LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-41

7.041.திருக்கச்சூர் ஆலக்கோயில் 
பண் - கொல்லிக்கௌவாணம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர். 
தேவியார் - கன்னியுமையம்மை. 
415 முதுவாய் ஓரி கதற முதுகாட் 
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் 
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் 
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர் 
ஆலக் கோயில் அம்மானே.
7.041.1
பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங்காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உண் அடியவர் கவலைகொள்ளாரோ? 
416 கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்ச மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.2
எங்கள் பெருமானே, இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே, திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே, நீ, அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி, கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க, பிச்சைக் கென்று, ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால், உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம். 
417 சாலக் கோயில் உளநின் கோயில்
அவைஎன் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோ ரறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்க ளுரைத்த அம்மானே.
7.041.3
தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே, அழகுடையதும், குறைவில்லாததும் ஆகிய, குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற, கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே, உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து, மயக்கமுந் தீர்ந்தேன்; வினையையும் ஓட்டினேன்; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து, நீ இரந்து சோறிடப்பெற்றேன். 
418 விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.4
இடப வாகனத்தையும், இடபக்கொடியையும், சடை முடியையும் உடையவனே, திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே, எங்கும், அழகியவாயில்களையும், நிறைந்த மணிமண்டபங்களையும், அழிவில்லாத மாடங்களையும் கொண்டு, சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும், நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால், தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற, வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள, ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, இஃது உன்கருணை இருந்தவாறேயோ! 
419 மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.5
மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே,காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே, மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த, கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன். 
420 பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே யொழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.6
பிறவாதவனே, இறவாதவனே, யாதொன்றையும் விரும்பாதவனே, மூப்படையாதவனே. இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே, மறதி இல்லாதவனே, என்றும் சுடுகாட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே, திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால், உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ? இதனை அறவே ஒழி. 
421 பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.7
மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே, கங்கையையும், ஆத்திப் பூவையும், சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே, செம்மைநிறம் உடையவனே, வெண்மைநிறம் உடையவனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும், அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே, எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை. 
422 ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.8
காட்டில் உள்ள கொன்றை மலர், மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே, மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே, உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே, திருக்கச்சூரில் உள்ளவனே, ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மையுடையேனும், அறிவில்லாதேனும் ஆகிய யான், உடம்பை வளர்க்கும் செயலில் நின்று, உன்னை நினையாது விட்டேன். 
423 காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் கழனிப் பழனக் கச் சூர்
ஆலக் கோயில் அம்மானே.
7.041.9
உமையம்மைக்குக் கணவனே, உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே, விளைதலையுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்பால் பேரன்புகொண்டு, அதனால் இன்பம்மீதூரப்பெற்று, தம்மையறியாது வரும் சொற்களைச் சொல்லி, மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க, நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ? ஆகாதன்றே? 
424 அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.
7.041.10
அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால், 'ஆரூரன்' என்று, திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும், செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும், வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாடவல்லவர், என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.