LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

முதல் பாகம் - பூகம்பம்-காதலர் உலகம்

 

சீதாவும் லலிதாவும் கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து ஆனந்தமயமான கனவுலோகத்தில் சொர்க்க சுகத்தை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். பசும்புல் தரையில் அழகிய பட்டுப் பூச்சிகள் வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரிப் பதைப் போலஅவர்கள் இந்திரபுரியின் நந்தவனத்தில் யதேச்சையாக அலைந்து திரிந்தார்கள். தேவலோகத்து பாரிஜாத மரங்களிடையே அவர்கள் தேன் வண்டுகளாக உலாவித் திரிந்து பாரிஜாத புஷ்பங்களில் கசிந்த இனிய தேனைத் தேவாமுதத்தோடு பருகி மகிழ்ந்தார்கள். மாயா லோகம்போன்ற மேக மண்டலங்களுக்கு மேலே நின்று அவர்கள் ஆடிக் களித்தார்கள்.நட்சத்திரங்களிடையே வட்டமிட்டு ஒருவரையொருவர் ஓடிப் பிடித்தார்கள். ஆகாச கங்கையைக்கையினால் அள்ளி ஒருவர் மேல் ஒருவர் தெளித்து மகிழ்ந்தார்கள். பசுமரக் கிளைகளில் இருகிள்ளைகளாகி உட்கார்ந்து யாழிசை போன்ற மழலை மொழி பேசிக் கொஞ்சினார்கள்.கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து இருவருடைய உள்ளங்களும் உடல்களும் அதிசயமான வளர்ச்சி பெற்றிருந்தன. முகங்கள் புதிய காந்தி பெற்று விளங்கின. மேனியில் புதிய மெருகுதோன்றித் திகழ்ந்தது. 
 
     தினம் பொழுது புலரும் போது அவர்களுக்கு மட்டும் ஒரு புதுமையான சௌந்தரியத்துடன் புலர்ந்தது. சூரியன் என்றுமில்லாத ஜோதியுடன் உதயமானான். அந்தி மயங்கிய நிழல் படர்ந்து வரும் மாலை நேரத்தின் மோகத்தையோ வர்ணிக்க முடியாது. ஆகா! இரவின் இன்பத்தைத்தான் என்னவென்று சொல்வது? வானத்தில் பிறைச் சந்திரன் பிரகாசித்தால் அதன்அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்; முழு மதியா இருந்தாலோ உள்ளம் கடலைப்போல்பொங்கத் தொடங்கிவிடும். சந்திரனே இல்லாத இரவு மட்டும் அழகில் குறைந்ததா, என்ன? அடடா, கோடானு கோடி வைரங்களை வாரி, இறைத்ததுபோல் சுடர்விடும் நட்சத்திரங்களோடு வானம் விளங்கும் காட்சிக்கு இணை வேறு உண்டோ? விழித்திருக்கும் வரையில் மூச்சு விடாமல்அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். தூங்கினாலோ எத்தனை இன்பமயமான கனவுகள்?சீதாவின் அன்னை அகண்ட காவேரியில் வேனிற் காலத்தில் ஓடும் பளிங்கு போல் தெளிந்தஊற்று நீரில் குளிக்கும் ஆனந்தத்தைப் பற்றி ஒரு நாள் சொன்னாள். தன்னுடையஇளம்பிராயத்தில் அவ்விதம் அடிக்கடி சென்று குளிப்பதுண்டு என்று கூறினாள். 
 
     மாமா கிட்டாவய்யரை மிகவும் நச்சுப்படுத்திச் சீதா காவேரியில் போய்க் குளித்து வரஅனுமதி பெற்றாள். தோழிகள் இருவரும் ராஜம்மாளும் வண்டி கட்டிக் கொண்டு காவேரியில்குளிக்கச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் கண்ணன் வாழ்ந்திருந்த காலத்தில் கோபாலரும்கோபியரும் யமுனையில் இறங்கிக் கண்ணணோடு நீர் விளையாடியபோது அடைந்த ஆனந்தத்துக்கு இணையான ஆனந்தத்தைச் சீதாவும் லலிதாவும் அன்று அடைந்தார்கள். அவ்விதம் அகண்டகாவேரியில் குளித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் சூரியாவும் பாலகிருஷ்ணனும் குஸ்திச்சண்டை போடும் காட்சியைக் கண்டார்கள். சீதாவுக்கும் லலிதாவுக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் அது மறந்து போய்விட்டது. மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் அந்தரங்கம்பேசுவதற்குத் தனி இடத்தை நாடி அவர்கள் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். அந்த வருஷம் கார்த்திகை மாதத்தில் நல்ல மழை பெய்திருந்தபடியால் பங்குனி மாதக்கடைசியானாலும் குளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது. குளத்தில் தவழ்ந்து வந்த குளிர்ந்ததென்றல் சீதாவையும் லலிதாவையும் பட்டப் பகலிலேயே காதலரின் கனவு லோகத்துக்குக்கொண்டு போயிற்று. 
 
     அவர்களுடைய சம்பாஷணை அன்று பரிகாசத்தில் ஆரம்பமாயிற்று. "லலிதா?நலங்கின்போது உன்னைப் பாடச் சொல்வார்கள். 'மாமவ பட்டாபிராமா' கிருதியை நீ கட்டாயம் பாட வேண்டும். இல்லாவிட்டால் நான் உன்னோடு 'டூ' போட்டு விடுவேன். அப்புறம் பேசவே மாட்டேன்!" என்றாள் சீதா. "முதலில் நீ 'மருகேலரா ஓ ராகவா' கீர்த்தனத்தைப்பாடு! அதைக்கேட்டுத் தைரியப்படுத்திகொண்டு நானும் பாடுகிறேன். நீ தைரியசாலி, சீதா! எனக்கு அவ்வளவுதைரியம் இல்லையே! என்ன செய்வது?" என்றாள் லலிதா. "அடி திருடி! உனக்காதைரியமில்லை என்கிறாய்? ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒருவருக்கும் தெரியாமல் அல்லவாநீயும் மிஸ்டர் பட்டாபிராமனும் கலியாணம் நிச்சயம் செய்துகொண்டு விட்டீர்கள்? தைரியம் இல்லாமலா அப்படிச் செய்தாய்?" "அதெல்லாம் ஒன்றுமில்லை. சீதா! நாங்கள்ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை பேசிக்கொண்டது கூட இல்லையே?" "பேசிக்கொள்ளவில்லையா? அது எப்படி லலிதா? பொய் சொல்லாதே! வாயினால் நீ பேசினால்தான்பேச்சா? 
 
