LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தாய்மொழியில் கல்வி அவசியமா !

மொழி


கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக உள்ளது. இருவேறு மனிதர்களுக்கிடையேயான எண்ணப்பகிர்வுக்கு ஊடகமாக மொழியானது உருவாக்கப்பட்டு,வடிவமைக்கப்பட்டு,வழிநடத்தப்படுகிறது.


அறிவியல் கண்ணோடு உட்நோக்கினால்,சிந்தனை என்பது மொழியாலே அமைந்திருப்பதை நாம் அறிய முடியும். தொடர்புக்கு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும் மொழி தேவையென்பதால்,மனிதன் சிந்திப்பதற்கு முன்னரே மொழி உருவானதா என்கிற வினாவும் எழுகிறது.ஆய்ந்துட் நோக்கினால்,ஒரு கருதுகோல் புலப்படும்.


மொழியானது ஒரு வித 'ஒலி' அல்லது 'சைகையே'. ஆரம்பகாலத்தில், வரிவடிவம் பெறாத ஒலியாலே குறிப்புகளை கொண்டு பின்னர்,ஒலிகளுக்கான அடையாளமாக வரிவடிவம் ஏற்படுத்தி,அதனை எல்லாரும் ஏற்று,பழகி,பொதுவான பயன்பாட்டுக்கு வருவதற்கே மிகநீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதன் பின்னரே,தொல்காப்பியர் போன்றோர் இலக்கண நூல்களை அமைத்து,மொழியை வழி நடத்தியிருக்கலாம். அந்தக்கோட்பாடுகளைக் கொண்டு, இன்றுவரை மொழியானது ஒழுங்குமுறைகளோடு பேணிக்காத்து வரப்படுகிறது. இக்காத்தல் பணி யாருடையது? மொழியை பயன்படுத்தும் பயனாளரே மொழிக்காத்தலுக்கு பொறுப்பாகிறார்.


தாய்மொழி


உலகமயமாக்க பணிகளில் தீவிரமடைந்திருக்கும் உலகநாடுகளில் பெருநாடுகள் தத்தம் ஆதிக்க வலைக்குள் உலகத்தை அடக்க நினைத்து,முன்னர் அரசியலாதிக்கம் புரிந்து, பின்னர் மொழியாதிக்கத்திற்கு படையெடுத்திருக்கின்றனர்.


இப்படையெடுப்பில்,அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் போர்க்கருவி புரிதலுக்குண்டான,எல்லா தகுதிகள் உள்ளடங்கிய,எதையும் எடுத்தியம்பக்கூடிய,தரமான மொழியே தம்மொழியெனவும்,வாழ்தலுக்குரிய மொழி தம்மொழியெனவும் மறைமுக பரப்புரைகளோடு செயல்படக்கூடியதாகும்.


மொழியால் இயலமுடியாதது என்று ஏதேனும் இருக்குமேயானால்,உயர்தனிசெம்மொழியாம் தமிழ்மொழி இன்றுவரை நீடித்திருக்கமுடியாது. மொழியின் வாழ்வு அதன் பயன்பாட்டிலும்,பயிற்றுவித்தலிலும் தான் உள்ளது. மொழியை காக்க வேண்டிய நாம் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் பயன்படாத மொழியென புறந்தள்ளுதல் நடப்புப்போக்காக உள்ளது. இக்கருதுகோல் நம்முள்,நம் சிந்தனையில் ஏற்படக்காரணம் பயிற்றுவித்தலின் பிழையே எனலாம்.


தாய்மொழியெனப்படுவது பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்கக்கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.ஆக, தாய்மொழி என்பது சிந்தனைமொழியாகும். தாய்மொழிவழிக்கல்வியானது,சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி.


தாய்மொழிவழிக்கல்வி


சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றக் கல்வி சிந்தனையைக் கூட்டுகிறது.நுணுக்கங்களையும்,அறிவியல் படைப்புகளையும் உருவாக்க தயார்படுத்துகிறது.


பட்டறிவாக , ஆதிக்கம் செலுத்தும் மொழியாக கருதப்படும் ஆங்கிலமொழியின் வளர்ச்சியின் காரணம், தம்மொழியிலேயே சிந்தித்து, தம்மொழியிலேயே அறிவியல் சிந்தனைகளை பதிந்து பரப்புவதனால்,பிறமொழிகள் மீதான மதிப்பு ஆங்கிலத்திற்கு ஈடிணையற்றது என்றும், நம் தாய்மொழி வாழ்க்கைக்குதவாததென்றும் கருதக்கூடியளவில் நம்மிளைய சமுகத்தின் மனங்களில் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த மனமாற்றத்தை,நாம் வெளிக்காரணிகளால் ஒருபுறம் பெற்றாலும், நம் கல்வி நிலையங்களாலும் ஏற்படுத்தி வருகிறோம்.


