LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

சற்று வேறுபட்ட பிச்சைக்காரன்

ச்சே.. ! இந்தப் பிச்சைக்காரர்களால் பெரிய தொந்தரவாப் போச்சே... இன்றைக்கு என்ன பிச்சைக்காரர்கள் தினமா? காலையிருந்து ஒவ்வொருவராக வந்துகிட்டே இருக்காங்க.... ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க போலிருக்கே.. எதாவது ஒரு வேலையை செய்யாலம் என்று தொடங்கும்போதுதான் அம்மா தாயேணு கத்துவாங்க. சரி அவங்க கத்தறதைக் கேட்காத மாதிரி இருந்துக்கலாம் என்று பாத்தால் பக்கத்து வீட்டு பரிமளம் என்னைப் பற்றி என்ன நினைப்பா . . எச்சிக் கையால காக்காய் ஓட்டாதவண்ணு  நினைப்பாளே அப்படீங்கற நினைப்பு வந்துரும்.

 

அதனால் செய்ற வேலையை அப்படியே விட்டு விட்டு பிச்சைக்காரங்களுக்கு எதாவது கொடுக்கப் போவேன். ஆனால் பலநேரத்தில பிச்சையெடுக்க வருபவர்களை பார்த்தா சல்லிப் பைசாக் கொடுக்கக் கூடாதுணு தோன்றும்.. நல்ல வாட்டசாட்டமா இருக்கிற தடியணுங்களெல்லாம் பிச்சையெடுக்க வர்றாங்க. . எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். இவங்களுக்கு எதாவது வேலை செய்து பிழைக்க கூடாதா..? செய்யமாட்டடாங்க. பிச்சையெடுத்து ருசி கண்டுட்டாங்க. அதுதான்.

 

சிலநேரம் இடுப்பில் பச்சைக் குழந்தையோடு சில பெண்கள் வருவாங்க. இடுப்பில் இருக்கிற அந்தக் குழந்தையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அது நம்மை ஒரு பார்வை பார்க்கும்.... நமக்கே என்னவோ போலிருக்கும். ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்தால் மறுபடியும் மனதுக்குள் கோபம் எரிமலையாய் வெடிக்கும்.

 

 "போதும் போதும் பிச்சை போட்டது பக்கத்து வீட்டுப் பரிமளம் என்ன சொன்னாலும் சரி இனிமேல் ஐந்து நயாப் பைசா பிச்சைபோடமாட்டேன். ''

புடவைத் தலைப்பை இழுத்து இடுப்பில் சொருகியபடி மனசை உறுதியாக்கிட்டு சமையக்கட்டுக்குப் போனா. பாத்திரங்களை ஒவ்வொண்றாக தேய்க்கத் தொடங்கினேன். அப்போது " அம்மா.. தாயே... அம்மா... தாயே...'' என்ற சத்தம் கேட்டது.

 

"இது மட்டும் பிச்சைக்காரனாக இருந்தால் திட்டித் தீர்த்துவிட வேண்டும்' என்று மனதில் கருவிக் கொண்டு வேகமாக வாசலுக்கு வந்தேன்.

 

வாசலில் ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பையன் ,கிழிந்த கால்சராயைக் கையாலத் தூக்கிப் பிடிச்சிட்டு. நின்று கொண்டிருந்தான்.

 

" ம்... உனக்கு என்ன வேணும் '' முகத்தையும் குரலையும் கடுமையாக்கிட்டு கேட்டேன்.

 

" அம்மா... என் கால்சராய் கிழிஞ்சிருச்சு. அதைத் தைய்க்க கொஞ்ச நூலும், ஊசியும் தருவீங்களா? '' அவன் பரிதாபமாகக் கேட்டான்.

 

"ஆட... பரவாயில்லையே.. கால்சராயைத் தைய்ச்சு மீண்டும் பயன்படுத்திக்கலாம்ணு நினைக்கிறானேணு..'' மனசுக்குள்ள மகிழ்ந்தபடி ஊசியும், நூலும் கொடுத்தேன்.

 

" அதோ அந்த மரத்தோட மறைவில் நின்று தைத்து விட்டு ஊசியைத் தருக்கிறேன் அம்மா'' என்று மரத்ததை நோக்கி நடந்து போனான்.

 

ஐந்தே நிமிடத்தில் அவனோட சத்தம் மறுபடியும் கேட்டது. ஊசியைத் திருப்பித் தரத்தான் கூப்பிடுகிறான் என்று நினைத்து கொண்டு வந்தால் மறுபடியும் கிழிந்த கால்சராயோடயே நின்று கொண்டிருந்தான்.

 

" ஏன் தைக்காமல் வந்திருகிறாய் '' என் குரலில் கோபம் கலக்கிறதை என்னால் தடுக்க முடியவில்லை.