     கண்களினால் பேசினால் பேச்சு இல்லையா! போன வருஷம் நீ தேவபட்டணத்துக்குப்போயிருந்ததையெல்லாந்தான் சொன்னாயே? அதைவிட வாய்ப் பேச்சு என்னத்திற்கு, லலிதா?சீதையும் ராமரும் என்ன செய்தார்கள்? கலியாணத்திற்கு முன்னால் அவர்கள் வாயினாலா பேசிக்கொண்டார்கள்? மிதிலாபுரியில் இராமர் வீதியோடு போய்க்கொண்டிருந்தார். சீதாகன்னிமாடத்தில் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள். ஒருவரையொருவர் கண்ணாலே மட்டும்தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் அழியாக் காதல் ஏற்படுவதற்கு அதுபோதவில்லையா?" "போதாது என்று நான் சொல்லவில்லை. பேசுவதற்குத் தைரியம் இருந்தால்பேசக்கூடாது என்பது இல்லையே? உன் கலியாணம் நிச்சயமான பிறகு, உன்னை அவர்அழைத்துக் கேட்டதற்குப் பதில் சொன்னாயே? அதை நினைக்க நினைக்கஆச்சரியமாயிருக்கிறது சீதா! அதை இன்னொரு தடவை சொல்லேன். எனக்கு மறுபடியும்அதைக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!" "அதற்கென்ன பேஷாகச் சொல்கிறேன் இன்னும் பத்துத் தடவை நீ கேட்டாலும் சொல்கிறேன். நிச்சயதார்த்தம் ஆன பிறகு அவர்கள் - எனக்கு மாமனாராகவும் மாமியாராகவும் வரப்போகிறவர்கள் - என்னைக் கூப்பிடுவதாக அழைத்துச்சென்றார்கள். 
 
     ஒரு பக்கத்தில் எனக்குச் சந்தோஷமாயிருந்தது. மற்றொரு பக்கத்தில் என்னகேட்பார்களோ என்னமோ என்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் பேச்சைத் தட்ட முடியாமல் போனேன். அந்த மாமி என்னைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆசிர்வதித்தாள். 'நீதான் எங்கள் வீட்டுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாம். உன்னால்தான் எங்கள் குலம் விளங்கப்போகிறது' என்று ஏதேதோ சொன்னாள். மாமனாரோ நீளமாக ஏதேதோபேசிக்கொண்டேயிருந்தார். என்னுடைய அழகுக்காகவும் சமர்த்துக்காகவுந்தான்வரதட்சணையில்லாமலும், சீர் இல்லாமலும் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொள்வதாக அவர்சொன்னது மட்டும் எனக்குப் புரிந்தது. அதே சமயத்தில் என்னுடைய கவனம் எல்லாம்மாப்பிள்ளையிடம் சென்றிருந்தது. பிறகு மாமனாரும் மாமியாரும் சற்றுத் தூரமாகப் போனார்கள்.நானும் போவதற்கு ஆயத்தமானேன். உடனே மாப்பிள்ளை என்னைப் பார்த்து, "சீதா!போவதற்கு அவசரப்படாதே. சற்றுப் பொறு, உன்னை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்; பதில் சொல்லுவாயல்லவா?" என்றார். 
 
     நான் தலை குனிந்து மௌனமாயிருந்தேன். அவர் மறுபடியும், 'நேற்றைக்கெல்லாம்கலகலவென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு இன்றைக்குத் திடீரென்று பேசா மடந்தையானால்நான் விடமாட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். நீ என்னைக்கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டது எதற்காக?' என்று கேட்டார். அப்போது அவரைநிமிர்ந்து பார்த்தேன். நான் சொல்லப் போகும் பதிலை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது'அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்கவேண்டும்? நீங்கள்தான் என் சிநேகிதியைப்பார்ப்பதற்காக வந்து விட்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படுவதாகச்சொன்னீர்கள்!' என்றேன். இதைக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். ஆனால் உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, 'அப்படியானால் இந்தக் கலியாணத்தில் இஷ்டமில்லையென்கிறாயா? இப்போது ஒன்றும் முழுகிவிடவில்லை; கலியாணத்தை நிறுத்தி விடலாம். உனக்கு மனதில்லை என்றால் சொல்லி விடு' என்றார். 'ஆமாம் எனக்கு மனதில்லைதான். என் மனது என்னிடத்தில் இல்லை. நேற்று சாயங்காலம் மோட்டாரிலிருந்து இறங்கியபோதே தாங்கள் என் மனதை கவர்ந்து கொண்டு விட்டீர்களே? இப்போது எப்படிஎனக்கு மனது இருக்கும்?" என்றேன். 
 
     அப்போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே லலிதா; குதூகலம் ததும்பியது.'நான் எத்தனையோ பி.ஏ. எம்.ஏ., படித்த பெண்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். உன்னைப்போல் சமர்த்தான பெண்ணைப் பார்த்ததேயில்லை. உன்னை இப்போது பிரிந்து போக வேண்டுமே என்றிருக்கிறது!' என்று அவர் சொன்னார் என் வாய்க்கொழுப்பு நான் சும்மா இருக்கக் கூடாதா? 'இப்போது இப்படிச் சொல்கிறீர்கள்,நாளைக்கு ஊருக்குப் போனதும் மறந்து விடுகிறீர்களோ, என்னமோ? 'பி.ஏ. எம்.ஏ' படித்தபெண்கள் அங்கே எத்தனையோ பேர் இருப்பார்கள்!' என்று சொன்னேன். 'அதற்குள்ளே புகார்சொல்ல ஆரம்பித்து விட்டாயா? பி.ஏ.யும் ஆச்சு; எம்.ஏ.யும் ஆச்சு? அவர்கள் எல்லாம் உன் கால் தூசி பெறமாட்டார்கள். உன்னைத் தவிர எனக்கு வேறு ஞாபகமே இராது?!' என்று அவர் கூறியபோது என் மனம் குளிர்ந்தது. இருந்தாலும் கிறுக்காக 'துஷ்யந்த மகாராஜாசகுந்தலையிடம் இப்படித்தான் சொன்னார். ஊருக்குப் போனதும் மறந்துவிட்டார்' என்றேன்.'சீதா! என்று அவர் அன்பு கனிய என்னை அழைத்து, 'துஷ்யந்தன் ராஜன்; அதனால் அவன் எதுவேணுமானாலும் செய்வான். நான் சாதாரண மனிதன்தானே?' என்றார். 'நீங்கள்தான் எனக்கு ராஜா!' என்று நான் சொன்னேன். 'துஷ்யந்தன் தேசத்துக்கு ராஜா; நான் உனக்கு மட்டுந்தான் ராஜா. ஆகையால் உன்னை என்னால் மறக்க முடியாது; அடையாளந் தருகிறேன் அருகில் வா'என்றார் ஏதோ மோதிரம் அல்லது பவுண்டன் பேனா இப்படி ஏதாவது தரப்போகிறார் என்றுநினைத்துக்கொண்டு அவர் அருகில் போனேன். அவர் எனது வலது கையைத் தமது இரண்டுகையாலும் பிடித்துக்கொண்டு கையில் முத்தம் கொடுத்தார். லலிதா; லலிதா அதை நினைத்தால் இப்போதுகூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதடி" இவ்விதம் சீதா சொல்லிவிட்டுப் பின்வருமாறு பாடினாள்; 
 
