LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

சங்குப்பிள்ளை சரணாகதி

                                சங்குப்பிள்ளை சரணாகதி

 தெறிகெட்டு ஓடினவர்களுக்குள்ளே மிகவும் விரைவாக ஓடினவர் நமது கார்வார்ப் பிள்ளைதான். அவரைத் தொடர்ந்து முத்தையனும் ஓடினான். ஒரு தாவுத் தாவி அவரை முத்தையன் பிடித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி உடனே அவரைப் பிடிக்க அவன் இஷ்டப்படவில்லை. கூட்டமில்லாத தனி இடத்தில் பிடிக்கவேண்டுமென்று கருதிப் பின்னோடே சென்று கொண்டிருந்தான். கடைசியில் ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் விளக்கு வெளிச்சம் ஒன்றுமில்லாத இடத்தில், ஒரு வைக்கோல் போருக்கு அருகில் அவரைப் பிடித்து வீழ்த்தினான். அவருடைய மார்பின் மேல் ஒரு முழங்காலை ஊன்றி உட்கார்ந்து கொண்டான். கத்தியைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டான்.

     "சங்குப் பிள்ளைவாள்! நான் இந்த நிமிஷம் எங்கே இருக்கிறேன், சொல்லும் பார்க்கலாம்!" என்று கூறிப் பற்களை நறநற வென்று கடித்தான்.

     சங்குப் பிள்ளைக்குப் பயத்தினால் பாதிப் பிராணன் போய்விட்டது. "தம்பி என்னை விட்டுவிடு! நான் ஒன்றும் பண்ணவில்லை. ஐயோ! என்னை விட்டு விடேன். நான் உன் வழிக்கு வரவில்லை" என்று விம்மிக் கொண்டே கூறினார்.

     "என் வழிக்கு வரவில்லையா? அடாடா! பெரியவாள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. என் வழிக்கு வந்து தான் ஆகவேணும்" என்று சொல்லி முத்தையன் பயங்கரமாய்ச் சிரித்தான்.

     பிறகு கடுமையான குரலில், "அடே படுபாவி! நிஜத்தைச் சொல்லு! அபிராமி என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? - நிஜத்தைச் சொன்னால் பிழைப்பாய். இல்லாவிட்டால், ஒரே குத்தில் செத்துப் போவாய்" என்றான்.

     "ஐயோ! நிஜத்தைச் சொல்லுகிறேன். அப்புறம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு யாரோ அழைத்துப் போனார்களாம். இன்ஸ்பெக்டர் வீட்டு அம்மா அவளைச் சென்னைப் பட்டணத்திலே கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்கிறாளாம். மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது. முத்தையா! நான் பிள்ளைக் குட்டிக்காரன் என்னை விட்டுவிடு!" என்று கதறினார் சங்குப்பிள்ளை.

     "நீ இப்போ சொன்னது நிஜந்தானா! பொய் என்று தெரிந்ததோ கொன்னுடுவேன்!"

     "இல்லை, இல்லை. பொய்தான் சொல்லி விட்டேன். கோவிச்சுக்காதே, தம்பி! எனக்குப் பிள்ளைக்குட்டி ஒன்றும் கிடையாது..."

     "சீச்சீ! நீ நாசமாய்ப் போக! உனக்குப் பிள்ளைக்குட்டி வேறு கேடு!...அபிராமியைப் பற்றி நீ சொன்னது நிஜந்தானா? அப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?" 

     "இல்லவே, இல்லை! சத்தியமாய் இல்லை. விட்டு விடு. நீ மகாராஜனாயிருப்பாய்..." என்று சங்குப் பிள்ளை விம்மி அழத் தொடங்கி விட்டான்.

     முத்தையன், "போ, தொலைந்து போ! உன்னைத் தொட்ட பாவத்துக்கு நான் தலை முழுகவேணும். ஆனால் மறுபடியும் ஏதாவது துர்க்கிருத்யம் பண்ணினாய் என்று தெரிந்ததோ, என் கை அழுக்காய்ப் போனாலும் போகிறதென்று உன் தொண்டையை நெறித்துவிடுவேன். தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தான். அவ்வளவு தான்! கீழே கிடந்த சங்குப் பிள்ளை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஒரே ஒட்டம் பிடித்து ஓடிவிட்டார்.

     முத்தையனிடம் சங்குப்பிள்ளை தனியாக அகப்பட்டுக் கொண்டபோது, அவன் வெகு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் கிடைத்தது. "அந்த அயோக்யன் மட்டும் என்னிடம் அகப்படட்டும் பார்க்கலாம்; என்ன பாடுபடுத்துகிறேன்!" என்று அவன் தனக்குத் தானே எத்தனையோ தடவை சொல்லிக் கொண்டு பல்லைக் கடித்திருக்கிறான்! கையை நெறித்திருக்கிறான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததும் அவனால் பழி வாங்கமுடியவில்லை. கார்வார் பிள்ளையின் கோழைத்தனம் அப்படி அவனைச் சக்தியற்றவனாக்கி விட்டது.

