LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

புதுக்கவிதைகளில் தொன்மம் (ஓர் ஆய்வு ) : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்

முன்னுரை

 

கவிதை என்பது மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமன்று. படிப்பவரின்  நெஞ்சில் சிறந்த கருத்தை விதைக்கவும் வேண்டும்.  கவிதை முருகியல் இன்பம் தரவல்லது. மரபுக்கவிதை, புதுக்கவிதை எதுவாயினும் எழுதுவோரின் எண்ணம் படிப்பவரின் மனத்தில் உதிக்கவேண்டும்.  வாழ்வைப் பிரதிபலிக்கின்ற போதுதான்  கவிதை சிறந்ததாகப் போற்றப்படுகிறது.  மனச்சுமையிலிருந்து  மனிதனை விடுதலை செய்வதாகவும் கவிதை இலங்க வேண்டும்.

 

கவிதையில் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன.  பல்வேறு குறியீடுகளின் வாயிலாகக் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.  அவற்றுள் தொன்மக் குறியீடும் ஒன்று. தொன்மக் குறியீட்டின் வாயிலாய் இன்றையப் புதுக்கவிதைக்காரர்கள்  சமுதாய நடப்பியலை உணர்த்துகிறார்கள். அவர்களுள் கவிக்கோ அப்துல்ரகுமான்  எவ்வாறு உணர்த்துகிறார், எத்தகைய தீர்வினைத் தருகிறார்  என்பதைச் சுட்டிக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.


தொன்மம் விளக்கம் 

 

தொன்மம் என்ற சொல் புராணவியலைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் MYTHOLOGY  என வழங்குவர். புராணக்கதையை ஆங்கிலத்தில்  MYTH என்பர். புராணம் என்பது வடசொல்லாக இருப்பதால் அதற்கு இணையாக தொன்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தொன்மை  தானே  உரையொடு  புணர்ந்த  பழமை  மேற்றே எனச் செய்யுளியல் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடும் தொன்மையின் பரிணாம நிலையே தொன்மம்.

 

தொன்மம் என்பதன் மூலம் நம் முன்னோர் எண்ணங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்கிறோம் என்பார் கதிர். மகாதேவன்.  ஒவ்வொரு புராணமும் ஏதோ ஒரு உண்மையைக் கூற விழைகிறது. அது அடுக்கடுக்காக அமைந்த பல்வேறு செய்திகளால் மறைக்கப்பட்டு கிடக்கிறது.  வேண்டாத செய்திகளை எல்லாம் அகற்றிக் கொண்டே வந்தால் வேண்டிய செய்திகளாகிய உண்மை இறுதியில் நிலைத்துவிடும் என்பார் மார்க்சுமுல்லர்.

 

தொன்மத்தின்  தோற்றம்

 

ஓர் இனம்  காலம் காலமாக  இந்நிலவுலகில் வாழ்ந்ததனால் உருவாகிய பண்பாட்டின் விளைவாகத் தொன்மங்கள் தோன்றின.  பழங்கதைகளாம் தொன்மங்கள் கூட்டு கற்பனையாலும், கூட்டு அனுபவத்தாலும் கிளர்ந்து எழுந்தவை.  சமயங்கள் தோன்றியபோது ஒவ்வொரு சமயத்தின் முன்னோடிகளின் செயல்களும், அக்கால நிகழ்வுகளும் பிற்காலத்தில் தொன்மமாயின.  ஒவ்வொரு சமயத்தோடும் கதைகள் பின்னப்பட்டன, அவை இயல்பு நவிற்சியாயினும் இயற்கை இகந்த நிகழ்ச்சியாயினும் அவை புராணம், காப்பியம் என வடிவம் பெறுகின்றபோது அப்புராண  காவியங்களின் மாந்தர்கள், அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் பின்வந்த மாந்தர்க்கு முன்னோட்டமாய்ப் பெயர் சொல்லிச் சுட்டப்பட்டது.


