LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பழைய உரைகளும் - பொ. வேல்சாமி

பழந்தமிழ் நூல்களை 'மேல்கணக்கு நூல்கள்', 'கீழ்க்கணக்கு நூல்கள்' என்று குறிப்பிடுவார்கள். மேல்கணக்கு நூல்களில் சங்க இலக்கியங்கள் அடங்கிவிடும். கீழ்க்கணக்கு நூல்களாகத் திருக்குறளிலிருந்து கைந்நிலை வரையிலுள்ள பதினெட்டு நூல்களைக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்தை அடுத்துத் தோன்றியவையாக இந்நூல்களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். பொதுவான அறம் என்றால் என்ன என்பது, அறத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டுவது, உலகத்தோடு ஒட்டி ஒழுகிச் சிறப்படைவது, மொத்தத் தமிழ்ச் சங்கத்தின் பண்பாட்டு நடவடிக்கைகளை ஒரு வகைப்பாட்டிற்குள் அடக்கிப் பொதுமைப்படுத்துவது, சங்க இலக்கியங்களின் பாடல்களின் போக்கை விளக்கப்படுத்திக் காட்டுவது, ஒரு மனிதனின் அன்றாட நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட பண்பில் நெறிப்படுத்துவது போன்ற வாழ்வியல் கூறுகளைத் தொகுத்து வெளிப்படுத்துவனவாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
அரசர்கள், புலவர்கள், வணிகர்கள், பழங்குடியினர், பார்ப்பனர்கள் என்றும் வேள்விகள், காதல் உறவுகள், திருமணச் சடங்குகள், தலைவன்-தலைவியரின் உணர்வுகள் என்ற போக்குடைய சங்கத் தனிப்பாடல்களின் போக்குக்குப் பின்னர் வரும் காவியங்கள் ஒரு கதையினூடாக இன்னும் விரிவான தளத்தில் தமிழ்ச் சமூகத்தைப் பாடிச் செல்லும் படைப்புத் தன்மை பெற்று அமைந்துள்ளன. இத்தகைய போக்கிற்கு இடையே வாழ்வியல் ஒழுக்கங்களையும் இலக்கியப் போக்குகளையும் எந்த விதமான கவித்துவத் தன்மையும் இல்லாமல் அறிவுரைகளாக வழங்கும் இந்த நூல்கள் எத்தகைய தேவையைத் தமிழ்ச் சமூகத்தில் நிறைவேற்ற முனைந்தன?
இந்த வினாவிற்கான விடையைப் பழந்தமிழ்ச் சமூகத்தில் கல்வி பெற்ற இடத்தை ஆராய்ந்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும். தமிழ் மொழியின் மிகப் பழைய எழுத்துக் குறிப்புகளாகக் கிடைக்கின்ற பிராமிக் கல்வெட்டுகள் சமண சமயத்தைச் சேர்ந்தவை என்று ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார். ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களும் சமண, பௌத்த மதங்களைச் சார்ந்து இயற்றப்பட்டன என்பது வெளிப்படையானது. தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் அவைதிக மதங்களான சமண, பௌத்த மதங்களைச் சார்ந்தவை என்பது வெளிப்படை. இளம் மாணவர்கள் முதலில் பயில்வதற்கு ஆதாரமான நிகண்டு நூல்கள் பலவும் சமண சமயம் சார்ந்தவை. அதே நேரத்தில் பல்லவர் காலத்திலிருந்து சோழர் காலம், பாண்டியர் காலம் என்று பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் என்பன பார்ப்பன மாணவர்கள் வேதக் கல்வி பயின்றவையாகத்தான் செய்திகள் உள்ளன.
நிறுவனங்களாக மாறிவிட்ட சமூக அமைப்புகளுக்குச் சடங்கு வடிவிலான அங்கீகாரத்தை வழங்குவதற்கு மேற்கண்ட வடமொழி சார்ந்த கல்வி பயன்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியிலான உயர்வு-தாழ்வு நிலைமைகளுக்கும் அரசு அதிகாரத்திற்கும் நீதி வழங்குவதற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பெருந்துணையாக இக்கல்வி முறை பயன்பட்டதைக் கல்வெட்டுகளும் பட்டயங்களும் சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் தமிழ்வழியான கல்வி அந்தக் காலத்தில் எந்த நிலையில் இருந்தது என்பது இன்று நமக்கு வெளிப்படையாக விளங்கவில்லை. ஆனால் ஏராளமான இலக்கிய, இலக்கண நூல்களும் நீதி நூல்களும் காலம் பூராவும் வெளிவந்திருப்பதைப் பார்க்கையில் இதற்கு ஒரு கல்வி பயிற்றுவிக்கும் மரபு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். அந்த மரபை வெளிக்காட்டுவதில் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் நமக்கு நல்ல வெளிச்சத்தைத் தருகின்றன.
சமண சமயம் சார்ந்த முனிவர்கள் தங்கள் மதம் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் மனிதர்களுடைய ஒழுக்கத்தை வரையறுத்து நிலைநிறுத்துவதைப் பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு நல்ல குடிமகனாகவும் சமூக வாழ்க்கையில் வெற்றி பெறுபவனாகவும் சமூகத்துக்குத் தீங்கிழைக்காமல் துணைபுரிபவனாகவும், அதே நேரத்தில் உலகியலைப் புரிந்துகொண்டு செயல்படுபவனாகவும் ஒரு மனிதனைப் பயிற்றுவிக்கும் தன்மை இந்த நூல்கள் எல்லாவற்றிலும் இழையோடுகின்றது. இதனால்தான் மிகப் பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவப் பாதிரியார்களின் வழிகாட்டுதலின் மூலம் உருவான பாடத்திட்டத்திலும் இந்நூல்கள் இடம் பிடித்துக்கொண்டன. ஒரு நல்ல கிறிஸ்தவனை, ஆங்கிலேய அரசு விசுவாசமான மாணவனை உருவாக்குவதற்கு இந்தக் கீழ்க்கணக்கு நூல்களே அவர்களுக்குப் போதுமானவையாக இருந்தன. இதன் பயனாகத் தமிழில் முதலில் அச்சிடப்பட்ட இலக்கிய நூல்களின் இடத்தை இந்நூல்கள் பிடித்துக்கொண்டன.
திருக்குறளை உள்ளடக்கிய இந்த நூல்கள் அனைத்திற்கும் பழைய உரைகள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அத்தகைய பழைய உரைகளுடன் இந்நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அந்த நூல்கள் இப்பொழுது நமக்குக் கிடைப்பதில்லை. "கடந்த நூறு ஆண்டுகளில், வெவ்வேறு காலங்களில் இவை தனித்தனியாகவே அச்சிலும் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இன்று கிடைப்பது அரிது! பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரு சில தவிர மற்றவையெல்லாம் நன்கு பரிசோதித்துப் பதிப்பிக்க வேண்டும் நிலைமையில்தான் இருக்கின்றன. இதற்கு வேண்டும் முயற்சியை நாம் மேற்கொள்ளுதல் வேண்டும்"; "நான்மணிக்கடிகை முதலிய நீதிநூல்கள் மிகப் பரவுவதற்குக் காரணமாயிருந்தன கிறிஸ்தவச் சங்கங்களும் அரசாங்க ஸ்தாபனங்களும் சென்னைப் பல்கலைக்கழகமுமாகும். அவற்றைப் பாலர்க்குரிய நூல்களாகக் கிறிஸ்தவச் சங்கத்தார் பதிப்பித்துப் பரப்பினார்; கல்வியிலாகாப் பதிப்பாக வெளியிடுவித்து அரசாங்கத்தார் பரவச் செய்தனர். பல்கலைக்கழகமும் மெட்ரிக்குலேசன் முதலிய பரீக்ஷைகளுக்குரிய பாடப் புஸ்தகத்தில் நீதிநூற் செய்யுட்களைச் சேர்த்துப் பதிப்பித்துப் பரப்பி வந்தனர்; இப்பொழுதும் பரப்பி வருகின்றனர். ஆனால் பெரும்பான்மைப் பதிப்புகளில், திருந்தாத பாடங்களே காணப்படுகின்றன. எனவே, சுத்தமான பதிப்புகள் வெளிவர வேண்டுவது அவசியம். இப்பொழுது கிடைக்கும் ஏட்டுப் பிரதிகள் தாமும் அழிந்துவிடுவதற்குமுன் இம்முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்" என்பார் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் (வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, ப. 402).
