LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1267 - கற்பியல்

Next Kural >

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்?.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) கண் அன்ன கேளிர் வரின்- என் கண்போற் சிறந்த காதலர் வருவாராயின்; புலப்பேன் கொல்- அவர் வரவு நீட்டித்தமைபற்றி ஊடுவேனோ; புல்லுவேன்கொல்- அல்லது, என் ஆற்றாமைபற்றி அவரைத் தழுவுவேனோ; கலப்பேன் கொல்- அல்லது, அவ்விரண்டும் வேண்டுதலால் இருசெயல்களையும் விரவுவேனோ, இம்மூன்றுள் எது செய்யக்கடவேன்? கலத்தலாவது முன் சற்று ஊடிப் பின் தழுவுதல். ஊடல், புலவி, துனி என்னும் மூவகைச் சடைவுகளும் முறையே, தலைமகனால் தீர்வதும் வாயிலால் தீர்வதும் ஒருவகையாலும் தீராததுமாதலின், இங்குப் புலத்தலென்றது ஊடலையே என அறிக. வருமுன்பே புல்லுதலையுங் கலத்தலையுங் கருதியமையின் விதுப்பாயிற்று. இனிக் கலப்பேன்கொ லென்பதற்கு ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ வென்றுரைப்பாரு முளர். என்பது பரிமேலழகருரை. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை. 'ஊடல்' முதலிய முச்சொல்லும் நுண்பொருள் வேறுபாடின்றியும் வழங்கப்படும்.
கலைஞர் உரை:
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.
சாலமன் பாப்பையா உரை:
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.
Translation
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?.
Explanation
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
Transliteration
Pulappenkol Pulluven Kollo Kalappenkol Kananna Kelir Viran

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >