LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2016-ல் அரசியல் மாற்றம் சாத்தியமா? சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றவர்களை எதிர்பார்க்கும் இளைஞர்களின் கனவு நனவாகுமா?

(முகநூலில் வந்த சில செய்திகளை உள்வாங்கி எழுதியது)

சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , அவர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் அவருக்குதான் என் ஒட்டு என்று சமூக வலைதளங்களிலும், பொது வெளிகளிலும் பேசுவதை சமீப காலத்தில் அதிகமாக கேட்க முடிகிறது . சகாயத்தின் நேர்மை மீதோ அவரின் நிர்வாக திறமை மீதோ யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன் . ஆனால் நேர்மையாளர்களையும் திறமைசாலிகளையும் இந்த மண் அங்கீகரித்து உள்ளதா ? சகாயம் முதலமைச்ச்சராவது அவ்வளவு எளிதானதா?

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு அண்ணாவிற்கே ஆலோசனை சொல்லும் இடத்தில இருந்தவர் , நடமாடும் பல்கலைகழகம் என்றும் நாவலர் என்றும் தமிழ் சமூகம் அவரை கொண்டாடியது , பேரறிஞர் அண்ணாவே "தம்பி வா தலைமை ஏற்க வா" என்று திமுக வை வழிநடத்த வாஞ்சையோடு அழைத்தார். இரண்டு முறை இடைகால முதல்வராக இருந்த அந்த நாவலர் நெடுஞ்செழியன் கற்றவர்கள் அதிகம் வசிக்கும் மைலாப்பூர் தொகுதியில் வெறும் 500 வாக்குகள் மட்டுமே பெற்று எஸ் வி சேகரை காட்டிலும் பின்தங்கி போனார் .

அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர் இந்திய அளவில் விரல் விட்டு எண்ண கூடிய சிறந்த நாடாளுமன்றவாதி , நெருக்கடி நிலையின் போது நாடாளுமன்றம் நடுங்க அதை எதிர்த்து பேசியவர் ,நாடாளுமன்ற நடைமுறைகளில் உள்ள சந்தேகங்களை தீர்க்க இன்றைக்கும் இவரை தான் தேடுவார்கள் அப்படிப்பட்ட இரா .செழியன் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நடிகை வைஜேந்தி மாலாவிடம் தோற்று போனார் .

இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யும் இடத்தில இருந்த கர்மவீரர் காமராஜர் சொந்த மண்ணில் ஒரு கல்லூரி மாணவனிடம் தோற்று போனார் ,அண்ணாவின் இறுதி ஊர்வலத்திற்கு கூடிய கூட்டம் உலக சாதனை படைத்தது ஆனால் அந்த மனிதர் வாழும் காலத்தில் தான் பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார் .

தமிழ் சமூகத்தின் தலை சிறந்த சிந்தனையாளராக, நல்ல எண்ணங்களால்தான் ஒரு சமூகம் ஏற்றம் பெற முடியும் என்று வலியுறுத்தி, தன் அமெரிக்க வேலையை உதறிவிட்டு, தாயகம் திரும்பி தன்னம்பிக்கை விதையை தமிழக மக்களுக்குள் ஊன்றிய டாகடர் எம்.எஸ்.உதயமூர்த்தி, நதிகள் இணைப்பு என்ற ஒரு சிந்தனையே இல்லாத காலத்தில் நதிகள் இணைப்புதான் இந்தியாவின் வாழ்வாதரப் பிரச்சினைகளுக்கு, வறட்சி-வெள்ளம் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்று சொல்லி 2000கிலோமீட்டர் பாதயாத்திரை சென்று நல்லவர்கள் அரசியலுக்கு வாருங்கள், உதயமூர்த்திகளுக்காக வாக்களியுங்கள் என்று சொல்லி 1996-ல் சட்ட மன்றத் தேர்தலில் நின்ற "மக்கள் சக்தி இயக்கம்" 11தொகுதிகளில் வாக்காளர்களை நிறுத்தியது. மதுரையில் நின்ற அதன் தலைவர் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி உட்பட அனைவரும் டெப்பாசிட் இழந்தார்கள்.

இன்றைக்கும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத மாமனிதர் நல்லகண்ணு தொழிலாளர்கள் நிரம்பிய கோவை தொகுதியில் தோற்றார் ,இரா .செழியன் ,நாஞ்சில் மனோகரன் ,முரசொலி மாறன் என்ற வருசையில் இன்றைக்கு எஞ்சியும்,விஞ்சியும் இருக்கும் நாடாளுமன்றவாதி வைகோ தொடர்ச்சியாக இரண்டு முறை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார் .பனித்துளியை போல பரிசுத்தமான மோகன் போன்றவர்கள் தேர்தல் களத்தில் தோல்வியை சந்தித்தார்கள்.

