LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் - இரா.நெடுஞ்செழியன்

உலகில், ஒரு நாட்டினுடைய மனித இனத்தின் சிறப்பையும், செம்மையையும், உயர்வையும், மேன்மையையும், உணர்த்த, " நாகரிகம்' மற்றும் "பண்பாடு' என்னும் இரண்டு அளவுகோல்கள் பயன்படுத்தபடுகின்றன. "நாகரிகம்' என்னும் சொல், "சிவிலைசேஷன்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்லாகவும், "பண்பாடு' என்னும் சொல் "கல்சர்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்லாகவும் இற்றைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"நாகரிகம்' மற்றும் " பண்பாடு' ஆகிய இரண்டு தன்மைகளும், மனித இனத்தைப் பிற உயிரினங்களான விலங்கினம் - பறவையினம் - ஊர்வன - நீந்துவன - நெளிவன போன்றவற்றினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டப் பயன்படும் தன்மைகளாகவும் இருந்து வருகின்றன. ஒரு நாட்டில் ஒரு சமுதாயம் சிறந்ததா? உயர்ந்ததா? புகழுடையதா? பெருமை பெற்றதா? பாராட்டுதலுக்குரியதா? போற்றுத<லுக்குரியதா? என்று ஒப்புமையோடு கணக்கிட்டுப் பார்க்க, வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்களால், "நாகரிகம்' மற்றும் "பண்பாடு' ஆகிய இரண்டு தன்மைகளுந்தான் பேருதவியாக இருந்து, பெருந்துணை புரிந்துவருகின்றன. மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு - உடை - உறையுள் - ஊர்தி - நிலம் - புலம் - தோட்டம் - துரவு - கழனி - காடு- அணி- மணி- மாடமாளிகை- கூடகோபுரம்- எழிலுடல்- ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும், செம்மையையும் உணர்த்துவது "நாகரிகம்' என்று அழைக்கப்படுகிறது.

மனிதனின், அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு- அறிவு- ஆற்றல்- இன்பம்- இயல்பு- உணர்ச்சி- எழுச்சி- வீரம்- தீரம்- ஈவு- இரக்கம்- அமைதி- அடக்கம்- ஒப்புரவு- ஒழுக்கம்- உண்மை- ஊக்கம்- சினம்- சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும், உயர்வையும் உணர்த்துவது "பண்பாடு' என்று அழைக்கப்படுகிறது. நாகரிக வளர்ச்சிக்கு "அறிவியல்' பெரிதும் பயன்பட்டுவருகிறது; பண்பாட்டு மேம்பாட்டுக்குக் "கலையியல்' பெரிதும் உறுதுணையாக இருந்துவருகிறது. பண்டைத் தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நாகரிகச் சிறப்பிலும், பண்பாட்டு மேன்மையிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதைப் பழம் பெரும் வரலாற்றுச் சின்னங்களும், சங்க காலப்பைந்தமிழ் இலக்கியங்களும் சான்று பகிர்கின்றன. சங்ககாலப் பைந்தமிழ்ப் புலவர் பெருமக்கள், சிறந்த மக்கட் பண்புகளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள்; நல்லொழுக்கத்திற்கு உயர்ந்த மதிப்பு அளித்துள்ளார்கள்; தன்மானப் பண்புகளை பெரிதும் போற்றியுள்ளார்கள்; வரையாது வழங்கும் வள்ளன்மையைப் புகழ்ந்துள்ளார்கள்; வீரத்தையும், தீரத்தையும் பெரிதும் பாராட்டியுள்ளார்கள்; செய்நன்றியறிதலைப் போற்றியுள்ளார்கள்; புகழையும், பெருமையையும் பாராட்டியுள்ளார்கள்; நீதி- நேர்மை- நாணயம்- ஈகை- ஒப்புரவு- கண்ணோட்டம்- கல்வி- குடிமை- கேள்வி- சான்றாண்மை- செங்கோன்மை- நடுவுநிலைமை- நட்பு- பண்பு- வலிமை- வாய்மை போன்றவற்றை சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்கள்.

""பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்'' என்பது கலித்தொகைச் செய்யுளின் கூற்று. "பாடு' என்ற சொல்லுக்குப் படுதல் - பெருமை- வளர்ச்சி- பயன், உண்டாகுகை போன்ற பல்பொருட்கள் உண்டு. மக்களின் சமூக வாழ்க்கையில், வளர்ச்சி கருதி, பாங்கு அறிந்து, பெருமை உணர்ந்து , பயன் தெரிந்து ஒழுகும் பண்பைத்தான் "பண்பாடு' என்று தமிழ்ச் சான்றோர் குறிப்பிட்டனர். பண்பு, பண்பாடு, பண்புடைமை ஆகிய சொற்கள் வழக்கில் பயன்பட்டு வருவதைக் காணலாம். "பண்படுதல்' அல்லது "பண்படுத்துதல்' என்பது செம்மையான- சீரான- சிறந்த- உயர்ந்த- அழகான- அருமையான- நலன்பயக்கும்- பயன்தரும் உறுதியான ஒரு நிலையை உணர்த்துவதாகும். இது காரணம் பற்றித்தான், பண்பட்ட நிலம் - பண்பட்ட உள்ளம்- பண்பட்ட இனம்- பண்பட்ட மொழி- பண்பட்ட கலை- பண்பட்ட துறை- பண்பட்ட நாடு- பண்பட்டமனிதன் போன்ற சொற்றொடர்கள் வழக்காற்றில் இருந்து வருவதை உணரலாம். பெரும்புலவர் தொல்காப்பியர் படைப்பிலிருந்து, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் வரையில் உள்ள இலக்கண இலக்கியங்களில் பைந்தமிழர் பண்பாடுகள் பற்றிய விளக்கங்கள் விரவிக் காணப்படுகின்றன.

தொல்காப்பியப் பொருளதிகாரம்- திருக்குறள்- நாலடியார்- இன்னாநாற்பது- இனியவை நாற்பது- ஏலாதி- ஆசாரக்கோவை- ஆத்திச்சூடி- கொன்றை வேந்தன்- அறநெறிச்சாரம்- சிறுபஞ்சமூலம்- திரிகடுகம்- நன்னெறி- வெற்றிவேற்கை- பாரதியார் ஆத்திச்சூடி- பாரதிதாசன் ஆத்திச்சூடி போன்ற இலக்கியங்கள் பைந்தமிழர் பண்பாடுகளைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறுகின்றன. பைந்தமிழர் போற்றிய பண்பாடுகளில் சிற்சில மட்டும் எடுத்துக்காட்டாக இங்கே சுட்டிக்காட்டப் படுகின்றன. கணியன் பூங்குன்றன் என்னும் புறநானூற்றுப்புலவர் "" எந்த ஊராயினும் அந்த ஊர் எமது ஊரே! எந்த மனிதராயினும் அந்த மனிதர் எமது உறவினரே!'' என்று உலகப் பொதுநோக்குக் கொண்ட பண்பாட்டை, "" யாதும் ஊரே யாவரும் கேளிர் '' - புறம் 192என வெளிப்படுத்துகிறார். அவர் மேலும் குறிப்பிடும்போது,"" வாழ்தல் என்பது எப்போதும் இன்பம் பயக்கவல்லது என்று எண்ணி மயங்கி மகிழ்ந்துவிடவும் மாட்டோம்; அது எப்போதும் துன்பந் தரத்தக்கது என்று நினைத்து, மருண்டு, அதனை வெறுத்து ஒதுக்குதல் செய்யவும் மாட்டோம்'' என்று பாகுபாடு காட்டாத ஒரு பண்பாட்டை, "" ..................... வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே!'' - புறம் 192என்று குறிப்பிடுகிறார். அவரே மேலும் உரைக்கும் போது,"" செல்வத்தால் பெரியவர் என்பதற்காக ஒருவரை மதித்துவிடவும் மாட்டோம்! செல்வங்குறைந்த சிறியோர் என்பதற்காக ஒருவரை இகழ்ந்து ஒதுக்கிடவும் மாட்டோம்!''இதனை,""......................மாட்சியிற்பெரியோரை வியத்தலும் இலமே!சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'' - புறம் 192என்று கூறுகிறார்.

பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர், புறநானூற்றில்,""இவ் வுலகத்தின் இயல்பை நன்கு உணர்ந்த யாவரும் துன்பம் பயப்பனவற்றைச் சிந்தனையினின்றும் ஒதுக்கிவைப்பர்! இன்பம் பயப்பனவற்றை மட்டும் கண்டு மகிழ்வர்!'' என்று இன்பம்- துன்பம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் பண்பாட்டை,"" இன்னாது அம்மஇவ் வுலகம்இனிய காண்க! இதன் இயல்புஉணர்ந் தோரே !'' - புறம் 194என்று உணர்த்துகிறார். நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர், புறநானூற்றில்,"" நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய முன்வராவிட்டாலும், தீய செயல்களையாவது செய்யாமல், அவற்றினின்றும் விலகி நின்றுவிடுங்கள்! உங்களை நல்வழியில் செலுத்தி வாழுமாறு செய்வதற்கும் அதுதான் ஏற்ற வழியாகத் திகழும்!'' என்று நல்வழியைக் காட்டும் பண்பாட்டை,"" நல்லது செய்தல், ஆற்றீர் ஆயினும்அல்லது செய்தல், ஓம்புமின்! அதுதான்,எல்லோரும் உவப்பது! அன்றியும்நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!'' - புறம் 195எனச் செப்புகிறார்.

ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்ற மன்னனைக் கண்டு பரிசில் பெறச் செல்லுகிறார். அவனோ புலவர் எதிர்பார்த்தபடி பரிசில் நல்கவில்லை. என்றாலும், புலவர் அதுபற்றிக் கவலைப்படாமல், அரசனிடம் பண்பாட்டை உணர்த்தியும், அவனை வாழ்த்திவிட்டும் திரும்புகிறார். "" உன்னால் பொருள் கொடுக்கமுடியும் என்றால்,"முடியும்!'என்றும், கொடுக்க இயலாது என்றால், "இல்லை' என்றும் சொல்லிவிட வேண்டும். அதுதான் தாளாண்மை உடையவரின் பண்பாட்டுத் தன்மை ஆகும்!'' என்று இன்னாது செய்தாலும் ஒருவருக்கு அறிவுரை கூறித் திருத்தும் பண்பாட்டை, "" ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே!'' - புறம் 196எனத் தெரிவிக்கிறார்.மேலும் அவர் கூறும் போது, ""இயலாத ஒன்றை இயலும் என்றும், இயலக்கூடிய ஒன்றை இயலாது என்றும் கூறுதல், செய்யக்கூடாததொரு செயலாகும். அப்படிப்பட்ட செயல், இரப்போரை வருந்தச் செய்யும்; அது மட்டுமல்லாமல், உன்னுடைய புகழையும் குறைத்துவிடும். நீ என்னிடத்தில் நடந்துகொண்டதும் அப்படிப்பட்ட செயலாக ஆகிவிட்டது!'' என்று உலகியலை உள்ளபடியே உணர்த்திக் காட்டும் பண்பாட்டை,"" ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறத்தலும், இரண்டு வல்லே!இரப்போர் வாட்டல்! அன்றியும், புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில் அத்தை அனைத்தாகியர்!''என்று கூறுகின்றார்.

