LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் "சோலைவனம்" அமைப்புடன் ஓர் நேர்காணல் இரமா ஆறுமுகம், டெலவேர்,அமெரிக்கா

தமிழ் நாட்டில் சமீப காலமாக இயற்கைப் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்பு சோலைவனம். அந்த அமைப்பின் நிறுவனர்கள்  இளவரசன் மற்றும்  ஸ்ரீதர் கோபாலன் ஆகியோருடன் ஒரு நேர்காணல். இளவரசன் தமிழ்நாட்டில் அரியலூரைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து கொண்டே இந்த சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீதர் கோபாலன் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறார்

இரமா: வணக்கம் இளவரசன் மற்றும் ஸ்ரீதர். தமிழ்நாட்டில் சோலைவனம் அமைப்பு எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூற முடியுமா ?

இளவரசன்: வணக்கம் இரமா. நான் என்னுடைய நண்பர்கள் திருநெல்வேலி யைச் சேர்ந்த முருகு பூவலிங்க பாண்டியன், திருச்சியைச் சேர்ந்த முனைவர் சக்திவேல், ஈரோட்டைச் சேர்ந்த முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் கோபாலன் ஆகியோர் சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சோலைவனம் அமைப்பைத் தொடங்கினோம். தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தமிழகத்தில் வளரக்கூடிய  வேம்பு, புங்கை, மகிழம், செண்பகம், மந்தாரை, அத்தி, இலுப்பை போன்ற பல்வேறு வகையான நாட்டு மரங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த அமைப்பை ஆரம்பித்தோம். எங்கள் அமைப்பில் தற்போது 600 தன்னார்வலர்கள் இருக்கின்றனர்.

இரமா: மிகவும் சிறப்பான முயற்சி இளவரசன்நம் தலைமுறை மற்றும் அடுத்து வரும் தலைமுறையினர் நலனுக்கு மிகவும் அவசியமான ஒரு முயற்சி.உங்கள் அமைப்பின் மூலம் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துகிறீர்கள் என்று சொல்ல முடியுமா ஸ்ரீதர் ?

ஸ்ரீதர்: வணக்கம் இரமா இயற்கையைப் பாதுகாப்பதற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். முதலாவதாகச் சோலைவனத்தின்  முக்கியத் திட்டமான  "மாதம் ஒரு கிராமம் திட்டம்"இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து 500 நாட்டு மரக் கன்றுகளை எங்கள் பண்ணைகளில் வளர்த்து நடுகிறோம்எங்களுக்குத் திருநெல்வேலி, கும்பகோணம், சேலம் மற்றும் அரியலூரில் நேரடி நாற்றுப் பண்ணைகள் உள்ளன. மரக்கன்றுகளுக்கான செலவு பத்தாயிரம் ரூபாய். போக்குவரத்து மற்றும் அனைத்துச் செலவினங்களையும் சேர்த்து பன்னிரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. இதுவரை இந்தத் திட்டத்தைப் பதினாறு கிராமங்களில் நிறைவேற்றியிருக்கிறோம். இதைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இரமா : அருமை ஸ்ரீதர். நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு நாற்றுகளை வளர்த்துக் கொடுக்கிறீர்களே இதனால் பயன் பெறுவோர் சரியாகப் பராமரிக்கிறார்களா என்று கண்காணிப்பீர்களா?

இளவரசன்: நாங்கள் நாற்றுகள் கொடுக்கும் போதே  எளிதில் பட்டுப் போகாமல் இருக்கக் குறைந்தது மூன்றடி உயரம் வரை வளர்த்துக் கொடுக்கிறோம். அதன் பிறகு ஆறு மாதத்திற்கொருமுறை நாற்றுகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கிறோம்.

இரமா: நன்றி இளவரசன். மரக் கன்றுகளைத் தொடர்ந்து கண்காணித்தல் மிகவும் அவசியமான ஒன்று. சோலை வனத்தின் மற்ற திட்டங்களைப் பற்றிக் கூறுங்கள்.