முதலில் கல்வியானது,


கற்றலை முதன்மைப்படுத்தியதா,கற்பித்தலை முதன்மைப்படுத்தியதா,

கருத்துருக்களை முதன்மைப்படுத்தியதா,ஊடகத்தை (பயிற்று மொழி) முதன்மைப்படுத்தியதா,

அறிதலை முதன்மைப்படுத்தியதா,வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தியதா

என்பதை சிந்திக்கவேண்டும்.

கல்வியில் கருத்துருக்களை அறிந்துக்கொள்ள,கற்றலை ஊக்கப்படுத்தவே முதன்மை குறிக்கோளாய் அமைய வேண்டும்.இக்கற்றல்முறை தாய்மொழியில் அமைந்தால் மட்டுமே முழுமைப்பெறும்.அதாவது,சிந்தனைமொழியில் கற்றலமைதல் வேண்டும்.ஆனால், சிந்தனைமொழியொன்றாகவும்,கற்றல்மொழியொன்றாகவும் இருக்குமெனில் கல்வியின் குறிக்கோளான 'அறிதலை' எவ்வாறு அடைய முடியும்?

கற்றல் மொழியானது கற்பித்தல் மொழியிலேயே அமையுமென்பதால் 'கற்றலில் தாய்மொழி' என்பதுப்போல் 'கற்பித்தலில் தாய்மொழி'யை முதலில் வலியுறுத்தப்படவேண்டும்.

இங்கு கற்பித்தலை இருவழியில் குறிப்பிடலாம்.

அவை,நூல் வழி கற்பித்தல் , நூலறிவுடையோர் வழி கற்பித்தல்.

தமிழ்மொழியில் பலத்துறை சார்ந்த நூல்கள் கிடைப்பது அரிதாகவேயுள்ளது.அப்படி இருந்தாலும், அதன் மீதானப் பார்வை தாழ்ந்தேயுள்ளது. இந்த தாழ்வுநிலைப்போக்க, நூலறிவுடையோர் நூலையியற்றவும் ,படிக்கவும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இத்தகைய மாற்றங்களல்லாமல் தமிழ்மொழிவழிக் கல்வியை முழுமைப்படுத்துவது எளிதன்று.
 


தாய்மொழிவழிக்கல்வியின் தேவை


     வளர்ந்துவரும் அறிவியலும் ,தொழில்நுட்பமும் மக்கள் தேவைகளை நிறைவேற்றவே செயல்படுகின்றன என்பது அடிப்படையுண்மை.ஆனால்,மக்களுக்காகத்தான் அறிவியலும், தொழில்நுட்பமும் எனும்போது, அதைப்பற்றி சிந்திக்கவும், ஆராயவும், கருத்துப் பறிமாற்றத்துக்குமான தேவைகளுக்கு மக்கள் மொழியிலே அவை இருக்க வேண்டுமே தவிர, கண்டுப்பிடிப்புகளின் மொழிகளிலிலேயே ,கண்டுப்பிடிப்பாளர்களின் மொழிகளிலிலேயே அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால், பெரும்பான்மையான கண்டுப்பிடிப்புகள் வட்டார மொழிகளில் அமைக்கப்படவில்லை.


சரி. தாய்மொழிவழிக் கல்வி இந்நிலையை எங்ஙனம் மாற்றும் ?


     பிறமொழி வழி க் கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆனால்,பிற மொழிக் கல்வியினால் அம்மொழியறிந்து பின்னர்,அம்மொழியில் அறிவு பெருக்குதல் என்பது கால விரயம்.ஆகையால், ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கிலமொழி வழியறிவியலறிந்து அறிவுப் பெறுவதைவிட, கருவறையிலிருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து,இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழி வழி அறிவியலறிவது முழுமையான , பல புதுமைகளை படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.


     இன்று, அறிவுத்துறைகளில் மிளிரும் வளர்ந்த நாடுகளில் கல்வியானது தத்தம் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே முன்னிலை வகிக்கின்றனர் என்பது காணும் உண்மை.


     இதனையுணராத நம்மில் பலர் ஆங்கில வழிக்கல்விக்கு முதன்மையளிப்பதால்,இன்றளவில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மிகப்பெரியளவில் பயிற்றுமொழியாகவும், விருப்பத்தின் பேரில் மட்டுமே தமிழில் பயிலும் நிலையும் காணப்படுகிறது.