மன்னன் பரிசில் ஏதும் தரவில்லை என்பதற்காகப் புலவர் மனம்கோணவில்லை; சினமும் கொள்ளவில்லை; மாறாக மன்னனை வாழ்த்துகிறார் . புலவர் வாழ்த்தும் போது"" எது எப்படியாக இருந்தாலும், உன்னுடைய பிள்ளைகள் நோயற்றவராக வாழ்வார்களா! உன்னுடைய வாழ்நாளும் சிறப்பாக அமைவதாக நான் சொல்லுகிறேன்!'' என்று, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்பாட்டை,""...........................................அதனால், நோயில ராகநின் புதல்வர்! செல்வல் அத்தை! சிறக்கநின் நாளே!''என்று உணர்த்துகின்றனர். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்னும் புலவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் வேந்தனிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். சோழமன்னன் புலவரை மதிக்காமலும், பரிசில் நல்காமலும் இருந்து விடுகிறான். புலவர் தம் மனதில் பட்டதைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றின் மூலம் புலப்படுத்துகிறார். ""நாற்படை வளமும், எல்லாச் செல்வமும் ஒருங்கே மிகுந்த பேரரசர் என்றாலும், இரவலராகிய எங்களை மதிக்காத எவரையும் நாங்களும் மதிக்கமாட்டோம்! வரகுசோறு தந்து, எம்மை ஊட்டுவிப்பவர், சிற்றூர் வேந்தராய் இருந்தாலும், எங்களுடைய தகுதி அறிந்து, பண்பாட்டோடு ஒழுகும் பண்புடையவராக அவர் இருந்தால், அவரை நாங்கள் பாராட்டுவோம்!

இரவலர்க்குப் பயன்படாத அறிவில்லாதவர்களின் செல்வத்தை, நாங்கள் எவ்வளவு வறுமையுற்றுக் காணப்பட்டாலும், நாங்கள் அதனை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டோம்! ஆனாலும், நல்லறிவுடையோர் வறுமையுற்றுக் காணப்பட்டாலும், அவர்களை மிகப்பெரிதாக மதிப்போம்! அவர்களை என்றென்றும் வாழ வேண்டும் என்று விரும்பி வாழ்த்துவோம்!'' என்று தன்மான உணர்ச்சியை வெளிப்படுத்தும் பண்பாட்டை, "" மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே! எம்மால் வியக்கப் படூஉ வோரே புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே! மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்! நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதம் பெருமயாம், உவந்துநனி பெரிதே!'' - புறம் 197எனக் குறிப்பிடுகிறார். கழையின் யானையார் என்னும் புலவர், கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஒரியைப் புகழ்ந்து பாடுகிறார். அந்தப் பாடலில் உயர்ந்ததொரு பண்பாட்டை அறிவுரையாகக் கூறுகிறார். "" ஒருவர் ஒரு பொருளைத் தருக என்று மற்றொருவரிடத்தில் இரத்தல் என்பது இழிவான செயலாகும்! அவ்வாறு இரந்தோர்க்கு யாதொரு பொருளையும் தரமாட்டேன் என்று மறுத்துக் கூறுதல் என்பது, மேற்குறிப்பிட்ட இழிவைக் காட்டிலும், மிகவும் இழிவான ஒரு செயலாகும்! அவ்வாறு கொடுக்கும் பொருளைக் கொள்ளமாட்டேன் என்று மற்றொருவர் கூறுதல் என்பது, மேற்சுட்டிக் காட்டியதை விட மிக உயர்ந்ததொரு செயலாகும்!'' என்று உயர்ந்த உள்ளத்தின் பண்பாட்டை, "" ஈஎன இரத்தல் இழிந்தன்று ! அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று! கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று! அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று!'' - புறம் 204என உணர்த்துகின்றார்.