அரசியல் என்பது காசு வைத்து விளையாடும் சூதாட்டக் களமாகியுள்ளது. இதில் நல்லவர்கள் என்று களத்தில் இறங்குபவர்க்ளை அடையாளம் காணும் நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை டாஸ்மாக்கில் குடித்துவிட்டு போதையிலும், அள்ளி வீசப்படும் பிரியாணி பொட்டங்களிலும் முடங்கிக் கிடக்கிறார்கள். தன்னிலை இழந்து நிற்கும் இந்த அறியாமை சமூகத்தில் இளைஞர்கள் வேகம் கொண்டு செயல்பட முடியாது. மிகவும் விவேகமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும்.

இன்று இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் மக்களின் விருப்பமாக மாற வேண்டும். இதற்கு சமூக நோக்கம் கொன்டவர்கள்,இளைஞர்கள் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து கைகோர்த்து, தன்முனைப்பு இல்லாமல் உழைக்கவேண்டும். என்னுடைய அரசியல் பார்வையில் 2016-ல் இது சாத்தியமில்லை. காரணம் 2016 அரசியல் களம் மிகவும் குழப்பமான நிலையைக் கொண்டிருக்கும். சத்தமில்லாமல் பயணித்த அதிமுக ஆட்சியில் சென்னை-கடலூர் வெள்ளம் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, அது தேர்தலில் நிற்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததா என்பதை அதிமுக, திமுக வகுக்கும் தேர்தல் உத்தியைப் பொறுத்து மாறும். பெரும்பாலான மக்கள் குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும், தேர்தலில் கொடுக்கப்படும் பணத்திற்கும், இலவசத்திற்கும் ஏங்கி இருக்கும் நிலையில் தேர்தல் முடிவை எவராலும் எளிதில் கணித்துவிட முடியாது. அதே நேரத்தில் அதிமுக-திமுக தவிர்த்து மூன்றாவது அணி என்ற ஒன்று பல கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருக்கும் என்ற நிலையும் வரும் தேர்தலில் தோன்றுகிறது. ஓரளவு நிரந்தர ஒட்டு வங்கியைக் கொண்டுள்ள அதிமுக-திமுக ஒருபுறம், 1-2சதவீட்ட வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ள பல காலம் அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகளின் கூட்டணிகள் மறுபுறம், நாம் தமிழர் கட்சி போன்ற புது கட்சிகளின் வரவு மற்றொருபுறம் என்று 2016 அரசியல் களம் கொஞ்சம் குழப்பம் மிகுந்ததாக இருக்கும். இதில் சாகாயம் போன்ற புதியவர்களின் வரவு மிகப்பெரிய தோல்வியைத் தழுவும். எனவே அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகும்வரை அரசியல் மாற்றம் அவ்வளவு எளிதல்ல என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சகாயம் இன்றைய நிலையில் ஒரு நல்ல அரசு அதிகாரி. அரசு அதிகாரியாக பல வேலைகளை திறம்பட செய்தவர், ஒரு தலைவராக தன்னை தயார்படுத்திக்கொள்ள அவருக்கு கால அவகாசம் தேவைப்படும். அவர் ஊழல் செய்து சொத்து சேர்க்காத மனிதர், இன்று அவர் மாத சம்பளத்தில் நிற்கும் நிலையில், அரசியல் வாழ்க்கை பல இழப்புகளை . ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, அரசு மற்றும் நீதிமன்ற கட்டமைப்பில் நல்லது செய்த மனிதர், காட்டாற்று வெள்ளம போல், இருக்கும் அரசியல் களத்தில் நிற்கும் நெஞ்சுரம் கொண்டவரா?, ஒரு தலைவரா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை இளைஞர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பதில், எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அவரிடம் என்ன குணாதிசயங்கள் இருக்கிறது, அதில் இன்று இருக்கும் தலைவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு எது இல்லை என்பதை ஆராய்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களை சகாயம்போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தகுதிமிக்க தலைவர்களாக உருவாக்கிக் கொள்வது அவசியமாகிறது.