தொன்மம்இந்தியக் கவிஞர்கள்

 

மேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கங்களால் இந்திய, தமிழிலக்கியத்தில் நிறைய மாறுபாடுகள் ஏற்பட்டன.  அவற்றுள் ஒன்றுதான் தொன்மக் குறியீடுகளைத் தாம் உணர்ந்து, உணர்த்த வந்த எண்ணத்திற்கு உறுதுணையாக்கிய பண்பு.  வங்கத்தில் நசுருல் இசுலாம்  என்கிற புரட்சிக் கவிஞர் இந்தத் தொன்மக் குறியீட்டை மிகுதியாகக் கையாண்டார். பாரதியார் உருசியப் புரட்சியைப் பாடுகையில் காளி கடைக்கண் வைத்தாள் ஆங்கே என்று சுட்டுகிறார்.

 

நசுருல் இசுலாம் இந்துபெண்ணை மணந்த ஓர் இசுலாமியர்.  அவர் இந்து முசுலீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர்.  இந்து சமய இலக்கியங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர். தொன்மக் குறியீடுகளைத் தமது புரட்சிப் பாடல்களில் எளிதாகக் கையாண்டு வெற்றி பெற்றார்.  தமிழில்  தொன்மக் குறியீட்டை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் கவிக்கோ அப்துல்ரகுமான் ஆவார். இவரது கவிதைகள்  அடித்தளம் செறிந்தவை. மரபுக்கவிதையின் வேர்பார்த்த இவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்.

 

தன்கவிதைகளைப் பற்றி இவர் குறிப்பிடும்போது இவை உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி.  என் தவம் கலைக்கப்பட்ட போது திறந்த என் நெற்றிக்கண்  நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம். என் மையின் பிரளயம்.  அசிங்கங்களை, அவலங்களை  நோக்கி நீண்ட என் சுட்டு விரல் என்பார்.

 

தமிழ்நாடு எனும் ஏட்டில் மண் என்ற தலைப்பில் இவர் எழுதிய புதுக்கவிதை முதன்முதலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் அதைப் பலமுறை படித்துச் சுவைத்துப் பாராட்டினாராம்.                                                                                                    

 

கல்லூரியில் படிக்கும்போதே சர்ரியலிச உத்திகளை மரபுக்கவிதைகளில் புகுத்தி எழுதிப் பார்த்தவர்.  இவரது  கவிதைகள் சோதனை முயற்சியின் வெற்றிக் கனிகளாகும். முப்பதாண்டு காலமாக மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் எழுதி வந்தாலும் நூலாக  வெளிவந்துள்ளவை பெரிதும் புதுக்கவிதைகளே ஆகும். பலரின்  புதுக்கவிதைகளில் எழுதியவரின் தனித்தன்மையைக் காண்பதென்பது  அரிதாக உள்ளது. ஆனால் இவரோ தனக்கென்றே தனியான ஒரு பாணியை வகுத்துக் கொண்டார். எடுத்துக்  கொண்ட பொருண்மைக் கேற்ற சொற்சிற்பம் ஆழமாகவும், அழுத்தமாகவும், அழகியல் பாங்கோடும், எள்ளல் முரண் இவற்றோடு சமூகத்தின், மக்களின் குரல்தான் என்கிற துணிச்சலும் மேலோங்கி நிற்கிறது.


தொன்மப்  படிவங்கள்


மேலை நாட்டுப் புதுக்கவிதைக் காரர்களுக்கு  கிரேக்க, இலத்தின், எபிரேயத் தொன்மங்களும், உரோமர் வரலாறுகளும் கைகொடுப்பது போலத்  தமிழின் புதுக்கவிதைக்காரர்கட்கு இந்தியத் தொன்மங்கள், தமிழ்க்காப்பியங்கள், வரலாற்று நிகழ்ச்சிகளின் தாக்கங்கள் கைகொடுக்கின்றன.

 

எல்லா வகையிலும் புதுக்கவிதைக்காரர்களிடமிருந்து மாறுபட்டும், வேறுபட்டும் தனித்து விளங்கும் அப்துல்ரகுமானின் புதுக்கவிதைகளில் தொன்மத்தாக்கம் நான்கு வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றது. (1) இந்திய இந்து சமயத் தொன்மங்கள் (2) தென்னாட்டுக் காப்பிய வரலாற்றுத் தொன்மங்கள் (3) எபிரேயத் தொன்மங்கள் (4) இந்திய புறச்சமயத் தொன்மங்கள்.


