LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

செல்வப் பெண் கல்யாணி

                                   செல்வப் பெண் கல்யாணி

பூங்குளத்தை யடுத்த கொள்ளிடக் கரைக் காட்டில் ஒரு வனதேவதை இருக்கிறதென்று அந்தப் பிரதேசத்திலெல்லாம் ஒரு வதந்தி பரவியிருந்தது.

     நதியில் வெள்ளம் சுமாராய்ப் போகும் காலத்தில் ஜில்லா கலெக்டர், எக்ஸிகியூடிவ் என்ஜினியர் முதலிய உத்தியோகஸ்தர்கள் அந்தப் பக்கம் 'காம்ப்' வரும்போது, நதிக் கரையோரமாய்ப் படகில் பிரயாணம் செய்வார்கள். அப்போது அவர்கள் சில சமயம் மேற்படி வனதேவதையைப் பார்த்து வியப்புறுவதுண்டு.

     சில வேளைகளில் அந்தத் தேவதை ஜலக்கரையிலே ஓடுகிற தண்ணீரில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும். படகைக் கண்டதும் எழுந்து நாணற் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடும். வேறு சில சமயம் அந்தத் தேவதை நாணற் காட்டிற்குள் ஒளிந்த வண்ணம் புன்னகை பூத்த தனது முகத்தை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் தூரத்தில் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, படகில் போகிறவர்களுக்கு அழகு காட்டும்!

     ஆனால் பூங்குளம் கிராமவாசிகளிடம் இந்த வன தேவதையைப் பற்றிக் கேட்டால் மட்டும் அவர்கள் குப்பென்று சிரித்துவிட்டு, "வனதேவதையாவது ஒன்றாவது! நம்ம நடுப்பண்ணை வீட்டுப் பெண் கல்யாணிதான் ஆற்றோரம் திரிந்து கொண்டிருப்பாள்" என்று சொல்வார்கள்.

     கல்யாணியின் குழந்தைப் பிராயத்திலேயே அவளுடைய தாயார் இறந்து போனாள். அதற்குப் பிறகு, அவளுடைய தாயாரின் ஸ்தானத்தில் இருந்து அவளை வளர்த்தது அந்த நதிப் பிரதேசந்தான். 

     பகலில் பெரும் பொழுதைக் கல்யாணி நதிக்கரையிலும் நதிக்கரை காட்டிலுமே கழிப்பது வழக்கம். உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருந்தது அந்தப் பிரதேசத்தில் சற்று ஆச்சரியமான விஷயமே, ஆனால் அதற்குத் தக்க காரணம் இருந்தது.

     கல்யாணியின் தாயார் இறந்த பிறகு அவளுடைய தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளை இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டார். மூத்த மனைவியின் சந்ததி கல்யாணி ஒருத்திதான்; அவள் மேல் அவளுடைய தகப்பனார் உயிரையே வைத்திருந்தார் என்று சொல்ல வேண்டும். "இம்மாதிரி, தகப்பனார் பெண்ணுக்குச் செல்லம் கொடுத்து வளர்ப்பதைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை" என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.

     மூத்த தாரத்தின் பெண்ணை மாற்றாந்தாய் படுத்துவதென்னும் உலக வழக்கம் அந்த வீட்டில் கிடையாது. உண்மையில், நிலைமை அதற்கு நேர்மாறாக இருந்து வந்தது. வீட்டில் கல்யாணி வைத்ததுதான் சட்டம். அவள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லை. அவளுக்குப் பயந்து தான் அவளுடைய சிறிய தாயார் நடந்து கொள்ள வேண்டும்.

     இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், திருச்சிற்றம்பலம் பிள்ளை தம் மூத்த மகளிடம் வைத்திருந்த அபிமானமேயாயினும், கல்யாணி சொந்தத்தில் சொத்துடையவளாயிருந்ததும் ஒரு காரணம் என்பதைச் சொல்ல வேண்டும்.

