LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு - பி.டி.கிங்ஸ்டன்

தனி மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சமுதாயம். சமூக அமைப்பாக்கத்திற்கேற்ப ஒரே செயலெதிர்ச் செயல்களை மேற்கொள்ளும் பெரும் எண்ணிக்கையில் அடங்கிய தனி நபர்களைக் கொண்டது அது. சமுதாயம் என்பது பொதுவான உடற்கூறியல்புகளையும், பொதுவான விருப்பார்வங்களையும், பொதுவான வாழ்க்கை நோக்கங்களையும், பொதுவான விதிகளையும் கொண்டுள்ளது. உறுப்பினர்களை ஒன்றிணைக்கும், சிறியதும், பெரியதும், நிரந்தரமானதும் ஆகிய அமைப்பே சமுதாயம் என்பது சமூகவியலாளர்கள் கருத்து.

 

தமிழ்ச் சான்றோர் அன்றைய சமுதாயத்தின் இயற்பிற்கும் மரபிற்கும் ஏற்ப மக்கள் வாழ்க்கை முறைகளைப் பாகுபாடு செய்துள்ளனர். தொல்காப்பியர்,

 

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

 

நிகழ்ச்சி அவர்கட் டாகலான

 

என்று கூறுகிறார். இதற்குப் பேராசிரியர் ''வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கமே; என்னை, உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின், அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்ற தென்றவாறு'' என்று கூறுகின்றார்.

 

அன்பு

 

காலத்தின் பொருளையும் பிறருக்குத் தேவைப்படும் போது கொடுக்கும் தன்மையே அன்பின் அடிப்படை. இது அகத்தே உணரும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. வார்த்தைகளால் வருணிக்க முடியாதது; உருவம் இல்லாத உணர்வு; இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் வாழ்வாங்கு வாழ்ந்து உடலும் உயிரும் செம்மையடைந்து சிறப்படைவது.

 

அன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை. அன்பு தான் ஒருவரையொருவர் விரும்புகின்ற ஆசையை உண்டாக்குவது. அந்த ஆசையினால் தான் நட்பு என்கின்ற உறவு தானாகவே உண்டாகிறது. அதனால்தான் சமுதாயம் அமைகிறது என்று, அன்பு எனும்..... (அன்புடைமை, 74) குறள் கூறும். அன்போடு இயைந்த...... (அன்புடைமை. 73) அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்கும்.

 

அரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அன்போடு கூடிய வாழ்க்கைதான் அதன் எலும்போடு பிறந்த குணம் என்று கூறுகிறார் வள்ளுவர்.

 

அன்புதான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது.

 

நெஞ்சகத்தில் அன்பில்லாதவர்களுடைய வாழ்க்கை, நீர்ப்பசை இல்லாத கெட்டியான நிலத்தில் முளைத்துவிட்ட மரம் உயிரோடிருந்தாலும் வற்றிப்போய்ச் செழிப்பில்லாமல் இருப்பதுபோல், அன்பு அகத்து இல்லா..... (அன்புடைமை, 78) வாழ்க்கை நடந்தாலும் இன்பம் இருக்காது.

 

அன்பும் அருளும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுபவையே. தொடர்புடையோரிடத்து நிகழும் அன்பு தொடர்பிலார் மாட்டும் அருளைத் தோற்றுவிக்கிறது. தொடர்பில்லாரிடத்து ஏற்படும் அருள் பின் அவருடன் நெருங்கிப் பழக அன்பாக நட்பாக மாறுகிறது.

 

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

 

செல்வச் செவிலியால் உண்டு

 

எனக் குறிப்பிடுகிறார்.

 

சான்றாண்மைக்குரிய குணங்களில் அன்பு முதலிடம் வகிக்கிறது.

 

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு

 

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

 

- - - (குறள் 983)

 

என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

 

இல்லற வாழ்க்கையில் அடிப்படை அன்பு

 

இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் மிக அன்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வள்ளுவர், எதைச் செய்தாலும் அன்போடும் தரும நியாயம், தவறாமலும் செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை. அதனால் தமக்கும் உலகத்துக்கும் நல்ல பயனுண்டாகும் என்பதை, அன்பும் அறனும்..... (குறள் 45) என்கிறார்.

 

இனிமை, நீர்மை எனும் இரண்டு பண்புகளும், அன்பின் வழித் தோன்றுவதாகும். அன்புள்ளம் கொண்டவர் யாவரிடமும் இனிமையாக நடப்பர்; இன்சொல் பேசுவர்; இனிமையாகக் காட்சியளிப்பர். அன்பு கொண்டவரிடம் சினம் தோன்றுவதில்லை; அன்பினால் உயர்வு தாழ்வு நீங்கி ஒற்றுமை வளரும். அனைவரும் ஒற்றுமையாக வாழும் பக்குவத்தை இன்றைய சமுதாயம் பெற்றுவிட்டால் வன்முறைகள் நிகழா.