தொன்மம் பயன்படுத்தும் காரணம்

 
அப்துல்ரகுமான் ஏன் தொன்மக் குறியீடுகளைக் கையாளுகிறார் என்பதற்குத் தம் ஆய்வேட்டில் அவர் எழுதியிருப்பது  இந்தியத் தொன்மங்கள் இக்காலத்து உணர்வுகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவதற்கேற்ற மூலமாதிரிகள் பலவற்றையும் கொண்டுள்ளன. மேலும் இவை காலங்காலமாக மனித உணர்வுகளோடு உறவு கொண்டு வாழ்ந்து வருவதால் உணர்வுகளைத் தூண்டுவனவாகவும், எளிதில் புரியக்கூடியவைகளாகவும் இருக்கின்றன. அதனால் உணர்வைத் தூண்டும் உயர்ந்த வெளிப்பாட்டை நாடும் கவிஞர்கள் தொன்மங்களை விரும்பி கையாளுகிறார்கள்.

 

தொன்மக் குறியீட்டின் மற்றொரு முக்கியமான பயன் அதன் பன்முகப் பொருளாற்றலாகும்.  ஏதேனுமொரு தொன்மப் பாத்திரத்தையோ, நிகழ்ச்சியையோ

  

குறியீடாக ஆண்டாலும், அப்பாத்திரத்திற்கும் நிகழ்ச்சிக்கும் தொடர்பான அத்தொன்மத்தின் எல்லா கருத்துகளும் நினைவுக்கு வந்து குறியீடு பயன்படுத்தப்பட்ட சூழலுக்கேற்ப வேண்டிய கருத்துகளையும் உணர்வுகளையும் சுரந்து கொண்டேயிருக்கும் அற்புதம் தொன்மக் குறியீட்டில் நிகழ்கிறது என்கிறார்.


விவிலியத்  தொன்மங்கள்

 

தொன்மங்கள் மனித ஆசைகளின் படிமங்கள்.  அவன் தன் உடலில் ஊறிய கிளர்ச்சியின் திளைப்பில் வெளிப்போந்த உளவியல் தொன்மையின் அடையாளங்கள். ஆதாம், ஏவாள் தொன்மம் இத்தகைய உணர்ச்சிகளுக்கு விழுமிய சான்றாகும்.  ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைச் சுவைக்கக்கூடாது என்ற தடை மீறப்படுகிறது. இது மனிதன் இயற்கைப் போக்கிற்கு அடிமையாவதைச் சுட்டிக் காட்டுகிறது.

ஆதியில் 

ஏதேன்  தோட்டத்தில் 

விலக்கப்பட்ட கனிமரத்தை 

வைத்தவனே 

இதோ….உன் 

சாபத்தைப் பழிவாங்கும் 

சிலுவை மரங்கள் 

இந்த பசிகொண்ட மரங்கள் 

மாமிசப் பட்சிணிகளாகிவிட்டன


இந்தியப் பெருநாட்டின் ஆட்சி அலங்கோலத்தைக் குறிக்கும் உள்ளக்குமுறல் இது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சித்தலைவர்கள் மக்களின் உயிரைக் குடிக்கும் கொலைக்காரர்களாக மாறியுள்ளனர். தன்னை வறுத்திக் கொண்டு தம்முடைய சுகவாழ்வைத் தியாகம் செய்து, தன்னலத்தை மறந்து மக்களின் வாழ்வைத் தன் வாழ்வாக நினைத்துப் பாடுபட்ட தலைவர்களால் கிடைத்த சுதந்திர நாட்டில் உரிமை கிடைத்த மதமதப்பில், எதற்காகப் பெற்றோம் என்பதையே மறந்து அதிகாரப் போதையில், காவலாக இருக்க வேண்டிய கரங்கள் கழுத்தை நெரிக்கும் கரங்களாக மாறிவிட்டன என்பதைச் சிலுவை மரங்களின்  குறியீட்டில் சுட்டிக்காடடுகிறார்.