     கல்யாணியின் தாயார் கொண்டுவந்த மஞ்சள் காணி ஆறு ஏக்கரா முதல் தர நன்செய் நிலமும், அவளுடைய 5,000 ரூபாய் பெறுமான நகைகளும், கல்யாணிக்குச் சொந்தமாயிருந்தன. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, இது அவளுக்குக் கௌரவம் அளித்தது. ஒருவாறு சுதந்திரத்துடன் நடந்து கொள்ளவும் இடங் கொடுத்தது. 

 

*****

     திருச்சிற்றம்பலம் பிள்ளை இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து பெரிய குடும்பஸ்தர் ஆனார். கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஒரு குழந்தை வீதம் வீட்டில் ஜனத்தொகை அதிகரித்து வந்தது. அதே சமயத்தில் அவருடைய பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் சுருங்கி வந்தது. நெல் விலையும் நிலத்தின் விலையும் மளமளவென்று இறங்கிவர, கடனும் வட்டியும் அதி வேகமாய் ஏறிவந்தன.

     போதாதற்குக் கொள்ளிடத்து உடைப்பில் அவருடைய நிலத்தில் ஒரு பகுதி நாசமாயிற்று. அதைச் சீர்திருத்துவதில் கடன் மேலும் வளர்ந்தது. கடைசியில் நிலைமை ரொம்ப நெருக்கடியான போது, கல்யாணியின் தாயார் அவளுக்கு வைத்துவிட்டுப் போன நகைகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

     விற்ற நகைகளுக்குப் பதில் நகை கல்யாணிக்குப் பண்ணிப்போட வேண்டும் என்றுதான் திருச்சிற்றம்பலம் பிள்ளை எண்ணியிருந்தார். முடிந்தால், செய்துமிருப்பார். ஆனால், மேலும் தரித்திரம் அதிகமாகி வருகையில், அந்தந்த வருஷத்து வரிப் பணம் கட்டிக் காலட்சேபம் செய்வதே கஷ்டமாயிருக்கையில், புது நகை எப்படி பண்ணிப் போடுவது?

     கடைசியில், கல்யாணிக்குக் கல்யாண வயது வந்த போது, திருச்சிற்றம்பலம் பிள்ளையின் 'உள்ள நிறைவில் ஒரு கள்ளம் புகுந்தது' என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அவளை ரொம்பப் பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும். அவளுக்கு அவள் தாயார் வைத்துப் போன மஞ்சள் காணி நிலத்தையும் நகைகளையும் பொருட்படுத்திக் கேட்காத மாப்பிள்ளையாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

     இந்த நோக்கத்துடனேதான், வாலிபப் பிள்ளைகளுக்குப் பெண் கேட்க வந்த அநேகம் பேரை அவர் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்.

     கடைசியாக, தாமரை ஓடைப் பெரிய பண்ணையிலிருந்து மனுஷ்யாள் வந்து பெண் கேட்ட போது, இந்த இடந்தான் நாம் சம்பந்தம் பண்ணவேண்டிய இடம் என்று திருச்சிற்றம்பலம் பிள்ளை உடனே தீர்மானித்து விட்டார்.

 

*****

     கல்யாணியிடம் அவளுடைய தகப்பனார் அளவிலாத பிரியம் வைத்திருந்தார் அல்லவா?

     ஏறக்குறைய ஐம்பது வயதான தாமரை ஓடைப் பண்ணையாருக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுக்கத் தீர்மானித்த போது பெண்ணைக் கொடுத்துத் தாம் சௌக்கியமாயிருக்க வேண்டுமென்னும் எண்ணம் அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை. அவ்வளவு பெரிய இடத்தில் வாழ்க்கைப்படுவதில் அவளுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியே அவர் அதிகமாய் எண்ணி, அதிலுள்ள பிரதிகூலத்தை அலட்சியம் செய்தார்.

