LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

சித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -02 : சித்தமருத்துவ வரலாற்றுக் குறிப்பு

 

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy)
உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy)

உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

 

 

சித்த மருத்துவ வரலாற்றை அறிய வேண்டுமெனில் மூன்று கட்டமாக அதை பிரித்து அறிய வேண்டும்; ஆதிகால சித்த மருத்துவம், இடைக் கால சித்த மருத்துவம், தற்கால சித்த மருத்துவம். இவற்றின் போக்கினை தெரிந்து கொண்டால் எதிர்கால சித்த மருத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவை நாம் செதுக்கலாம்.

 

I. ஆதிகால சித்த மருத்தவம்:

முதல் மனிதன் தோன்றிய உடனேயே, நோயும் மருத்துவமும் தோன்றியது என்பது ஏற்றுகொள்ள வேண்டிய யதார்த்தம் ஆகும். நச்சு பூச்சிகள் கடித்தல், வேட்டையாடிய காயங்கள், அடிபடுத்தல், இனக்குழுக்களுக்குள் மோதல்கள் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்த அந்த வைத்திய முறைதான் பிற்காலத்தில், அந்த இனத்தின் மரபு வைத்திய முறை மருத்துமாகியது. இவ்வாறு தமிழ் (திராவிடம்) இனத்தின் மரபு வைத்திய முறையை தொகுத்து, புதுமை புகுத்தி, கால நிலைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வந்து, அதை குருகுலமாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தவர்கள் தான் சித்தர்கள் என அழைக்கப் பட்டார்கள். அவர்கள் தொகுத்த வைத்திய முறையே சித்த வைத்தியம் என்று போற்றப் பட்டது.

 

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பொதுவாக (ஆதி) சிவனே சித்த மருத்துவத்தின் கடவுள் என்றும், அகத்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை எனவும் நம்பபடுகிறது.  (ஆதி) சிவனே சித்த வைத்தியம் மற்றும் யோக மருத்துவ முறைகளை உலகுக்கு கொடுத்தவர் என்று எல்லா சித்தா மற்றும் யோக ஓலைசுவடிகள்  குறிப்பிடுகின்றன. (ஆதி) சிவன் மற்றும் அவரது சித்தாந்தத்தை கைக்கொண்ட மற்ற சித்தர் பெரு மக்கள் எல்லாரும் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு சமமாக பங்களித்துள்ளனர்.

சித்தர்கள் என்றால் யார்: 

சித்தர்கள் சகல சக்தியும் படைத்தவர்கள், கடவுள் தன்மை அடைந்தவர்கள், அட்ட மகா சித்திகள் (magical power) செய்பவர்கள், முக்காலமும் உணர்ந்த ஞானிகள், உலகை காக்கும் நாயகர்கள், படைக்கும் திறன் படைத்தவர்கள் என்றெல்லாம் பல அசைக்க முடியாத நம்பிக்கைகள் தமிழர்கள் மத்தியில் இன்றளவும் இருக்கிறது. இதில் விந்தை என்ன வென்றால், எந்த ஒரு சித்தரை பற்றியும் ஒரு சரியான வரலாற்று ரீதியான ஆராய்ச்சிகள் செய்த பாடில்லை. இங்குதான் நமக்கு வரலாற்று அறிஞர்கள் மற்றும்  தொல்லியல் துறையினரின் பங்கு இன்றியமையாதது. இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டிய ஒரு பகுதியாக இது விளங்குகிறது.

 

எங்கிருந்து ஆரம்பமாகியது:  

Mohenjo Daro மற்றும் Harappa நாகரிகம்தான் (2500 BC முன்பாக) சிறப்பாக அக்காலத்தில் மானிட வாழ்வியலில் முன்னேறி இருந்த நாகரிகம் என்பதற்கும், அது தமிழர் நாகரீகம் எந்தற்கும் எண்ணற்ற வரலாற்று ஆராய்ச்சி சான்றுகள் இருக்கின்றன.  அதில் முக்கிய அம்சமாக கண்டெடுக்க பட்ட சிறு தரவு, சித்த மருத்துவத்தின் கடவுளான ஆதி சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த படம் (படம் பார்க்கவும்).  

