LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-38

7.038.திருவதிகைத்திருவீரட்டானம் 
பண் - கொல்லிக்கௌவாணம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - திருவதிகைநாயகி. 
383 தம்மானை யறியாத சாதியா ருளரே 
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட 
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.1
உலகில், தம் தலைவனை உருவறியாத இயல் புடையவரும் உளரோ! இல்லை; அங்ஙனமாக, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான், தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத, நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான், சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும், விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும், யானையின் தோலைப் போர்பவனும், கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும், விடையைக் கொடியாக உடையவனும், எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
384 முன்னேஎம் பெருமானை மறந்தென்கொல் மறவா
தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
குன்றமே ஈசனென் றுன்னியே புகழ்வேன்
அன்னேஎன் னத்தாஎன் றமரரா லமரப்
படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை யிறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.2
எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென்! மறவாதிருந்து பெற்றதென்! ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தொடு வாழ்வேனாயினேன். அன்றியும், 'பொன்னே! நல்ல மாணிக்கமே! வெண்மையான முத்தே! செம்மையான பவள மலையே! முதல்வனே!' என்று, அவனை நினைத்துப் பாடுவேன். அங்ஙனமாக, 'எங்கள் தாய்போல்பவனே, தந்தை போல்பவன' என்று தேவர்களால் விரும்பி வழிபடப்படுபவனும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், அலையெறிகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய என் இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிதுபொழுதினும் யான், அறியாது இகழ் வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனி யொருகாலும் அது வாயாது போலும்! 
385 விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே
விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேஎன் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்
வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.3
காதல் பொருந்திய உமையவள், உடம்பில் ஒரு கூறாய் இருத்தலின், கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து, அதனோடு இளைய பிறையையும், கீற்றுக்கள் பொருந்திய பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய, மிக்க நீர் வந்து மோதுகின்ற கெடில நதியின் வடகரைக் கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, 'விண்ணுலகத்தார்க்குத் தலைவனே, மண்ணுலகத்தவர் எதிர் நின்று துதிக்கும் கரும்பே, என் கட்டியே' என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு, வினை என் உள்ளத்தை விட்டு நீங்காமையால், அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறுபொழுதினும் யான் அறியாது அவனை இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
386 நாற்றானத் தொருவனை நானாய பரனை
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.4
மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும், என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும், திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும், வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும், 'காற்று, தீ, கடல்' என்னும் பொருள்களாய் உள்ளவனும், கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும், வேகமான 'கங்கையாறு' என்னும் வெள்ள நீரைத் தாங்கியவனும், பிறையைச் சூடினவனும், பெரியோனும், என் தந்தைக்கும் தலைவனும், யாவராலும் அறிதற்கு அரிய, சிவந்த கண்களையுடைய இடபவாகனனும், அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும், யான் அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமைஇருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாதுபோலும்! 
387 சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடங்கொள்வான் மலைஆரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.5
'முருகப்பிரானார், அவர்க்குத் தாயாகிய மலைமகள்' என்னும் இவர்களது அழகிய நிறத்தையும், அன்பையும் ஏற்றுடையவனும், திருவதிகைமாநகரில் வாழ்கின்றவனும், தாழ்ந்த கூந்தலையும், குயில் போலும் மொழியினையும் உடைய நீர்மகளைச் சடையிடத்திற் கொண்ட, கயல் மீனினது கூட்டங்கள் குதிகொள்ளுதலால் விளக்கமுற்றுப் பொருந்திய நீர் பெருகி வர, அதனிடத்து உயர்ந்தெழுகின்ற அலைகள் மராமரங்களை முரித்துத் தள்ளிக்கொண்டு, அலை மறிகின்ற கடலை இடமாகக் கொள்ளும்படி, மலையிடத்துள்ள சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிது பொழுதினும் யான், அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
388 மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்புந்
தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியி னுரியானை வேத
விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.6
மேகம்போலும், பெருமையையுடைய கண்டத்தையுடைய எம்பெருமானும், வலிய பன்றியின் கொம்பை அணிந்த பெரிய தவக்கோலத்தை யுடையவனும், தேவர்கள் தலைவனும், யாவர்க்குந் தலைவனும், குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றையொன்று அஞ்சி உழல்கின்ற சடையை யுடையவனும், தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையையுடைய, வெற்றி பொருந்திய, கொடிய, பெரிய, மதங்கொண்ட யானையின் தோலை உடையவனும், வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளாய் உள்ளவனும், வெள்ளிய நீறு பூசப்பட்ட திருமேனியை உடைய எம் தலைவனும், அலையெறிகின்ற கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என்தலைமேல் சூட்டவந்த சிறிது போதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
389 வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச் செக்கர்வா னொளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.7
கொடிதாகிய, 'வினை' என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும் எத்துணையோ உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திருவருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும், தலைக்கோலங்களை உடையவனும், மைபோலுங் கண்டத்தையும், எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும், தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும், செவ்வானத்தின் ஒளி போல் பவனும், தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும், மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
390 பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.8
'அழகிய யானை முகத்தையுடைய விநாயகனும், மயிலூர்தியை உடைய முருக வேளும்' என்னும் இவர்க்குத் தந்தையும், ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும், 'மேற்கு, வடக்கு, கிழக்கு' என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற் செல்லும் மண்ணாசை யற்ற மனத்தையும் உடையவனாய்ச் சிறப்பெய்திய நெடுமாறனது முடியின்மேல் நின்ற தென்னாட்டவனும், அந்திச் செவ்வானம் போலும் நிறத்தை உடையவனும், தேவர்களுக்குத் தலைவனும், யானைத் தோலைப் போத்தவனும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், எனக்கு உரியவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறிது பொழுதினும் யான், அறியாது இகழ் வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனி யொருகாலும் அது வாயாது போலும்! 
391 திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையால் தொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதக்களிற்றி னுரியானைப் பெரிய
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப் பேவுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.9
வில்லை வளைத்து எய்த ஓர் அம்பினாலே, பகைமை கொண்ட கொடிய அசுரர்களது ஊர்கள் மூன்றும் வெந்தொழியுமாறு போர்த்தொழிலை மேற்கொண்ட சிவபெருமானும், பெரிய கால்களையுடைய மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனும், பெரிய மூன்று கண்களையும் உடையவனும், தன்னை மதியாத அரக்கனாகிய, இருபது பெரிய தோள்களையும், பத்துத் தலைகளையும் உடைய இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய, கயிலாய மலையின்மேல் நீங்காது இருப்பவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை அவன் தனது திருவடியை என் முடிமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும், யான், அறியாது, இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 
392 என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.038.10
எலும்பையே அணிகலங்களாக அணிபனும், விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும், இசைஞானிக்கு மகனும், வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த, வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும், வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால், மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும், யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், எனக்குரிய பொன்போன்றவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன்போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.