     கல்யாணியின் விவாகம் சம்பந்தமாகக் கேவலம் முத்தையனைப் பற்றி அவர் ஒரு கணமும் சிந்திக்கவில்லை. ஊரிலே சிலர் பிரஸ்தாபித்தார்கள். ஆனால், அவர், அந்தப் பேச்சை ஒரேயடியாய் அடித்துப் போட்டு விட்டார். "நன்றாயிருக்கிறது! தாமரை ஓடைப் பண்ணைக்கு வாழ்க்கைப்பட்டால், முத்தையனைப் போல் நூறு பேர் 'ஏவல் கூவல் பணி' செய்யக் காத்திருப்பார்களே!"

     வயதைப் பற்றி அவர் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. என்ன பிரமாதம்? தாமே நாற்பது வயதுக்கு மேல் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொள்ள வில்லையா? தமது இரண்டாவது மனைவியிடத்தில் தாம் உயிருக்குயிராய் இல்லையா? வாலிப வயதுள்ளவர்களுக்கு வாழ்க்கைப் பட்டவர்கள்தான் சுகப்படுகிறார்கள் என்று எந்தச் சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது?

     இப்படியெல்லாம் அவர் தம்முடைய மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாலும், "கல்யாணி பிடிவாதக்காரப் பெண் ஆயிற்றே! அவள் என்ன சொல்வாளோ?" என்று மட்டும் அவருக்கு திக்குதிக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. ஏற்பாடுகள் என்னவோ நடந்து கொண்டிருந்தன. கல்யாணிக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும். அப்படி ஆட்சேபிக்கிறதாயிருந்தால் அவளே வந்து சொல்லட்டுமே என்று அவர் முதலிலெல்லாம் சும்மா இருந்தார். அவள் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் இருக்கவே, சமயத்தில் ஏதாவது முரட்டுத்தனம் செய்துவிடப் போகிறாளோ என்ற பயம் உண்டாயிற்று. ஆகவே, கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்பு அவளைத் தனியாகக் கூப்பிட்டு, விஷயத்தைப் பிரஸ்தாபித்தார். அப்போது கல்யாணி, அவர் சற்றும் எதிர்பாராத உற்சாகத்துடனே, "பூரண சம்மதம், அப்பா! இவ்வளவு பெரிய இடமாகப் பார்த்து நீங்கள் எனக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கிறபோது எனக்கென்ன குறை வந்திருக்கிறது! நான் நன்றாயிருக்கவேண்டுமென்பதில் உங்களுக்குக் கவலையில்லையா? நீங்கள் பார்த்துச் செய்வதற்கு நான் மறுவார்த்தை சொல்வேனா?" என்று கூறவும், திருச்சிற்றம்பலம் பிள்ளை உண்மையில் திடுக்கிட்டே போனார். அச்சமயம் அவருடைய மனச்சாட்சி சற்று உறுத்தியபோதிலும், உடனே அதை மறந்துவிட்டு, கல்யாணத்துக்குரிய ஏற்பாடுகளைப் பலமாக செய்யத் தொடங்கினார்.

     அவர் அப்பால் போனவுடனே, கல்யாணி காமரா உள்ளுக்குள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தரையில் புரண்டு விசித்து விசித்து அழுதாள் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? நேற்று வரையில் அவள், முத்தையனைத் தவிர வேறொருவருக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் கொள்ளிடத்து மடுவில் விழுந்து உயிரைவிடத் தீர்மானித்திருந்தாள் என்பதும், இன்று மத்தியானம் முத்தையனுக்கு முன்னால் செய்து விட்டு வந்த சபதத்தின் காரணமாகவே அவள் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தாள் என்பதும் அவருக்கு என்ன தெரியும்? முத்தையனுடைய ஆத்திரமான மொழிகளால் தானும் ஆத்திரங்கொண்டு கல்யாணத்துக்குச் சம்மதம் கொடுத்துவிட்ட பின்னர், இப்பொழுது அவள் நெஞ்சு பிளந்துவிடும் போன்ற கொடிய வேதனையினால் துடித்துக் கொண்டிருந்தாள் என்பதைத்தான் திருச்சிற்றம்பலம்பிள்ளை எவ்வாறு அறிவார்? 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.