LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

நான்காம் பாகம் - பிரளயம்-பட்டாபியின் பதவி மோகம்

 

சூரியாவைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்துப் போய்ப் பேசாமல் நின்ற லலிதா மறுநிமிஷம் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியையும் வருவித்துக் கொண்டாள்."சூரியாவா! இது என்ன? சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாய்," என்று கேட்டுவிட்டுப்பட்டாபிராமனைத் திரும்பிப் பார்த்து, "பார்த்தீர்களா? இந்த மாதிரியெல்லாம் விளையாடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? சூரியாவாக இருந்ததினால் போயிற்று! வேறு யாராவது பார்த்திருந்தால் நிஜம் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?" என்றாள். பட்டா பிராமன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "வா, அப்பா! நல்ல சமயம் பார்த்துத்தான் வந்தாய்!தாம்பத்திய கலக நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது!" என்றான். சூரியாவுக்குத் தான்கண்ட காட்சியை உண்மை என்று நம்புவதா, நாடகம் என்று நினைப்பதா என ஒரு கண நேரம்திகைப்பு உண்டாயிற்று. எப்படியாவது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, "நாடகத்தைப்பார்க்க நான் தனியாக வரவில்லை! அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்!"என்றான். இதைக் கேட்டவுடன் பட்டாபிராமன், லலிதா இருவருடைய முகங்களும் சுருங்கின. பட்டாபிராமன் மாடிக்குப் போகலாமா என்று அண்ணாந்து பார்த்தான். அங்கே சீதா எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத் துடன் நிற்பதைக் கண்டதும் மேலும் கோபமடைந்துதன்னுடைய ஆபீஸ் அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான். லலிதா சூரியாவைநெருங்கி வந்து, "அண்ணா! இவருக்கு என் மேல் நிஜமாகக் கோபம். நீ கொஞ்சம் அவருடன்நல்ல வார்த்தையாகப் பேசிச் சமாதானப்படுத்து!" என்றாள். 
  
      அந்தச் சமயம் சரஸ்வதி அம்மாள் மூட்டை முடிச்சுகளுடனும் ஊறுகாய் ஜாடியுடனும்உள்ளே வரவே, "வா! அம்மா!" என்று சொல்லிக்கொண்டு அவளை வரவேற்கப் போனாள். சூரியாஅண்ணாந்து பார்த்தான், அங்கே ஒரு நிமிஷத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சீதாஅறைக்குள் போய் விட்டதை அறிந்து கொண்டான். பட்டாபிராமனைப் பார்ப்பதற்கு அவனுடையஆபீஸ் அறைக்குச் சென்றான். "சூரியா! உன்னிடம் வேஷம் போட எனக்கு விருப்பம் இல்லை.உன் தங்கை அம்மாதிரி பொய் நடிப்பு நடிக்கவேண்டும் என்கிறாள். அது என்னால் முடியாதகாரியம், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நீ உள்ளே நுழைந்து வந்தபோது நான் லலிதாவைக்கழுத்தைப் பிடித்து நிஜமாகவே தள்ளிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் உன் அத்தங்காசீதாதான். அந்தப் புண்ணியவதியை நீ தயவு பண்ணி இங்கிருந்து அழைத்துக் கொண்டுபோய்விடு. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உன் தங்கையின் குணமே மாறிப்போய்விட்டது. அவளுடைய நச்சையும் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் என்னால்பொறுக்கவே முடியவில்லை. தயவு பண்ணி உன் அத்தங்காளை அழைத்துக் கொண்டு போய்த்தொலை!" என்று படபடவெனப் பொழிந்தான் பட்டாபிராமன். "ஆகட்டும், ஸார்! உங்கள் இஷ்டப்படியே செய்கிறேன். நீங்களும் லலிதாவும் இந்த நிலைமைக்கு வருவீர்கள் என்று நான்சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் என்பதை நினைத்தால்வருத்தமாயிருக்கிறது" என்றான் சூரியா. 
  
       "நீ என்ன செய்வாய், சூரியா! உன் பேரில் என்ன தப்பு? ஸ்திரீகளுடைய சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாளாகக்கிரகஸ்தாசிரமம் நடத்தும் எனக்கே தெரியவில்லையே? இந்த முட்டாள் தனத்தைக் கேள்! உன்அத்தங்கா சீதாவை இங்கே அழைத்துவர வேண்டாம் என்று நான் எவ்வளவோ முட்டிக்கொண்டேன். இவள் கேட்கவில்லை; பிடிவாதமாக அழைத்துக் கொண்டு வந்தாள். 'அத்தங்கா''அத்தங்கா' என்று பரிந்து பிராணனை விட்டு விடுகிறவளைப் போலப் பேசினாள். சீதாநாகரிகமாக நாலுபேருடன் பேசுவதையும் பழகுவதையும் கண்டால் இவளுக்குஅசூயையாயிருக்கிறது. அப்படியெல்லாம் இவளை இருக்க வேண்டாமென்று யார் தடுத்தார்கள்?நானோ இந்த 'ரெச்சட்' எலெக்ஷனில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறேன். வேலை விழி பிதுங்குகிறது, இன்னும் இரண்டு வாரந்தான் பாக்கி யிருக்கிறது வோட்டுப் போடும் தேதிக்கு. பலமாக வேலை செய்யாவிட்டால் இத்தனை நாள் பட்ட கஷ்டமும் செலவழிந்த பணமும்வீணாய்ப் போய்விடும். இந்த நெருக்கடியில் நான் எலெக்ஷன் வேலையைக் கவனிப்பதா, இந்தப்பெண் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்துக் கொண் டிருப்பதா? நல்ல வேளையாக மகராஜன்,நீ வந்துவிட்டாய்! சீதாவை அழைத்துக்கொண்டு போய்விடு! நான் நிம்மதியாக என் வேலையைப்பார்க்கிறேன்!" என்று பட்டாபிராமன் பேசி நிறுத்தியபோது பெரும் மழை பெய்து ஓய்ந்ததுபோலிருந்தது. "பட்டாபி ஸார்! இந்த எலெக்ஷன் தொல்லையில் நீங்கள் அகப்பட்டுக்கொள்ளாமலிருந் திருக்கலாம்," என்று சூரியா பேசத் தொடங்குவதற்குள்ளே பட்டாபிராமன்மறுபடியும் குறுக்கிட்டான். 
  
      "நீ இப்படித்தான் சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். நீ சர்வ சங்க பரித்யாகி;நித்தியப் பிரம்மச்சாரி. உன்னைப் போலவே எல்லாரும் உலகத்தை வெறுத்துவிட்டு இருக்க முடியுமா? எனக்கு இந்த உலகத்திலே இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன. எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டணத்தில் கொஞ்சம் பொது ஊழியம்செய்ய வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. எனக்குப் பணம்காசில் பற்றுக் கிடையாது. ஆனால் புகழ் என்பது ஒன்று இருந்து தொலைக்கிறதல்லவா? புகழை விரும்பாமல் யார் இருக்க முடியும்? தன்னோடொத் தவர்கள் தன்னுடைய ஊர் மனிதர்கள்,தன்னுடைய தேசத்தவர்கள் இவர்களிடம் புகழ் அடைய ஒருவன் விரும்பவில்லை யென்றுசொன்னால் அதை நான் நம்ப முடியாது. அப்படிச் சொல்கிறவனை நான் சுத்த 'ஹம்பக்'என்றுதான் சொல்வேன். இந்தத் தேவபட்டணத்தில் என் தகப்பனார் எவ்வளவோசெல்வாக்குடன் இருந்தார், அவர் காலம் ஆகிவிட்டது. 'யானைக்குப் பிறந்தது பூனையாயிற்று'என்று பெயர் வாங்க எனக்கு இஷ்டமில்லை. நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு மனுஷன்என்று பெயர் வாங்காவிட்டால் இந்த வாழ்க்கையினால்தான் என்ன பிரயோஜனம்? மேலும், இந்தஊர் 'பார்ட்டி பாலிடிக்ஸ்' விஷயமும் உனக்குத் தெரியாது. பழைய முனிசிபல் சேர்மன் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாகப் பணம் சேர்த்து இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துகொண்டிருக்கிறான். தேவபட்டணமே தன்னுடைய சொந்தக் கோட்டை என்று எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனை இந்தத் தடவை தோற்கடித்தாலொழிய, இந்த ஊரில், 'காங்கிரஸ்'என்ற பெயரையே யாரும் எடுக்க முடியாது. அந்தக் கிராதகனை எதிர்த்து நின்றுதோற்கடிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இங்கே எல்லாருடைய ஏகோபித்தஅபிப்ராயமும் இதுதான். இதில் தலையிடுவதற்கு உனக்கு உரிமை இல்லை; தகுதியும் இல்லை!எலெக்ஷன் இன்னும் இரண்டு வாரம் இருக்கும் சமயத்தில் நான் பின்வாங்கினால் அதைக்காட்டிலும் அவமானம் வேறு வேண்டியதில்லை. அப்புறம் நான் வெளியில் தலைகாட்டவே முடியாது." 
  
