LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- தமிழர் பண்டிகை

பொங்கல் பண்டிகை

 தமிழர்கள் அனைவரும் பாரபட்சமில்லாமல் கொண்டாடும் ஒரே தமிழ்ப் பண்டிகை  "பொங்கல் பண்டிகை'.  பொங்கல் என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். குறிப்பாக கிராமங்களில் இது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பொங்கல் திருநாள்  தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.பொங்கலுக்கு முன்பே ஒவ்வொருவரும் பொங்கல் வாழ்த்து அட்டை வரைந்தும், கடைகளில் வாங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்தியை பரிமாறிக்கொள்வர்.

 போகிப் பண்டிகை

 தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

         இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

  பொங்கல் பண்டிகை

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது என்பது தமிழர் மரபு. அவ்வாறு விதைத்த நெல் விதை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடைக்கு தயாராகிறது. கிராமங்களில் புதிய மண் பானை வாங்கி அதில் புதிதாக அறுவடையான புத்தரிசியை மண் பானையில் வைத்து, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.

  பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று குடும்பத்தோடு கூவி  மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, சூரியனுக்குப்  படைப்பார்கள்.

 நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சிலர் மொட்டை மாடியின் மேல்தளத்தில், அல்லது பால்கனியில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

 மாட்டுப் பொங்கல் 

விவசாயியின் நண்பனான கால்நடைகளே விவசாயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

 ஆண்டுமுழுதும் உழைக்கும்  அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். மாட்டுப் பொங்கலன்று பசுக்களை நன்கு குளிப்பாட்டி,  மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "பட்டாடை' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!

 காணும் பொங்கல் 

பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது காணும் பொங்கல். இதை காணும் பொங்கல்,  கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை  என்று அழைப்பார்கள்.  அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

 இன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.  கிராமங்களில் வயது முதிர்ந்த பெரியவர்கள் , பெற்றோர்களின் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுவதும், அவர்களுக்கு பெரியவர்கள் வாழ்த்தி கையில் பணமோ , பரிசுப் பொருள்களோ வழங்குவது வழக்கம்.

by Swathi   on 17 Aug 2012  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
16-Jan-2018 03:46:55 ந. ஜெயபாலன், said : Report Abuse
பொங்கல் குறித்த அருமையான பதிவு . பாராட்டுக்கள். ந. ஜெயபாலன், ஆசிரியர், நெல்லை பரணி
 
14-Jan-2018 11:51:41 V Nagarajan said : Report Abuse
மாறிdhய்க்கே உரிய பெரியவரே, நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது. இருந்தபோதும் உங்கள் சேவையை நான் பெரிதாக மெச்சுகிறேன். ஒரு சின்ன இ மெயில் இல், நீங்கள் எல்லாவற்றையும் அனுப்பியுள்ளீள். உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.ஒரு தமி நாடே இதில் அடங்கி உள்ளது.கடவுள் உங்களை காப்பாற்றுவராக.idhai படிக்க ஒரு வாழ் நாள் போதாது. எனது வாழ்த்துக்கள்.
 
14-Jan-2018 08:24:55 Ramesh said : Report Abuse
Valai Tamil seidhigal niacin payanulladhaga irukkiradhu! Valai tamil_kku En nenjarndha nandrigalai therivithukolgiren!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.