 

இந்த ஆதி சிவன்தான் சித்த மருத்துவம் மற்றும் யோகா மருத்துவத்தின் கடவுள் என்று கருதப்படுபவர். உண்மையிலேயே அக்காலத்தில் யோக மருத்துவம் என்பது ஒரு தனி மருத்துவ முறையல்ல, அது சித்த மருத்துவத்தில் உள்ள காயகற்பம் என்னும் சாவை வெல்லும் அறிவியலின் கீழ் வரும் பயிற்சி முறைகளே.


                        நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

                        நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

                        மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

                        என்றிவர் என்னோ டெண் மரு மாமே.

-          திருமூலர் திருமந்திரம் (67/3047)


இந்த திருமந்திர பாடல், சிவனின் முதன்மை சீடரான நந்தி சித்தரின் சீடர்கள் மொத்தம் எட்டுபேர் என்று தெளிவாக உரைக்கிறது. திருமூலரும் பதஞ்சலியும் சேர்த்து மொத்தமாக எட்டு பேர் யோகா வகுப்பு தோழர்கள் என்றும், அவர்கள் இந்த கலையை, சிவனின் சீடரான நந்தியிடம் கற்று கொண்டதாகவும் பதிக்கப் பட்டிருக்கிறது. நாம் அசந்து இருந்த காரணத்தால், யோக மருத்துவம் இன்று தனி யொரு மாற்று மருத்துவ முறையாக உலகெங்கும் அறியப்படுகிறது. இதற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் உள்ள தொப்புள் கொடி உறவும் மறைந்து,  அதன் தாயாகிய சித்த மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பை பாதுகாக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நம் மரபை கண்டுகொள்ளாமல், போற்றாமல் விட்டதன் வெளிப்பாடு என்பதை அறியவேண்டும்.  இருப்பினும், நியூட்டனின் இயற்பியல் விதித்தான் அதற்கு பதிலாக அமையும். அதன்படி, ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம். சித்த மருத்துவத்தின் துரும்பை கூட நம்மால் இனி அழிக்க முடியாது, ஏனெனில், இந்த வைத்திய முறை மனித குலத்துக்கு பயன்படுவதற்காகவே உருவாக்கபட்டு இருக்கிறது. நாம் அதை சரிவர கையாளாமல், பெட்டியில் பூட்டி வைப்போமானால், அது நமது பாரம்பரியம் என்னும் அடையாளத்தை இழந்து, வேறொரு பெயரில் வேறொரு நிலப்பரப்பில் வாழும், அங்குள்ள மக்களை வாழ வைக்கும். இன்னும் சித்த மருத்துவம் என்னும் சொல் கூட  ஆங்கில அகராதிகளில் சேர்க்கப் படவில்லை, அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டியது அவசியம்.

 

ரிக் வேதம் தான் இந்தியாவின் தொன்மையான எழுதப்பட்டு  (oldest Documented literature) நமக்கு கைக்கு கிடைத்த புத்தகம் என்பது வரலாறு. அந்த புத்தகம், சித்த மருத்துவத்தின் கடவுளை (சிவன் அல்லது உருத்திரன்)  சிறந்த மருத்துவர் என்று குறிப்பிடுகிறது.


Rudra (Shiva), may we not make you furious!