      பட்டாபிராமன் மூச்சு விடுவதற்காகப் பேச்சை நிறுத்திய சமயம் பார்த்துச் சூரியாசொன்னான்: "பட்டாபி ஸார்! நான் ஒரு வார்த்தை சொல்லுவதற்குள் நீங்கள் நூறு வார்த்தைசொல்லி விட்டீர்கள். இந்தச் சமயத்தில் உங்களைப் பின்வாங்கும்படி நான் சொல்லவில்லை.அதற்கு உரிமையோ, தகுதியோ, ஒன்றும் எனக்கு கிடையாது என்பதையும் அறிந்திருக்கிறேன்.'எலெக்ஷனில் இறங்காமல் இருந்திருக்கலாம்' என்று மட்டுந்தான் சொன்னேன். அதுவும்என்னுடைய அபிப்ராயமே தவிர உங்களைக் கட்டாயப்படுத்த உத்தேசமே எனக்குக் கிடையாது. இப்போது நீங்கள் தேர்தலுக்கு நின்று இவ்வளவு தூரம் வேலை நடத்திய பிறகு உங்களைப் பின் வாங்கும்படி சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் சொல்ல வந்தது வேறு விஷயம். எலெக்ஷன் வேலையில் சீதா ரொம்ப ஒத்தாசையாயிருக்கிறாள் என்று நான்கேள்விப்பட்டேன். ஆகையால் அவளை இந்தச் சமயம் ஊருக்கு அனுப்புவது உசிதமாயிராது. இத்தனை நாள் இருந்தவள் இன்னும் இரண்டு வாரம் இருக்கட்டும். அதற்குப் பிறகுவேண்டுமானால் பார்க்கலாம்....." "உனக்கென்னடா, அப்பா, சூரியா! வாய் புளித்ததோ மாங்காய்புளித்ததோ என்று சொல்லி விடுகிறாய். கஷ்டப்படுகிறவன் நான் அல்லவா? இந்த இரண்டுபொம்மனாட்டிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு என்னால் இனிமேல் சங்கடப்பட முடியாது. வேலை அநியாயமாய்க் கெட்டுப் போகிறது. அப்படிச் சீதா இங்கு இருக்கிறதாயிருந்தால் லலிதாவையாவது நீ அழைத்துக்கொண்டு போகவேண்டும். போதும்போதாதற்கு உன் அம்மா வேறு வந்திருக்கிறாள். சிவ சிவா; வீட்டில் இனிமேல் இருபத்து நாலு மணி நேரமும் ரகளைதான். சூரியா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நீ சீதாவையும் உன்தாயாரையும் இன்றைக்காவது நாளைக்காவது அழைத்துக் கொண்டு போய்விடு! தெரிகிறதா?நானும் லலிதாவும் எப்படியோ எங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். இந்த உலகத்தில்ஒருவரைப் பார்த்து ஒருவர் பிறந்திருக்கவில்லையல்லவா? சீதாவை நம்பிக் கொண்டுதானா இந்தஎலெக்ஷனில் நின்றேன்?...." 
  
      "பட்டாபி ஸார்! கொஞ்சம் என் வார்த்தையைக் கேளுங்கள். என்னுடையஅபிப்ராயத்தில் உங்களுக்கு எப்போதும் கௌரவம் இருந்து வந்தது. நான் அப்படி ரொம்பத்தவறுதலாக எந்தக் காரியத்தையும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரே ஒரு நாள் எனக்குச் சாவகாசம்கொடுங்கள். அதற்குள் சீதாவிடமும் லலிதாவிடமும் பேசிப் பார்த்துவிட்டு முடிவாக என்அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். ஒன்றிலும் சரிக்கட்டி வராது என்று தோன்றினால் உங்கள் இஷ்டப்படியே சீதாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் சூரியா. "சரி!உன்னுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து விடலாம்!" என்றான் பட்டாபிராமன். சீதாவைப் பார்த்து ச் சூரியா , "அத்தங்கா! நான் உள்ளே வந்தபோது நடந்த நாடகத்தை நீயும் மாடியிலிருந்து பார்த்தாய் போலிருக்கிறதே!" என்றான். "ஆமாம், சூரியா! அது என் தலைவிதி! காசிக்குப்போனாலும் தன் பாவம் தன்னோட என்பார்கள் அல்லவா? அதுபோல நான் எந்த இடத்துக்குப்போனாலும் என்னோடு துரதிர்ஷ்டத்தையும் கொண்டு போகிறதாகக் காண்கிறது. நான் நல்லதுசெய்யப் பார்த்தாலும் அது எப்படியோ கெடுதலாய் முடிந்து விடுகிறது. இன்றைக்கே நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவதாகத் தீர்மானித்து விட்டேன்!" "இன்றைக்கே கிளம்பி எங்கேபோவதாக உத்தேசம்?" என்று சூரியா கேட்டான். "எங்கே போகிறது? போகிறதற்கு இடமில்லையா என்ன? கிணறு, குளம், ஏரி, சமுத்திரம் எல்லாந்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் ரயில் தண்டவாளம் இருக்கிறது! மதராஸுக்குப் போய் ஒரு தடவை வஸந்தியைப் பார்த்துவிட வேணும். அப்புறம், ஏதாவது ஒரு வழி தேடிக் கொள்கிறேன். உனக்குஅதைப்பற்றிய கவலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுச் சீதா கலகலவென்று கண்ணீர் வடித்தாள். "அத்தங்கா! எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வாழ்க்கையில் நீரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது உண்மைதான். ஆனால் உன்னைவிடக் கஷ்டம்அனுபவித்தவர்களும் உலகத்தில் உண்டு. அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கிறது." 
  