     அது மட்டுமல்ல; அபிராமியைப் பற்றிச் சங்குப்பிள்ளை சொன்ன செய்தி முத்தையனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. அது உண்மையென்பதை அவன் உணர்ந்தான்; அவன் மனத்திலிருந்த கசப்பும் குரோதமும் சட்டென்று விலகிச் சென்றன. அவன் நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அன்று வீட்டை விட்டுக் கிளம்பியதற்குப் பிறகு இதுவரை இல்லாத குதூகலம் இப்போது அவனுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்தது.

     இத்தகைய மனோநிலையில் அவன் தன் கையைக் கறையாக்கிக் கொள்ள உண்மையிலேயே விரும்பாதபடியால் தான் கார்வார் பிள்ளையை விட்டுவிட்டான். அவர் எழுந்து ஓடிப் போனதும், ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, குஷாலாகச் சீட்டி அடித்துக் கொண்டு சென்றான்.

     இங்கே கல்யாணப் பந்தலில், கள்ளன் மறைந்ததும் எல்லோரும் மறுபடியும் ஒன்று திரண்டு கும்பல் கூடிப் பேசினார்கள். முக்கிய விருந்தினரில் ஒருவரான தர்மகர்த்தாப் பிள்ளை, மற்றும் சிலரைப் பார்த்து, "இத்தனையுண்டு வாண்டுப் பயல் தனியாய் வந்து இவ்வளவு காபரா பண்ணிவிட்டுப் போகிறான், நாம் எல்லோரும் வாயிலே விரலை வச்சுண்டுதானே நிற்கிறோம்?" என்று இரைந்தார். கும்பலில் அவர் சமீபத்தில் நின்ற ஒரு சிறுவன், சட்டென்று தன் வாயிலிருந்த விரலை எடுத்தான். அந்தப் பையனுக்கு வந்த கோபத்தைப் போலவே, அங்கிருந்த இன்னும் பலருக்கும் ரோஸம் பிறந்தது. அவரவர்களும் "வாங்க, போகலாம்!" "வாங்க போகலாம்!" என்று சொல்லிக் கொண்டு, தடிகளுடனும் லாந்தர்களுடனும் கிளம்பினார்கள்.

     ஊருக்குக் கொஞ்ச தூரம் மேற்கே அவர்கள் போன போது சங்குப் பிள்ளை எதிரே வந்தார். அவர் இவர்களைப் பார்த்து, "ஏன், ஐயா, நீங்கள் எல்லாம் மனுஷர்கள்தானா? ஏதடா, ஒருத்தன் முன்னாலே போறானே, நாம்பளும் போவோம் என்று பின்னால் வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தால் அந்தத் திருட்டுப்பயலைக் கைப்பிடியாய்ப் பிடிச்சிருக்கலாமே?" என்றார். அப்போது தூரத்திலே மறுபடியும் சிரிப்பு ஒலி கேட்டது. சங்குப் பிள்ளையின் உடம்பு நடுங்கிற்று. அவரைக் கவனிக்காமல், சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓடினார்கள்.

     ஊருக்கு அரை மைல் மேற்கே இராஜன் வாய்க்கால் இருந்தது. அதில் அப்போது பிரவாகம் நிரம்பப் போய்க் கொண்டிருந்தது. வாய்க்காலின் மேல் மூங்கில் கழிகளினால் பாலம் போட்டிருந்தது. முத்தையன் அந்தப் பாலத்துக்குச் சமீபம் வந்தபோது, கொஞ்ச தூரத்தில் "அதோ போகிறான்", "விடாதே", "பிடி" என்ற சத்தத்துடன் ஜனங்கள் ஓடி வருவதைப் பார்த்தான். பாலத்தின் முக்கால் பகுதி வரை அவன் சென்று, அங்கே உட்கார்ந்து, சில மூங்கில் கழிகளைப் பிடுங்கி ஆற்றில் விட்டான். பிறகு அக்கரைக்குத் தாவிச் சென்று ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றான்.

     அவனைத் தொடர்ந்து ஓடிவந்தவர்கள் பாலத்தின் கழிகள் பெயர்க்கப்பட்ட இடத்துக்கு வந்ததும் தொப்தொப்பென்று தண்ணீரில் விழுந்தார்கள்.

     முத்தையன் "ஹா ஹா ஹா" என்று உரக்கச் சிரித்து விட்டு இருட்டில் சென்று மறைந்தான். 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.