     "எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடந்தனிலே தண்ணென் றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன் தான் யாரெனச் சிந்தைசெய்தேன்! கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி! 
 
     சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் நடந்த சம்பாஷணையை ஐந்தாவது தடவையாகக்கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனம் புயல் அடிக்கும்போது அலைகடல் பொங்குவதுபோலப் பொங்கியது. தன் மணாளன், பட்டாபிராமன் தன்னிடம் இப்படியெல்லாம் காதல்புரிவானா, இவ்வாறெல்லாம் அருமையாகப் பேசுவானா என்று அவள் உள்ளம் ஏங்கியது. அந்தஎண்ணத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டு, "சீதா நீ துஷ்யந்தனைப் பற்றிச் சொன்னாயே அது மட்டும் சரியல்ல. சகுந்தலை துஷ்யந்தன் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. துஷ்யந்தன் பெரியசாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. அவன் ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த, தாய் தகப்பன் அறியாதபெண்ணை மணந்து கொண்டானே? அது ஆச்சரியமில்லையா?" என்றாள் லலிதா. "அதுஆச்சரியந்தான், ஆனால் அதைப்போல எத்தனையோ நடந்திருக்கிறது. அனார்கலி கதைஉனக்குத் தெரியுமா லலிதா? 'மங்கையர்க்கரசியின் காதல்' என்றும் புத்தகத்தில் அந்தஅற்புதமான கதை இருக்கிறது" என்றாள் சீதா. "எனக்குத் தெரியாதே! அது என்ன கதைசொல்லு!" "அக்பர் பாதுஷாவின் பிள்ளை சலீம் தன்னை இளம் பிராயத்தில் வளர்த்த தாதியின்வளர்ப்புப் பெண்ணைக் காதலித்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகச் சத்தியம்செய்து கொடுத்தான். 
 
     அரண்மனை நந்தவனத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்தரோஜாப்பூப் புதர் மறைவிலிருந்து அக்பர் பாதுஷா கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு பட்டத்துக்கு வரவேண்டிய குமாரர் ஒரு தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதா என்று அவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே அனார்கலியைப் பிடித்துச்சிறையில் அடைக்க உத்தரவு போட்டுவிட்டார். 'அனார்கலி' என்றால் பார்ஸீக பாஷையில் 'மாதுளை மொக்கு' என்று அர்த்தமாம். அது சலீம் அவளுக்கு அளித்த செல்லப் பெயர். சிறையில்அடைபட்ட அனார்கலி சலீமையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை வந்து விடுவிப்பான். விடுவித்து மணம் புரிந்துகொள்வான் என்று ஆசையோடு எதிர் பார்த்து க்கொண்டிருந்தாள். ஆனால் அக்பர் பாதுஷா செத்துப்போய் சலீம் பட்டத்துக்கு வருவதற்குவெகுகாலம் ஆயிற்று. கடைசியில் சலீம் சக்கரவர்த்தி ஆனதும் முதல் காரியமாக அனார்கலியை விடுதலை செய்யப் போனான். அதற்குள் அனார்கலிக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது. சலீமைஅவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 'உங்களையெல்லாம் இங்கே யார் வரச்சொன்னார்கள்? என்னை விடுதலை செய்ய நீங்கள் யார்? சலீம் வந்து என்னை விடுவிக்கப்போகிறார். அதுவரையில் நான் இங்கேயே இருப்பேன்' என்றாள். இதைக் கேட்டு சலீம் மனம்உடைந்து போனான். அனார்கலியும் பிறகு சீக்கிரத்தில் இறந்து போனாள்." 
 
     இதைக் கேட்டபோது லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது. "ஏனடிஅழுகிறாய், அசடே?" என்றாள் சீதா. "எனக்கென்னமோ, வருத்தமாயிருக்கிறது அம்மா!அவர்களுடைய உண்மையான காதல் எதற்காக இப்படித் துக்கத்தில் முடியவேண்டும்?" என்றாள்லலிதா. "காதற் கதைகள் அநேகமாக அப்படித்தான் முடிகின்றன. ரோமியோ ஜுலியட்கதையைப் பாரேன்! அவர்களுடைய காதலைப்போல் உலகத்திலேயே கிடையாது. ஆனால்,கடைசியில் இரண்டு பேரும் செத்துப் போகிறார்கள்." "இரண்டு பேரும் ஒரு வழியாகச் செத்துப்போய் விட்டால் பாதகமில்லை, சீதா! ஒருவர் செத்து ஒருவர் இருந்தால் எவ்வளவுகஷ்டமாயிருக்கும்? சலீமைப் பார்! பிறகு அவன்தானே ஜஹாங்கீர் பாதுஷா ஆகி நூர்ஜஹானைக் கலியாணம் செய்து கொண்டான்? நூர்ஜஹான் உலகத்தில் எவ்வளவு பிரசித்தமான அழகியாய் இருந்தால் என்ன? அதற்காக, அவனால் அனார்கலியை எப்படி மறக்க முடிந்தது?" 
 
