LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

பட்டினப்பாலை வழங்கும் காட்சிகள் - டாக்டர் சி.பாலசுப்பிரமணியன்

கற்பனைக்கு இயைந்த காட்சிகளை மாட்சி பெற விளக்கி நிற்கும் பாட்டுகளில் தலையாயது பட்டினப் பாலையாகும். கடியலூர் உருத்திரங்கண்ணார் என்னும் சங்க காலப் புலவரின் காட்சியோவியங்கள் மாட்சியுடன் தீட்டப்பெற்றிருக்கும் பாங்கினைப் பட்டினப்பாலை பறைசாற்றி நிற்கிறது. பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன் ஆவான். இவனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இப் பாட்டு அகப்பொருள் அமைதிகொண்டு, 301 அடிகளால் ஆகியது. பட்டினம் என்னும் சொல் எல்லாக் கடற்கரை நகரங்களுக்கும் பொதுப்பட வழங்கினாலும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அச் சொல் காவிரிப் பூம்பட்டினத்தையே சிறப்பாகக் குறித்தது. பாலை என்பது பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கொண்ட அகப்பொருள் திணையாகும். பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறும் பாலைத்திணைப் பாட்டு, "பட்டினப்பாலை' ஆயிற்று. மதுரைக்காஞ்சி மதுரையின் மாட்சியைப் புலப்படுத்தி நிற்பது போன்றே, பட்டினப்பாலை காவிரிப் பூம்பட்டினத்தின் பெருமையை பரக்கப் பேசுகின்றது. மதுரைக்காஞ்சியில் நிலையாமை உணர்த்தப்பட்டது.

பட்டினப்பாலையில் பிரிதல் ஒழுக்கம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இல்லறத்தில் ஒழுகும் தலைவன், அவ் இல்லறம் முட்டுப்பாடின்றி நடைபெறப் பொருள் இன்றியமையாத் தேவை என்று உணர்கிறான்; பொருள் தேடிவரும் பொருட்டுத் தன் தலைவியையும் பிரிய முற்படுகிறான். தலைவனின் எண்ணத்தைத் தலைவி அறிகிறாள்; அவன் பிரிவினை எண்ணிக் கலங்கிக் கையறுகிறாள். அவள் கலக்கத்தைப் போக்க நினைக்கும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பின்வருமாறு கூறிக்கொள்கிறான்: "" நெஞ்சே! முட்டுப்பாடில்லாத செல்வங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இக் காவிரிபூம்பட்டினத்தையே பெறுவதாக இருப்பினும், நான் நீண்ட கருங்கூந்தலையுடைய என் தலைவியைப் பிரிந்து வரமாட்டேன். ஏனெனில், நான் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய வழியோ கரிகால்வளவன் தன் பகைவரை வெல்வதற்கு ஓச்சிய வேலைக் காட்டிலும் வெம்மையானது. ஆனால், தலைவியினுடைய தோள்களோவெனில் அவனுடைய செங்கோலைவிடக் குளிர்ச்சியானவை. என் தலைவியை விட்டுப்பிரிந்து வரமாட்டேன்.'' இவ்வாறு தலைவன் கூறுவதாகப் பட்டினப்பாலை (215-20) அமைந்துள்ளது. முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை ஆகிய பாட்டுகள் அகப்பொருள் பாடுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டவை. ஆனால் பாலையொழுக்கம் பாடும் பட்டினப்பாலை புறப்பொருளுக்கு முதன்மை தந்துள்ளது. ஆயினும் பாட்டின் முத்தாய்ப்பு அகப்பொருளுக்குரியதாய் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு சிறப்புகளையும் விரிவாகக் கூறிக்கொண்டுவந்த புலவர் இறுதியில் அக் காவிரிப்பூம்பட்டினத்தினும் தலைவி மேலானவள் என்று தலைவன் கருதுவதாக அகப் பொருளுக்கு உயர்வு தருகிறார். எனவே, அகப்பொருளும் புறப்பொருளும் பட்டினப்பாலையில் பின்னிப்பிணைந்துள்ளன எனக் கூறலாம். காவிரிப் பேரியாற்றின் சிறப்பு, சோழநாட்டு மருதநில வளம், பாக்கத்து அமைப்பு, படப்பைச் சோலை, அட்டிற்சாலைகள், பவுத்தப் பள்ளிகள், பல்வேறு கோட்டங்கள், பரதவர் குடியிருப்புகள், புறஞ்சேரி காவிரி நீர்த்துறை, வைகறையாம நிகழ்ச்சிகள், உல்கு வசூலிக்கும் திறம், பண்டசாலை முற்றம், அங்காடித் தெருக்கள், கடைகளின்மேற் பறக்கும் பல்வேறு கொடிகள், தெருக்கள், வேளாண்குடி மக்களின் விருந்தோம்பலிற் சிறந்த பெருவாழ்வு முதலியன குறித்த செய்திகள் விளக்கமாக இப் பாட்டில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

