LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

போலீஸ்காரனின் மகன்

நள்ளிரவு தாண்டி விட்டிருந்தது. போலீஸ் லாக்-அப்பில் இருந்தவர்கள் எல்லாரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அந்த நேரத்தில் "அய்யோ!' என்ற பயங்கரமான அழுகைச் சத்தம் கேட்டது. மனித இதயங்களை நடுங்கச் செய்த அந்தக் குரல் காவல் நிலையத்தின் சுவர்களை நடுங்கச் செய்தது. பயத்தில் அதிர்ச்சியடைந்து கண்விழித்த கைதிகள் பொந்துக்குள் இருக்கும் பூச்சிகளைப்போல லாக்- அப்களின் கதவுகள் வழியாக வெளியே எட்டிப் பார்த்தார்கள். பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த மின் விளக்கிற்குக் கீழே இருந்த மேஜைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஹெட் கான்ஸ்டபிளும் முன்னால் நின்றிருந்த போலீஸ்காரரும் திண்ணையில் கிடந்த இளைஞனிடம் கட்டளையிட்டார்கள்!

""எழுந்திருடா!''

ஒற்றை மடிப்பு வேட்டி மட்டும் கட்டியிருந்த இளைஞன், நடுங்கிக் கொண்டே எழுந்து நின்றான். அவனுடைய வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஹெட் கேட்டார்:""சொல்லுடா... எங்கேடா விற்றாய்?''

இளைஞன் பேசவில்லை. அருகில் நின்றிருந்த உயரமான ஒரு கான்ஸ்டபிள் பலத்துடன் அவனுடைய முதுகில் கையைச் சுருட்டி குத்தினார். இளைஞன் "அய்யோ' என்ற அலறலுடன் தரையில் மல்லாக்க விழுந்தான். ஒரு போலீஸ்காரர் அவனுடைய மார்பில் ஓங்கி ஓங்கி மிதித்தார். இன்னொரு போலீஸ்காரர் ரூல்தடியால் முழங்காலில் பலமாக அடித்தார். செயலற்ற நிலையில் இருந்த ஒரு மனிதப் பிறவியை கொடூரமான முறையில் அடித்து உதைப்பதைப் பார்த்து லாக்-அப்பில் இருந்த கைதிகள் பயந்து நடுங்கினார்கள். லாக் அப்பில் இருந்த அரசியல் கைதிகளில் ஒருவன் உரத்த குரலில் சொன்னான்:

""அய்யோ... நிறுத்துங்க... நிறுத்துங்க... என்ன ஒரு துரோகம் இது!''

அதைக் கேட்டு போலீஸ்காரர்களும் ஹெட்டும் தலையை உயர்த்தினார்கள். ஹெட் கான்ஸ்டபிள் சிரித்துக் கொண்டே கிண்டல் கலந்த குரலில் சொன்னார்: ""நீங்கள் யாரும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம். எங்களுக்குத் தெரியும். நீங்க பேசாமல் படுத்து உறங்குங்க!''

அதற்குப் பிறகும் உண்மையை வெளியே கொண்டுவரும் செயல் தொடர்ந்தது. அரசியல் கைதிகளில் பழைய ஆள், நிறுத்தச் சொன்ன புதிய ஆளிடம் மெதுவான குரலில் சொன்னான்:

""நாம் இதில் தலையிட்டு பிரயோஜனமில்லை. நாம் என்ன செய்ய முடியும்? நாம்...''

""நாம் இந்த பயங்கரச் செயலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?''

""நண்பரே! நீங்கள் வயதில் இளையவர். நீங்கள் போலீஸ் லாக்- அப்பிற்கு முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள் அல்லவா? உங்களுக்கு போலீஸ்காரர்களுடன் நெருக்கமான பழக்கமில்லை. நான் இந்த வாழ்க்கையில் 22 லாக்-அப்பில் இருந்திருக்கிறேன். இது 23-ஆவது லாக்-அப். நம் ஊரில் எத்தனை போலீஸ் லாக்-அப்கள் இருக்கின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். பூமியில் இருக்கும் எல்லா நாடுகளிலும் சேர்த்தால் எவ்வளவு வரும்? ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றின் நிலையும் இதுதான்...''

"அய்யோ! அய்யோ!' என்று இளைஞன் திண்ணையில் கிடந்து அழுதான். போலீஸ்காரர்கள் சிறிதுகூட இரக்கமே இல்லாமல் அவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார்கள்.

""... போலீஸ்காரர்கள் மனிதர்களே அல்ல. மனித உருவில் இருக்கும் கொடூர மிருகங்கள். அரசாங்கத்தின் ஆட்கள்... அவர்களுக்கு கல்வி இல்லை. பண்பாடு இல்லை. "தந்தை இல்லாத தன்மையையும் கீழான வழிகளையும் வெளிப்படுத்துவது... அநீதியையும் அக்கிரமத்தையும் காட்டுவது... அவன்தான் பிழைக்க முடியும்' என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு லாக்-அப்ல் இருக்கும்போது ஒரு போலீஸ்காரன் என்னிடம் கூறினான். ஒவ்வொரு போலீஸ்காரனின் நம்பிக்கையும் இதுதான். குற்றம் இல்லாத இடத்தில் குற்றத்தை உண்டாக்குவது, உண்மையைப் பொய்யாக ஆக்குவது, மானமுள்ளவர்களை அவமானப்படுத்துவது- அதற்காக இருக்கும் பயங்கரமான ஆட்கள்தான் போலீஸ்காரர்கள். நாகரீகமற்ற தன்மை, பண்பாடு இல்லாமை, அசுத்தம், இன்னொருவனின் பணத்தில் சாப்பிடுவது, காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக நாயின் பின்பகுதியைக்கூட நக்குவது, பிறகு... ஆணவம், அதிகாரத் திமிர்...''

