LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
-

கூடங்குளம் திட்டம் எழுப்பும் கேள்விகள் !

     சங்கரன்கோயில் தேர்தல் திருவிழா முடிந்துவிட்ட்டது. அனைத்து கட்சிகளின் உண்மையான கூடங்குளம் நிலைப்பாடு விரைவில் தெரியவரும்.   இந்நிலையில் நாம் அனைவருக்கும் உள்ள கேள்வி கூடங்குளம் திட்டம் உண்மையிலேயே தமிழக மக்களுக்கு பயனுள்ளதா?  இதனால் மட்டும்தான் தமிழகத்தின் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பதாகும். கூடங்குளம் விஷயத்தை தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன. ஒரு சிக்கலான, அறிவியல் சார்ந்த இப்படிப்பட்ட விஷயங்களை மேம்போக்காக ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட முடியாது. இதற்காக போதுமான அளவு இந்த துறையில் உள்ள அறிஞர்களையும், பேராசிரியர்களையும், சிந்தனையாளர்களையும் உள்ளடக்கிய வெளிபாடையான, ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.  இந்த சூழ்நிலையில், எழுத்தாளர் ஞானி அவர்கள் சமீபத்தில் அவர் இணையதளத்தில் எழுப்பியிருந்த கேள்விகள் இந்த சூழ்நிலையில் அவசியமான, பதில் கண்டு அனைத்து தமிழர்களும் தெளிவுபெற வேண்டியவைகளாக உள்ளது.  அவர் இன்று அரசியல்வாதிகள் பார்த்து கீழ்காணும் கேள்விகளை எழுப்புகிறார்.

 

     1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

     2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

 

     3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

 

    4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

 

     5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

 

     6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

     7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

 

     8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

 

     9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

 

     10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

 

     11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

 

     12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

 

     13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

 

     14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

 

     15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

 

     16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி தமிழ்நாடு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?


கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து !

 

     கடலோரம் அமைக்கப்பட்டிருக்கும் கல்பாக்கம் அணு உலைகளுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் உறங்கும் எரிமலை இருப்பது பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. வழக்கம் போல இந்திய அணுசக்தித் துறைக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதும் அக்கறையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

     சுமார் 25 வருடங்களாக அணு உலை ஆபத்துகள் பற்றி ஆய்வும் பிரசாரமும் செய்துவரும் மருத்துவர்கள் சதுரங்கப்பட்டினம் வி.புகழேந்தி, கோவை ரா.ரமேஷ் இருவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து திரட்டியிருக்கும் பல அரிய தகவல்களை பூவுலகின் நண்பர்கள் சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.

 

     பத்து மாதங்களுக்கு முன்னால் மே 2011ல் சர்வதேச அணுசக்திக் கழகம் உலக அளவில் எரிமலைகளும் அவற்றால் அணு உலைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் கல்பாக்கம் அருகே இருக்கும் எரிமலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்பாக்கத்துக்கு என்ன ஆபத்து நேரலாம், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நிலவியல், காலவியல், கடலியல் அடிப்படைகளில் ஆராயும்படி சர்வதேச அணுசக்திக் கழகம் அறிவுறுத்துகிறது. ஆனால் அவை எதையும் இந்திய அணுசக்தி துறை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. புகழேந்தியும் ரமேஷும் மூன்று அடிப்படைகளிலும் நடந்துள்ள பல்வேறு தனி ஆய்வுகளைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் சில எச்சரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

 

     கல்பாக்கம் அருகே இருக்கும் கடல் எரிமலை பற்றி இந்திய அணுசக்தித் துறைக்குத்தான் தெரியவில்லையே ஒழிய உலகின் மாபெரும் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. கடைசியாக 1757ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அந்த நிகழ்வு பற்றி உலகின் பரிணாமக் கொள்கையை வகுத்த அறிஞர் சார்லஸ் டார்வின் முதல் எரிமலை வெடிப்பை கடலில் நேரில் பார்த்த மாலுமிகள் சிலர் வரை எழுதிய பதிவுகளையெல்லாம் புகழேந்தியும் ரமேஷும் தேடி எடுத்துத் தொகுத்துள்ளனர்.

