LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

"புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன்

தமிழர், வடமொழி நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் கடமைப்பட்டவரேயென்னும் போலி எண்ணம் பெரும்பாலான அறிஞர்களிடம் ஊறியிருந்தது. "வேட்டி' என்று வழங்கும் அன்பர்களை அறிவோம். வடமொழியில் வழங்கும் இச்சொல்லே தமிழில் வழங்கியதென்பதால் இச்சொல்லின் தமிழ்த் தன்மையை உணரவில்லை. வெட்டப்படுவதால் "வேட்டி', துண்டிக்கப்படுவதால் "துணி', அறுக்கப்படுவதால் "அறுவை' என்று வழங்கும் பிற சொற்களையும் காண்க. எச்சொல்லையும் பிரித்துப் பார்த்தால் தமிழா பிற மொழியா என்பது விளங்கும். இவ்வியல்பினரைத் திருத்தாது விடுவோமாயின், ஆட்டுக்குட்டியென்பதை "ஆஷ்டுக்குஷ்டி' என்பதிலிருந்து வந்ததாகவும் கூறுவர். யான் அவரிடம் சென்று, "உமக்குத் தெரியாததில் தலையிடுவது சரியில்லை. ஆடுகுட்டி யென்றால், வினைத் தொகைநிலைத் தொடராகி ஆடியகுட்டி, ஆடும் குட்டியென்றாற் போலல்லவா பொருள்படும்?' என்று கூறினேன்.


"கவிஞர்' என்பதுகூடத் தமிழல்ல என்பாரும் உண்டு. நல்ல தமிழ்ச்சொல் இது என்பதனைக் ""கவிகைக் கீழ்த்தங்கும் உலகு'' என வள்ளுவர் கூறியவற்றால் உணரலாம். கவிகை என்பது "கை'விகுதி பெற்ற தொழிற்பெயர். கவிதல் என்பது பொருள். தொழிற் பெயரின் விகுதியாகிய "கை' என்பதனை நீக்கினால், எஞ்சி நிற்பது "கவி' என்னும் முதனிலையாகும். "கவிகை' என்பது கவிந்து நிற்பது என்னும் கருத்தில் தொழிலாகு பெயராகக் "குடை'யை உணர்த்திற்று. உலகை நாட்டைக் கவிந்து நிற்பது "கவி' என்பதும் வெள்ளிடைமலையாக விளங்குகின்றது.

மேலும், "இலக்கணம்' என்பதுங்கூடத் தமிழல்ல என்னும் தமிழறிஞரை அறிவேன். இது, இலக்கு - அணம் என்று வருவது ""இலக்கணத் தொடர்ந்து'' என மணிமேகலையில் வந்துள்ளது. மொழிக்கு இலக்காகப் பொருந்திய இயல்தனை இலக்கணமெனத் தமிழ்ப்பெரியோர் வழங்கினர் என அறிக.
"நாகரிகம்' என்பதும் நகரை அடிப்படையாகக்கொண்டு வந்ததென்பர். உண்மை அதுவல்ல. நாகர் என்ற ஓர் இனத்தாரைத் தமிழர்கள் மிகவும் வெறுத்தனர். இவர்கள் மலையில் வாழ்ந்தனர். ""நாகம் விண் குரங்கு புன்னை நற்றூக மலை பாம்பு யானை'' எனச் சூடாமணி நிகண்டிலும் நாகம் என்பது மலையைக் குறிக்குமெனக் கூறியிருத்தல் காண்க. நாகத்தில் வாழ்பவராதலின் "நாகர்' எனப்பட்டனர். இவர்கள் தமிழர்கட்குப் பகையானவர்; பண்பாடற்றவர்.

இதனை மணிமேகலை என்னும் நூலில் நாகர் தலைவனைக் கூறும் போது,
""கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்
எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப்
பெண்டுடன் இருந்தன னென்றும்''
அவர்களிடையில் தப்பிச் சென்ற சாதுவன் என்னும் வாணிகன், அவர்கள் மொழியைப் பேசிய அளவிலேயே நாகர் தலைவன்,
""நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்''
என ஆணையிடுகின்றமையும் இவர்களின் நாகரிகமற்ற தன்மைக்குச் சான்றாமென்க. நாகரை இகந்தவர் (இகழ்ந்தவர்) ஆதலின் "நாகரிகர்' எனப்பட்டனர்.