""டேய்...'' என்று கூறியவாறு ஹெட் மீசையைப் முறுக்கின: ""உண்மையைக் கூறுகிறாயா?''

""கூறுகிறேன்.''

""சரி...''

""நான்...'' இளைஞன் கூறினான்: ""விற்கவில்லை. வீட்டில் வாழை மரத்திற்குக் கீழே மறைத்து வைத்திருக்கிறேன்.''

""கேட்டாயா?'' பழைய அரசியல் கைதி சொன்னான்: ""இனி அவர்கள் என்னவெல்லாம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் இவன் கூறுவான். அருமையான வழக்காக ஆக்குவார்கள். எதுவுமே தெரியாத பலரும் சிக்குவார்கள். அதன்மூலம் பணம் கிடைக்கும். நாம் உறங்குவோம்!''

அவர்கள் தங்களுடைய இடங்களில் வந்து படுத்தார்கள். இளைஞனும் "நிறுத்துமாறு' கூறியவனுமான அரசியல் கட்சித் தொண்டனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சுவரில் சாய்ந்து கொண்டு பாயில் உட்கார்ந்திருந்தான். நண்பர்கள் ஒவ்வொன்றையும் கூறித் தூங்க ஆரம்பித்தார்கள். அவனுடைய கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. அவன் மெதுவாக எழுந்து வந்து லாக்-அப்பின் கதவிற்கு அருகில், கம்பிகளைப் பிடித்து நின்றான். முன்னால் கூப்பிய கைகளுடன் நின்று உண்மையைச் சொன்ன இளைஞனையோ, அதை எழுதிய ஹெட்டையோ, அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களையோ அவன் பார்க்கவில்லை. கண்ணீரில் குளித்த விழிகளுடன் அவன் நின்றிருந்தான். நீண்ட நேரம் கழித்து ஹெட் சொன்னார்:

"" நீ அங்கே போய் உட்கார்!''

இளைஞன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். ஹெட் லாக் அப்பின் வாசலைப் பார்த்தார்.

""என்ன? தூங்கலையா?''

அங்கு நின்றிருந்த அரசியல் கட்சித் தொண்டன் எதுவும் கூறவில்லை. ஹெட் எழுந்து வந்தார்.

""எதற்கு அழுகிறாய்?''

""சும்மா...''

""தங்கமான நண்பனே!'' ஹெட் சொன்னார்: ""உங்களுக்கு எதுவும் தெரியாது. உலகம் என்ன என்று நீங்கள் பார்த்தது இல்லை. அந்த மூலையில் இருப்பவன் உங்களைப் போன்ற ஒருவனல்ல. கொடூரமான மிருகம். கத்தியைத் தூக்குபவன், முந்தானையை அறுப்பவன்... எங்களுடைய இடத்தில் நீங்கள் இருந்தால், அவனுடைய உரோமக் குழிக்குள் ஊசியைப் பழுக்க வைத்து நுழைப்பீர்கள். உங்களுடைய வீட்டிலிருக்கும் அருமையான பசு கன்று போடப் போவதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கும் நீங்கள், காலையில் எழுந்திருக்கும்போது காண்பது தோல் இல்லாத அதனுடைய இறந்த உடல் என்றால்... அதன் தோலை உரித்துக் கொண்டு சென்றவனை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய தாயின் மார்பில் அடித்து, கழுத்தைக் குத்தி, காதுகளை அறுத்து நகைகளைக் கொண்டு செல்பவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?''

""அவர் இவற்றையெல்லாம் செய்தாரா?''

""அவர்...! அந்த மோசமானவன் தோல் உரிப்பவன்தான்... அந்த வழக்கிற்கு மூன்று தடவைகள் தண்டனை அனுபவித்திருக்கிறான். இப்போதைய வழக்கு... ஒரு பெண்ணின் காதுகளை அறுத்ததற்காக... அந்தப் பெண்ணை நாங்கள் நேற்று போய் பார்த்தோம். நாங்கள் எப்படி கவலைப்படக்கூடிய நிலைமையை வரவழைத்துக் கொண்டு வருவோம்? திருட்டும் விபச்சாரமும் கொலையும் நடப்பது வறுமையால்தான் என்று தலையில் வைத்து ஆடுபவர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது. இவன் செய்தது வெறும் வறுமையில் அல்ல. இவனுடைய தந்தைக்கு வேலை இருக்கிறது. ஒரு போலீஸ்காரர். எங்களுடைய தோழரின் மகன்...''

மூலையில் தலையைக் குனிந்து கொண்டு அவன் உட்கார்ந்திருந்தான். முன்னால் இரத்தம் குளமென நின்றிருந்தது.

""நாங்கள் இவனை என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்க...''

இளைஞனான அரசியல் கட்சித் தொண்டன் எதுவும் கூறாமல், படுக்கக்கூடிய பாய்க்கு வந்து, தாடையில் கையை வைத்து அமர்ந்து, கம்பிகளின் வழியாகப் பார்த்தான். மூலையில் அமர்ந்திருந்த இளைஞனின் வாயிலிருந்து இரத்தம் சிவப்பு நிறக் கம்பியைப்போல வழிந்து கொண்டிருந்தது. கடவுளே...! போலீஸ்காரனின் மகன்!

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன் கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.