      "என்னுடைய கஷ்ட காலம் என்னோடு மட்டும் போனால் தேவலையே, சூரியா! நான்எங்கே போகிறேனோ, அங்கெல்லாம் தொடர்ந்து வந்து விடுகிறதே! ராஜம்பேட்டைக்கு வந்தேன்; அருமை மாமாவை யமலோகத்துக்கு அனுப்பினேன்! இவ்விடம் வந்தேன்; என்அருமைத் தோழிக்கும் அவளுடைய புருஷனுக்கும் சண்டையை மூட்டினேன், டில்லியிலேஅவருக்கு என்னாலே உத்தியோகமே போய்விட்டது. சூரியா! வஸந்தியை மதராஸிலிருந்து நான்ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை தெரியுமா? பள்ளிக்கூடம் வீணாய்ப் போய் விடுமே என்று குழந்தை சொன்னது வாஸ்தவந்தான். அது அவளாய்ச் சொல்லவில்லை, பாட்டி சொல்லிக்கொடுத்ததையே சொன்னாள். 'பள்ளிக்கூடம் போனால் போகிறது; என்னுடன் வா!' என்று நான்சொல்லி யிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். ஆனால் நான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. எனக்கென்னமோ மனதில் சதா காலமும் ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது - என்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஏதாவது ஆபத்து வரும் என்று, அதனால்தான் குழந்தையை அழைத்து வரவில்லை. பாட்டியிடமே பத்திரமாயிருக்கட்டும் என்று விட்டு வந்தேன்." "அத்தங்கா! ஒருவரால்ஒருவருக்குக் கஷ்டம் வரும் என்பதெல்லாம் முட்டாள்தனம். உலகத்தில் உனக்கு மட்டும்தானாகஷ்டம் வந்திருக்கிறது. தேசம் தேசமாகக் கஷ்டம் வந்திருக்கிறது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஒரேயடியாகக் கஷ்டம் வந்திருக்கிறது. வங்காளத்தில் அறுபது லட்சம் ஜனங்கள் பஞ்சத்தினால் செத்துப் போனார்கள்! ஹிரோஷீமாஎன்னும் பட்டணத்தில் வசித்த இரண்டரை லட்சம் ஜனங்களும் ஒரே நிமிஷத்தில் அமெரிக்கர்போட்ட அணுகுண்டினால் செத்துப் போனார்கள்! 
  
       நேற்று உலகத்தையே ஜயித்து விட்டதாகக் கனவு கண்ட ஜெர்மானியர் எட்டுக் கோடிப்பேர் இன்று நாலு தேசங்களின் காலடியில் கிடந்து மிதிபடுகிறார்கள். கஷ்டம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்பதெல்லாம் நம்முடைய பகுத்தறிவினால் கண்டறிய முடியாத தெய்வ இரகசியம். ஒருவருக்கு இன்னொருவர் கஷ்டத்தை உண்டுபண்ண முடியாது. ஒருவருடைய துரதிர்ஷ்டம் இன்னொருவரைத் தொடர முடியாது." "சரி சூரியா! உன்னோடு வாதம் செய்யஎன்னால் முடியுமா? பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய் சொல்!" "கடவுள்எந்தெந்த நிலைமையில் நம்மை வைத்திருக்கிறாரோ அந்தந்த நிலைமையில் நம்முடையகடமையைச் செய்ய வேண்டியது" என்றான் சூரியா. "இப்போது என்னுடைய கடமை என்ன!"என்று சீதா கேட்டாள். "அத்தங்கா! இப்போது உன்னுடைய கடமை இந்த எலெக்ஷனில்பட்டாபி ஜயிக்கும்படி செய்வதுதான். மாப்பிள்ளை பட்டாபியின் மனதை என்னைப் போல்அறிந்தவர்கள் இல்லை, பட்டம் பதவியின் பேரில் அவருக்கு மோகமே கிடையாது. ஆறு மாதத்துக்கு முன்னால் அவரிடம் 'தேர்தலுக்கு நில்லுங்கள்' என்று யாராவது சொல்லியிருந்தால் குலுங்கச்சிரித்திருப்பார். அப்படிப்பட்டவருடைய மனதில் தேர்தல் வெறியை நீ மூட்டிவிட்டாய்! இதுவரைதேர்தல் வேலையில் ஒத்தாசையும் செய்து வந்திருக்கிறாய். இந்தச் சமயத்தில் நீ கைவிட்டுபோனால் அடியோடு எல்லாம் மாறிப் போனாலும் போகும். ஆகையால் தேர்தல் தேதி வரையில் இருந்து, ஆரம்பித்த காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை"என்றான் சூரியா. 
  
      "நீ சொல்வதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியேஒப்புக்கொண்டாலும் இந்த வீட்டில் இனிமேல் நான் எப்படி இருக்க முடியும்? நீ வருவதற்குச்சற்று முன்னால் இங்கே என்ன பேச்சு நடந்தது என்று உனக்குத் தெரியாது. என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு மறுகாரியம் பார்க்கும்படி லலிதா பட்டாபிராமனிடம் சொன்னாள்.'சீதா இந்த வீட்டை விட்டுப் போகமாட்டாள், போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!'என்று பட்டாபிராமன் சொன்னார். இந்த வார்த்தைகளை என் காதாலேயே கேட்டேன்.நிலைமை இவ்வளவு விகாரமாகப் போன பிறகு நான் இந்த வீட்டில் இருக்கலாமா?" "அத்தங்கா!அவர்கள் இரண்டு பேரும் புத்தி நிதானமாயிருக்கும்போது அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்கள். லலிதா ஏதோ கோபத்தில் உளறியிருக்கிறாள். பட்டாபியும் ஆத்திரத்தினால்யோசியாமல் ஏதோ சொல்லி யிருக்கிறார். நீ தேர்தல் முடியும் வரையில் இங்கே இருக்கவேண்டும் என்று லலிதாவைக் கொண்டே நான் கேட்டுக் கொள்ளச் செய்கிறேன்." "அவள்கேட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்? மாமி வேறு வந்திருக்கிறாள். மாமிக்கு ஏற்கெனவே என்பேரில் அசாத்தியமான கோபம். இதெல்லாம் மாமிக்குத் தெரிந்தால் என்னை இந்த வீட்டில் ஒருநிமிஷமாவது இருக்க விடுவாளா?" "மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகவேண்டும் என்றஆசை அம்மாவின் மனதில் குடிகொண்டு விட்டது. அதற்காக உன் காலில் விழுந்து வேண்டிக்கொள்ள வண்டுமானாலும் வேண்டிக் கொள்வாள். உண்மையில் உன்னை இங்கே இருக்கும்படிசெய்வதற்காகவே அம்மா இப்போது வந்திருக்கிறாள், தெரியுமா?" 
  
      இதைக் கேட்டதும் சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. இத்தனை நேரம்வாடிச் சுருங்கியிருந்த அவளுடைய முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று "சூரியா! நீசொல்வது உண்மைதானா? அல்லது பரிகாசம் செய்கிறாயா!" என்று கேட்டாள். "பரிகாசம் இல்லை; உண்மைதான்! இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவே உன்னிடம் வந்துசொல்லுவாள். ராஜம்பேட்டை சீமாச்சுவய்யர் பட்டாபிக்கு எதிராக இந்த தேர்தலில் வேலைசெய்கிறாராமே?" "ஆமாம்! அதைப்பற்றி என்ன?" "சீமாச்சுவய்யர் இங்கிருந்து கிராமத்துக்கு வந்து அம்மாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொன்னார். நீ தான் பட்டாபியின் புத்தியைக்கெடுத்துவிட்டாய் என்றும், எலெக்ஷனுக்கு நிற்பதில் பணம் எல்லாம் போய்விடும் என்றும், லலிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றும் சொன்னார். ஆனால் பலன் சீமாச்சுவய்யர்எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஆயிற்று. மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துக்குப்போகவில்லையென்று அம்மாவுக்கு ரொம்பக் குறை. இப்போது சேர்மன் வேலையாவது ஆகட்டும்என்று நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறாள். பெண்ணுக்குப் புத்திசொல்வதற்காகவும் உன்னை உற்சாகப்படுத்து வதற்காகவும் வந்திருக்கிறாள். மாப்பிள்ளைஎலெக்ஷனுக்கு நின்றது தப்பு என்று நான் சொன்ன தற்காக என்பேரில் அம்மாவுக்குஅசாத்தியான கோபம்." 
  
