LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-68

7.068.திருநள்ளாறு 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர். 
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை. 
688 செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.1
செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும், கரிய கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத சம்புவும், நெருப்பை அகங்கையில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும், குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும், எருதின்மேல் ஏறிவரும் தலைவனும், எங்கள் அருந்துணைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
689 விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.2
மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், வேதத்தின் இசையை விரும்புபவனும், அன்பு மிகச்சிறந்து, மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும், பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும், ஒலிக்கின்ற கடலும், மலையும், உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும், ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும், முல்லை நிலத்திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
690 பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.3
பூவில் உள்ள மணமும், பொன்னும், மணியும் ஆகிய இவைபோல்பவனும், 'மண், நீர், தீ, காற்று, வானம்' என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும், எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும், நன்மையே வடிவானவனும். தேவர்கட்கெல்லாம் தேவனும், தித்திக்கும் தேன்போல இனிப்பவனும், குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும், கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும், 'சீகாமரம்' என்னும் இசையாற் பாடுமிடத்து, நாவில் இனிமை மிகுகின்றவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
691 தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.4
'அடைக்கலம்' என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும், தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும், அறிவு மிக்க தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
692 மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கௌ வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேன.
7.068.5
மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும், இயல்பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும், வானமாகிய நாட்டை உடையவனும், பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும், எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலைவனும், ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன். வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
693 கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.6
கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும், காமனைக் காய்ந்தவனும் கண்பொருந்திய நெற்றியை உடையவனும், சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து, பொருள்கள், நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும், என்னை அடியவனாக, திருவெண்ணெய் நல்லூரில், யாவரும் வியக்கத் தக்க, பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலையாய் உள்ளவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
694 மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.7
அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும், அன்னதொரு மாயம் வல்லவனும், நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும், தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும், தேவர் சேனைக்குத் தலைவனாகிய, குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவனும், நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும், பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன். 
695 மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கௌ வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.8
மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
696 இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.068.9
இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க, அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும், அவனது விளங்குகின்ற பெரிய முடியணிந்த தலைகள் ஒருபதையும், தோள்கள் இருபதையும் நெரித்து, பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு, வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் 'இராவணன்' என்ற பெயரையும், அவனுக்கு அளித்த வள்ளலும், குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன், சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளியுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
697 செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே.
7.068.10
நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை, திருநாவலூரில் தோன்றியவனும், 'சிங்கடி' என்பவளுக்கும் 'வனப்பகை' என்பவளுக்கும் தந்தையும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன், 'இப்பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது' என்று சொல்லி, அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு, இறந்து போதலும், பிறந்து வருதலும் இல்லையாக, பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.