சுதந்திரம் எட்டாக்கனியாக, விலக்களிக்கப்பட்டக் கனிமரமாக இருந்தது நல்லவர்கள் சிலரால் பிடுங்கிக் கொடுக்கப்பட்டது. அதன்பலன் நாட்டைத் தன் வீடாக ஆக்கிக் கொண்டனர். தம் சொத்தாக மாற்றிக் கொண்டனர். அன்பு, அறம், கருணை இருக்கவேண்டிய மனத்தில் அதிகாரம், மமதை, சுயநலம் மேலோங்கியது. அரவணைக்க வேண்டிய கரங்கள் அறுக்கும் கத்தியாக மாறிவிட்டது என்பதை மாமிசப் பட்சிணிகளாக மாறிவிட்டன என்பதிலே காட்டுகிறார்.  

 

கிறித்துவ வேதப்படி கடவுள் படைப்பில் ஆதாமும், ஏவாளும் நிர்வாணமாகப் படைக்கப்பட்டனர்.  அறிவுக்கனி உண்ணும் முன் அவர்கட்கு நன்மை, தீமை தெரியாமல் இருந்தது என்பதும், சாத்தான் பாம்பு வடிவில் அறிவுக்கனியைப் புசிக்க வைத்தான் என்பதும் கிறித்துவத் தொன்மம்.


இங்கே கவிஞர்

சர்ப்பமே  உன்  சட்டையின்மேல் 

உடலை  அணிந்துகொள் 

ஆதாமின்  காதலிலே 

தோலுரித்துக் கொள்நீ 

நான் 

நிர்வாணத்தை 

உடுத்திக்  கொள்கிறேன்  என்கிறார்.

 

இதில் சமூக முரண்களைச் சுட்டுகிறார்.  அறநெறிகளுக்கேற்ப, சமூகப் பண்புகளுக்கேற்ப ஒழுங்குபட்ட வழிமுறைகளில் வாழ்வதுதான் சமூகம் அங்கீகரித்த மதிப்பாகும்.  அவற்றையெல்லாம் காலில் மிதித்துத் தனக்கென்றே தனி நீதிகளை உருவாக்கிக் கொண்டு உலவும் அக்கிரமங்களைத் தன் வழிகளாகக்  கொண்டவர்களைப் பற்றிக் கூறும் முகத்தான் உடலுக்குச் சட்டையல்ல, சட்டையின் மேல் உடலை அணிந்துகொள் என்கிறார்.  அதைப் பார்க்கும் சமூக உறுப்பினர்கள் உண்மை, பண்பு, ஒழுக்கம் என்ற தோலினை உரித்துக் கொள்ளவேண்டும்.


சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலத்தைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் எடுத்துச் சொல்லியும் திருந்தாத நிலையில் தன்னுடைய ஆற்றாமையை, தன்னலத்தை, பொறுப்பின்மையை சர்ப்பமென்னும் குறியீட்டிலே  குறிக்கிறார்.


தேவவேடம்  போட்ட  சாத்தான்கள்


இலங்கையில் ஈழத்தமிழரின் போராட்டம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக  சிங்களவரின் சூழ்ச்சியினால் வென்றெடுக்க முடியாமல்  நாள்தோறும் நசுக்கப்படுகிறது.  முற்றும் துறந்த துறவியே பரத்தையர் சேரியில் பரத்தனாக வாழ்வதுபோல் அன்புறவையும் கொல்லாமையையும் இருகண்களாகக் கொண்ட பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் சிங்களவரின் கொடுமையை உலக நாடுகள் எவையும் கண்டு கொள்ளவில்லை. உலகறியப் படுகொலை செய்யப்பட்டும் பொருளிழப்பும் உயிரிழப்பும் நாளும் மிகுகையில்  மொழியால் இனத்தால் தொடர்புடைய நம்மவரை அழிக்கும் ஈழத்தின் நிகழ்ச்சிகளைக் கண்டு உணர்வுடைய எவரும் அமைதியாக இருக்க முடியாது. மனிதர்நோக மனிதர் பார்த்திருக்க முடியாது என்ற  கோபத்தின் மொழிகளே இக்கவிதை.           

அங்கே  

பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன 

நாமோ 

எத்தனை விக்கட்டுகள் விழுந்தன  

என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம் 

அவர்கள் 

கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் 

நாமோ 

கற்பில் சிறந்தவள்  

கண்ணகியா? சீதையா ?