இந்த நூல்களை அச்சிட்ட புலவர்கள் பழைய உரைகளை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு தாங்களே புதிய உரைகள் எழுதி வெளியிட்டனர். மூல இலக்கியங்கள்தான் சிறப்புடையன; உரைகள் அவ்வளவு சிறப்புடையன அல்ல என்று அவர்கள் கருதியிருக்கின்றனர்; அல்லது பாடத்திட்ட நோக்கில் எழுதப்படும்போது பழைய உரைகள் மாணவர்களுக்குப் புரியாது என்று இவர்களே கருதி தேர்வுக்கான வினா-விடைப் பாங்கில் தாங்கள் எழுதிய உரையையும் விளக்கங்களையும் வைத்துக் கிட்டத்தட்ட இந்த நூல்கள் எல்லாம் வெளியிடப்பட்டன என்று கருதலாம். ஆனால் இன்றைய காலத்தில் ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள்கூட இத்தகைய நூல்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்புவதுதான் மிகப் பெரிய அவலம். பழைய உரைகளுடன் இத்தகைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்னும் தகவல்கூடப் பெரும்பாலான ஆய்வாளர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. ஆகவே பழைய உரைகளுடன் கூடிய பதிப்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையும் உள்ளது.
நான்மணிக்கடிகை: பழைய உரை. 1903; செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு. 1924: வே. ராஜகோபாலையங்கார் பதிப்பு. 1944: வையாபுரிப்பிள்ளை பதிப்பு. இனியவை நாற்பது: பழைய உரை: 1845; இராமானுச கவிராயர் பதிப்பு. 1905: செந்தமிழ்; ரா. ராகவையங்கார் பதிப்பு. 1949: வையாபுரிப்பிள்ளை பதிப்பு. இன்னா நாற்பது: பழைய உரை. 1944: வையாபுரிப்பிள்ளை பதிப்பு. கார் நாற்பது: பழைய உரை ஒரு பகுதிக்கே உண்டு; 23-38 பாடல்களுக்குக் கிடைக்கவில்லை. களவழி நாற்பது: பழைய உரை. 1931; அனந்தராமையர் பதிப்பு. திணைமொழி ஐம்பது: பழைய உரை 1918; சோமசுந்தர தேசிகர் பதிப்பு. 1922: மணி. திருநாவுக்கரசு முதலியார் பதிப்பு. ஐந்திணை எழுபது: பழைய உரை. 1926; சோமசுந்தர தேசிகர் பதிப்பு: 1931: அனந்தராமையர் பதிப்பு. திணைமாலை நூற்றைம்பது: பழைய உரை. 1908; செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு. ஐந்திணை ஐம்பது பழைய உரை. 1912; செந்தமிழ், ரா. ராகவையங்கார் இரண்டாம் பதிப்பு. திரிகடுகம்: பழைய உரை. 1944; வையாபுரிப்பிள்ளை பதிப்பு. ஆசாரக்கோவை: பழைய உரை. 1857; தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் பதிப்பு 1898; செல்வகேசவராய முதலியார் பதிப்பு. பழமொழி நானூறு. பழைய உரை. 1874: சுப்பராயச் செட்டியார் பதிப்பு. 1918; 1922: நூறு நூறு பாடல்கள், உரை. செந்தமிழ். திருநாராயணையங்கார் பதிப்பு, 1918; செல்வகேசவராய முதலியார் பதிப்பு. சிறுபஞ்சமூலம்; பழைய உரை: 1875; கொ. சண்முகசுந்தர முதலியார் பதிப்பு. 1944: வையாபுரிப் பிள்ளை பதிப்பு. முதுமொழிக் காஞ்சி. பழைய உரை, 1919: செல்வகேசவராய முதலியார் பதிப்பு. நூல், குறைந்த வரியுடைய பாடல்கள், உரை, விளக்கமான பொழிப்புரையாகும். ஏலாதி: பழைய உரை, கழகப் பதிப்பு 1939. கைந்நிலை: பழைய உரை. 1931: அனந்தராமையர் பதிப்பு (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13ஆம் நூற்றாண்டு, பக். 121-128).