     "சில புருஷர்கள் அப்படித்தான், லலிதா! ஆனால் எல்லோரும் அப்படியில்லை. ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானைப் பார்! அவன் மும்தாஜ் என்பவளைக் கலியாணம் செய்துகொண்டான். அவள் செத்துப் போன பிறகும் அவளை ஷாஜஹான் மறக்கவில்லை. அவளுடைய ஞாபகார்த்தமாகத் தாஜ்மகால் கட்டினான். தன் அரண்மனையிலிருந்து எப்போதும்தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பார்த்து கொண்டே செத்துப் போனான். இந்தக் காதல் ரொம்ப உயர்வாயில்லையா, லலிதா!" "உயர்வுதான்; ஆனாலும் சாவித்திரிசத்தியவான் கதை தான் எனக்கு எல்லாவற்றிலும் அதிகம் பிடித்திருக்கிறது. இராஜ்யத்தைஇழந்து காட்டுக்கு வந்து குருட்டுத்தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தசத்தியவானைச் சாவித்திரி காதலித்தாள். ஒரு வருஷத்திற்குள் சத்தியவான் செத்துப் போய்விடுவான் என்று தெரிந்தும் அவளுடைய உறுதி மாறவில்லை. யமனுடனேயே வாதாடிப் போனஉயிரைக் கொண்டு வந்தாள். இதுவல்லவா உண்மையான காதல்? லைலா மஜ்னூன், அனார்கலிகதைகளைவிட நம் தேசத்துக் கதைகள் உயர்ந்தவைதான்." 
 
     "அப்படி நம் நாட்டில் கதைகள் என்று பார்த்தால், சுப்ரமண்ய ஸ்வாமிக்கும் வள்ளிக்கும்நடந்த காதல் கலியாணத்தைப்போல் ஒன்றுமே கிடையாது. வள்ளி குறப்பெண்; சுப்ரமண்யரோசாஷாத் பரமசிவனுடைய குமாரர்; தேவ சேனாதிபதி அப்பேர்ப்பட்டவர் குறவர் குடியைத்தேடிவந்து வள்ளியை மணந்து கொண்டார் என்றால், அது எப்பேர்ப்பட்ட அதிசயம்? மணந்தது மட்டுமா! ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சுப்ரமண்யர் தமக்குப் பக்கத்தில் வள்ளியையும் வைத்துக்கொண்டிருக்கிறார். கேவலம் ஒரு குறத்தியை எல்லோரும் கும்பிடும் தெய்வமாக்கிவிட்டார்!உண்மையான காதலுக்கு இதைக் காட்டிலும் வேறு என்ன கதை இருக்கிறது. லலிதா! சுப்ரமண்ய ஸ்வாமி- வள்ளி கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுப்ரமண்ய ஸ்வாமியைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைக் கொஞ்சம் பாடேன்" என்றாள். லலிதா பின்வரும் காவடிச் சிந்தைப் பாட ஆரம்பித்தாள்:- "பாளை வாய்க் கமுகில் வந்தூர் வாளை பாய் வயல் சூழ்செந் தூர் பாலனம் புரிய வந்த புண்ணியா!" சீதா குறுக்கிட்டு, "இது இல்லை, லலிதா! 'பொன் மயில்' என்று ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைப் பாடு!" என்று சொன்னாள். "சரி" என்று சொல்லி லலிதாஆரம்பித்தாள். 
 
     "பொன் மயில் ஏறி வருவான் - ஐயன் பன்னிரு கையால் தன்னருள் சொரிவான் (பொன்)செங்கதிர் வேலன் சிவனருள் பாலன் மங்கை வள்ளி மணாளன் பங்கயத்தாளன் தீனதயாளன்(பொன்) புன்னகை தன்னால் இன்னல்கள் தீர்ப்பான் புன்மை இருள் கணம் மாய்ப்பான்கன்னலின் இனிய தண்தமிழ் அளிப்பான்" (பொன்) 
 
      பாட்டு முடியுந்தருணத்தில், "பலே பேஷ்! லலிதா நீ இவ்வளவு நன்றாய்ப் பாடுகிறாயே?அன்றைக்கு மதராஸ்காரர்கள் வந்தபோது மட்டும் பாடவே மாட்டேன் என்று வாயை இறுக மூடிக்கொண்டாயே? அது ஏன்?" என்று கேட்டுக்கொண்டே சூரியா உள்ளே வந்தான். அவனைத்தொடர்ந்து ராஜம்மாளும் உள்ளே வந்தாள். சூரியாவுக்குச் சீதா பதில் சொன்னாள். "அன்றைக்குஅவளுக்குப் பாடப் பிடிக்கவில்லை; அதனால் பாடவில்லை. நாளைக்குக் கலியாணத்தின்போது!'மாமவ பட்டாபிராமா' கீர்த்தனம் பாடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்!" சூரியா, "சபாஷ்!அதுதான் சரி. பட்டாபிராமனுக்கு அப்படித்தான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும்!" என்றான். லலிதாவுக்கு நான் நளன் - தமயந்தி கதை சொல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சீதா லலிதாவைக்கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பங்களாவை விட்டு வெளியேறினாள். அந்தரங்கம்பேசக்கூடிய ஏகாந்தமான இடத்தைத் தேடி அவர்கள் சென்றார்கள். லலிதாவும் சீதாவும்போனபிறகு ராஜம்மாள் சூரியாவைப் பார்த்து, "குழந்தை! சாலையோரத்திலே தபால்காரனோடுசண்டை போட்டுக்கொண்டிருந்தாயே அது எதற்காக? எனக்கு என்னமோசந்தேகமாயிருக்கிறது என்னிடம் உண்மையைச் சொல்லு!" என்றாள். "அத்தை! அவசியம்சொல்லித்தான் தீரவேண்டுமா? அது உங்கள் சம்பந்தமான விஷயந்தான். ஏற்கனவே உங்களுக்குஎவ்வளவோ கவலை. மேலும் உங்களைத் துன்பப்படுத்துவானேன் என்று சொல்லவேண்டாமென்று பார்த்தேன்!" என்றான் சூரிய நாராயணன். "அப்பா, சூரியா! இனிமேல் என் மனத்தை வருத்தப்படுத்தக்கூடிய விஷயம் உலகில் ஒன்றுமே இருக்க முடியாது. எத்தனையோ வருத்தங்களையும் கஷ்டங்களையும் அநுபவித்து அநுபவித்து என் மனத்தில் சுரணையே இல்லாமல் போய் விட்டது. எவ்வளவு வருத்தமான விஷயமாயிருந்தாலும் என்னை ஒன்றும் செய்து விடாது தயங்காமல் சொல்லு!" என்றாள்.