என்று 

பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம் 

அவர்கள்  

சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்

நாம் 

அதரபாணம் பருகிக் கொண்டிருக்கிறோம் 

இதில் வியப்பேதும் இல்லை 

அவர்கள் கவரி மான்கள் 

நாம் கவரிகள் 

இதோ  

தேவ வேடம் போட்ட சாத்தான்கள்  

வேதம் ஓதுகின்றன.    என்ற உள்ளக் குமுறல்களில் உலகம் முழுதும் பரவியுள்ள ஒரு விளையாட்டின் கூறுதனை லாவகமாக உவமையாக்கித் தம் மனகொதிப்பினை, தமிழரின் கையாலாகாத கோழைத் தனத்தை மனம் வெதும்பிச் சாடுகிறார்.


உலகத்தின் இதய மையம் கொழுந்து விட்டு எரியும்போது தாய்த்தமிழகத்திலும், அதனை உள்ளடக்கிய இந்தியாவிலும் பல அரசியல் வாணர்கள் பொய் புரட்டுகளை, உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறுவதோடு, அண்டை வீடு எரிந்தால் எரியட்டும் தம்வீடு எரியாதிருந்தால் போதும் என்று பேசும் இன உணர்வு அற்றவர்களைச் சாடுகிறார்.


அவர்கள் மயிர் இழப்பின் வாழாத கவரிமான்கள். இங்கிருப்பவர்கள் உண்மையானவர்கள் வாய்வேதம் பேசுகின்றனர்.  ஈழத்தமிழரின் அறப்போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி இலங்கையரசின் கொடுமைகளை நியாயப் படுத்துபவர்களைப்  பார்த்துச் சாத்தான்  தொன்மத்தைக் கூறி விளக்ககிறார். 


மெசியாவின்  கோல்


எழுத்து தெய்வம் எழுதுகோல் தெய்வம்  என்பான் பாரதி.  ஈட்டியினும் எழுதுகோல் வன்மையுடையது அதனால்தான் வள்ளுவர், கொள்ளற்க சொல்லேருழவர் பகை  என்கிறார்.  மக்களின் மேலான வாழ்விற்குப் பயன்படாமல் பணம் பண்ணுவதில் குறியாக இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டு  ஒழுகும்  பேனாக்கள் என்ற கவிதையில்

மெசியா ஏசுவின் கையைத்  

துச்சாதனின் கை ஆக்கிவிடாதீர்கள் 

சமுத்திரத்தையும் பிளக்கும் 

மேசேயின் கைத்தடியல்லவா இது

நீங்களோ அதனால் 

சாக்கடைகளை அல்லவா 

கிளறிக் கொண்டிருக்கிறீர்கள்

இரு வகையான தொன்மங்களை இதிலே இணைத்திருக்கிறார்.  கிறித்துவ தொன்மத்தையும், பாரதத் தொன்மத்தையும் எழுதுகோலுக்குக் குறியீடாகக் காட்டுகிறார்.  மேசேயின்  கை பிறரின் துயர்களை நீக்கியது. கடலைப் பிளந்து மக்களைக் கரை சேர்த்தது. அன்பும் பரிவும், ஆற்றலும் உடைய கை. இந்தக் கையை கழிகாமத்திற்கும், பணத்திற்குமாக துச்சாதனின் கையாக  ஆக்கி விடாதீர்கள்.  புனிதமான எழுத்துக்களை எழுத வேண்டிய கை அதர்மத்திற்காக நீளுவதா? எழுத்தை நேர்மை, நியாயம், உண்மை போன்ற போர்வைகளால் அலங்கரிக்க வேண்டுமேயன்றி நிர்வாணப் படுத்தக் கூடாது. மக்களை நல்வழிப் படுத்துதல் எழுத்தாளனின் கடமை. உன்னதமான நோக்கத்தை அடையும் கொள்கைப் பிடிப்பினை உருவாக்கவதுதான் எழுத்தின் பணி.  இன்று அந்தக் கைத்தடி என்னும் எழுதுகோலால் சிவப்பு எழுத்துகளையும், மஞ்சள் கருத்துகளையன்றோ சாக்கடையைக் கிளறுவதைப் போல மக்கள் நெஞ்சில் தெளித்துக் கீழ்த்தர மான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்குகிறார்.