 

     அதுமட்டுமல்ல கல்பாக்கத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிலவியல் அமைப்பு, ஏற்பட்ட பூகம்பங்கள், சுனாமிகள், அவை பற்றி நடந்த ஆய்வுகள் எல்லாவற்றையும் தங்கள் நூலில் விவரமாக அலசியிருக்கின்றனர். இந்த அலசலில் தெரியவரும் முக்கியமான விவரங்கள் மூன்று. 1. கல்பாக்கம் முதல் வேதாரண்யம் வரையிலான நிலப்பிளவு பகுதியின் காந்த மண்டலம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் கடல்தரையிலிருந்து பிதுங்கி எழுந்திருக்கக்கூடிய அமைப்புதான். இதுதான் எரிமலைப்பகுதி. இதில் ஏற்படும் மாற்றங்கள் கல்பாக்கம் அணு உலையின் கீழாக செல்லும் நிலப்பிளவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி இந்திய அணுசக்தித்துறை இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. 2. கல்பாக்கம் பகுதி சுனாமிகள், பூகம்பங்கள் பற்றிய அணுசக்தித் துறையின் ஆய்வுகளும் மிகுந்த குறைபாடுகளுடனே இருக்கின்றன. சுனாமி 2004ல் வந்தபோது அங்கே சீஸ்மோகிராஃப் வேலை செய்யவே இல்லை. 24 மணி நேர எமர்ஜன்சிக் கட்டுப்பாட்டு அறை இயங்காமல் பூட்டியே கிடந்தது.3. கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் பாலாற்றுப் பள்ளம் சுனாமி அலை வேகத்தை அதிகரிக்கக்கூடியது. இங்கிருந்து சுனாமி உலையை அடைய பத்து நிமிடம் போதுமானது.

 

     கூடங்குளம் பகுதியிலும் நிலவியல், கடல்சார்ந்த சுனாமி பூகம்ப ஆய்வுகள் அணுசக்தி துறையால் முறையாகச் செய்யப்படவில்லை. அங்கே பழைய எரிமலைக் குழம்புகள் இளகிய நிலையில் பாறைகளாக உள்ளது பற்றிய ஆய்வை அணுசக்தித் துறை பொருட்படுத்தவே இல்லை. 2004ல் சுனாமி வரும் வரை,அந்தப் பகுதியில் சுனாமி வரவே வராது என்றுதான் அணுசக்தித் துறை சொல்லிக் கொண்டிருந்தது. வந்தபிறகு இனிமேல் 9 மீட்டருக்கு மேல் அலை வராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

     செர்னோபில், புகொஷிமா விபத்துகள் சுற்றிலும் 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை முழுமையாக சிதைத்தவை. கல்பாக்கத்திலிருந்து அதே சுற்றளவில் இருப்பவை சென்னை நகரம், மணலி, புழலேரி, திருப்போரூர், செம்பரம்பாக்கம், தரமணி, கோயம்பேடு, எழும்பூர், கோவளம், மகாபலிபுரம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை துறைமுகம், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் 75 சதவிகித தொழிற்சாலைகள் இங்கேதான் இருக்கின்றன. செர்னொபிலை விட 50 மடங்கு அதிக மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.

 

     தென்மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக கூடங்குளத்தைத் தொடங்காதே என்று சொல்வது மட்டும் போதாது. வட தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக கல்பாக்கத்தை மூடு என்றும் இனி அழுத்திச் சொல்லவேண்டும் என்ற அவசரத்தை உணர்த்துகிறது புகழேந்தி-ரமேஷின் அற்புதமான ஆய்வு நூல்.இந்த வாரப் பூச்செண்டு இவர்களுக்கே.

 

நன்றி : ஞாநி

 


by uma   on 16 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
19-Mar-2012 07:46:13 V said : Report Abuse
சரியான கேள்விகள்!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.