"கருமம்' என்பதும் வட மொழியல்ல. வாழ்விற்கு அடிப்படையான வினைகளே கருமம் என்று கூறப்பட்டது. "கரு' என்பது முதல், அடிப்படை என்ற பொருளைக் காட்டும், உழவு, தொழில், வாணிகம், வரைவு, விச்சை, தச்சு என்னும் அறுவகையான தொழில்களே வாழ்விற்கடிப்படையாகும். ""அறுதொழிலோர் நூன்மறப்பர்'' என்ற வள்ளுவர் வாக்கும் ஈண்டு நினைவுகூரல் தகும்.

"கோயில்' என்பது மன்னவன் இருக்குமிடத்திற்கே பண்டை நாளில் வழங்கியது. "கோ' என்பது அரசன். "இல்' என்பது வீடு. கோயில் என்றால், "அரசன் வீடு' என்பது பொருள். ""மறத்துறை மண்டிய மன்னவன் கோயிலும்'' எனச் சிலம்பு முழங்குவதும் காண்க. இறைவனிருக்குமிடத்தைக் கோயில் என்பது பிற்கால வழக்கு.

ஒவ்வொரு ஊரிலும் ஆன்றவிந் தடங்கிய சான்றோர் பலர் கூடி வழக்கு முதலியவைகளை ஆயும் (ஆராயும்) மன்றமிருந்தது. மன்றங்களில் அவ்வூரில் சிறக்க வாழ்ந்த பெருமக்களை அடக்கம் செய்து வழிபாடு இயற்றினர். இதுவே நாளடைவில் கோயிலாக மாறியது. நம் நாட்டு அமைச்சர் முதலிய நாடாள்வோர் அறுவகைத் தொழிலையும் பாதுகாக்க வேண்டும். மழையில்லை என்று கூறிய மக்கட்கு முன்பு ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த ஒருவர், ""கோயிலுக்குச் செல்லுங்கள்'' என்றாராம். மழை, கோயிலுக்குப் போனால் வராது. மழையென்பது இயற்கையின் கொடை. இது வருந்தியழைத்தாலும் வராது; புலம்பிப் போவெனப் போக்கினும் போகாது. இதனை ""மாரி, வறப்பில் தருவாருமில்லையதனை சிறப்பில் தணிப்பாருமில்'' என்னும் நாலடியார் கொண்டும் அறியலாம்.
"இல்லை' - "இல்' என்பன குறிப்புவினை முற்றுக்களாயினும் எல்லா இடங்களையும், மூன்று காலங்களையும் காட்டி நிற்கும் எதிர்மறைச் சொல்லாகும். எனவே, இன்றும் இல்லை; பண்டுமில்லை; நாளையும் இல்லை; இந் நாட்டிலில்லை; இந்தியாவிலில்லை; உலகத்திலுமில்லை.
சங்க காலந்தொட்டுத் தமிழர் அரசியலில் தம்மவர் வாழப் பொறாதவுள்ளங் கொண்டவராகவே இருந்தனரென்பதை அறிகின்றோம். உழவர் உழாத நான்கு பயன்களையுடைய பாரியின் பறம்பினை மூவேந்தரும் குறுநில மன்னரும் முற்றுகையிட்டமையும்; சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்கு மனம் பொறாத பாண்டியர், சோழர் கூற்றும் இக்கால அரசியல் தமிழர் செயல் திறங்களும் தக்க சான்றாகும். இதுபோன்ற சூழ்ச்சியான எண்ணங்கள் ஒழியும் நாளே தமிழர் தலைதூக்க முடியும். அதற்காவன செய்வோமாக!

இன்ப மெனப் படுதல் - தமிழ்
இன்பமெனத் தமிழ் நாட்டினர் எண்ணுக.
(பாரதிதாசனின் "தமிழ்' குறித்த சில கவிதைகள்...)
இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்; - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
எங்கள் தமிழ்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்த நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்...
குறிப்பு: (தமிழ் வளர்ச்சி கருதி, கவிஞர் பாரதிதாசன் வெளியிட்ட சில கருத்துகளைத் தொகுத்து
(கவிஞர் பேசுகிறார் -1947 - நூல்) "இனிமைத் தமிழ்மொழி எமது...' என்ற தலைப்பில் வழங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் மைந்தர் "தமிழ் மாமணி'
மன்னர் மன்னன்)

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.