சீதாவும் லலிதாவும் கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து ஆனந்தமயமான கனவுலோகத்தில் சொர்க்க சுகத்தை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். பசும்புல் தரையில் அழகிய பட்டுப் பூச்சிகள் வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரிப் பதைப் போலஅவர்கள் இந்திரபுரியின் நந்தவனத்தில் யதேச்சையாக அலைந்து திரிந்தார்கள். தேவலோகத்து பாரிஜாத மரங்களிடையே அவர்கள் தேன் வண்டுகளாக உலாவித் திரிந்து பாரிஜாத புஷ்பங்களில் கசிந்த இனிய தேனைத் தேவாமுதத்தோடு பருகி மகிழ்ந்தார்கள். மாயா லோகம்போன்ற மேக மண்டலங்களுக்கு மேலே நின்று அவர்கள் ஆடிக் களித்தார்கள்.நட்சத்திரங்களிடையே வட்டமிட்டு ஒருவரையொருவர் ஓடிப் பிடித்தார்கள். ஆகாச கங்கையைக்கையினால் அள்ளி ஒருவர் மேல் ஒருவர் தெளித்து மகிழ்ந்தார்கள். பசுமரக் கிளைகளில் இருகிள்ளைகளாகி உட்கார்ந்து யாழிசை போன்ற மழலை மொழி பேசிக் கொஞ்சினார்கள்.கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து இருவருடைய உள்ளங்களும் உடல்களும் அதிசயமான வளர்ச்சி பெற்றிருந்தன. முகங்கள் புதிய காந்தி பெற்று விளங்கின. மேனியில் புதிய மெருகுதோன்றித் திகழ்ந்தது.       தினம் பொழுது புலரும் போது அவர்களுக்கு மட்டும் ஒரு புதுமையான சௌந்தரியத்துடன் புலர்ந்தது. சூரியன் என்றுமில்லாத ஜோதியுடன் உதயமானான். அந்தி மயங்கிய நிழல் படர்ந்து வரும் மாலை நேரத்தின் மோகத்தையோ வர்ணிக்க முடியாது. ஆகா! இரவின் இன்பத்தைத்தான் என்னவென்று சொல்வது? வானத்தில் பிறைச் சந்திரன் பிரகாசித்தால் அதன்அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்; முழு மதியா இருந்தாலோ உள்ளம் கடலைப்போல்பொங்கத் தொடங்கிவிடும். சந்திரனே இல்லாத இரவு மட்டும் அழகில் குறைந்ததா, என்ன? அடடா, கோடானு கோடி வைரங்களை வாரி, இறைத்ததுபோல் சுடர்விடும் நட்சத்திரங்களோடு வானம் விளங்கும் காட்சிக்கு இணை வேறு உண்டோ? விழித்திருக்கும் வரையில் மூச்சு விடாமல்அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். தூங்கினாலோ எத்தனை இன்பமயமான கனவுகள்?சீதாவின் அன்னை அகண்ட காவேரியில் வேனிற் காலத்தில் ஓடும் பளிங்கு போல் தெளிந்தஊற்று நீரில் குளிக்கும் ஆனந்தத்தைப் பற்றி ஒரு நாள் சொன்னாள். தன்னுடையஇளம்பிராயத்தில் அவ்விதம் அடிக்கடி சென்று குளிப்பதுண்டு என்று கூறினாள்.       மாமா கிட்டாவய்யரை மிகவும் நச்சுப்படுத்திச் சீதா காவேரியில் போய்க் குளித்து வரஅனுமதி பெற்றாள். தோழிகள் இருவரும் ராஜம்மாளும் வண்டி கட்டிக் கொண்டு காவேரியில்குளிக்கச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் கண்ணன் வாழ்ந்திருந்த காலத்தில் கோபாலரும்கோபியரும் யமுனையில் இறங்கிக் கண்ணணோடு நீர் விளையாடியபோது அடைந்த ஆனந்தத்துக்கு இணையான ஆனந்தத்தைச் சீதாவும் லலிதாவும் அன்று அடைந்தார்கள். அவ்விதம் அகண்டகாவேரியில் குளித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் சூரியாவும் பாலகிருஷ்ணனும் குஸ்திச்சண்டை போடும் காட்சியைக் கண்டார்கள். சீதாவுக்கும் லலிதாவுக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் அது மறந்து போய்விட்டது. மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் அந்தரங்கம்பேசுவதற்குத் தனி இடத்தை நாடி அவர்கள் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். அந்த வருஷம் கார்த்திகை மாதத்தில் நல்ல மழை பெய்திருந்தபடியால் பங்குனி மாதக்கடைசியானாலும் குளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது. குளத்தில் தவழ்ந்து வந்த குளிர்ந்ததென்றல் சீதாவையும் லலிதாவையும் பட்டப் பகலிலேயே காதலரின் கனவு லோகத்துக்குக்கொண்டு போயிற்று.       அவர்களுடைய சம்பாஷணை அன்று பரிகாசத்தில் ஆரம்பமாயிற்று. "லலிதா?நலங்கின்போது உன்னைப் பாடச் சொல்வார்கள். 'மாமவ பட்டாபிராமா' கிருதியை நீ கட்டாயம் பாட வேண்டும். இல்லாவிட்டால் நான் உன்னோடு 'டூ' போட்டு விடுவேன். அப்புறம் பேசவே மாட்டேன்!" என்றாள் சீதா. "முதலில் நீ 'மருகேலரா ஓ ராகவா' கீர்த்தனத்தைப்பாடு! அதைக்கேட்டுத் தைரியப்படுத்திகொண்டு நானும் பாடுகிறேன். நீ தைரியசாலி, சீதா! எனக்கு அவ்வளவுதைரியம் இல்லையே! என்ன செய்வது?" என்றாள் லலிதா. "அடி திருடி! உனக்காதைரியமில்லை என்கிறாய்? ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒருவருக்கும் தெரியாமல் அல்லவாநீயும் மிஸ்டர் பட்டாபிராமனும் கலியாணம் நிச்சயம் செய்துகொண்டு விட்டீர்கள்? தைரியம் இல்லாமலா அப்படிச் செய்தாய்?" "அதெல்லாம் ஒன்றுமில்லை. சீதா! நாங்கள்ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை பேசிக்கொண்டது கூட இல்லையே?" "பேசிக்கொள்ளவில்லையா? அது எப்படி லலிதா? பொய் சொல்லாதே! வாயினால் நீ பேசினால்தான்பேச்சா?       