You are indeed a bull! We hear that you are the best among physicians,

and may our children grow up with your remedies”  - (Rig Veda 2-33.4) 

 

இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று ஒவ்வொரு வேத காலமும் பல நூற்றாண்டுகளை உள்ளடக்கியது. ரிக்வேதம் சித்த மருத்துவத்தின் கடவுளை தலை சிறந்த மருத்துவன் என்று, சித்த மருத்துவத்தை மறைமுகமாக புகழ்கிறது. அப்படி என்றால், ரிக் வேத காலத்துக்கு (1900 –  1100 BC)  முன்பே நமது சித்த வைத்தியம் கோலோச்சி இருந்து இருக்கிறது. இந்த வேளையில், ஆயுர்வேதம் என்று சொல்லக் கூடிய வடமொழியின் பாரம்பரிய மருத்துவ முறை அதர்வண வேத காலத்தில் (1200 - 1000 BC) தோன்றியதாக நம்ப படுகிறது. இதிலிருந்து சித்த மருத்துவத்தின் கால கட்டத்தை ஓரளவு யூகிக்க இயலும்.

சித்த என்பது முழுமையடைந்த அறிவு (perfected knowledge or fulfilled science),  அல்லது அறிவை பயன்படுத்தி செய்யும் செயல் என்றும் கொள்ளலாம். சித்து என்றால் சித்து விளையாட்டுகள் போன்றதொரு சக்தி வாய்ந்த செயல்களை குறிக்கும். சித்தன் என்பது சிவன் மற்றும் புத்தரை குறிப்பிடும் சொல்லாடல் ஆகும். சித்தி என்ற சொல் பல மொழிகளில்  உள்ளதை பார்க்க முடிகிறது, அரேபிய மொழியில் சித்தி என்றால் Master என்று பொருள் கொள்கிறது.  இந்த நேரத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டுகிறேன். சித்தம் என்ற ஒரு இந்திய மொழியே அக்காலத்தில் வழக்கத்தில் (600 – 1200 CE) இருந்து வந்துள்ளதாகவும், அந்த எழுத்துக்களை பயன்படுத்தியே சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்த சமய நூல்கள் எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து பல ஆசிய மொழிகள் கிளைத்ததாகவும் வராற்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இன்றும் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் சித்தம் மொழியில் எழுதபட்ட  தொன்மை வாய்ந்த புத்த சமய நூல்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். நமது சித்த மருத்துவ முறைகள் புத்த துறவிகள் மூலமாக பல நாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள மொழிகளில் புழக்கத்தில் கலந்து விட்டதற்கும் பல தரவுகள் உள்ளன. பொதுவாக சித்தர்கள் பல மொழி, இனம், நாடு, சமயம் போன்ற  பின்புலங்களை கொண்டு இருந்திருந்தாலும் அவர்கள் தமிழால் இணைந்தே இருந்துள்ளனர். தமிழை கற்று, சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, தமிழில் ஏடுகள் எழுதியும் உள்ளனர். அவர்கள் மீண்டும் பல தேசங்களுக்கு செல்லும் போது, நமது சித்த மருத்துவம் பல மொழிகளில் எழுதப்பட்டு அந்தந்த கலாசாரத்தில் கலந்து இருக்கிறது.  இன்றோ, தமிழ் தவிர வேறு மொழிகளிலும் உள்ள சித்த மருத்துவ ஓலை சுவடிகள் அல்லது நூல்களை நாம் அறியாமலே இருந்து விட்டோம். இதை குறித்து விரிவான ஆராய்ச்சிகள் தேவை படுகிறது. பல மொழிகளில் புலமை பெற்ற தமிழறிஞர்கள் இதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

சித்த மருத்துவம் பல சித்தர்களின் பெயரை குறிப்பிடுகிறது, பல சித்தர்கள் பல்வேறு நூல்களை இயற்றி உள்ளனர். அவர்களில் நந்தி தேவர், அகத்தியர், தன்வந்தரி, பதஞ்சலி, தேரையர், போகர் போன்றவர்கள் குறிப்பிடதகுந்தவர்கள் ஆவர். பதஞ்சலி யோக மருத்துவத்தின் தந்தையாகவும், தன்வந்தரி ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்கள். தன்வந்தையும், பதஞ்சலியும் பல சித்த மருத்துவ நூல்களை தமிழில் எழுதி உள்ளனர். இவ்வாறு சித்த வைத்தியம் உலக பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு எல்லாம் தாய் என்றால் மிகையாகாது. தன்வந்தரி சித்தர் சமஸ்கிரத மொழியில் இயற்றிய நூல்கள் மற்றும், அவரை ஒட்டி வந்த வைத்திய பரம்பரையை ஆயுர்வேதம் என்றும் அழைக்கபடுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் ஆயுர்வேதத்தில் சொல்லக் கூடிய தன்வந்தரி வட நாட்டில் பிறந்தவர் என்ற வரலாற்று முடிவும் உள்ளது. பெரும்பான்மையான ஆயுர்வேத நூல்கள் புத்த துறவிகளாலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பதும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இது குறித்து விரிவான  ஆராய்ச்சி தேவை.