 

அன்பில்லாதவன் துணையில்லாதவனாகவும் தானே வெல்லக்கூடிய திறமையற்றவனாகவும் மாறிவிடுவதால் பலமுள்ள பகைவனை எதிர்க்க இயலாது என்று குறிப்பிடுகிறார்.

 

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்

 

என்புரியும் ஏதிலான் துப்பு

 

அன்பும் - தோழமையும்

 

முகமும் முகமும் மகிழ்ந்து வருவது மட்டும் நட்பாகிவிடாது. நெஞ்சமாகிய அகமும் அகமும் ஒத்து மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான் நட்பு என்று கூறுகிறார். நட்பு நெஞ்சாகிய அகம் ஒத்துப் போக வேண்டுமென்றால் அன்பு இருத்தல் வேண்டும்.

 

நண்பன் மனங்கோணாமல் தேவையான போதெல்லாம் உதவி புரிந்து தாங்கி நிற்கும் தன்மைதான் நல் நட்பின் அடையாளம். ஒருவர் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் மட்டுமே நம்மால் நண்பனை அனுசரித்துப் போக முடியும்.

 

பழைய நண்பர்கள் குற்றம் செய்துவிட்டாலும் அவர்களிடத்தில் எப்போதும் போலவே அன்புவிடாமல் நடந்து கொள்பவர்கள் பகைவர்களாலும் பாராட்டப்படுவார்கள்.

 

அன்பு பிறர்மாட்டு விருப்பமுடைமை. அது நேயத்தைத் தருகிறது. அதுவே ஆர்வம் எனப்படுகிறது. நம் நெஞ்சு கருதிய பொருள்மேல் தோன்றுகிற பற்றுள்ளமே ஆர்வம். அந்த ஆர்வம், நட்பைத் தருகிறது. அஃதாவது தோழமையைத் தருகிறது. ''நண்பு'' என்ற சொல் 74,998 ஆகிய இரு குறட்பாக்களில் ''தோழமை'' என்ற பொருளிலேயே பயிலப்பட்டுள்ளது. அத்தோழமை சிறந்த மானுடச் சிறப்பு (Human Values) வாய்ந்தது. இதை ''அன்பு ஈனும்'' (74) என்ற குறளில் கூறுகிறார்.

 

அன்பு நேரிடையாகத் தோழமையைத் தருவதில்லை. மற்றவரிடம் ஆர்வத்தைத் தந்து அதன் வழியாகத் தோழமையைப் பெறச்செய்கிறது.

 

அறமும் அன்பும்

 

அறம் என்கிற அமைப்பு முறைக்கும், அன்பு சார்புடையது, அடிப்படையானது. அறத்தின் மற்றொரு கூறான வீர வாழ்க்கைக்கும் அன்பே துணையாக நிற்கிறது.

 

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

 

மறத்திற்கும் அஃதே துணை

 

- - - (குறள் 78)

 

அறத்திற்கும் சார்புடையது அன்பு என்பதால், அன்பற்றதற்கு மாறுபட்டது அறம் என்பது பெறப்படுகிறது. அன்பற்ற மனித வாழ்க்கை மனவளர்ச்சியற்று இயக்கமின்றி முன்னேற்றமிழந்து - சிறப்பற்றுப்போகும். எனவே அன்பற்ற நிலையை அறம் என்கிற ''அமைப்பு முறை'' தனது பல்திறன் கொண்ட பகுதிகளில் மூலமாக அமைந்திருத்தலாகும் (குறள் 77).

 

அன்புடையார் அடையும் பயன்

 

''அருளென்னும் அன்பீன் குழவி'' (குறள் 757) எனக் கூறி அன்பினின்றும் அருள் தோன்றுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அன்புற்றும் அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

 

இன்புற்றார் எய்தும் சிறப்பு

 

- - - (குறள் 75)

 

உலகத்தை இன்பமாக ''அனுபவித்துப் புகழ் பெற்றவர்களுடைய சிறப்பெலாம் அவர்கள் அன்பைக் கடைப்பிடித்து நடந்து கொண்டதினால் தான் என்று கூறுகிறார்.