      இந்த அதிசயத்தைக் குறித்துச் சீதா சிறிது நேரம் யோசனை செய்துகொண்டிருந்தாள். பிறகு சூரியாவைப் பார்த்து, "நான் எப்படியும் மதராசுக்கு ஒரு நடை போகவேண்டும், சூரியா! குழந்தை வஸந்தியிடமிருந்து நேற்று கடிதம் வந்திருக் கிறது" என்றாள்."வஸந்தி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?" என்று சூரியா கேட்டான். "இன்னும் நாலுநாளில் பள்ளிக்கூடம் சாத்தி விடுவார்களாம். என்னைப் பார்க்க ஆசையாயிருக்கிறதாம். உடனே மதராசுக்கு வந்து அழைத்துப் போகும்படி எழுதியிருக்கிறாள்." "அத்தங்கா! நீ எலெக்ஷன்வேலையைப் பார்! நான் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வருகிறேன்!" என்றான் சூரியா.சரஸ்வதி அம்மாள் தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "உன்னைப் போல் அசட்டுப் பெண்ணைப்பார்த்ததே இல்லை. உன் அகத்துக்காரர் எலெக்ஷனில் ஜயிப்பதற்கு அந்தப் பெண் சீதாஎவ்வளவோ பாடுபட்டு வேலை செய்கிறாளாம்; நீ ஏதாவது குற்றம் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?" என்றாள். "அம்மா! உனக்குக்கூட எலெக்ஷன் பைத்தியம் பிடித்து விட்டு! எலெக்ஷன் என்றாள் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.அதனால் எவ்வளவோ விரோதங்கள் வந்து சேரும். என் மாமனார் எலெக்ஷனில்தலையிட்டதனால் எவ்வளவு சங்கடப்பட்டார், தெரியுமா?" "எல்லாம் தெரியுமடி, தெரியும்.எனக்குத் தெரியாததற்கு நீ சொல்ல வந்துவிட்டாய்? எனக்கு முன்னாலேயே நீ பிறந்து விட்டாயோ? அந்தப் பிராமணர் வேறே யாருக்காகவோ எலெக்ஷன் வேலை செய்து சங்கடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். இது அப்படியில்லையே! மாப்பிள்ளையே தானே நிற்கிறார்?" 
  
      "மாப்பிள்ளையே நின்றால் விரோதம் வராமல் போய்விடுமா?" "எந்தக்காரியத்திலேதான் விரோதம் ஏற்படாமல் இருக்கிறது? வெற்றிலைப் பாக்குக் கடை வைத்துநாலு காசு லாபம் சம்பாதித்தால் அதற்குக்கூட நாலு பேர் விரோதம். யாராவது ஒருபொம்மனாட்டி நல்ல புடவை கட்டிக் கொண்டால் அதைப் பார்த்து நாலு பேருக்கு அசூயை. மாட்டு வண்டியிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். மோட்டாரிலே போனால் அதில்நாலு பேருக்கு விரோதம். அப்படியெல்லாம் விரோதம் வரும் என்று பயந்து கொண்டிருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியுமோ? ஆண்டிப் பரதேசியாய்ப் போக வேண்டியதுதான். மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயித்தால் நாளைக்குச் சேர்மன் வேலைக்கு வரலாம் என்றுசொல்கிறார்களே? அது நிஜந்தானே?" "வந்தால் என்ன பிரயோசனம் அம்மா! சேர்மன் என்றுநெற்றியில் எழுதிக் கட்டிக் கொள்கிறதா?" "சீ! அசடே! ஏதாவது ஏடாகூடமாய்ச் சொல்லாதே!சேர்மன் வேலை என்றால் சாதாரணம் என்று நினைக்கிறாயோ? 
  
      என்னுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா இதே தேவப்பட்டணத்தில்சேர்மனாயிருந்தார். அவருடைய வீட்டுக்குச் சேர்மன் வீடு என்று பெயர். அந்தக் காலத்திலேமோட்டார் வண்டி இல்லை. இரட்டைக் குதிரை சாரட்டில் ஆபீஸுக்கு கிளம்புவார். அதைப்பார்க்க வீதியில் உள்ளவர்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.தாத்தாவுடன் இரட்டைக் குதிரை சாரட்டில் நான்கூட ஒரு தடவை ஏறிப் போயிருக்கிறேன்.நன்றாக ஞாபகமாயிருக்கிறது." லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது, மனதிலும் மகிழ்ச்சி உண்டாயிற்று.சீதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றித் தன்னிடம் சண்டை பிடிக்கவும் அவளை உடனே வீட்டைவிட்டு அனுப்பச் சொல்லவுமே அம்மா புறப்பட்டு வந்திருப்பதாக நினைத்தாள். விஷயம்அதற்கு மாறாயிருக்கவே லலிதாவின் மனத்திலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது."அம்மா! முன்னெல்லாம் சேர்மன் வேலைக்கு இருந்த கௌரவம் இப்போது கிடையாது.அப்படியேயிருந்தாலும், அதற்காகச் செலவழிக்கிற பணம் எல்லாம் என்ன ஆகிறது? நம்மிடத்தில்பணம் கொட்டியா கிடக்கிறது? சேர்மன் உத்தியோகத்துக்குச் சம்பளம் கிடையாது என்றுஉனக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்றாள். 
  
      "சம்பளம் இல்லாமற் போனால், என்ன? பட்டிக்காட்டில் இருந்தால் எனக்கு ஒன்றுமேதெரியாது என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ. முன்னேயெல்லாம் சேர்மன் வேலைஎன்றால் வெறும் கௌரவந்தான். இப்போது கௌரவத்துடன் வருமானமும் உண்டு. இத்தனைநாளும் இந்த ஊரிலே சேர்மன் வேலை பார்த்தவர் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். வியாபாரிகளுக்குச் சர்க்கரை பெர்மிட் வாங்கிக் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். அவர் குழந்தைக்குப் போன வருஷம் ஆண்டு நிறைவு கலியாணம் நடந்ததாம். அரை லட்சத்துக்குப் 'பிரஸெண்டு' மட்டும் வந்ததாம். உன் குழந்தைகளுக்குத்தான்,ஆண்டு நிறைவு நடந்தது. என்ன கிடைத்தது? வந்திருந்தவர்களுக்குப் போலீஸ் காரர்களின்குண்டாந்தடி அடிதான் கிடைத்தது." லலிதா களுக்கென்று சிரித்தாள். "என்னடி சிரிக்கிறாய்.பெண்ணே? நான் சொல்கிறது சிரிப்பாயிருக்கிறதா!" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள்."அதற்காகச் சிரிக்கவில்லை அம்மா! நீ சொல்கிறது ஒரு விதத்தில் உண்மைதான். சில பேர்சேர்மன் வேலையிலே கூடப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் உன் மாப்பிள்ளைஅப்படிப்பட்டவர் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டு சிரித்தேன். அவர் கை நீட்டிப்பணம் வாங்கவும் மாட்டார்; பிரஸெண்டு வாங்கவும் மாட்டார். 
  
      ஒருவரை ஒன்று கேட்கவும் மாட்டார்." "இவர் என்னத்துக்காக வாங்கவேணும்? இவர்கை நீட்டி ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஒருவரை ஒன்று கேட்க வேண்டியதுமில்லை.சேர்மன் வேலை ஆகிவிட்டால் எல்லாம் தானே தேடிக் கொண்டு வராதா?" இதைக்கேட்டுக்கொண்டே சீதா சமையலறைக்குள் வந்தாள். லலிதா அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். தனக்கும் தன் புருஷனுக்கும் நடந்த பேச்சைச் சீதா மேல் மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது லலிதாவுக்குத் தெரியாது. ஆகையால் கொஞ்சம் குதூகலமாகவே சீதாவைப் பார்த்து "அத்தங்கா! கேட்டாயா அதிசயத்தை! அம்மா ஒரேயடியாக உன் கட்சி பேசுகிறாள். இந்த எலெக்ஷன் விஷயத்திலே நம் வீட்டில் உன் கட்சிக்குத்தான் மெஜாரிடி இருக்கிறது; நான்மைனாரிடியாகி விட்டேன். அம்மாவுக்கு இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளைஎலெக்ஷனுக்கு இவளே வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்பாள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா.

சூரியாவைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்துப் போய்ப் பேசாமல் நின்ற லலிதா மறுநிமிஷம் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியையும் வருவித்துக் கொண்டாள்."சூரியாவா! இது என்ன? சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாய்," என்று கேட்டுவிட்டுப்பட்டாபிராமனைத் திரும்பிப் பார்த்து, "பார்த்தீர்களா? இந்த மாதிரியெல்லாம் விளையாடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? சூரியாவாக இருந்ததினால் போயிற்று! வேறு யாராவது பார்த்திருந்தால் நிஜம் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?" என்றாள். பட்டா பிராமன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "வா, அப்பா! நல்ல சமயம் பார்த்துத்தான் வந்தாய்!தாம்பத்திய கலக நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது!" என்றான். சூரியாவுக்குத் தான்கண்ட காட்சியை உண்மை என்று நம்புவதா, நாடகம் என்று நினைப்பதா என ஒரு கண நேரம்திகைப்பு உண்டாயிற்று. எப்படியாவது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, "நாடகத்தைப்பார்க்க நான் தனியாக வரவில்லை! அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்!"என்றான். இதைக் கேட்டவுடன் பட்டாபிராமன், லலிதா இருவருடைய முகங்களும் சுருங்கின. பட்டாபிராமன் மாடிக்குப் போகலாமா என்று அண்ணாந்து பார்த்தான். அங்கே சீதா எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத் துடன் நிற்பதைக் கண்டதும் மேலும் கோபமடைந்துதன்னுடைய ஆபீஸ் அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான். லலிதா சூரியாவைநெருங்கி வந்து, "அண்ணா! இவருக்கு என் மேல் நிஜமாகக் கோபம். நீ கொஞ்சம் அவருடன்நல்ல வார்த்தையாகப் பேசிச் சமாதானப்படுத்து!" என்றாள்.         அந்தச் சமயம் சரஸ்வதி அம்மாள் மூட்டை முடிச்சுகளுடனும் ஊறுகாய் ஜாடியுடனும்உள்ளே வரவே, "வா! அம்மா!" என்று சொல்லிக்கொண்டு அவளை வரவேற்கப் போனாள். சூரியாஅண்ணாந்து பார்த்தான், அங்கே ஒரு நிமிஷத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சீதாஅறைக்குள் போய் விட்டதை அறிந்து கொண்டான். பட்டாபிராமனைப் பார்ப்பதற்கு அவனுடையஆபீஸ் அறைக்குச் சென்றான். "சூரியா! உன்னிடம் வேஷம் போட எனக்கு விருப்பம் இல்லை.உன் தங்கை அம்மாதிரி பொய் நடிப்பு நடிக்கவேண்டும் என்கிறாள். அது என்னால் முடியாதகாரியம், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நீ உள்ளே நுழைந்து வந்தபோது நான் லலிதாவைக்கழுத்தைப் பிடித்து நிஜமாகவே தள்ளிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் உன் அத்தங்காசீதாதான். அந்தப் புண்ணியவதியை நீ தயவு பண்ணி இங்கிருந்து அழைத்துக் கொண்டுபோய்விடு. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உன் தங்கையின் குணமே மாறிப்போய்விட்டது. அவளுடைய நச்சையும் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் என்னால்பொறுக்கவே முடியவில்லை. தயவு பண்ணி உன் அத்தங்காளை அழைத்துக் கொண்டு போய்த்தொலை!" என்று படபடவெனப் பொழிந்தான் பட்டாபிராமன். "ஆகட்டும், ஸார்! உங்கள் இஷ்டப்படியே செய்கிறேன். நீங்களும் லலிதாவும் இந்த நிலைமைக்கு வருவீர்கள் என்று நான்சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் என்பதை நினைத்தால்வருத்தமாயிருக்கிறது" என்றான் சூரியா.          "நீ என்ன செய்வாய், சூரியா! உன் பேரில் என்ன தப்பு? ஸ்திரீகளுடைய சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாளாகக்கிரகஸ்தாசிரமம் நடத்தும் எனக்கே தெரியவில்லையே? இந்த முட்டாள் தனத்தைக் கேள்! உன்அத்தங்கா சீதாவை இங்கே அழைத்துவர வேண்டாம் என்று நான் எவ்வளவோ முட்டிக்கொண்டேன். இவள் கேட்கவில்லை; பிடிவாதமாக அழைத்துக் கொண்டு வந்தாள். 'அத்தங்கா''அத்தங்கா' என்று பரிந்து பிராணனை விட்டு விடுகிறவளைப் போலப் பேசினாள். சீதாநாகரிகமாக நாலுபேருடன் பேசுவதையும் பழகுவதையும் கண்டால் இவளுக்குஅசூயையாயிருக்கிறது. அப்படியெல்லாம் இவளை இருக்க வேண்டாமென்று யார் தடுத்தார்கள்?நானோ இந்த 'ரெச்சட்' எலெக்ஷனில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறேன். வேலை விழி பிதுங்குகிறது, இன்னும் இரண்டு வாரந்தான் பாக்கி யிருக்கிறது வோட்டுப் போடும் தேதிக்கு. பலமாக வேலை செய்யாவிட்டால் இத்தனை நாள் பட்ட கஷ்டமும் செலவழிந்த பணமும்வீணாய்ப் போய்விடும். இந்த நெருக்கடியில் நான் எலெக்ஷன் வேலையைக் கவனிப்பதா, இந்தப்பெண் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்துக் கொண் டிருப்பதா? நல்ல வேளையாக மகராஜன்,நீ வந்துவிட்டாய்! சீதாவை அழைத்துக்கொண்டு போய்விடு! நான் நிம்மதியாக என் வேலையைப்பார்க்கிறேன்!" என்று பட்டாபிராமன் பேசி நிறுத்தியபோது பெரும் மழை பெய்து ஓய்ந்ததுபோலிருந்தது. "பட்டாபி ஸார்! இந்த எலெக்ஷன் தொல்லையில் நீங்கள் அகப்பட்டுக்கொள்ளாமலிருந் திருக்கலாம்," என்று சூரியா பேசத் தொடங்குவதற்குள்ளே பட்டாபிராமன்மறுபடியும் குறுக்கிட்டான்.         "நீ இப்படித்தான் சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். நீ சர்வ சங்க பரித்யாகி;நித்தியப் பிரம்மச்சாரி. உன்னைப் போலவே எல்லாரும் உலகத்தை வெறுத்துவிட்டு இருக்க முடியுமா? எனக்கு இந்த உலகத்திலே இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன. எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டணத்தில் கொஞ்சம் பொது ஊழியம்செய்ய வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. எனக்குப் பணம்காசில் பற்றுக் கிடையாது. ஆனால் புகழ் என்பது ஒன்று இருந்து தொலைக்கிறதல்லவா? புகழை விரும்பாமல் யார் இருக்க முடியும்? தன்னோடொத் தவர்கள் தன்னுடைய ஊர் மனிதர்கள்,தன்னுடைய தேசத்தவர்கள் இவர்களிடம் புகழ் அடைய ஒருவன் விரும்பவில்லை யென்றுசொன்னால் அதை நான் நம்ப முடியாது. அப்படிச் சொல்கிறவனை நான் சுத்த 'ஹம்பக்'என்றுதான் சொல்வேன். இந்தத் தேவபட்டணத்தில் என் தகப்பனார் எவ்வளவோசெல்வாக்குடன் இருந்தார், அவர் காலம் ஆகிவிட்டது. 