யூதாஸ்


எந்தவொரு  வளர்ச்சியையும் ஆக்கத்தையும் கண்டு ஏற்காது முனைந்து நிற்பது பொறாமை.  இதனை அழுக்காறு என்பார் வள்ளுவர். துரு இரும்பை சீரழிப்பதைப்போல பொறாமை மனிதனைச் சீரழிக்கிறது. அது காட்டிக் கொடுக்கும் தன்மையது.  மனித வரலாற்றில் காட்டிக் கொடுக்கும் பொறாமையின் நிழல் படியாத பக்கங்கள் மிகக் குறைவு. காட்டிக் கொடுப்பது தன்னலத்தின் உயிர்மூச்சு. மக்கள் நல நாட்டத்தில்  ஈடுபடும் எந்தவொரு மாந்தனையும் காட்டிக்கொடுப்பதும் அதனால் வரும்  செல்வத்தைப் பெறுவதும் வழிவழி வரும் ஒரு சமுதாயத்தீமையாகும். ( 7 ) அத்தீமையின் கறைபடிந்த ஒருவன் யூதாஸ். ஒரு முப்பது வெள்ளிக்காசுக்காக ஏசுவைக் காட்டிக் கொடுத்தவன் இன்றும் யூதாசின் கால்முளைகள் உள்ளன என்பதை

ஏசு 

உயிர்த்தெழுந்தாரோ  இல்லையோ 

யூதாஸ்

உயிர்த்தெழுந்து விட்டான்

தனிமனித வாழ்விலும், கமூக வாழ்விலும், அரசியல் நிலையிலும் ஒருவரையோ, ஒரு குழுவையோ, ஓர் இனத்தையோ, ஓர் ஆட்சியையோ காட்டிக் கொடுத்துப் பிழைப்பை நடத்துகின்ற  தன்மையை யூதாஸ் என்ற ஒற்றைச் சொல்லிலே புரியவைத்து விடுகிறார்.


பாரதம்


அறங்கள் மறங்களாக மாறிவிட்ட இக்காலத்தில் எல்லாம் தலைகீழ் மாற்றங்களாகி விட்டன. இதிகாசத் தொன்மப் பாத்திரங்கள் வழி நிகழ்கால அதர்மங்களைக்  காட்டுகிறார்.


அவதார வாசல்தோறும்

சிவப்பு முக்கோணக்

கம்சர்கள்

காமத்தின்

தர்மார்த்த மோட்சங்களை

உபதேசிக்கும் புத்தலைத் தொடர்கதையை……………..

எண்ணிக்கையே  தர்மமாகிய

குருஷேத்திரத்தில்  வெற்றிகளெல்லாம்

கௌரவர்களுக்கே   போய்சேர்கின்றன

அவர்கள் விருந்து மண்டபத்தில்

காபரே  ஆடுகிறாள் பாஞ்சாலி


குற்றங்களை மறைக்கக் குற்றச்சாட்டைக் தருபவரையே குற்றவாளி ஆக்கவதும், சுவடு இல்லாமல் அழிப்பதும் வறுமை காரணமாக உடலை  விற்பதும், நாகரிக மோகத்தால் ஒழுக்கம் கெடுவதும் பெண்களை விளம்பரப் பொருளாய் ஆக்குவதும், பெரும்பான்மை இருக்கிறது என்பதால் திருடர்கள் ஆட்சி பீடம் ஏறுவதும் இன்றைய நிலையில் சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள். இந்த முரண்களை தொன்மத்தின் வாயிலாய் வெளிப் படையாக சொல்லாமல்  புரிய வைக்கிறார்.

 

மாயமான்களின்  மோகத்தில்

இராவணர்களிடம்

சோரம்  போகும்  சீதைகள்

நமக்கென்று தனியான பண்பாடு, நாகரிகம் உள்ளது.  வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணம் வாழ்வியலின்  கூறுகளை வகைப்படுத்திக் காட்டுகிறது. ஒருவனுக்கு  ஒருத்தி என்ற ஒழுக்கம் நம் சமூக அமைப்பில் போற்றிப் பாதுகாத்து வருவது  அனைவராலும் வியந்து பார்க்கப்படும்  தனிச்சிறப்பாகும். இக்காலத்தில் அந்நியமோகம் நம் வாழ்வின் அடிப்படை ஒழுக்கத்தைச் சிதைக்கும் நிலைக்கே கொண்டு போய் விட்டது. நம்முடைய தனித்தன்மைகளை இழந்து வருகிறோம்  என்பதை எத்தனை லாவகமாக தொன்மத்தின் வாயிலாய் காட்டுகிறார்.

