LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

பொருட்பாகுபாடு

    1-6) கார்காலம் மாலைப்பொழுது
    கார்காலம் இப்போதுதான் தொடங்கியதாகலின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. 'பெரும் பெயல், என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற்பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்னுஞ் சொல்லுவர். இங்ஙனம் முதற்பெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிய சொல்லப்பட்டது. தலைவன் குறித்துப் போன கார்காலம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைந்து மயங்கி இருத்தலும், அவ்வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சொல்லப்படுதலின், அவற்றிற்கு இசைந்த மாலைப்பொழுதை முதலிற் கூறினார் என்றறிக.

    (7-24) தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும்

    வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வந்தும் அவன் வந்திலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தே யுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந் தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக்கொட்டிலில் நின்ற ஓர் இடைப்பெண், புல் மேயப்போன தாய் இன்னும் வராமையால் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கன்றுகளைப் பார்த்து ' நீங்கள் வருந்தாதீர்கள், நுங்கள் தாய்மார் கோவலரால் ஓட்டப்பட்டு இப்பொழுதே வந்துவிடுவர்' என்று சொல்லிய நற்சொல்லை அம்முதுபெண்டிர் கேட்டு வந்து, "அன்னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந் தறுவாயில் அவன் படைமறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல்லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர்வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தாதே" என்று அம் முதுபெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்துகின்றாள்.

    (24-78) பாட்டின் பொருட்காட்சி தலைமகன் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது;
    (24-28) பாசறையின் அமைப்பு

    இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ் செடிகளையும் பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடிவீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது.

    (25-79) பாடிவீட்டினுள் அமைதிகளுந், தலைமகனுடைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

    இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடிவீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குந் தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணாம, அவற்றினால் நெற்றியைத் துடைத்துக் கொண்டுங், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பறிக் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியும் கவளம் ஊட்டுகின்றார்கள்.

    இனி, அப்பாடி வீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்களுக்கு இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு சமைக்கப்பட்டதையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப்புட்டிலை அதில் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களை யெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத்துச் செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை ஊன்றி, அவற்றொடு படல்களை நிரைத்து வளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக்காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலநிறமுடைய மதில் திரையை வளைத்துச் செய்த வீட்டின் வைப்புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத்திளைய பெண்கள் கச்சிலே கட்டப்பட்ட திண்ணிய வாளினை உடையராய் நெய்யைக் கக்குகின்ற திரிக் குழாயினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின்சுடர் குறையுந்தோறுந் திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப் போன நடுயாமத்தில் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்ஙனம் நடுயாமம் ஆதலும், பொழுது அளந்தறிவோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வழ்த்ஹ்டிக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகைவட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலிவிட்டு அழகிதாக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற் போய்ப் படுக்கையில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனந் தலைவன் பள்ளி கொள்ளும் உள்ளறையின் முன்திரைக்குப் புறத்தேயுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் ஊமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நாளைக்குச் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங்கொள்ளானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட்டியுந் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்து போன போர்மறவரை நினைந்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும், மிகுந்த இரக்கம் உடையோனாய் ஒருகையை அமளி மேல்வைத்து ஒரு கையினால் முடியைத் தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றான்.

    (72-80) தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும்

    இனி, இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலையோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச் சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன் பாசறை வீட்டில் இனிது துயில் கொண்டிருக்கின்றான்.

    (80-88) பாட்டின் பொருட்காட்சி துயரமுந் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குந் தலைமகளின் முல்லைக்காட்டு மாளிகைக்குத் திரும்பவும் மாறுகின்றது.

    இனி, இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணாத தலைமகள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சொற் கேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையுங் கேளாமற் வருந்துகின்றவள், "இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுங்கொலோ" என்று நெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக் கொண்டுஞ், சுழன்று விழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றாமை யுணர்வும் அதனைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்று சேர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் பெருமூச்செறிந்து நடுங்கியும், அந்நடுக்கத்தால் உடம்பிற் செறித்த அணிகலங்கள் சிறிது சுழலப் பெற்றும், ஏழடுக்குமாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலே மழை சொரியும் ஓசை காதில் விழ இம்மாலைக் காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றாள்'

    (89 - முதல் கடைசிவரையில்) தலைவன் மீண்டு வருதலு,ம், நாட்டின் மழைக்காலச் சிறப்பும்

    இனித், தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்து கொண்ட பெரும் படையடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊது கொம்புஞ் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீலமலர்களைப் பூக்கவுங், கொன்றை மரங்கள் பொன்போல் மலரவுங், காந்தள் அழகிய கைபோல் விரியவுந், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரகங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவுங், கார்காலத்து முற்றுங் காயினையுடைய வள்ளிக்காடு பின்போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஓசையானது ஆற்றிக் கொண்டு அங்ஙனங் கிடக்குந் தலைமகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது என்க.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.