'யானைக்குப் பிறந்தது பூனையாயிற்று'என்று பெயர் வாங்க எனக்கு இஷ்டமில்லை. நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு மனுஷன்என்று பெயர் வாங்காவிட்டால் இந்த வாழ்க்கையினால்தான் என்ன பிரயோஜனம்? மேலும், இந்தஊர் 'பார்ட்டி பாலிடிக்ஸ்' விஷயமும் உனக்குத் தெரியாது. பழைய முனிசிபல் சேர்மன் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாகப் பணம் சேர்த்து இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துகொண்டிருக்கிறான். தேவபட்டணமே தன்னுடைய சொந்தக் கோட்டை என்று எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனை இந்தத் தடவை தோற்கடித்தாலொழிய, இந்த ஊரில், 'காங்கிரஸ்'என்ற பெயரையே யாரும் எடுக்க முடியாது. அந்தக் கிராதகனை எதிர்த்து நின்றுதோற்கடிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இங்கே எல்லாருடைய ஏகோபித்தஅபிப்ராயமும் இதுதான். இதில் தலையிடுவதற்கு உனக்கு உரிமை இல்லை; தகுதியும் இல்லை!எலெக்ஷன் இன்னும் இரண்டு வாரம் இருக்கும் சமயத்தில் நான் பின்வாங்கினால் அதைக்காட்டிலும் அவமானம் வேறு வேண்டியதில்லை. அப்புறம் நான் வெளியில் தலைகாட்டவே முடியாது."         பட்டாபிராமன் மூச்சு விடுவதற்காகப் பேச்சை நிறுத்திய சமயம் பார்த்துச் சூரியாசொன்னான்: "பட்டாபி ஸார்! நான் ஒரு வார்த்தை சொல்லுவதற்குள் நீங்கள் நூறு வார்த்தைசொல்லி விட்டீர்கள். இந்தச் சமயத்தில் உங்களைப் பின்வாங்கும்படி நான் சொல்லவில்லை.அதற்கு உரிமையோ, தகுதியோ, ஒன்றும் எனக்கு கிடையாது என்பதையும் அறிந்திருக்கிறேன்.'எலெக்ஷனில் இறங்காமல் இருந்திருக்கலாம்' என்று மட்டுந்தான் சொன்னேன். அதுவும்என்னுடைய அபிப்ராயமே தவிர உங்களைக் கட்டாயப்படுத்த உத்தேசமே எனக்குக் கிடையாது. இப்போது நீங்கள் தேர்தலுக்கு நின்று இவ்வளவு தூரம் வேலை நடத்திய பிறகு உங்களைப் பின் வாங்கும்படி சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் சொல்ல வந்தது வேறு விஷயம். எலெக்ஷன் வேலையில் சீதா ரொம்ப ஒத்தாசையாயிருக்கிறாள் என்று நான்கேள்விப்பட்டேன். ஆகையால் அவளை இந்தச் சமயம் ஊருக்கு அனுப்புவது உசிதமாயிராது. இத்தனை நாள் இருந்தவள் இன்னும் இரண்டு வாரம் இருக்கட்டும். அதற்குப் பிறகுவேண்டுமானால் பார்க்கலாம்....." "உனக்கென்னடா, அப்பா, சூரியா! வாய் புளித்ததோ மாங்காய்புளித்ததோ என்று சொல்லி விடுகிறாய். கஷ்டப்படுகிறவன் நான் அல்லவா? இந்த இரண்டுபொம்மனாட்டிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு என்னால் இனிமேல் சங்கடப்பட முடியாது. வேலை அநியாயமாய்க் கெட்டுப் போகிறது. அப்படிச் சீதா இங்கு இருக்கிறதாயிருந்தால் லலிதாவையாவது நீ அழைத்துக்கொண்டு போகவேண்டும். போதும்போதாதற்கு உன் அம்மா வேறு வந்திருக்கிறாள். சிவ சிவா; வீட்டில் இனிமேல் இருபத்து நாலு மணி நேரமும் ரகளைதான். சூரியா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நீ சீதாவையும் உன்தாயாரையும் இன்றைக்காவது நாளைக்காவது அழைத்துக் கொண்டு போய்விடு! தெரிகிறதா?நானும் லலிதாவும் எப்படியோ எங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். இந்த உலகத்தில்ஒருவரைப் பார்த்து ஒருவர் பிறந்திருக்கவில்லையல்லவா? சீதாவை நம்பிக் கொண்டுதானா இந்தஎலெக்ஷனில் நின்றேன்?...."         "பட்டாபி ஸார்! கொஞ்சம் என் வார்த்தையைக் கேளுங்கள். என்னுடையஅபிப்ராயத்தில் உங்களுக்கு எப்போதும் கௌரவம் இருந்து வந்தது. நான் அப்படி ரொம்பத்தவறுதலாக எந்தக் காரியத்தையும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரே ஒரு நாள் எனக்குச் சாவகாசம்கொடுங்கள். அதற்குள் சீதாவிடமும் லலிதாவிடமும் பேசிப் பார்த்துவிட்டு முடிவாக என்அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். ஒன்றிலும் சரிக்கட்டி வராது என்று தோன்றினால் உங்கள் இஷ்டப்படியே சீதாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் சூரியா. "சரி!உன்னுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து விடலாம்!" என்றான் பட்டாபிராமன். சீதாவைப் பார்த்து ச் சூரியா , "அத்தங்கா! நான் உள்ளே வந்தபோது நடந்த நாடகத்தை நீயும் மாடியிலிருந்து பார்த்தாய் போலிருக்கிறதே!" என்றான். "ஆமாம், சூரியா! அது என் தலைவிதி! காசிக்குப்போனாலும் தன் பாவம் தன்னோட என்பார்கள் அல்லவா? அதுபோல நான் எந்த இடத்துக்குப்போனாலும் என்னோடு துரதிர்ஷ்டத்தையும் கொண்டு போகிறதாகக் காண்கிறது. நான் நல்லதுசெய்யப் பார்த்தாலும் அது எப்படியோ கெடுதலாய் முடிந்து விடுகிறது. இன்றைக்கே நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவதாகத் தீர்மானித்து விட்டேன்!" "இன்றைக்கே கிளம்பி எங்கேபோவதாக உத்தேசம்?" என்று சூரியா கேட்டான். "எங்கே போகிறது? போகிறதற்கு இடமில்லையா என்ன? கிணறு, குளம், ஏரி, சமுத்திரம் எல்லாந்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் ரயில் தண்டவாளம் இருக்கிறது! மதராஸுக்குப் போய் ஒரு தடவை வஸந்தியைப் பார்த்துவிட வேணும். அப்புறம், ஏதாவது ஒரு வழி தேடிக் கொள்கிறேன். உனக்குஅதைப்பற்றிய கவலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுச் சீதா கலகலவென்று கண்ணீர் வடித்தாள். "அத்தங்கா! எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வாழ்க்கையில் நீரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது உண்மைதான். ஆனால் உன்னைவிடக் கஷ்டம்அனுபவித்தவர்களும் உலகத்தில் உண்டு. அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கிறது."         "என்னுடைய கஷ்ட காலம் என்னோடு மட்டும் போனால் தேவலையே, சூரியா! நான்எங்கே போகிறேனோ, அங்கெல்லாம் தொடர்ந்து வந்து விடுகிறதே! ராஜம்பேட்டைக்கு வந்தேன்; அருமை மாமாவை யமலோகத்துக்கு அனுப்பினேன்! இவ்விடம் வந்தேன்; என்அருமைத் தோழிக்கும் அவளுடைய புருஷனுக்கும் சண்டையை மூட்டினேன், டில்லியிலேஅவருக்கு என்னாலே உத்தியோகமே போய்விட்டது. சூரியா! வஸந்தியை மதராஸிலிருந்து நான்ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை தெரியுமா? பள்ளிக்கூடம் வீணாய்ப் போய் விடுமே என்று குழந்தை சொன்னது வாஸ்தவந்தான். அது அவளாய்ச் சொல்லவில்லை, பாட்டி சொல்லிக்கொடுத்ததையே சொன்னாள். 