LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பிய விதிகளும் தொல்காப்பியமும்

தமிழ் மொழியின் இலக்கண நூல்களுள் தலைசிறந்தது தொல்காப்பியம். இதன் ஆசிரியர் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி அறிதற்குரிய தமிழிலக்கணத்தைத் தந்துள்ளார். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புவதே மரபு. இலக்கண நூல்களில் கூறப்படும் விதிகள் இருவகை வழக்கிலும் பொருந்தியுள்ளமையை விளக்குவதேமுறை. அந்நிலையிலிருந்து மாறித் தொல்காப்பியம் கூறும் விதிகள் தொல்காப்பியத்துள் பெற்றிருக்கும் ஆளுமையை ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

சாரியை:
பெயர்ச்சொற்களுக்குப்பின் வேற்றுமை உருபு வரும். அதனைச்சார்ந்து சாரியை நிற்கும். சாரியைகள் எழுத்தைச் சார்ந்து வருவன; மொழியைச் சார்ந்து வருவன என இருவகைப்படும்.

எழுத்துச்சாரியை:
எழுத்தைச் சார்ந்து வருவன காரம், கரம், கான் (134) என்பனவாம். நெட்டெழுத்துக்கள் காரச் சாரியைபெறும். குற்றெழுத்துக்கள் மூன்றையும் பெறும். ஐகார ஒளகாரம் கான்சாரியை பெறும். (135-37) அகர முதல் னகரம் (1) ணகார இறுவாய் (9) ணனஃகாந் (26) என்பன குறில் மூன்றையும் பெற்றுள்ளமையைக் காட்டுகின்றன. ஆகார இறுதி (221) ஒளகார இறுவாய் (12) என்பன நெடில் காரச்சாரியை பெற்றுள்ளமையை வெளிப்படுத்துகின்றன. ஐ ஒள ஆகிய எழுத்துக்களைப் பல இடங்களில் சுட்டும் தொல்காப்பியர் அவை கான் சாரியை பெற்றுள்ளதாகக் காட்டவில்லை.

மொழிச்சாரியை:
மொழியைச் சார்ந்து வருவன ஒன்பதும் அன்னபிறவும் (120) என்பது தொல்காப்பியம். உரையாசிரியர் தம் முதலாக எட்டைக் காட்டுகிறார். ஏகாரத்தை ஏயென் சாரியை (165) எனச் சுட்டும் தொல்காப்பியம் உம் (190) நம் (191) தம், நும் (192) கெழு (481) ஆகியவற்றையும் சாரியைகளாகக் குறிக்கின்றது. பிறவும் எனக்குறிக்கும் தொல்காப்பியர் தாம் கூறிய சாரியைகளைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது ஈண்டறியத்தக்கது.

அளபெடை:
செய்யுள் சிதையாமல் காக்கப் பயன்படுவது அளபெடை. நெட்டெழுத்துக்கள் இனமான குற்றெழுத்துக்களைப் பெற்று ஓசையை நிறைவிக்கும். இனவெழுத்தில்லா ஐ, ஒள முறையே எழுத்துக்களைப் பெறும் (41-42) அளபெடை பற்றிய நூற்பாவில் (6) எழூஉதல்) என இனிமைக்காக அளபெடையைக் கையாண்டுள்ளது போற்றத் தக்கதாகும்.

ஓரசைச் சீர்களை ஈரசைச் சீர்களாக மாற்ற அளபெடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இறா அல் (343) ஒரீஇ (884) தொகூம் (350) பேஎய் (1023) என்னும் காட்டுக்களில் நெடில் இனமான குறில்களைப் பெற்றுள்ளமை புலப்படுகிறது. தொகை இ (966) என்பதில் ஐகாரம் இகரம் பெற்றுள்ளது. ஓகாரம், ஒளகாரம் அளபெடுக்கும் என்பதைத்

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப
(946)
எனவும்

அளபெடை நிலையும் காலத் தானும்
அளபெடை இன்றித் தான் வரும் காலையும்
(746)
எனவும் வழிமொழிந்து கூறும் தொல்காப்பியத்துள் இவையிரண்டும் அளபெடைகளாக இடம் பெற்றில.
எண்ணிடைச் சொற்கள்
தொல்காப்பியர் எண்ணிடைச் சொற்களாக உம் (772) ஏ (773) எனா, என்றா (774) என்று, என ஓடு (779) என்பவற்றைக் காட்டுகிறார். உம் (17) ஏ (650) ஏனா அ (1202) என்றா (556) என்று (118) என 97) ஓடு (687) என்பவற்றைத் நூலுள் கையாண்டுள்ளார். ஆயினும் இன் என்னும் சொல் எண்ணின்கண் வருமெனத் தொல்காப்பியர் சுட்டவில்லை. சொல்லதிகார உரையாசிரியர் சேனாவரையர் காப்பின் ஒப்பின் ஊர்தியன் இழையின் (72) என்பவற்றுள் இன்னெல்லாம் புணரியல் நிலைப்படைப் பொருணிலைக் குதவாது எண்ணின்கண் வந்தன. முன்னர் வருவனற்றிற்கும் ஈதொக்கும் எனக்குறிப்பிடுவது ஈண்டு ஆராயத்தக்கதாகும்.
வேற்றுமைத் திரிபுகள் : கு, ஐ, ஆன் என்பன வேற்றுமை உருபுகளாகும். இலை செய்யுளில் வருகின்ற போது அகரமாகி நிற்கும். இதனைக்

