LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 21.5.1991 அன்று, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த போது, படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய நான்கு பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தும்; 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்குத் தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். இந்த கருணை மனுக்கள் 27.10.1999 அன்று தமிழக ஆளுநரால் நிராகரிப்பட்டன. தமிழக ஆளுநரின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன.


இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று, கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்ததோடு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு 25.11.1999 அன்று உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:


"தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும்; மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."


கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் பாதிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனர். இந்த கருணை மனுக்களை 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், 12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.


இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. தனது மகன் பேரறிவாளனை விடுவிக்குமாறு, அவரது தாய் அற்புதம் அம்மாள் என்னை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார். மேற்படி மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், சட்ட நுணுக்கங்களை ஆராயாமல், இவர்களை காப்பாற்ற நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.


29.8.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், கருணாநிதியின் இரட்டை வேடத்தை நான் தோலுரித்துக் காட்டினேன். மேலும், உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மன்னிப்பு அளிக்க முடியும் என்பதையும்; இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால், 2000ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும் என்பதையும்;  அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினேன்.


அதாவது, குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளதையும் எடுத்துக் கூறினேன். இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு 257 உட்பிரிவு (1)-ன்படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 72-ன்கீழ் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்னையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 161-ன்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டினேன்.


இந்திய அரசமைப்புச் சட்டப்படி எனது அரசின் இயலாமையை சுட்டிக்காட்டிய நான், இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்; எனக்கு வரப் பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்னும் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நானே முன்மொழிந்தேன். என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்தத் தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை, அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தினாரா? இல்லை! வலியுறுத்தவில்லை!


மத்திய அரசும், அதனைத் தாங்கிப் பிடித்திருந்த கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்த திருவாளர்கள் சாந்தன், ஸ்ரீஹரன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும்; தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான மத்திய தலைமை வழக்கறிஞர் எடுத்துரைத்தார். இருப்பினும், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுடைய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433ஹ-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. 


உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இதுகுறித்து உடனடியாக நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.


எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 18 Feb 2014  0 Comments
Tags: Tamilnadu Government   Rajiv Gandhi Killers   சாந்தன்   முருகன்   பேரறிவாளன்   நளினி   ராஜீவ் காந்தி கொலை வழக்கு  
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
ராஜுமுருகனின் அடுத்த படைப்பு ஜோக்கர்!! ராஜுமுருகனின் அடுத்த படைப்பு ஜோக்கர்!!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது. அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது.
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !! மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !!
ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !! ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !!
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேறும் தமன்னா !! சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேறும் தமன்னா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.