     தாய்மொழிவழியில் தொடக்கக்கல்வியளிக்கும் போது,குழந்தைகள் தாம் நினைக்கும் எண்ணங்களையும்,தெரிந்த தகவலை தமக்கு தெரிந்த மொழியில் உடனே வெளிப்படுத்துகின்றனர்.ஆனால்,பிறமொழிக் கல்வி மோகத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் தொடக்கக்கல்வியை தரும்போது ,தன்சிந்தனையும் ,உடனே தம்மை வெளிப்படுத்துகின்ற தன்மையும் குறைவாகவே உள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தாய்மொழியின் மூலம் படிக்கும்போது தான் முழுமையானப் பொருளை மாணவர்களால் அறிந்துக்கொள்ள இயலும்.தாம் உணர்ந்தவற்றை தங்குதடையின்றி வெளிப்படுதும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் தன்னம்பிக்கையுடன் பலப் புதுச் சிந்தனைகள்,கண்டுப்பிடிப்புகள்,ஆய்வுகள் என தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளமுடியும்.


பொதுக்கல்வி


     தமிழகத்தில் இருக்கின்ற கல்வி நிலையங்கள் ஆளுக்கொரு பாடத்திட்டதை கையில் எடுத்துக்கொண்டு கல்விப்புகட்டுவதால் சமச்சீரான கல்வியை எல்லாருக்கும் தருவது என்பது சாத்தியமற்றது. பொதுக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தி தரமான கல்வியை தரும்போது மட்டுமே அனைவருக்குமான சரியான அறிவுப்புகட்டல் சாத்தியப்படும். அந்தவகையில் அரசுப்பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பயிற்றுவித்தோமேயானால் பொதுக்கல்விக்குறித்தான வரவேற்பு எல்லவகை மக்களிடமிருந்து இருக்கும்.


     அதுமட்டுமல்லாது, தமிழ்வழி கல்வி என பள்ளிப்படிப்பில் அளித்துவிட்டு , மேற்படிப்புக்கு செல்லும்பொது, அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகள் முழுமையாக ஆங்கிலமயமாக்கப்பட்டிருக்குமானால், துறை சார்ந்த தேடலிலும்,கற்றலிலும்,மாணவர்களுக்கு நெருக்கடியை தான் தரும். அத்தகைய நெருக்கடியை தடுக்க ஆரம்பக்கல்வியிலிருந்து,மேற்படிப்பு வரையிலும் தாய்மொழிவழிக்கல்வி நிறைவேற்றவேண்டும்.


எங்கும் தமிழ் எதிலும் தமிழ்


     ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கல்வியை தரும்போது மட்டுமே அதன் மீதான பற்றும், பின்பற்றலும் அதிகரிக்கும். ஆக,தாய்தமிழ் மொழிவழிக் கல்வியை தந்துவிட்டு,அதனை வாழ்க்கைக்கு உதவாதப்படி அதை பயன்பாட்டுக்குட்படுத்தாமலிருந்தால் வீணான முயற்சியே. ஆகையினால், துறைதோறும் தமிழை பயன்படுத்தவேண்டும். மக்களின் அன்றாட பயன்பாட்டில் தமிழ் சரளமாக இயங்கவேண்டும்.


     கணினியில் தமிழ்,அறிவியலில் தமிழ்,சட்டத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ் ,ஊடகத்தில் தமிழ், என முழுமையான வடிவமைப்புக்குட்படுத்தி,சிறந்த முறையில் நிறைவேற்றுவோமேயானால் நிச்சயமாக விரைவிலேயே "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" காணும் நிலையுண்டாகும்.


இணைவோம் தமிழர்களாய்,இயற்றுவோம் தமிழால்

by Yuvaraj   on 04 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகள் கட்டித்தந்து உதவிய 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை'! கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகள் கட்டித்தந்து உதவிய 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை'!
ஜல்லிக்கட்டில் சாமி மாடு பற்றித் தெரியுமா? ஜல்லிக்கட்டில் சாமி மாடு பற்றித் தெரியுமா?
தீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் தீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்
மோகமுள் - தி. ஜானகிராமன் மோகமுள் - தி. ஜானகிராமன்
கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?! கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?!
வேடிக்கையான உலகம் வேடிக்கையான உலகம்
(பெண்களின்) குடிப்பழக்கம் (பெண்களின்) குடிப்பழக்கம்
இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா? இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.