கு, ஐ, ஆன் என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணல் எச்ச மின்றே
(1592)

என்னும் நூற்பா வெளிப்படுத்துகிறது. இதற்குக்

கடிநிலை இன்றே ஆசிரியர்க்கு
(390)

கடப்பா டறிந்த புணரிய லான
(37)

என்னும் நுற்பாக்கள் சான்றாகின்றன. ஐகாரம் அகரமாகி நிற்றல் நூலூள் இடம் பெறவில்லை. மேலும்

அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐவும் இல்லென மொழிப
(593)

என ஆன் உருபு அஃறிணையில் அகரம் பெற்று வருமென வரையறை செய்கிறார் தொல்காப்பியர். ஆன் என்பது ஆன என நிற்றல் (40, 57, 68, 83.......) தொல்காப்பியத்துள் மிகுதியாகக் காணப்படுகிறது.

ஏழாம் வேற்றுமைக்குரிய இடம்பொருள் பற்றி வரும் சொல் மேல் (556) என்பதாகும். இவ் இடைச்சொல் மே என திரிந்து நிற்பதைப் பல இடங்களில் காணலாம். இதனைப்


புகுரறக் கிளந்த அஃறிணை மேன
(282)

பால்பிரிந் திசையா உயர்திணை மேன
(541)

என்னும் தொடர்களால் அறியலாம். இத்திரிபு தொல்காப்பியரால் சுட்டப்படவில்லை.

தொடை

தொல்காப்பியம் மோனை முதலாகப் பத்துத் தொடைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. மோனை, எதுகை, முரண், இயைபு (1345) அளபெடை (1346) பொழிப்பு, ஒரு உ, செந்தொடை (1347) ஆகிய எட்டைப்பற்றிய இயல்பை விளக்குகிறது. (1349-57) நிரல்நிறை, இரட்டை ஆகிய இரண்டம் பெயரளவில் சுட்டப்படுகின்றன. (1348).

தலை எழுத்து ஒப்பது மோனை., அது நீங்கலாக ஒன்றுவது எதுகையாகும். சொல்லாலும், பொருளாலும் மாறுபடுவது முரணாகும். அடிகளின் ஈறு ஒப்பது இயைபாகும். இந்நான்கு தொடைகளையும்,

உ.யிரிறு சொல்முன் உயிர் வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிற சொல்முன் மெய்வரு வழியும்
(107)

என்னும் தொடர்களால் அறியலாம். இவற்றுள் முதலிரு அடிகளிலும் உகரம் மோனை. அது நீங்கலாகச் சொல் முழுவதும் எதுகையாயிற்று. இறுதி வழி என ஒத்து நின்றன. உயிர் மெய் என்பன பொருள் முரணாயின.

நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே
குறுவெண் பாட்டின் அளவெழு சீரே
(1414)

இந்நூற்பாவில் நெடு, குறு என்பன சொல் முரண்.

எதுகை, மோனை ஆகிய இரண்டு தொடையும் கிளையெழுத்துக்களைப் பெற்று வரும். (1351)


மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்மொழிச் சுட்டே
(111)

என்னும் நூற்பாவில் ரகர உகரத்திற்கு ரகரம் இகரம் கிளையெழுத்தாக நின்று எதுகைத் தொடையாயிற்று. இந்நிலை தொல்காப்பியத்துள் மிகுதியாகக் காணப்படுகிறது. மோனை என எழுத்துப் பெற்றுவருவதைத்


தரவின் றாகித் தாழிசைப் பெற்றும்
தாழிசை இன்றித் தரவுடைத் தாயும்
(1406)

என்னும் தொடர்களில் த, தா என்பனவற்றால் அறியலாம். ஏறும் ஏற்றையும் எனத்தொடங்கும் நூற்பாவில் (1501) சேவும், மோத்தையும், போத்தும், யாத்த என நிற்கும் அடிமுதற் சொற்கள் நெடில் இனமோனைக்கு எடுத்துக்காட்டுவன.

புகா அக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழி
பகா அ விருந்தின் பகுதிக் கண்ணும்
(1053)

என்னும் தொடர்களில் அளபெடைத் தொடை பயின்றுள்ளது.

நாற்சீரான் அமைந்த அடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை வருவது பொழிப்பாகும். இத்தொடை ''இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே ''(37) என்னும் தொடரில் பொதிந்துள்ளது. இரண்டு சீர் இடையிட்டு வருவது ஒரூஉத் தொடை. இதனை ''இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே (142)'' என்னும் தொடரில் காணலாம்.

தொல்காப்பியம் கூறும் விதிகள் தொல்காப்பிய நூற்பாக்களில் பொதிந்துள்ளமையை இக்கட்டுரை புலப்படுத்தியது. கூறாத செய்திகள் பொதிந்துள்ளமை குறித்து ஆய்வுக் கண்ணோட்ட அணுகு முறை தேவை என்பதை இக்கட்டுரை வற்புறுத்துகிறது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.