இளவரசன்: "விதை சேகரிப்புத் திட்டம்". இந்தத் திட்டத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் காடுகளுக்குள் சென்று மரங்களின் இலைகள், பட்டைகள், மரத்திற்குக் கீழே கிடக்கும் விதைகள் இவற்றை எடுத்து ஒவ்வொரு மரத்திற்குரியனவையைத் தனித் தனியாகக் கட்டி எடுத்து வந்து விடுவார்கள். இவர்களை "விதை பொறுக்கிகள்" என்று அழைக்கிறோம். அத்துடன் மரங்களின் இடத்தையும் உலகளாவிய பொருத்துதல் அமைப்பின் (GPS) மூலம் பதிவு செய்து விடுவார்கள். விதை பொறுக்கிகள் கொண்டு வரும் மரம் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து மரம் பழனிச்சாமி ஐயா போன்றவர்கள் ஆய்வு செய்து என்ன மரத்தின் விதை என்பதைக் கண்டறிந்து கூறுவார்கள். இது போல ஏறத்தாழ 12 லட்சம் விதைகளைச் சேகரித்து வைத்திருக்கிறோம். எங்களிடம் தற்போது 51 வகை நாட்டு மரங்களின் விதைகள் உள்ளன. எந்த மரங்கள் எந்த மாதத்தில் விதைகள் தருகின்றன, எந்த இடத்தில் இருக்கின்றன என்ற தகவலைச் சேகரித்து வைத்திருக்கிறோம். இவ்வாறு கிடைக்கும் விதைகளை வைத்து பண்ணைகளில் மரக் கன்றுகளை வளர்த்துக் கொடுக்கிறோம்

இரமா: மிகச்சிறந்த திட்டம் இளவரசன். நல்ல வீரியமான விதைகள் இருந்தால் தான் நல்ல மரக் கன்றுகளை உருவாக்க முடியும். நாட்டு மரங்கள் தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. உங்களின் இந்த முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடன் பட்டிருக்கிறது. அடுத்த திட்டத்தைப் பற்றி நீங்கள் கூறுங்கள் ஸ்ரீதர்.

ஸ்ரீதர்: அடுத்ததாக, "ஒரு குடும்பம் மூன்று மரங்கள்" திட்டம். இந்த திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல் படுத்துகிறோம் முதல் கட்டமாக, ஒரு தென்னை மரம்  ஒரு பழ மரம் மற்றும் ஒரு நாட்டு மரம் ஆக மொத்தம் 3 மரங்களை நேரடியாக வளர்த்தோ, குறைந்த விலையில் வாங்கியோ கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராமத்தினருக்குக் கொடுத்தோம். எங்கள் நோக்கம் முதலில் நாட்டு மரக் கன்றுகளை வளர்த்துக் கொடுத்துப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழிவகுத்து இயற்கையைப் பாதுகாப்பதே. ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் கிட்டத்தட்ட 1 கோடி தென்னை மரங்கள் அழிந்து போயின. பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி தென்னை விவசாயிகள் பலருக்குத் தென்னை வளர்ப்பைத் தவிர வேறு  தொழில் தெரியாது. அப்போது தான் வலைத்தமிழ் மூலம் அமெரிக்காவில் டெலவர் மாநிலத்தில் சேரிட்டி க்ராஸிங் (Charity Crossing) என்ற தன்னார்வல அமைப்பை நிறுவி நடத்தி வரும் ஜெயக்குமார் முத்துக்காமாட்சியின் தொடர்பு கிடைத்தது. அவர் கொடுத்த யோசனையின் பேரில் தென்னை, மா ஆகிய 2 வருமானம் தரும் மரங்கள் மற்றும் இயற்கை வளம் தரும் 1 நாட்டு மரத்தை வழங்கினோம். இந்த மூன்று மரக் கன்றுகளைக் கொடுப்பதற்கு போக்குவரத்துச் செலவு உட்பட எங்களுக்கு நூற்றியம்பது ரூபாய் செலவானது.இந்தத் திட்டத்தைச் சேரிட்டி க்ராஸிங், சோலை வனம் உள்ளிட்ட 18 இந்திய மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து  “நலம் நல்கும் நண்பர்கள்" என்ற பெயரில் கள்ளிமேடு, அவரிக்காடு, செம்போடை,நாககுடியான், தாமரைக்குளம் மற்றும் நாலுவேதபதி என்ற ஆறு கிராமங்களைத் தத்தெடுத்து ஏறத்தாழ 29,880 மரக் கன்றுகளை வழங்கிச் செயல்படுத்தியுள்ளோம்