கண்களினால் பேசினால் பேச்சு இல்லையா! போன வருஷம் நீ தேவபட்டணத்துக்குப்போயிருந்ததையெல்லாந்தான் சொன்னாயே? அதைவிட வாய்ப் பேச்சு என்னத்திற்கு, லலிதா?சீதையும் ராமரும் என்ன செய்தார்கள்? கலியாணத்திற்கு முன்னால் அவர்கள் வாயினாலா பேசிக்கொண்டார்கள்? மிதிலாபுரியில் இராமர் வீதியோடு போய்க்கொண்டிருந்தார். சீதாகன்னிமாடத்தில் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள். ஒருவரையொருவர் கண்ணாலே மட்டும்தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் அழியாக் காதல் ஏற்படுவதற்கு அதுபோதவில்லையா?" "போதாது என்று நான் சொல்லவில்லை. பேசுவதற்குத் தைரியம் இருந்தால்பேசக்கூடாது என்பது இல்லையே? உன் கலியாணம் நிச்சயமான பிறகு, உன்னை அவர்அழைத்துக் கேட்டதற்குப் பதில் சொன்னாயே? அதை நினைக்க நினைக்கஆச்சரியமாயிருக்கிறது சீதா! அதை இன்னொரு தடவை சொல்லேன். எனக்கு மறுபடியும்அதைக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!" "அதற்கென்ன பேஷாகச் சொல்கிறேன் இன்னும் பத்துத் தடவை நீ கேட்டாலும் சொல்கிறேன். நிச்சயதார்த்தம் ஆன பிறகு அவர்கள் - எனக்கு மாமனாராகவும் மாமியாராகவும் வரப்போகிறவர்கள் - என்னைக் கூப்பிடுவதாக அழைத்துச்சென்றார்கள்.       ஒரு பக்கத்தில் எனக்குச் சந்தோஷமாயிருந்தது. மற்றொரு பக்கத்தில் என்னகேட்பார்களோ என்னமோ என்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் பேச்சைத் தட்ட முடியாமல் போனேன். அந்த மாமி என்னைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆசிர்வதித்தாள். 'நீதான் எங்கள் வீட்டுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாம். உன்னால்தான் எங்கள் குலம் விளங்கப்போகிறது' என்று ஏதேதோ சொன்னாள். மாமனாரோ நீளமாக ஏதேதோபேசிக்கொண்டேயிருந்தார். என்னுடைய அழகுக்காகவும் சமர்த்துக்காகவுந்தான்வரதட்சணையில்லாமலும், சீர் இல்லாமலும் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொள்வதாக அவர்சொன்னது மட்டும் எனக்குப் புரிந்தது. அதே சமயத்தில் என்னுடைய கவனம் எல்லாம்மாப்பிள்ளையிடம் சென்றிருந்தது. பிறகு மாமனாரும் மாமியாரும் சற்றுத் தூரமாகப் போனார்கள்.நானும் போவதற்கு ஆயத்தமானேன். உடனே மாப்பிள்ளை என்னைப் பார்த்து, "சீதா!போவதற்கு அவசரப்படாதே. சற்றுப் பொறு, உன்னை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்; பதில் சொல்லுவாயல்லவா?" என்றார்.       நான் தலை குனிந்து மௌனமாயிருந்தேன். அவர் மறுபடியும், 'நேற்றைக்கெல்லாம்கலகலவென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு இன்றைக்குத் திடீரென்று பேசா மடந்தையானால்நான் விடமாட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். நீ என்னைக்கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டது எதற்காக?' என்று கேட்டார். அப்போது அவரைநிமிர்ந்து பார்த்தேன். நான் சொல்லப் போகும் பதிலை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது'அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்கவேண்டும்? நீங்கள்தான் என் சிநேகிதியைப்பார்ப்பதற்காக வந்து விட்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படுவதாகச்சொன்னீர்கள்!' என்றேன். இதைக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். ஆனால் உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, 'அப்படியானால் இந்தக் கலியாணத்தில் இஷ்டமில்லையென்கிறாயா? இப்போது ஒன்றும் முழுகிவிடவில்லை; கலியாணத்தை நிறுத்தி விடலாம். உனக்கு மனதில்லை என்றால் சொல்லி விடு' என்றார். 'ஆமாம் எனக்கு மனதில்லைதான். என் மனது என்னிடத்தில் இல்லை. நேற்று சாயங்காலம் மோட்டாரிலிருந்து இறங்கியபோதே தாங்கள் என் மனதை கவர்ந்து கொண்டு விட்டீர்களே? இப்போது எப்படிஎனக்கு மனது இருக்கும்?" என்றேன்.       அப்போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே லலிதா; குதூகலம் ததும்பியது.'நான் எத்தனையோ பி.ஏ. எம்.ஏ., படித்த பெண்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். உன்னைப்போல் சமர்த்தான பெண்ணைப் பார்த்ததேயில்லை. உன்னை இப்போது பிரிந்து போக வேண்டுமே என்றிருக்கிறது!' என்று அவர் சொன்னார் என் வாய்க்கொழுப்பு நான் சும்மா இருக்கக் கூடாதா? 'இப்போது இப்படிச் சொல்கிறீர்கள்,நாளைக்கு ஊருக்குப் போனதும் மறந்து விடுகிறீர்களோ, என்னமோ? 'பி.ஏ. எம்.ஏ' படித்தபெண்கள் அங்கே எத்தனையோ பேர் இருப்பார்கள்!' என்று சொன்னேன். 'அதற்குள்ளே புகார்சொல்ல ஆரம்பித்து விட்டாயா? பி.ஏ.யும் ஆச்சு; எம்.ஏ.யும் ஆச்சு? அவர்கள் எல்லாம் உன் கால் தூசி பெறமாட்டார்கள். உன்னைத் தவிர எனக்கு வேறு ஞாபகமே இராது?!' என்று அவர் கூறியபோது என் மனம் குளிர்ந்தது. இருந்தாலும் கிறுக்காக 'துஷ்யந்த மகாராஜாசகுந்தலையிடம் இப்படித்தான் சொன்னார். ஊருக்குப் போனதும் மறந்துவிட்டார்' என்றேன்.'