 

"கால்சராயிலிருக்கிற கிழிசல் ரொம்ப பெரிசா இருக்குது. தைத்தால் நிற்காது என்று தோணுது. கொஞ்சம் துணி இருந்தா குடுங்க அதை கிழிஞ்ச இடத்தில வைத்து தைத்து கொள்கிறேன். .

 

நான் அவன் சால்சராயைக் கூர்ந்து பார்த்தேன். "ஆமாம் அவன் சொல்றது உண்மைதான்...'' நான் அறைக்குள் போய் கொஞ்சம் துணி எடுத்து வந்தேன்.

அவனுடைய கால்சராயின் நிறத்துக்குத் தகுந்த துணியாகத் தேர்ந்தெடுக்க நான் மறக்க வில்லை.

 

துணியை வாங்கிட்டுப் போனவன் கொஞ்ச நேரத்தில திரும்ப வந்தான்.

 

" ஊசியும் நூலும் தந்தேன். துணியும் தந்தேன். இனியும் என்னடா வேணும். நானே தைச்சு தரணுமா? '' இம்முறை சற்று உரக்கக் கேட்டேன்.

 

அவன் முகத்தில் எவ்வித உணர்ச்சி மாற்றமும் தெரிய வில்லை. ஆனால் கால்சராயின் கிழிசல் பெரிதாகி இனி தைய்க்க முடியாத நிலையில் இருந்தது.

 

"அம்மா... இந்தக் கால்சராயை இனி போடமுடியாதம்மா... உங்க மகனுடைய கால்சராய் இருந்தால் தருவீங்களா'' அவனோட குரல்ல கொஞ்சம்கூட வருத்தமோ, கவலையோ இல்லாம இருந்தது. எனக்கு ஆச்சிரியமாக இருந்தது.

 

பாவம் முயற்சி செய்து தோற்றுப் போன பின்தானே ... கேட்கிறான். கொடுப்போம்.

 

ஆனால் அவனுடைய அளவுக்குச் சரியான கால்சராய் இருக்குமா என்று நினைத்தபடி இருப்பதிலையே சிறிய கால்சராயாகப் பார்த்து அவன்கிட்டே கொடுத்தேன்.

 

கால்சராயைப் பார்த்தவனோட உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒரு புன்சிரிப்பாக முகத்தில் வெளிப்பட்டது. நன்றி வழியும் கண்களால் என்னைப் பார்த்தவன் அதை வாங்கிட்டு நடக்கத் தொடங்கினான்.

 

" சரி, இன்னைக்குள்ள பிரச்சனை தீர்ந்திருச்சு நடக்க வேண்டிய வேலைகளைப் பார்ப்போம் '' என்று நினைத்து குழாயைத் திறந்தேன். தண்ணீர் ஒழுகத் தொடங்கியது. ஒவ்வொரு பாத்திரமாக அவசர அவசரமாகக் கழுவத் தொடங்கினேன். இரண்டு பாத்திரங்கள் கூட கழுவியிருக்கமாட்டேன். அதுக்குள்ளே மீண்டும் " அம்மா... அம்மா.. '' என்ற அழைப்பு கேட்டது.

 

கழுவுவதற்காகக் கையிலெடுத்த பாத்திரத்தைக் கீழே வைக்காமல் அப்படியே வாசலுக்கு வந்தேன்.

 

பார்த்தால் அதே பையன்....!

 

" வேலை செய்கிற நேரத்தில் ஏண்டா என்னை தொந்தரவு செய்யுற? இனியும் உனக்கு என்னடா வேண்டும் '' என் எரிச்சலை எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவையும் காட்டி கேட்டேன்.

 

வேறு ஏந்தப் பிச்சைக்காரனாக இருந்தாலும் என் எரிச்சலைக் கண்டு ஓடிப்போயிருப்பான். ஆனால் இவன்

 

"அம்மா... நீங்கள் தந்த கால்சராய் கொஞ்சம் பெரிசாக இருக்கு. கீழே கீழே வருது. எனக்குக் கொஞ்சம் சாப்பாடு கொடுத்தீங்கண்ணா அத சாப்பிடுவேன். அப்ப வயிறு பெரிசாயிரும் அப்போது கால்சராய் கீழே விழாது'' அவன் சொன்தைக் கேட்டு என் கோபம் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போனது..

 

நான் சிரித்துக்கிட்டே அவனுக்குச் சாப்பாடு போட்டேன். அவன் உண்மையிலே புத்திசாலியா ...இல்லை இயல்பாகவே இது மாதிரி நடந்த்தா என்று இப்பவும்

என்னால் கண்டுபிடிக்க முடிய வில்லை. உங்களால் முடியுதா?

by Swathi   on 11 Mar 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
18-Jul-2019 10:06:33 E said : Report Abuse
nice
 
18-Jul-2019 10:05:34 G said : Report Abuse
good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.