'பள்ளிக்கூடம் போனால் போகிறது; என்னுடன் வா!' என்று நான்சொல்லி யிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். ஆனால் நான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. எனக்கென்னமோ மனதில் சதா காலமும் ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது - என்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஏதாவது ஆபத்து வரும் என்று, அதனால்தான் குழந்தையை அழைத்து வரவில்லை. பாட்டியிடமே பத்திரமாயிருக்கட்டும் என்று விட்டு வந்தேன்." "அத்தங்கா! ஒருவரால்ஒருவருக்குக் கஷ்டம் வரும் என்பதெல்லாம் முட்டாள்தனம். உலகத்தில் உனக்கு மட்டும்தானாகஷ்டம் வந்திருக்கிறது. தேசம் தேசமாகக் கஷ்டம் வந்திருக்கிறது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஒரேயடியாகக் கஷ்டம் வந்திருக்கிறது. வங்காளத்தில் அறுபது லட்சம் ஜனங்கள் பஞ்சத்தினால் செத்துப் போனார்கள்! ஹிரோஷீமாஎன்னும் பட்டணத்தில் வசித்த இரண்டரை லட்சம் ஜனங்களும் ஒரே நிமிஷத்தில் அமெரிக்கர்போட்ட அணுகுண்டினால் செத்துப் போனார்கள்!          நேற்று உலகத்தையே ஜயித்து விட்டதாகக் கனவு கண்ட ஜெர்மானியர் எட்டுக் கோடிப்பேர் இன்று நாலு தேசங்களின் காலடியில் கிடந்து மிதிபடுகிறார்கள். கஷ்டம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்பதெல்லாம் நம்முடைய பகுத்தறிவினால் கண்டறிய முடியாத தெய்வ இரகசியம். ஒருவருக்கு இன்னொருவர் கஷ்டத்தை உண்டுபண்ண முடியாது. ஒருவருடைய துரதிர்ஷ்டம் இன்னொருவரைத் தொடர முடியாது." "சரி சூரியா! உன்னோடு வாதம் செய்யஎன்னால் முடியுமா? பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய் சொல்!" "கடவுள்எந்தெந்த நிலைமையில் நம்மை வைத்திருக்கிறாரோ அந்தந்த நிலைமையில் நம்முடையகடமையைச் செய்ய வேண்டியது" என்றான் சூரியா. "இப்போது என்னுடைய கடமை என்ன!"என்று சீதா கேட்டாள். "அத்தங்கா! இப்போது உன்னுடைய கடமை இந்த எலெக்ஷனில்பட்டாபி ஜயிக்கும்படி செய்வதுதான். மாப்பிள்ளை பட்டாபியின் மனதை என்னைப் போல்அறிந்தவர்கள் இல்லை, பட்டம் பதவியின் பேரில் அவருக்கு மோகமே கிடையாது. ஆறு மாதத்துக்கு முன்னால் அவரிடம் 'தேர்தலுக்கு நில்லுங்கள்' என்று யாராவது சொல்லியிருந்தால் குலுங்கச்சிரித்திருப்பார். அப்படிப்பட்டவருடைய மனதில் தேர்தல் வெறியை நீ மூட்டிவிட்டாய்! இதுவரைதேர்தல் வேலையில் ஒத்தாசையும் செய்து வந்திருக்கிறாய். இந்தச் சமயத்தில் நீ கைவிட்டுபோனால் அடியோடு எல்லாம் மாறிப் போனாலும் போகும். ஆகையால் தேர்தல் தேதி வரையில் இருந்து, ஆரம்பித்த காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை"என்றான் சூரியா.         "நீ சொல்வதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியேஒப்புக்கொண்டாலும் இந்த வீட்டில் இனிமேல் நான் எப்படி இருக்க முடியும்? நீ வருவதற்குச்சற்று முன்னால் இங்கே என்ன பேச்சு நடந்தது என்று உனக்குத் தெரியாது. என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு மறுகாரியம் பார்க்கும்படி லலிதா பட்டாபிராமனிடம் சொன்னாள்.'சீதா இந்த வீட்டை விட்டுப் போகமாட்டாள், போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!'என்று பட்டாபிராமன் சொன்னார். இந்த வார்த்தைகளை என் காதாலேயே கேட்டேன்.நிலைமை இவ்வளவு விகாரமாகப் போன பிறகு நான் இந்த வீட்டில் இருக்கலாமா?" "அத்தங்கா!அவர்கள் இரண்டு பேரும் புத்தி நிதானமாயிருக்கும்போது அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்கள். லலிதா ஏதோ கோபத்தில் உளறியிருக்கிறாள். பட்டாபியும் ஆத்திரத்தினால்யோசியாமல் ஏதோ சொல்லி யிருக்கிறார். நீ தேர்தல் முடியும் வரையில் இங்கே இருக்கவேண்டும் என்று லலிதாவைக் கொண்டே நான் கேட்டுக் கொள்ளச் செய்கிறேன்." "அவள்கேட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்? மாமி வேறு வந்திருக்கிறாள். மாமிக்கு ஏற்கெனவே என்பேரில் அசாத்தியமான கோபம். இதெல்லாம் மாமிக்குத் தெரிந்தால் என்னை இந்த வீட்டில் ஒருநிமிஷமாவது இருக்க விடுவாளா?" "மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகவேண்டும் என்றஆசை அம்மாவின் மனதில் குடிகொண்டு விட்டது. அதற்காக உன் காலில் விழுந்து வேண்டிக்கொள்ள வண்டுமானாலும் வேண்டிக் கொள்வாள். உண்மையில் உன்னை இங்கே இருக்கும்படிசெய்வதற்காகவே அம்மா இப்போது வந்திருக்கிறாள், தெரியுமா?"         இதைக் கேட்டதும் சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. இத்தனை நேரம்வாடிச் சுருங்கியிருந்த அவளுடைய முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று "சூரியா! நீசொல்வது உண்மைதானா? அல்லது பரிகாசம் செய்கிறாயா!" என்று கேட்டாள். "பரிகாசம் இல்லை; உண்மைதான்! இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவே உன்னிடம் வந்துசொல்லுவாள். ராஜம்பேட்டை சீமாச்சுவய்யர் பட்டாபிக்கு எதிராக இந்த தேர்தலில் வேலைசெய்கிறாராமே?" "ஆமாம்! அதைப்பற்றி என்ன?" "சீமாச்சுவய்யர் இங்கிருந்து கிராமத்துக்கு வந்து அம்மாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொன்னார். நீ தான் பட்டாபியின் புத்தியைக்கெடுத்துவிட்டாய் என்றும், எலெக்ஷனுக்கு நிற்பதில் பணம் எல்லாம் போய்விடும் என்றும், லலிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றும் சொன்னார். ஆனால் பலன் சீமாச்சுவய்யர்எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஆயிற்று. மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துக்குப்போகவில்லையென்று அம்மாவுக்கு ரொம்பக் குறை. இப்போது சேர்மன் வேலையாவது ஆகட்டும்என்று நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறாள். பெண்ணுக்குப் புத்திசொல்வதற்காகவும் உன்னை உற்சாகப்படுத்து வதற்காகவும் வந்திருக்கிறாள். மாப்பிள்ளைஎலெக்ஷனுக்கு நின்றது தப்பு என்று நான் சொன்ன தற்காக என்பேரில் அம்மாவுக்குஅசாத்தியான கோபம்."         இந்த அதிசயத்தைக் குறித்துச் சீதா சிறிது நேரம் யோசனை செய்துகொண்டிருந்தாள். பிறகு சூரியாவைப் பார்த்து, "நான் எப்படியும் மதராசுக்கு ஒரு நடை போகவேண்டும், சூரியா! குழந்தை வஸந்தியிடமிருந்து நேற்று கடிதம் வந்திருக் கிறது" என்றாள்."