தமிழ்ப் பல்கலைக்கழகம் 2001ஆம் ஆண்டு முனைவர் வே.இரா. மாதவன் அவர்களைக் கொண்டு நான்மணிக் கடிகை மூலமும் பழைய உரையும் என்னும் நூலை வெளியிட்டுள்ளது. அகநானூற்றுப் பதிப்பாசிரியர் வே. இராஜகோபால் ஐயங்கார், வையாபுரிப்பிள்ளை, ரா. ராகவையங்கார் போன்ற தகுதி நிறைந்த பேராசிரியர்களால் பதிப்புப் பெற்றது இந்த நூல். 2001இல் மாதவன் அவர்களால் ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்புநோக்கப்பட்டு வெளியிடப்பட்டபோது பல நல்ல திருத்தங்களை இந்த நூல் பெற்றுள்ளது. திருத்தப்பட்ட பகுதிகளுக்கான நியாயங்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில் தெளிவாக உள்ளன. 'குளத்து கணியென்பர் தாமரைப் பன்மை - நலத்துக் கணியென்பர் நாணம்' என்ற பாடலில் பழைய பதிப்பாசிரியர்கள் 'தாமரைப் பன்மை' என்னும் தொடரைத் 'தாமரைப் பெண்மை' என்று பாடம் கொண்டுள்ளனர். தாமரைப் பன்மை என்பதுதான் சரியான பாடம் என்று மாதவன் பழைய உரையின் துணையுடன் மாற்றியுள்ளது மிகவும் சரியாக உள்ளது. ஆயினும் பல்கலைக்கழகப் பதிப்பில் 16ஆம் பக்கத்தில் 'ஓலைச் சுவடிகளை ஒப்பிட்டு...' என்று தொடங்கி 'சுவடிகளிலும் இப்பாடமே காணப்படுகிறது' என்பது வரையான பகுதி வையாபுரிப்பிள்ளை அவர்கள் நான்மணிக்கடிகை பற்றி எழுதியுள்ளதாகும் (வையாபுரிப் பிள்ளை நூல் களஞ்சியம். தொகுதி 1, ப. 401-402). ஆனால் பல்கலைக்கழகப் பதிப்பாளர் பதிப்பாளர் மாதவன் இதனை வையாபுரிப்பிள்ளையிடமிருந்து எடுத்துக்கொண்டதாக எந்தக் குறிப்பும் கொடுக்கப்படவில்லை.