 

ஒப்புதல் வாக்கமூலத்தில் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் அநியாயத்தைச் சுட்டுகிறார்.

        இந்திரனாகி

          உன்னைக்  கற்பழிப்பவர்களும்  நாம்தான்

          கெளதமனாகி

          உன்னை  சபிப்பவர்களும்  நாம்தான்

ஆண்தான் பெண்மையின் இழிவுக்குக் காரணம் என்பதை  இத்தொன்மைக் குறியீட்டின்  வாயிலாய் ஆணுலகத்தின் ஒட்டு மொத்த வாக்குமூலத்தைத் தருகிறார். பிறன்மனை நோக்காத பேராண்மை இல்லாதபோது  இந்திரனாய் மாறும் அடாவடித்தனத்தைச் சுட்டுகிறார். தன்னை அறியாமல் செய்யும் குற்றத்தைப் பொறுப்பதுதான் மனிதப்பண்பு.  அகலிகையின் குற்றம் ஏமாற்றப்பட்டதால் நிகழ்ந்தது. அதற்காகச் சபிப்பது ஆணின் ஆணவத்தைத்தான் காட்டுகிறது என்பதைத் தொன்மச் சொல்லில் புரியவைத்து விடுகிறார்.


அவன்  அசுவமேதப்

புரவியின்  குளம்புகளில்

நட்சத்திரப்புழுதி  வியர்வையின்

சுயதாரை வார்ப்பில்  விசுவரூபமெடுக்கும்

இந்த  வாமனுக்கு  வானங்களே

நீங்கள்  போதமாட்டீர்கள்


பாட்டாளிகள்  பாடுபடும் பொழுது  சிந்தும் வியர்வைத்துளிகள் அற்பமானவை அல்ல. அந்தப் பாட்டாளியின் வளர்ச்சியில் குறுக்கிடும் எவையும் அவன் முன் தூளாகிவிடும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும் வெற்றிக்கு, நாடுகளை வெற்றி கொள்ளஅனுப்பும்  அசுவமேதக் குதிரையின் பாய்ச்சலினைக் குறியீடாக்குகிறார்.  


பொங்கியெழும் அவர்களின் புரட்சிக்கு முன்னால் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதற்கு வாமன விசுவரூபத்தைக் காட்டுகிறார்.


முடிவுரை    


தொன்மக் குறியீடுகளின் வாயிலாகச் சமுதாயத்தில் நிலவுகின்ற சீர் கேடுகளை, அரசியல் கொடூரங்களை, கலாச்சார ஒழுக்கச் சீரழிவுகளை, தனி மனித நெறிபிறழ்ந்த நடத்தைகளை, விகாரங்களைப் படிப்பவர்க்கு நேரடியாகக் கூறாமல்  இக்கருத்துகளை உய்த்துணர வைக்கிறார். சீரழிவுகளைச் சாடுகின்ற தொனியில் சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் எத்தகைய பண்புகளோடு திகழ வேண்டும் என்பதையும் உணர்த்தி விடுகிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.

 

துணை  நூல்கள்

1)தொல்காப்பியர்     ………..                    தொல்காப்பியம்

2)கதிர். மகாதேவன்  ……….                    தொன்மம்

3)சு. சண்முகசுந்தரம் ………..                  நாட்டுப்புறவியல்

4)தே. லூர்து …………..                             நாட்டுப்புற வழக்காறுகள்

5)திருவள்ளவர்  ………..                         திருக்குறள்

6)பாரதியார்   ………                                பாரதியார் கவிதைகள்

7)அப்துல்ரகுமான்  ……..                        புதுக்கவிதையில் குறியீடு

8)அப்துல்ரகுமான்……..                          பால்வீதி

9)அப்துல்ரகுமான்………                          சுட்டுவிரல்

10)அப்துல்ரகுமான்…….                          நேயர்விருப்பம்

11)அப்துல்ரகுமான்……..                          ஆலாபணை

 

- புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்

by Swathi   on 25 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
09-May-2015 10:21:20 ரா. சந்திரசேகரன் said : Report Abuse
கட்டுரை நன்றாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.