இதில் இரண்டாவது கட்டமாக, தென்னை, மா மற்றுமொரு பழ மரம் உள்ளிட்ட மூன்று மரக் கன்றுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு நூற்றியெழுபது ரூபாய் செலவாகிறது. இதையும்நலம் நல்கும் நண்பர்கள்” மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இரமா: நன்றி. மிகவும் அருமையான முயற்சிநலம் நல்கும் நண்பர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. அமெரிக்கத் தமிழர்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் மேம்படுத்த சோலைவனத்துடன் இணைந்து தொண்டாற்றுவது மிகவும் சிறப்பு. மற்ற திட்டங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

 

இளவரசன்: கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக அமெரிக்காவில் உள்ள  மிசெளரி தமிழ்ச் சங்கத்தினர் எங்களை அணுகினர். அவர்கள் உதவியுடன் பத்து மரம் அறுக்கும் கருவிகளை வாங்கி பாதிக்கப்பட்ட கிராமங்களில் பயன்படுத்தி விழுந்த மரங்களை அகற்றினோம்.அதன் பிறகு புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக "ஒரு குடும்பம் 5 மரக்கன்றுகள் திட்டம்" மூலம் ஒவ்வொரு தகுதியான குடும்பத்திற்கும் 5 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் 2 தென்னை, 1 மா, 1 பலா மற்றும் ஒரு நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதை வழங்குவதற்குப் போக்குவரத்து செலவு உட்பட இருநூறு ரூபாய் செலவாகியது. இந்தத் திட்டத்தைப்  புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள எடமேலையூர் கிராமத்தில், மிசெளரி தமிழ்ச்சங்கத்தின்  உதவியுடன் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் 700 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தமாக நான்கு கிராமங்களில் 2250 குடும்பங்களுக்கு 3 மரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதர்: அடுத்ததாகஏரி தூர்வாரும் திட்டம்”. ஆஸ்திரேலியாவில் உள்ள அறம், அமெரிக்காவில் உள்ள நம்பிக்கை விழுதுகள் மற்றும் வேர்கள் அமைப்புகளின் உதவியுடன் அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் உள்ள பெரிய ஏரியை ஐந்து லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரியிருக்கிறோம்.இதன் மூலம் ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் மற்றும் மூவாயிரம் கிராம் மக்களுக்குக் குடிநீர் வசதி கிடைத்துள்ளதுஇதைத் தவிர  "பசுமைப் பிறந்தநாள் திட்டம்" என்ற திட்டத்தை அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் மகேந்திரன் பெரியசாமி அவர்களின் உதவியுடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்சமூக ஊடகங்கள் வழியாகவும், மற்ற வழிகளிலும், பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பலருடைய உறுதுணையுடன் பல்வேறு பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்களை #Gift2Earth (#பூமிக்குப்பரிசு) என்னும் tag மூலம் ‘ஓராண்டு இலட்சியம் ஒரு இலட்ச மரங்கள்’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் உபரி இடங்களில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள்  என முடிந்த இடங்களில் எல்லாம் அங்கிருக்கும் ஆசிரியர், அலுவலர்கள், மாணவ மாணவியர் மற்றும் அதிகாரிகளையே பராமரிக்கச் செய்து, அவர்களிடம் நீண்ட கால ஒப்புதல் வாங்கி, பல இடங்களில் அடர் வனங்களை ஏற்படுத்தும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான மரச்செடிகளை, மர விதைகளை நட்டு இலக்கை அடைவதில் தீவிரம் காட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் செலவில் ஐநூறுக்கும் மேலான மரக்கன்றுகள் நடுகிறோம். நண்பர் மகேந்திரன் பெரியசாமியின் பிறந்த நாள் 6-ஜூன் அன்றுதான் இந்த பூமிக்குப் பரிசளித்துக் கொண்டாடும் பசுமை பிறந்த நாள் திட்டம்  முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இந்தத் திட்டத்தில் பன்னிரண்டாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் அமெரிக்க வாழ் தமிழ் நண்பர்கள் மூலம் தான் நிறைவேற்றியிருக்கிறோம்.