குடகுமலையிற் பிறந்து தமிழ்நாட்டிற் பாய்ந்து கீழ்க்கடலிற் கலக்கும் காவிரி, சோழநாட்டின் கரைகளிலே பொன்னை ஒதுக்குவதாகக் குறிப்பிடுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். ""வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி '' என்று, காவிரியாறு எக்காலத்திலும் பொய்ப்பதில்லை என்ற உண்மையை ஓதுகின்றார். (பட்டினப்பாலை, 1-8) சோழநாட்டு வயல்களில் கரும்புகள் நெடிதோங்கி வளர்ந்துள்ளன. அவ் வயலோரங்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் கொட்டில்கள் பல இருக்கின்றன. அங்கிருந்து எழும் புகை, பக்கத்து வயலில் வளர்ந்துள்ள நெய்தற் பூக்களை வாடச் செய்கின்றன; மருத வயல்களில் வளர்ந்துள்ள நெற்கதிர்களையுண்ட எருமைக் கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றன; நெருங்கிய குலைகளையுடைய தென்னை, வாழை, பனை, முதலிய மரங்களும், மஞ்சள், சோம்பு, இஞ்சி முதலிய செடிகளும் அடர்ந்து செழித்து வளர்ந்திருக்கின்றன. பாக்கங்களில் செல்வர்கள் வாழுகின்றனர். அவர்கள் வீதிகள் அகன்றவை.வீடுகளின் முற்றங்களில் நெல்லைக் கொத்தவரும் கோழிகளை இளம்பெண்கள் காவல் புரிகின்றனர். காய்கின்ற நெல்லைக் கொத்தவரும் கோழிகளை அவர்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றிவீசி விரட்டுகின்றனர். அழகிய நெற்றியும் மடநோக்கும் கொண்ட இளைய மகளிரால் அவ்வாறு எறியப்பட்ட பொற்குழைகள் முற்றத்திலே சிதறிக் கிடக்கின்றன. அவை சிறுவர் உருட்டிச் செல்லும் மூன்று உருளையுடைய சிறுதேரைத் தடுக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் அழகிய தோட்டங்கள் பல அமைந்துள்ளன. அத் தோட்டங்களைச் சூழ்ந்து உப்பங்கழிகளும் பல உள்ளன. இவ் வுப்பங்கழிகளில் படகுகள் பல வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. சோழ நாட்டில் உப்பை விற்று அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றிவந்த படகுகளே அவை. புதுவருவாய் தரும் தோப்புகளும், அவற்றின் அணித்தே பூஞ்சோலைகளும், ஆழமான பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் காம இன்பத்தை நல்கும் ஏரிகளும் அங்கு இருப்பதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். விருந்து போற்றும் திறம் காவிரிப்பூம்பட்டினத்தில் மிகுந்துள்ளது. சோற்றை வடித்த கஞ்சி ஆற்றுவெள்ளம் போலத் தெருக்களில் பெருக்கெடுத்தோடுகிறது.

"சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்துஒழுகி' (பட்டினப்பாலை, 45-46)இச் செல்வ வளத்திற்கெல்லாம் காரணமாய் அமைவது காவிரிப்பூம்பட்டினத்தின் வணிக வளமேயாகும். அங்கு ஏற்றுமதி, இறக்குமதி வாணிகம் சிறந்திருந்தன. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கும் சுங்கவரி விதிக்கப்பட்டது. பிற நாடுகளிலிருந்து கடல் வழியாக வந்த பண்டங்களோடு, பிற நாடுகளுக்கு அனுப்புவதற்கு வந்திருக்கும் பண்டங்களும் சேர்ந்து மலையெனக் குவிந்துகிடந்தன. கட்டுக்காவல் மிகுந்த சுங்கச் சாவடியில் அப் பண்டங்களின் மீது புலி இலச்சினையை இட்டனர். அவ்வாறு இடப்பட்ட மூட்டைகள் ஒரு மருங்கே குவியலாகக் குவிந்து வைக்கப்பட்டிருந்தன.பிற நாடுகளிலிருந்து கடல்வழியாக வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வண்டிகளில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும், இமய மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தன அகில் கட்டைகளும், தென்கடல் பிறந்த முத்துகளும், கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளங்களும், கங்கையாறு பாயும் பகுதிகளில் விளைந்த பொருள்களும், ஈழத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் அத் தெருக்களில் குவிந்துள்ளன ( பட்டினப்பாலை, 185-97)இவையெல்லாம் நிலமங்கையின் முதுகு நெளியும் வண்ணம் அங்கே வந்து குவிந்து கிடக்கின்றன. இவ் அருமையான பொருட்கள் விற்கும் வணிகர்கள் தங்கள் நேர்மையிலிருந்து சிறிதும் வழுவுவதில்லை. அவர்கள் நடுவுநிலைமை போற்றிப் பழிக்கு அஞ்சி, எப்போதும் உண்மையே பேசும் இயல்புடையவனாக இருக்கிறார்கள்; தங்களுடைய பொருள்களையும் பிறருடைய பொருள்களையும் ஒருதன்மையாகவே நினைக்கிறார்கள்;பிறரிடமிருந்து பொருள்களை விலைக்கு வாங்கும் போது மிகுதியாகக் கொள்ளாமலும், பிறருக்கு விற்கும் போது குறைவாகக் கொடுக்காமலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். தாங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளையும் நியாயமான விலை கூறியே அவர்கள் வாணிகம் செய்கிறார்கள் (பட்டினப்பாலை, 206-12) காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதியிலே வாழும் பரதவர்கள் ஓய்வு நாள்களில் எப்படித் தம் பொழுதினைப் போக்கி மகிழ்கின்றார்கள் என்னும் காட்சியினை மாட்சிபடக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கவினுறக் கட்டுரைத்துள்ளார். நிறைநிலா நாளில் கடலிலே அலைகளின் ஆர்ப்பரிப்பு மிகுதியாக இருக்கும். எனவே, பரதவர் அன்று மீன்பிடிக்கப் போகமாட்டார்கள்; சினை கொண்ட சுறாமீனின் கொம்பை நட்டு, அதிலே கடல்தெய்வம் வாழ்வதாகக் கருதுவார்கள். அதற்குத் தாழைமலரைச் சூட்டி மகிழ்வர். பனங்கள்ளைக் குடித்துக் களிகொள்ளும் தமது பெண்டிருடன் விரும்பிய பலவற்றை உண்டு மகிழ்வர். "" சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான்மடல்தாழை மலர்மலைந்தும்பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்புன்தலை இரும்பரதவர்பைந்தழை மாமகளிரொடுபாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாதுஉவவுமடிந்து உண்டாடியும்'' - பட்டினப்பாலை, 86-93இனி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் வேளாளர்களைப்பற்றிக் காண்போம். அவர்கள் கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்தலைக் கனவிலும் கருதாதவர்கள்; தேவர்களை வணங்கி அவர்களுக்கு வேள்வியின் மூலம் பலி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும் எருதுகளையும் காத்தோம்புவர். வேத வித்தகர்களைப் போற்றுவார்கள்; வந்த விருந்தினர்க்கு வயிறார உணவு வழங்குவார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவமாட்டார்கள்; மேழிச் செல்வமே சிறந்தது எனப் போற்றி வாழ்வார்கள்."" கொலைகடிந்தும் களவுநீக்கியும்அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்நல்ஆனொடு பகடுஓம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும்பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைத் கொடுமேழி நசைஉழவர்'' - பட்டினப்பாலை. 199- 205 பட்டினப்பாலையின் இறுதிப் பகுதியில் சோழன் கரிகாலன் காடுவெட்டி நாடாக்கிய செயலும், உறந்தையைப் புதுப்பித்த செய்தியும் உரைக்கப்படுகின்றன. இவ்வாறு கடியலூர் உருத்திரங்கண்ணனார் , பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தின் பலவடிவான செல்வச் செழிப்பு நிலைகளைப் படிப்போர் உளங்கொளுமாறு வருணித்துள்ளார்.

by Swathi   on 27 Mar 2013  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
15-May-2018 03:36:24 meena said : Report Abuse
நன்றி
 
29-Nov-2017 10:51:59 உதயசங்கர் said : Report Abuse
மிக அருமையான தெளிவுரைகள் ..வலைத்தமிழ் படிப்பவர் நாவினில் இனிக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.