குறிப்பிடும்படியான பதிப்புப் பணிகளில் ஈடுபடும் தற்கால ஆய்வாளர்கள் இத்தகைய பிழைகளைச் செய்வது வருங்காலத்தில் இவர்களைப் போன்றவர்கள்மீதான நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றவையும் செம்மைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொடர்ந்து வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் நான்மணிக்கடிகை என்னும் இந்த நூலுக்குப் பின்னர் வேறெந்த நூலும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க முக்கியமான நூல்களில் பழமொழி நானூறும் ஒன்று. 1874இலிருந்து இன்றுவரை அச்சிடப்படும் இந்த நூலில் ஒரு வினோதம் உள்ளது. மர்ரே ராஜம் பதிப்பில் இடம்பெறும் பாடல் வரிசை, கழகப் பதிப்பில் இருக்காது. மேற்கண்ட இரண்டு பதிப்புகளிலும் உள்ள வரிசை கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட நாராயண வேலுப்பிள்ளையின் நூலில் இராது. இவையெல்லாவற்றிலும் உள்ள வரிசை வர்த்தமானன் பதிப்பில் இருக்காது. உதாரணமாக நூறாவது பாடல் மர்ரே பதிப்பு 'நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினார்' என்ற பாடலை எடுத்துக்கொண்டால், கழகப் பதிப்பு 'மாணாப் பகைவரைமாறொதுக் கல்லாதார்' என்ற பாடலை எடுத்துக்கொள்ளும். நாராயண வேலுப்பிள்ளை 'வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செய்யினும்' என்ற பாடலை எடுத்துக்கொண்டால் வர்த்தமானன் பதிப்பகம் நூறாவது பாடலாக 'உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்' என்ற பாடலைக் கொடுக்கும். அப்படியானால் பழமொழி நானூறின் உண்மை வடிவந்தான் என்ன என்ற கேள்வி நமக்கெல்லாம் எழவே செய்யும்.
இந்த நூலை ஏட்டுச் சுவடியில் உள்ள அமைப்பின்படியே 1904ஆம் ஆண்டில் தி.ச. ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ளார். இது மூலப் பாடம் மட்டுமே உள்ள பதிப்பு. 1916ஆம் ஆண்டில் தி. செல்வகேசவராய முதலியார் பழைய உரையுடன் கூடிய பதிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் பாடல்களின் வரிசை முறையை மாற்றிவிட்டார். சைவ சித்தாந்தப் பதிப்பும் மேற்கண்ட பதிப்பின்படிதான் வெளியிடப்பட்டுள்ளதாக வையாபுரிப் பிள்ளை கூறுகிறார். 1938இல் வையாபுரிப்பிள்ளை அவர்களைக்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதுபோல, 'திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய ஐந்து கீழ்க்கணக்கு நூல்கள் பழைய உரையுடன் பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் என்னால் பதிப்பிக்கப்பட்டுள்ளன' என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிறார் (கீழ்க்கணக்குப் பதிப்பு முயற்சிகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி-1).
பழைய தமிழ் நூல்கள் உரைகளுடன் அச்சிடப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையான நூல்களைத் தவிர மற்றவை எளிதில் கிடைப்பதில்லை. இருபதாம் நூற்றாண்டில் உருவான அரசியலுக்கும் கருத்தியலுக்கும் துணை சேர்க்கும் பண்புடையவையாகக் கருதப்பட்ட நூல்கள் மட்டும் பரவலாகக் கிடைக்கும் தன்மையில் உள்ளன. புறநானூறு, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் முன்கூறிய கருத்தியலை வலுப்படுத்திய தன்மையுடையனவாகப் பார்க்கப்பட்டதால் அவை பெருமளவில் அச்சிடப்பட்டன. நாலடியார் போன்ற நூல்கள் பாடத்திட்டத் தேவை கருதி மட்டுமே அச்சிடப்படுகின்றன. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கோரும் இன்றைய நிலையில், அதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தமக்குள் கொண்டுள்ள நூல்கள் முறையான ஆராய்ச்சிப் பதிப்புகளாக வெளிவருவது காலத்தின் கட்டாயம்.