போகர் என்ற பெயர் தமிழகத்தில் எத்தனை பேர் வைத்திருக்கின்றார்கள், அப்படி எனில் போகர் சித்தர் தமிழரா என்ற சந்தேகம் எவருக்கும் வரும். அந்த பெயரை பார்த்தால், போகத்தில் திளைத்தவரோ என்று கூட நமக்கு எண்ணத் தோன்றும். உண்மை என்னவெனில், போகர் (Bo yang) என்று சொல்லப்படும் சீன துறவி பழனி மலைக்கு வந்து முருகன் சித்தரை குருவாக ஏற்று கொண்டு, தமிழ் படித்து, சித்த மருத்துவம் பயின்று, பல சித்த மருத்துவ நூல்கள் எழுதி, பின்னர் சீனாவுக்கு மறுபடியும் சென்று விட்டதாக தகவல். குருவின் நினைவாக, போகர் செய்து வைத்ததுதான் நவ பாசாண முருகர் சிலை.  அக்காலத்தில் கோயில்கள், ஆற்றங்கரையில் மூலிகை பொழிலுடன், மக்கள் வந்து தங்கி சிகிட்சை பெறும் மருத்துவ மனையாகவும், வழிப் போக்கர்கள் பாதுகாப்பாக தங்கி செல்லும் இடமாகவும் இருந்து இருக்கிறது. இங்கு தான் சித்தர்கள் குருகுலம் மூலமாக சித்த மருத்துவத்தை மாணாக்கருக்கு சொல்லிக் கொடுத்து வந்துள்ளனர். சிவன், முருகன் போன்ற சித்தர்களுக்கு அவர்கள் சீடர்களால் சிலைகள் வைத்து கடவுளர்களாக வழிபட ஆரம்பித்த பிறகு, அங்கு மதம் மட்டுமே தங்கியது, மருத்துவம் ஒழிந்தது. குருகுலம் மூலமாக சித்த மருத்துவத்தை மாணாக்கருக்கு சொல்லிக்கொடுத்து வரும்போது, எவருக்கு அதில் ஆர்வம் மற்றும் மருத்துவருக்கான இலக்கணம் இருக்கிறதோ அவர்களே சித்தா மருத்துவத்தை படிப்பை தொடர முடியும். குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் மட்டும்தான் சித்த வைத்தியம் பயில முடியும் என்று அக்காலத்தில் இல்லை. 

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சித்தர் நாகர்ஜுனர் சித்த மருத்துவ நூல்களை தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் எழுதி வைத்திருக்கிறார். அவைகளை நாம் பாதுகாக்க, உரிமை கொண்டாட தவறிவிட்டோம்.  இலங்கையில் உள்ள சிவனின் பக்தனான இராவணன் எழுதிய சித்த மருத்துவ நூல்கள் (நாடி, மூலிகை திராவகம் – medicated Volatile oils)சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது . அதையும் சரியாக ஆய்வுகளுக்கு உட்படுத்தி போற்றாமல் விட்டுவிட்டோம்.  இதைபோல எவ்வளவோ சித்த மருத்துவ சொத்துக்கள் மற்ற மொழிகளிகளில் இயற்றப்பட்டு, நம் கைகளில் தவழாமல் போய்விட்டது.