இன்றிலிருந்து அனைத்து சமூக நோக்குள்ள அமைப்புகளும், இளைஞர்களும் ஒன்றிணைந்து தன்முனைப்பு இல்லாமல் திட்டமிட்டு இயங்கினால் 2020-ல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். படித்தவர்கள், நல்லவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்து இயங்குவதில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கிறது. அவற்றை ஆராய்ந்து, களைந்து அதற்கான செயல்திட்டத்தில் இறங்கினால் முடியாது என்பதில்லை.

2020-ல் சமுக நோக்குள்ள அமைப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுப்பெற்று, உதாரணத்திற்கு ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை போன்று அந்தந்த மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் 32 மாவட்டத்திலும் உருவாகி அவர்களின் ஒத்துழைப்புடன், இளைஞர் சக்தியுடன் சகாயம் போன்று ஒருவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவரின் வெற்றி மாவட்டத்தில் உள்ள அமைப்புகளின் வாக்கு வங்கி உள்ள தலைமைகளால் உறுதி செய்யப்பட்டால், ஒரு கூட்டுத் தலைமையுடன் கூடிய ஒரு அரசியல் மாற்றம் சாத்தியம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிட்டு உழைத்தால் இளைஞர்களால் 2016-ல் நிலவும் அரசியல் வெற்றி தோல்வியைப் பொருத்து 2020-ல் சில அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. அதற்கான முன் மாதிரியாக 2016-ல் இளைஞர்கள், சமூக அமைப்புகள் தங்களை ஒருங்கினைத்துக்கொள்ள, ஒற்றுமை ஏற்படுத்திக்கொள்ள 2016- தேர்தலை பயன்படுத்தலாம்.

 

by Swathi   on 20 Dec 2015  2 Comments
Tags: Sagayam IAS   2016 Tamilnadu Election   2016 சட்டபேரவை தேர்தல்   அரசியம் மாற்றம்           
 தொடர்புடையவை-Related Articles
2016-ல் அரசியல் மாற்றம் சாத்தியமா? சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றவர்களை எதிர்பார்க்கும் இளைஞர்களின் கனவு நனவாகுமா? 2016-ல் அரசியல் மாற்றம் சாத்தியமா? சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றவர்களை எதிர்பார்க்கும் இளைஞர்களின் கனவு நனவாகுமா?
கருத்துகள்
25-Dec-2015 04:20:06 selvarathnam said : Report Abuse
உண்மையான கட்டுரை திரு சகாயம் போன்றவர்கள் எளிதாக அரசியலில் சோபிக்க முடியாது ஏனென்றால் நேர்மை அரசியலில் எடுபடாது இது நாம் பார்பது.
 
20-Dec-2015 10:25:40 அசோக் said : Report Abuse
நல்ல கருத்துள்ள கட்டுரை. நான் இன்னுமொரு படிப்பினையை நினைவூட்ட விரும்புகிறேன். நல்ல சிறந்த எண்ணங்களை விதைத்து இளைஞர்களை ஈர்த்து, நாட்டை நல்வழிப்படுத்த வந்த மறைந்த Dr MS உதயமூர்த்தி அய்யா அவர்களின் வழிநடத்தல் எங்கோ, ஏதோ ஒரு சில காரணங்களால் தலையெடுக்க முடியவில்லை. இதன் காரண கரியாங்களை முறையாய் ஆராயவில்லை எனில் நாம் தன பேரிழப்பில் முடிவோம். யாரினும் இதற்கான முயற்சி எடுத்தால் நல்லதொரு எதிர்கால அரசியல் தலைமையை உருவாக்க முடியும் என்பது என் கருத்து அரவிந்த் கேஜ்ரிவாள் அவர்களையும் ஒப்பு நோக்க வேண்டும். மக்கள் மனதில் மாற்றம் கொண்டு வருவது மட்டுமே பெரிய மாறுதலை ஏற்படுத்தும். என்னை பொறுத்தவரையில் நம்மில் என்னையும் சேர்த்து எத்தனை பேர் சங்கர் படம் பார்க்கும் போது சரி எனத தோன்றும் விடயங்களை விதிகளை மீறுகிறோம், பெரிய பிரச்சினை ஆகாதவரை நாம் செய்வது தவறு என்று எண்ணுவதில்லை. அப்படியே பெரிய பிரச்சினை ஆனாலும் அதிலிருந்து எப்படியாவது? மீள்வது மட்டுமே குறிக்கோளாய் கொண்டுள்ளோம். மாற்றங்கள் ஒவ்வொன்றும் நமது வீடுகளில் மற்றும் போது இடங்களில் நடந்து கொள்வதும் நம்மை நல் தலைமைக்கு இட்டுச்செல்லும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.