இரமா: மிகவும் சீரிய பணிஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உதவியுடன் நீங்கள் செய்யும் பணி மலைக்க வைக்கிறது.

இதைத் தவிர கடந்த செப்டம்பர் மாதம், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் 25 லட்சம் பனை விதைகளை விதைத்து உலக சாதனை படைத்திருக்கிறீர்கள். அது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

இளவரசன்: நாங்கள் “4 கோடி மரம் வளர்ப்புத் திட்டம்” என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக   " எல்லையில்லா பனை விதைப்புத் திட்டம்" என்ற திட்டத்தின் மூலம், இந்த வருடம் செப்டம்பர் 22ம் தேதி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் 25 லட்சம் பனை விதைகளை நட்டோம். இதற்காக ஒரு மாத காலம் பல்வேறு விதங்களில் பனை விதைகளைச் சேகரித்தோம். சோலைவனம் மட்டுமே இதற்காக அரியலூர் மாவட்டத்தில் ஒன்பது லட்சம் பனை விதைகளை நட்டுள்ளது. இதற்காகச் சோலைவனத்துடன் இணைந்து செயல்பட்ட அன்புடன் அறம் செய், ஈரோடு சிறகுகள், ஓர் உலகம் ஓர் குடும்பம் அமைப்பு ( One world one family) மற்றும் மாரல் வளங்கள் மற்றும் ஆய்வு அறக்கட்டளை (Moral Resources and Research Foundation) ஆகிய 5 அமைப்புகளுக்குத் தமிழ் நாட்டில் அதிகமான மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் பனை விதைகளை நட்டதற்காக எங்களுக்கு அக்டோபர் 20ம் தேதி சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த 25 லட்சம் பனை விதைப்பையும் சேர்த்து நான்கு கோடி இலக்கில் இது வரை கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் செப்டம்பர் 22ல் ஆரம்பித்து அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளான அக்டோபர் 15 வரை 25 லட்சம் பனை விதைப்பையும் சேர்த்து நாற்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.

இரமா: மிகவும் அருமையான முன்னெடுப்பு. பனை மரம் போலப் பயன் தரும் மரங்களை தமிழகம் முழுவதும் நட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துப் பனைப் பொருட்களை நன்கு சந்தைப் படுத்தினால்  நம் மக்களின் உடல் நலம் மற்றும் வாழ்வாதாரம் பெருகும். உலகத் தமிழர் உதவியுடன் சோலைவனம் மேலும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வாழ்த்துகள். நன்றி இளவரசன் மற்றும் ஸ்ரீதர்.

இயற்கையைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம்மால் நேரடியாக இதில் நேரடியாக ஈடுபட முடியாவிட்டால் சோலைவனம் போன்ற அமைப்புகளுக்கு உதவி செய்தோ இணைந்து பணிபுரிந்தோ இயற்கையைப் பேணிக் காப்பது வருங்கால சந்ததியினருக்குப் பெரும் நன்மை பயக்கும்.

சோலைவனம் தொடர்பு எண்கள் : இளவரசன்: +91 6369704673, ஸ்ரீதர் கோபாலன் : +91 9962 554 594

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.