Constantine Joseph Beschi  என்ற இத்தாலிய கிறிஸ்தவ மத போதகர் தமிழகத்தில் சுற்றி திரிந்த காலங்களில் ( கிபி 1680 - 1747), தமிழை பயின்று, தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றி, சித்த மருத்துவத்தை பயின்று, ஆறு சித்த மருத்துவ நூல்களை (நசகாண்ட வெண்பா, நவ இரத்தின சுருக்க மாலை, மாகா வீரிய சிந்தாமணி, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, தனிமுறை திரட்டு) எழுதி உள்ளார். சித்திர மூல குளிகை, காந்த ரச வில்லை போன்ற புற்று நோய்களுக்கான மருந்துகள் மற்றும் எண்ணற்ற உயிர் காக்கும் மருந்துகள் இவரின் பங்களிப்பு ஆகும். (படம் பார்க்கவும்).  

 

 

இராம தேவர் என்ற சித்தர், முகம்மது நபியின் மரணத்துக்கு பிறகு, தமிழகத்தில் இருந்து மெக்காவுக்கு புறப்பட்டு சென்று, சுன்னத் செய்து தன் பெயரை யாக்கோபு சித்தர் என்று மாற்றி, பல சித்த மருத்துவ நூல்களை அந்த தேசத்தின் மொழியில் இயற்றி உள்ளார்.

இவ்வாறு, சித்த மருத்துவம் என்பது மதம், சாதி, இனம், மொழிக்கு அப்பாற்பட்டு, மனித குலத்தின் பயன்பாட்டுக்காக மட்டுமே இன்றளவும் வாழ்ந்து வந்து, பல பாரம்பரிய மருத்துவங்களின் தாய் மருத்துவமாக திகழ்கின்றது. ஒன்று மட்டும் நிச்சயம், எல்லா சித்தர்களும், தமிழால் இணைந்தே இருந்துள்ளனர். எனவே நாமும் சித்த மருத்துவத்துக்கு மத மற்றும் மொழி சாயம் பூசாமல், இந்த தடைகளை கடந்து மனித குலத்துக்கு பயன்பட செய்ய வேண்டும். தமிழில் எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக நாம் சித்த மருத்துவ முறையை வளர்த்தெடுக்காமல், தண்டிக்க நினைப்பது தவறல்லவா? சித்தர்கள் எழுதிய மருத்துவ நூல்களை பற்றியும், அவற்றின் இலக்கண முறைகளை பற்றியும், பிற ஆசான்கள் மற்றும் வைத்தியர்கள் எழுதிய சித்த நூல்கள் பற்றியும்  பின்னாளில் எழுதுகிறேன்.

சித்தர்களை பற்றிய மேலும் பல நுட்பமான, சுவையான தகவல்கள் இருந்தாலும், சித்த மருத்துவத்தை புரிந்து கொள்வதற்கு இந்த தகவல்கள் போதுமானது என்பதால் இத்துடன் முடித்து கொள்வோம்.  

 

(தொடரும்)

by Swathi   on 20 May 2018  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
03-Aug-2018 17:55:12 Meenagandhi said : Report Abuse
Brahma smritva ayusho vedam : Origin of Ayurveda : Meaning : "The parabrahma the creator of universe, who himself recollected the wisdom of ayurveda passed on to his disciples.. The word smritva, denotes the rememberance of the already existed wisdom .So documentation not necessarily predicts the origin. And brahma here denotes the parabrahma the creator of prabhanjam.The acceptance of supreme power varies according to Saivism ,vaishnavism,sakthism etc where they accept shiva ,vishnu, parvathi respectively ..Authors of ancient medical literatures could possibly interpreted their religious view in the documentations...Atharvaveda is the documented wisdom of ayurveda that has unpredictable beggining....
 
22-May-2018 09:08:07 மரு.அனுஷா said : Report Abuse
Super dr.Arul..
 
22-May-2018 09:07:43 மரு.அனுஷா said : Report Abuse
Super dr.Arul..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.