LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-53

7.053.திருக்கடவூர் மயானம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர். 
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை. 
540 மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.1
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும், திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின் மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; 'திருமால், பிரமன், இந்திரன்' என்ற பெருந்தேவர்கட்கும், 'மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்' என்பவர்கட்கும் அவரே தலைவர். 
541 விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.2
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடையவரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகப் கொண்டவரும, தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர். 
542 காயும் புலியி னதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.3
பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங் கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவா; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர். 
543 நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.4
ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம்பலாக்கிய இறைவராவர்; 'இல்லை' என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர். 
544 கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.5
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும் பிறையையும் திருமுடியிற்சூடி, சொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பையும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூதகணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர். 
545 துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதா
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.6
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர். 
546 காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.7
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.
547 வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.8
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர். 
548 வேழ முரிப்பர் மழுவாளர்
வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
ஆனஞ் சுகப்பா அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.053.9
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்டு அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர். 
549 மாட மல்கு கடவூரின்
மறையோர் ஏத்து மயானத்துப்
பீடைதீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே.
7.053.10
மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, 'ஆரூரன்' என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்டிகின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.