 

அன்புதான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது. அன்பிருக்கிற உடல்தான் உயிருள்ள உடல். அன்பில்லாத உடல் வெறுந்தோலால் மூடப்பட்ட எலும்புகள் தான் என்பதைக் குறளில்,

 

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு

 

என்புதோல் போர்த்த உடம்பு

 

- - - (குறள் 80)

 

என்கிறார். அன்புடையவர்கள் தான் தூதுவர்களாகச் செல்ல முடியும்.

 

தூது சென்று பேசக் கூடியவனுடைய தகுதிகள் எவையென்றால், தூது அனுப்புகிறவர்களிடத்தில் அன்புடையவர்களாக இருப்பதுதான்.

 

காதல்

 

உடம்பொடு உயிரிடை என்ன மற்றுஅன்ன

 

மடந்தையொடு எம்மிடை நட்பு

 

- - - (குறள் 1122)

 

காதலன் தன் காதலியின் மீது உயிருக்குச் சமமாக அன்பு வைத்திருக்கிறான்.

 

''நீ போதாய் யாம் வீழும்'' (1123) என்ற குறளில், நீ சென்றால் என் உயிர் பிரியும் எனக் காதலியின் மீது அன்பு மிகுந்திருத்தல் காண்கிறோம்.

 

காதலி, காதலனை நினைத்துக் கொண்டிருக்கிறாள். காதலி கண்ணில் காதலன் உள்ளேயும் போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையிலேயே இருந்து கொண்டிருக்கிறான் என்றால் காதலன் மீதான அன்பையே வெளிக்காட்டுகிறது.

 

கண்களை மூடினால் என் காதலர் மறைந்து விடுவார் என்றும் காதலி சூடான உணவுகளை உண்ண அஞ்சுவதும் காதலர் மீதான அன்பை வெளிப்படுத்தும்.

 

காதலிக்கிற மனைவிக்குக் காதலிக்கப்படுகிற கணவன், செய்கிற அன்பு, உயிர்வாழ இன்றியமையாத மழைக்காக வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிற மனிதருக்கு மழை பெய்வதைப் போன்றது.

 

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

 

வீழ்வார் அளிக்கும் அளி

 

- - - (குறள் 1192)

 

பரிமேலழகர் கூறுவதைப் போல ''அன்பு'' தொடர்புடையார்கண் காதல் உடைமை அன்று. தன்னைச் சார்ந்தோர் மாட்டும், தொடர்பற்றவர் இடத்தும் ஊடுருவிப் பாய்கின்ற நமது மனத்தின் திறனே அன்பு. சுருங்கக் கூறின் ''நான்'' என்ற சுயநல வட்டத்தைக் கடந்து மற்றவர் நலன் நாடுகிற பொதுநலப் பாங்கிற்கு வழி வகுக்கும் வலிவு மிகுந்த மனத்தின் ஆற்றல் தான் குறள் கூறும் அன்பு ஆகும்.

 

மனத்தால், எண்ணிச் செயலால் நிகழ்த்துவது அறம்; அறத்தின் மனத்தளவான பகுதியே அன்பு; அறத்தின் செயலாக்க உறுப்பே அன்பு; இந்த மறுமலர்ச்சி பெற்ற அன்பின் இலக்கணத்தைத் திருவள்ளுவர்தான் முதன் முதலாகத் தருகிறார். யாக்கை அகத்து உறுப்பு அன்பில வர்க்கு. (79) என்பது அக்குறள்.

 

மக்கள் வாழ்க்கையின் உயர்நிலை அன்பின் வழியதாகும் (குறள் 80). இயைபு பெற்ற கூட்டிணைவு வாழ்க்கையை அமைப்பதற்கு மனித மனத்தின் செயல் திறனுடைய உறுப்பாகத் திகழ்வது அன்பு. உடலோடு உயிர் இயைந்திருப்பதைப் போலவே மக்கட் சமுதாயத்துடன் இயைந்திருப்பது அன்பாகும் (குறள் 73). அன்பு என்பது, தமக்குரியது என்று எதனையும் கருதாமையாகும். தன் உடைமை, செயல், பயன், உடம்பு, எலும்பும் கூடப்பிறர்க்குரியது எனக் கருதுகிற உள்ளத்திறன் அன்பு (குறள் 72). அன்பு இன்றி மக்களது கூட்டுச் சமுதாய வாழ்க்கை இல்லை.

 

அன்பற்ற வாழ்க்கை, பாலை நிலத்தின்கண் காய்ந்து நிற்கும் மரம் தளிர்த்ததைப் போல் ஆகும்; யாருக்கும் அன்பற்ற வாழ்க்கையால் பயனில்லை (குறள் 89).

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன் திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்
திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன் திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன் திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்
பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன் பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !! திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.