சீதா! என்று அவர் அன்பு கனிய என்னை அழைத்து, 'துஷ்யந்தன் ராஜன்; அதனால் அவன் எதுவேணுமானாலும் செய்வான். நான் சாதாரண மனிதன்தானே?' என்றார். 'நீங்கள்தான் எனக்கு ராஜா!' என்று நான் சொன்னேன். 'துஷ்யந்தன் தேசத்துக்கு ராஜா; நான் உனக்கு மட்டுந்தான் ராஜா. ஆகையால் உன்னை என்னால் மறக்க முடியாது; அடையாளந் தருகிறேன் அருகில் வா'என்றார் ஏதோ மோதிரம் அல்லது பவுண்டன் பேனா இப்படி ஏதாவது தரப்போகிறார் என்றுநினைத்துக்கொண்டு அவர் அருகில் போனேன். அவர் எனது வலது கையைத் தமது இரண்டுகையாலும் பிடித்துக்கொண்டு கையில் முத்தம் கொடுத்தார். லலிதா; லலிதா அதை நினைத்தால் இப்போதுகூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதடி" இவ்விதம் சீதா சொல்லிவிட்டுப் பின்வருமாறு பாடினாள்;       "எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடந்தனிலே தண்ணென் றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன் தான் யாரெனச் சிந்தைசெய்தேன்! கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி!       சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் நடந்த சம்பாஷணையை ஐந்தாவது தடவையாகக்கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனம் புயல் அடிக்கும்போது அலைகடல் பொங்குவதுபோலப் பொங்கியது. தன் மணாளன், பட்டாபிராமன் தன்னிடம் இப்படியெல்லாம் காதல்புரிவானா, இவ்வாறெல்லாம் அருமையாகப் பேசுவானா என்று அவள் உள்ளம் ஏங்கியது. அந்தஎண்ணத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டு, "சீதா நீ துஷ்யந்தனைப் பற்றிச் சொன்னாயே அது மட்டும் சரியல்ல. சகுந்தலை துஷ்யந்தன் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. துஷ்யந்தன் பெரியசாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. அவன் ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த, தாய் தகப்பன் அறியாதபெண்ணை மணந்து கொண்டானே? அது ஆச்சரியமில்லையா?" என்றாள் லலிதா. "அதுஆச்சரியந்தான், ஆனால் அதைப்போல எத்தனையோ நடந்திருக்கிறது. அனார்கலி கதைஉனக்குத் தெரியுமா லலிதா? 'மங்கையர்க்கரசியின் காதல்' என்றும் புத்தகத்தில் அந்தஅற்புதமான கதை இருக்கிறது" என்றாள் சீதா. "எனக்குத் தெரியாதே! அது என்ன கதைசொல்லு!" "அக்பர் பாதுஷாவின் பிள்ளை சலீம் தன்னை இளம் பிராயத்தில் வளர்த்த தாதியின்வளர்ப்புப் பெண்ணைக் காதலித்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகச் சத்தியம்செய்து கொடுத்தான்.       அரண்மனை நந்தவனத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்தரோஜாப்பூப் புதர் மறைவிலிருந்து அக்பர் பாதுஷா கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு பட்டத்துக்கு வரவேண்டிய குமாரர் ஒரு தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதா என்று அவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே அனார்கலியைப் பிடித்துச்சிறையில் அடைக்க உத்தரவு போட்டுவிட்டார். 'அனார்கலி' என்றால் பார்ஸீக பாஷையில் 'மாதுளை மொக்கு' என்று அர்த்தமாம். அது சலீம் அவளுக்கு அளித்த செல்லப் பெயர். சிறையில்அடைபட்ட அனார்கலி சலீமையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை வந்து விடுவிப்பான். விடுவித்து மணம் புரிந்துகொள்வான் என்று ஆசையோடு எதிர் பார்த்து க்கொண்டிருந்தாள். ஆனால் அக்பர் பாதுஷா செத்துப்போய் சலீம் பட்டத்துக்கு வருவதற்குவெகுகாலம் ஆயிற்று. கடைசியில் சலீம் சக்கரவர்த்தி ஆனதும் முதல் காரியமாக அனார்கலியை விடுதலை செய்யப் போனான். அதற்குள் அனார்கலிக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது. சலீமைஅவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 'உங்களையெல்லாம் இங்கே யார் வரச்சொன்னார்கள்? என்னை விடுதலை செய்ய நீங்கள் யார்? சலீம் வந்து என்னை விடுவிக்கப்போகிறார். அதுவரையில் நான் இங்கேயே இருப்பேன்' என்றாள். இதைக் கேட்டு சலீம் மனம்உடைந்து போனான். அனார்கலியும் பிறகு சீக்கிரத்தில் இறந்து போனாள்."       இதைக் கேட்டபோது லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது. "ஏனடிஅழுகிறாய், அசடே?" என்றாள் சீதா. "எனக்கென்னமோ, வருத்தமாயிருக்கிறது அம்மா!அவர்களுடைய உண்மையான காதல் எதற்காக இப்படித் துக்கத்தில் முடியவேண்டும்?" என்றாள்லலிதா. "காதற் கதைகள் அநேகமாக அப்படித்தான் முடிகின்றன. ரோமியோ ஜுலியட்கதையைப் பாரேன்! அவர்களுடைய காதலைப்போல் உலகத்திலேயே கிடையாது. ஆனால்,கடைசியில் இரண்டு பேரும் செத்துப் போகிறார்கள்." "இரண்டு பேரும் ஒரு வழியாகச் செத்துப்போய் விட்டால் பாதகமில்லை, சீதா! ஒருவர் செத்து ஒருவர் இருந்தால் எவ்வளவுகஷ்டமாயிருக்கும்? சலீமைப் பார்! பிறகு அவன்தானே ஜஹாங்கீர் பாதுஷா ஆகி நூர்ஜஹானைக் கலியாணம் செய்து கொண்டான்? நூர்ஜஹான் உலகத்தில் எவ்வளவு பிரசித்தமான அழகியாய் இருந்தால் என்ன? அதற்காக, அவனால் அனார்கலியை எப்படி மறக்க முடிந்தது?"       "சில புருஷர்கள் அப்படித்தான், லலிதா! ஆனால் எல்லோரும் அப்படியில்லை. ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானைப் பார்! அவன் மும்தாஜ் என்பவளைக் கலியாணம் செய்துகொண்டான். அவள் செத்துப் போன பிறகும் அவளை ஷாஜஹான் மறக்கவில்லை. அவளுடைய ஞாபகார்த்தமாகத் தாஜ்மகால் கட்டினான். தன் அரண்மனையிலிருந்து எப்போதும்தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பார்த்து கொண்டே செத்துப் போனான். இந்தக் காதல் ரொம்ப உயர்வாயில்லையா, லலிதா!" "உயர்வுதான்; ஆனாலும் சாவித்திரிசத்தியவான் கதை தான் எனக்கு எல்லாவற்றிலும் அதிகம் பிடித்திருக்கிறது. இராஜ்யத்தைஇழந்து காட்டுக்கு வந்து குருட்டுத்தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தசத்தியவானைச் சாவித்திரி காதலித்தாள். ஒரு வருஷத்திற்குள் சத்தியவான் செத்துப் போய்விடுவான் என்று தெரிந்தும் அவளுடைய உறுதி மாறவில்லை. யமனுடனேயே வாதாடிப் போனஉயிரைக் கொண்டு வந்தாள். இதுவல்லவா உண்மையான காதல்? லைலா மஜ்னூன், அனார்கலிகதைகளைவிட நம் தேசத்துக் கதைகள் உயர்ந்தவைதான்."       "அப்படி நம் நாட்டில் கதைகள் என்று பார்த்தால், சுப்ரமண்ய ஸ்வாமிக்கும் வள்ளிக்கும்நடந்த காதல் கலியாணத்தைப்போல் ஒன்றுமே கிடையாது. வள்ளி குறப்பெண்; சுப்ரமண்யரோசாஷாத் பரமசிவனுடைய குமாரர்; தேவ சேனாதிபதி அப்பேர்ப்பட்டவர் குறவர் குடியைத்தேடிவந்து வள்ளியை மணந்து கொண்டார் என்றால், அது எப்பேர்ப்பட்ட அதிசயம்? மணந்தது மட்டுமா! ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சுப்ரமண்யர் தமக்குப் பக்கத்தில் வள்ளியையும் வைத்துக்கொண்டிருக்கிறார். கேவலம் ஒரு குறத்தியை எல்லோரும் கும்பிடும் தெய்வமாக்கிவிட்டார்!உண்மையான காதலுக்கு இதைக் காட்டிலும் வேறு என்ன கதை இருக்கிறது. லலிதா! சுப்ரமண்ய ஸ்வாமி- வள்ளி கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுப்ரமண்ய ஸ்வாமியைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைக் கொஞ்சம் பாடேன்" என்றாள். லலிதா பின்வரும் காவடிச் சிந்தைப் பாட ஆரம்பித்தாள்:- "பாளை வாய்க் கமுகில் வந்தூர் வாளை பாய் வயல் சூழ்செந் தூர் பாலனம் புரிய வந்த புண்ணியா!" சீதா குறுக்கிட்டு, "இது இல்லை, லலிதா! 'பொன் மயில்' என்று ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைப் பாடு!" என்று சொன்னாள். "சரி" என்று சொல்லி லலிதாஆரம்பித்தாள்.       "பொன் மயில் ஏறி வருவான் - ஐயன் பன்னிரு கையால் தன்னருள் சொரிவான் (பொன்)செங்கதிர் வேலன் சிவனருள் பாலன் மங்கை வள்ளி மணாளன் பங்கயத்தாளன் தீனதயாளன்(பொன்) புன்னகை தன்னால் இன்னல்கள் தீர்ப்பான் புன்மை இருள் கணம் மாய்ப்பான்கன்னலின் இனிய தண்தமிழ் அளிப்பான்" (பொன்)        பாட்டு முடியுந்தருணத்தில், "பலே பேஷ்! லலிதா நீ இவ்வளவு நன்றாய்ப் பாடுகிறாயே?அன்றைக்கு மதராஸ்காரர்கள் வந்தபோது மட்டும் பாடவே மாட்டேன் என்று வாயை இறுக மூடிக்கொண்டாயே? அது ஏன்?" என்று கேட்டுக்கொண்டே சூரியா உள்ளே வந்தான். அவனைத்தொடர்ந்து ராஜம்மாளும் உள்ளே வந்தாள். சூரியாவுக்குச் சீதா பதில் சொன்னாள். "அன்றைக்குஅவளுக்குப் பாடப் பிடிக்கவில்லை; அதனால் பாடவில்லை. நாளைக்குக் கலியாணத்தின்போது!'மாமவ பட்டாபிராமா' கீர்த்தனம் பாடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்!" சூரியா, "சபாஷ்!அதுதான் சரி. பட்டாபிராமனுக்கு அப்படித்தான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும்!" என்றான். லலிதாவுக்கு நான் நளன் - தமயந்தி கதை சொல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சீதா லலிதாவைக்கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பங்களாவை விட்டு வெளியேறினாள். அந்தரங்கம்பேசக்கூடிய ஏகாந்தமான இடத்தைத் தேடி அவர்கள் சென்றார்கள். லலிதாவும் சீதாவும்போனபிறகு ராஜம்மாள் சூரியாவைப் பார்த்து, "குழந்தை! சாலையோரத்திலே தபால்காரனோடுசண்டை போட்டுக்கொண்டிருந்தாயே அது எதற்காக? எனக்கு என்னமோசந்தேகமாயிருக்கிறது என்னிடம் உண்மையைச் சொல்லு!" என்றாள். "அத்தை! அவசியம்சொல்லித்தான் தீரவேண்டுமா? அது உங்கள் சம்பந்தமான விஷயந்தான். ஏற்கனவே உங்களுக்குஎவ்வளவோ கவலை. மேலும் உங்களைத் துன்பப்படுத்துவானேன் என்று சொல்லவேண்டாமென்று பார்த்தேன்!" என்றான் சூரிய நாராயணன். "அப்பா, சூரியா! இனிமேல் என் மனத்தை வருத்தப்படுத்தக்கூடிய விஷயம் உலகில் ஒன்றுமே இருக்க முடியாது. எத்தனையோ வருத்தங்களையும் கஷ்டங்களையும் அநுபவித்து அநுபவித்து என் மனத்தில் சுரணையே இல்லாமல் போய் விட்டது. எவ்வளவு வருத்தமான விஷயமாயிருந்தாலும் என்னை ஒன்றும் செய்து விடாது தயங்காமல் சொல்லு!" என்றாள்.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.