிக்கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரெம்பப் பிரியம்.

”லா மார்ஸேய்ஸ், லா ஸாம்பர் தே மியூஸ்” என்ற பிரெஞ்சுப் படைபெயர் பாட்டுகளைப் பாடிக் கொண்டு, அவைகளின் தாளத்திற்கேற்ப நடப்பதில் பாரதியாருக்கு பிரம்மானந்தம். இந்தப் பாட்டுகளின் மெட்டுகளைத் தழுவித் தமிழில் பல பாட்டுகள் பாட வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருப்பார். இரண்டொரு பாட்டுகள் பாடியுமிருக்கிறார்.

பாரதியார் இருக்கிற இடத்தில் கூட்டத்திற்கு ஒரு நாளும் குறையிருக்காது. கந்துவட்டிக்கடையில்கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. குறைந்தது நாலைந்து பேர்களாவது இருப்பார்கள்.

வெளியே புறப்பட்டால் இரண்டொருவரேயினும் அவரைப் பின்தொடர்ந்து செல்லாமலிருப்பதில்லை.

கூடவே ஆனால், எட்டத்திலேயே போய்க்கொண்டிருக்கும் ரகசியப் போலீசாரைப்பற்றிக் குறிப்பிடத்தேவையா?

புதுச்சேரி வீதியில் பரதியார் நடக்கும்பொழுது, திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் வேகமாய் எழுந்து நிற்பார்கள்; கும்பிடு போடுவார்கள். நின்று பதில் கும்பிடு போட்டுவிட்டு, சிறிதளவு ஷேம சமாசாரம் விசாரித்த பின்னர்தான், அந்த இடத்தைவிட்டுப் பாதியார் நகர்வார்.

புதுச்சேரிக்குப் போயிருக்கிறவர்களுக்குப் ’புஷ்’ வண்டியைப்பற்றித் தெரிந்திருக்கும். அது ’ரிக்ஷா’ வண்டியல்ல. சில புஷ் வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள் இருக்கும்; சிலவற்றிற்கு மூன்று சக்கரங்களே இருக்கும். அதாவது, வண்டியின் முன் புறத்தில் ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரம் இருக்கும். வண்டியைப் பின்னே இருந்து ஆள் தள்ளுவான். புதுச்சேரியில் புஷ் வண்டியைத் தள்ளுபவர்கள் பெரும்பாலும் ஹரிஜனங்கள் – ஆண்பிள்ளை ஹரிஜனங்கள்.

பாரதியார் வெளியே புறப்பட்டுவிட்டால், இந்தப் புஷ் வண்டிக்காரர்களுக்கு ஆனந்தம். பாரதியாருக்கு முன்னே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள் பாரதியாரை நடக்கவும் விடமாட்டார்கள்; போய்ச் சேர கூலி பேசவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்; வேண்டிய இடத்துக்குப் போனதும், பாரதியார் வாடகைப் பணம் கொடுப்பார். வாங்க மாட்டார்கள்.

” என்னாத்துக்குங்க எனக்குக் காசு” என்பான். ” ரூபாய் வேனுமோ?” என்று சொல்லிப் பாரதியார் சிரிப்பார். ”எதுக்குங்க ரூபாய் ?” என்பான். புஷ் வண்டிக்காரனுடைய நேளிவு பாரதியாருக்குத் தெரியும். சிறிது நேரம் சம்பாஷணைச் சல்லாபம் செய்வார்; துணி வேண்டும் என்று அவன் வாயால் வரும்படியாகச் செய்வார். தாம் மேலே போட்டுக்கொண்டிருப்பது பட்டாயிரந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாயிருந்தாலும் சரி, சரிகைத் துப்பட்டாவாயிருந்தாலும் சரி, அது அன்றைக்குப் புஷ் வண்டிகாரனுக்குப் ’பிராப்தி’.

பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு கூர்ந்து யாரேனும் நண்பர் அவருக்குப் புதிய அங்கவஸ்திரம் கொடுத்தால், அதற்கும் மேற்சொன்ன கதி நேர்ந்தாலும் நேரும். புதுச்சேரி புஷ் வண்டிக்காரர்கள், அதிலும் பாரதியார் குடியிருந்த வட்டாரத்திலிருந்த புஷ் வண்டிக்காரர்கள், கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாரதியாருக்குத் துணிப்பஞ்சம், சட்டைப்பஞ்சம் ஏற்படலாம்; அவர்களுக்கு ஏற்படாது. ஏழைகள், ஹரிஜனங்கள் என்ற காரணத்தினால் அவர்களிடம் பாரதியாருக்கு அளவு கடந்த அன்பு.

வீதியில் நடந்துகொண்டே இருக்கும்போது பாரதியாரின் மனம் அருமையான விஷயங்களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். திடீர் திடீரென்று நெருப்புப் பொறி பறப்பது போல் அவரது மூளையிலிருந்து அற்புதமான கருத்துகள் தெரித்து வரும்.

ஒரு சமயம், அவரும் நானும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க்கெண்டிருந்தோம். வழியிலே பிரெஞ்சு இலக்கியத்தின் பெருமையையும் விக்டர் ஹியூகோ அவர்களின் மேதையைப் பற்றியும் வெகு நேர்த்தியாக, எனக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார். திடிரென்று திண்ணையிலிருந்து ஒரு பையன் ’இளமையில் கல்’ என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார், ’முதுமையில் மண்’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. மேதையென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டுமென்று எண்ணித் திகைத்துப் போனேன்.

பாரதியார் சொல்லுகிறார்: ”ஓய்! உமக்குத் தர்க்க சாஸ்திரப் பயிற்சி இல்லைபோலிருக்கிறது! இளமையிலே கல்லாயிருப்பவன் முதுமையில் கவனிப்பாரற்ற மண்ணாவது நிச்சயம். இதைப்பற்றி நீர் ஏன் அதிசயப்படுகிறீர் ? இரண்டாயிரம் வருஷங்களாக, நமது மூதாதைகள் இளமையில் கல்லாகவும் முதுமையில் மண்ணாகவும் இருந்திருந்து போய்விட்டார்கள், நம் காலத்திலே நமக்கு எதை எடுத்தாலும் திகைப்பும் திண்டாட்டமுமாக இருக்கிறது. இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன நமது குழந்தைகள் ஜுவலிக்க வேண்டும், அப்படி ஜுவலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள். பின் சந்ததியார்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால், நாம் இப்பொழுது பழி சுமத்துவது போல, நம்மை நம் பின்சந்ததியார்கள் தூற்றுவார்கள்.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.