வஸந்தி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?" என்று சூரியா கேட்டான். "இன்னும் நாலுநாளில் பள்ளிக்கூடம் சாத்தி விடுவார்களாம். என்னைப் பார்க்க ஆசையாயிருக்கிறதாம். உடனே மதராசுக்கு வந்து அழைத்துப் போகும்படி எழுதியிருக்கிறாள்." "அத்தங்கா! நீ எலெக்ஷன்வேலையைப் பார்! நான் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வருகிறேன்!" என்றான் சூரியா.சரஸ்வதி அம்மாள் தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "உன்னைப் போல் அசட்டுப் பெண்ணைப்பார்த்ததே இல்லை. உன் அகத்துக்காரர் எலெக்ஷனில் ஜயிப்பதற்கு அந்தப் பெண் சீதாஎவ்வளவோ பாடுபட்டு வேலை செய்கிறாளாம்; நீ ஏதாவது குற்றம் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?" என்றாள். "அம்மா! உனக்குக்கூட எலெக்ஷன் பைத்தியம் பிடித்து விட்டு! எலெக்ஷன் என்றாள் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.அதனால் எவ்வளவோ விரோதங்கள் வந்து சேரும். என் மாமனார் எலெக்ஷனில்தலையிட்டதனால் எவ்வளவு சங்கடப்பட்டார், தெரியுமா?" "எல்லாம் தெரியுமடி, தெரியும்.எனக்குத் தெரியாததற்கு நீ சொல்ல வந்துவிட்டாய்? எனக்கு முன்னாலேயே நீ பிறந்து விட்டாயோ? அந்தப் பிராமணர் வேறே யாருக்காகவோ எலெக்ஷன் வேலை செய்து சங்கடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். இது அப்படியில்லையே! மாப்பிள்ளையே தானே நிற்கிறார்?"         "மாப்பிள்ளையே நின்றால் விரோதம் வராமல் போய்விடுமா?" "எந்தக்காரியத்திலேதான் விரோதம் ஏற்படாமல் இருக்கிறது? வெற்றிலைப் பாக்குக் கடை வைத்துநாலு காசு லாபம் சம்பாதித்தால் அதற்குக்கூட நாலு பேர் விரோதம். யாராவது ஒருபொம்மனாட்டி நல்ல புடவை கட்டிக் கொண்டால் அதைப் பார்த்து நாலு பேருக்கு அசூயை. மாட்டு வண்டியிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். மோட்டாரிலே போனால் அதில்நாலு பேருக்கு விரோதம். அப்படியெல்லாம் விரோதம் வரும் என்று பயந்து கொண்டிருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியுமோ? ஆண்டிப் பரதேசியாய்ப் போக வேண்டியதுதான். மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயித்தால் நாளைக்குச் சேர்மன் வேலைக்கு வரலாம் என்றுசொல்கிறார்களே? அது நிஜந்தானே?" "வந்தால் என்ன பிரயோசனம் அம்மா! சேர்மன் என்றுநெற்றியில் எழுதிக் கட்டிக் கொள்கிறதா?" "சீ! அசடே! ஏதாவது ஏடாகூடமாய்ச் சொல்லாதே!சேர்மன் வேலை என்றால் சாதாரணம் என்று நினைக்கிறாயோ?         என்னுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா இதே தேவப்பட்டணத்தில்சேர்மனாயிருந்தார். அவருடைய வீட்டுக்குச் சேர்மன் வீடு என்று பெயர். அந்தக் காலத்திலேமோட்டார் வண்டி இல்லை. இரட்டைக் குதிரை சாரட்டில் ஆபீஸுக்கு கிளம்புவார். அதைப்பார்க்க வீதியில் உள்ளவர்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.தாத்தாவுடன் இரட்டைக் குதிரை சாரட்டில் நான்கூட ஒரு தடவை ஏறிப் போயிருக்கிறேன்.நன்றாக ஞாபகமாயிருக்கிறது." லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது, மனதிலும் மகிழ்ச்சி உண்டாயிற்று.சீதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றித் தன்னிடம் சண்டை பிடிக்கவும் அவளை உடனே வீட்டைவிட்டு அனுப்பச் சொல்லவுமே அம்மா புறப்பட்டு வந்திருப்பதாக நினைத்தாள். விஷயம்அதற்கு மாறாயிருக்கவே லலிதாவின் மனத்திலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது."அம்மா! முன்னெல்லாம் சேர்மன் வேலைக்கு இருந்த கௌரவம் இப்போது கிடையாது.அப்படியேயிருந்தாலும், அதற்காகச் செலவழிக்கிற பணம் எல்லாம் என்ன ஆகிறது? நம்மிடத்தில்பணம் கொட்டியா கிடக்கிறது? சேர்மன் உத்தியோகத்துக்குச் சம்பளம் கிடையாது என்றுஉனக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.         "சம்பளம் இல்லாமற் போனால், என்ன? பட்டிக்காட்டில் இருந்தால் எனக்கு ஒன்றுமேதெரியாது என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ. முன்னேயெல்லாம் சேர்மன் வேலைஎன்றால் வெறும் கௌரவந்தான். இப்போது கௌரவத்துடன் வருமானமும் உண்டு. இத்தனைநாளும் இந்த ஊரிலே சேர்மன் வேலை பார்த்தவர் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். வியாபாரிகளுக்குச் சர்க்கரை பெர்மிட் வாங்கிக் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். அவர் குழந்தைக்குப் போன வருஷம் ஆண்டு நிறைவு கலியாணம் நடந்ததாம். அரை லட்சத்துக்குப் 'பிரஸெண்டு' மட்டும் வந்ததாம். உன் குழந்தைகளுக்குத்தான்,ஆண்டு நிறைவு நடந்தது. என்ன கிடைத்தது? வந்திருந்தவர்களுக்குப் போலீஸ் காரர்களின்குண்டாந்தடி அடிதான் கிடைத்தது." லலிதா களுக்கென்று சிரித்தாள். "என்னடி சிரிக்கிறாய்.பெண்ணே? நான் சொல்கிறது சிரிப்பாயிருக்கிறதா!" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள்."அதற்காகச் சிரிக்கவில்லை அம்மா! நீ சொல்கிறது ஒரு விதத்தில் உண்மைதான். சில பேர்சேர்மன் வேலையிலே கூடப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் உன் மாப்பிள்ளைஅப்படிப்பட்டவர் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டு சிரித்தேன். அவர் கை நீட்டிப்பணம் வாங்கவும் மாட்டார்; பிரஸெண்டு வாங்கவும் மாட்டார்.         ஒருவரை ஒன்று கேட்கவும் மாட்டார்." "இவர் என்னத்துக்காக வாங்கவேணும்? இவர்கை நீட்டி ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஒருவரை ஒன்று கேட்க வேண்டியதுமில்லை.சேர்மன் வேலை ஆகிவிட்டால் எல்லாம் தானே தேடிக் கொண்டு வராதா?" இதைக்கேட்டுக்கொண்டே சீதா சமையலறைக்குள் வந்தாள். லலிதா அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். தனக்கும் தன் புருஷனுக்கும் நடந்த பேச்சைச் சீதா மேல் மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது லலிதாவுக்குத் தெரியாது. ஆகையால் கொஞ்சம் குதூகலமாகவே சீதாவைப் பார்த்து "அத்தங்கா! கேட்டாயா அதிசயத்தை! அம்மா ஒரேயடியாக உன் கட்சி பேசுகிறாள். இந்த எலெக்ஷன் விஷயத்திலே நம் வீட்டில் உன் கட்சிக்குத்தான் மெஜாரிடி இருக்கிறது; நான்மைனாரிடியாகி விட்டேன். அம்மாவுக்கு இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளைஎலெக்ஷனுக்கு இவளே வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்பாள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.