இத்தகைய சிறந்த பதிப்புகளுக்கு அடிப்படையாக அமையும் தகுதியைப் பழைய உரைகள் பெற்றுள்ளன. ஆயினும் திருக்குறள், நாலடியார் போன்ற புகழ்பெற்ற நூல்களில் உரைகளைத் தவிர மற்ற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் இன்றைய நிலையில் அறியப்படாதவையாக உள்ளன. நான்மணிக் கடிகை 54ஆம் பாடல் பழைய உரையில் 'ஏலாதான் பார்ப்பான்' என்பதற்கு 'ஒருவரோடு என்றும் மாறுபடாதான் பார்ப்பான் ஆவான்' என்று விளக்கம் உள்ளது. இன்றைக்கும் பொருத்தமான விளக்கம். இனியவை நாற்பது பழைய உரையில் சலவர் - வஞ்சகர், சோர்தல் - நீங்குதல், அச்சு இன்மை - அஞ்சத் தகும் துன்பம் இன்மை என்று விளக்கங்கள் உள்ளன. இப்பழைய உரையின்றி இத்தகைய விளக்கங்களை நாம் இன்று பெற முடியாது. களவழி நாற்பது பழைய உரையில் வஞ்சி என்பது கரூர் என்னும் குறிப்பு உள்ளது. திணைமொழி நூற்றைம்பதில் 127 பாடல்களுக்குத்தான் பழைய உரை உள்ளது. மூன்றாவது பாட்டிற்கு வேறு பாடமும் காட்டுகிறார். திரிகடுகம் பழைய உரையைப் பற்றி மு. அருணாசலம் கூறுகிறார்: "இவ்வுரையும் பிற உரைகளைப் போல மூலத்தை விடாது அடியொற்றிச் செல்வதாய் உள்ளது. இது பொதுவாகப் பழைய உரைகளுக்கெல்லாம் அமைந்த ஒரு சிறப்பியல்பு (இதைப் புறநானூற்றில் மிக நன்றாகக் காணலாம்). இவ்வுரை வையாபுரிப்பிள்ளையவர்களுக்கு உண்மைப் பாடங்காணப் பெரிதும் உதவியிருக்கிறது. பல்வேறு சமயப் புலமையுடையவராதலால் இவ்வுரையாசிரியர் மூன்றிடங்களில் (18, 59, 98) வேறு பொருளும் கூறுகிறார். ஓரிடத்தில் (72) வேறுபாடமும் வேறு உரையும் குறிப்பிடுகிறார்." (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13ஆம் நூற்றாண்டு)
இந்தப் பழைய உரைகள் என்பன பதினான்காம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இவற்றின் வழியாகப் பல அறிய தமிழச் சொற்களுக்கான அன்றைய விளக்கங்களையும் இன்று நம்மால் அறியப்படாத சில பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்ட பாடலில் பயின்றுள்ள சில சொற்களுக்கான சரியான வடிவத்தைக் காண்பதற்கு உதவியாகவும் அமைந்துள்ளன. பழைய நூல்கள் திருத்தமான வடிவில் வெளிவருவதற்குப் பழைய உரைகள் என்பன இருளில் விளக்குப்போலத் துணைசெய்யும் தகுதி படைத்தவை.
இத்தகைய பழைய உரைகளுடன் கூடிய பதிப்புகள் இப்பொழுது கிடைப்பதில்லை. ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் பதிப்பித்த நூல்கள், மற்றவர்கள் பதிப்பித்த நூல்கள் ஆகிய எல்லாமே எளிதாகக் கிடைக்கும்படி அச்சில் வெளிவர வேண்டும். செம்மொழி பற்றிப் பேசும் இந்தத் தருணத்தில் இது தவிர்க்க முடியாத ஒரு தேவையும் ஆகும்.
பயன்பட்ட நூல்கள்:
1. பதினெண் கீழ்க்கணக்கு (மூலம் மட்டும்), மர்ரே பதிப்பின் இரண்டாம் பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1981, சென்னை.
2. வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 1989, சென்னை.
3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13ஆம் நூற்றாண்டு, காந்தி வித்யாலயம், 1970, திருச்சிற்றம்பலம்.
4. வே.இரா. மாதவன் (ப.ஆ.), நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், 2001, தஞ்சாவூர்.

by Swathi   on 11 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
08-Mar-2015 18:44:09 G.vetrivel said : Report Abuse
I வான்ட் நீட் தமிழ் லெச்சிஒன்ச் எ டு z
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.