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் , கடிய நெடுவேட்டுவன் என்னும் வேடர்களின் தலைவனான கொடையாளி ஒருவனைக் காணச் செல்கின்றார். பண்டைக்காலத் தமிழ்ப்புலவர்கள் வறுமையிலே வாடி உழன்றாலும், தம்முடைய நிலையையோ, தகுதியையோ, மானத்தையோ, மதிப்பையோ, இழக்க ஒருப்படுவதில்லை. தன்மதிப்பு என்னும் பண்பாட்டினைக் காப்பாற்றுவதிலே எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாகவே இருந்து வந்திருக்கின்றனர். கடிய நெடுவேட்டுவனிடம் தம் நிலையை விளக்குகின்ற புலவர்,"" நிறைவான செல்வங்களைப் படைத்த மூவேந்தராக இருந்தாலும் அவர்கள் எம்மைப் பேணி மதிக்காமல் கொடுக்கும் பரிசுகளை யாம் எக்காலத்திலும் விரும்பமாட்டோம்!'' என்று தன் மதிப்பை வெளிப்படுத்தும் பண்பாட்டை, "" முற்றிய திருவின் மூலர் ஆயினும் பெட்பஇன்று ஈதல் யாம்வேண் டலமே!'' - புறம் 205என்று விளக்குகின்றார். ஆலத்தூர்கிழார் என்னும் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னனைக் கண்டு, அவனிடம் அறத்தாறு பற்றி விளக்கம் தருகிறார். செய்நன்றி என்ற பண்பின் இன்றியமையாச் சிறப்பினை வலியுறுத்த வந்த புலவர், "" உலகமே தலைகீழாக மாறுவதாக இருந்தாலும், ஒருவர் செய்த நன்றியை மறந்து அதனைக் கொன்று வாழ்பவருக்கு, உய்வு என்பது அறவே இல்லை என்று, அறநூல் கூறியிருக்கிறது!'' என்று செய்நன்றிப் பண்பாட்டுத் தன்மையை,""நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என அறம்பா டிற்றே!''என்று உணர்த்துகின்றார்.

இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர், பாண்டியன் ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற மன்னனின் அரும்பெருஞ் சிறப்புகளைப் புகழ்ந்து கூறும் பொழுது, அவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சிறப்புடையவன் என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர் அதனைக் கூறும்போது,"" உலகமே தன்னிலை பிறழ்ந்து மாறுபட்டுக் காணப்பட்டாலும், நீ உன் சொல்லில் சிறிதும் பிறழாமல் போற்றுவதற்குரிய பண்புடையவனாகத் திகழ்கிறாய்!'' என்று, சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல் என்னும் பண்பாட்டுத் தன்மையை, ""நிலம்புடை பெயரினும் நின்சொல் பெயரல்!''என்று உணர்த்துகின்றார். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர், ஆய் ஆண்டிரன் என்ற வள்ளலின் சிறப்புகளை வியந்து பாடுகிறார். அவன், அறத்தை, விலைகூறும் ஒரு வாணிகப் பொருளாகக் கருதுபவன் அல்லன் என்ற கருத்தைப் போற்றிப் புகழ்கின்றார். அவர் பாடும் போது, "" இன்றைக்குச் செய்யும் அறச்செயலைப் பிறிதொருநாளில் தமக்கு உதவியாக அது அமையும் என்று ஊதியங் கருதி அவன் விலை கூறும் ஒரு வணிகன் அல்லன். அவனதுஅறம் புரியும் வள்ளன்மையானது, சான்றோர் எத்தகைய அறவழியில் சென்றனரோ, அத்தகைய அறவழியிலேயே தானும் செல்ல வேண்டும் என்ற நண்செய்கையாகிய கடப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகும்'' என்று அறச் செயலின் உயர்ந்த பண்பாட்டை, "" இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய்அலன்,பிறரும் சான்றோர் சென்ற நெறியென, ஆங்குப்பட் டன்று அவன்கை வண்மையே!'' - புறம் 134என்று உணர்த்துகின்றார்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன், பொதுநல நோக்கின் சிறப்பைக் குறிப்பிடும் போது,""இந்த உலகமானது இன்னமும் உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பது வியப்புக்குரியதாகும்! அதற்கான காரணம் என்னவென்றால், தமக்கு என்று தன்னல முயற்சியினை மேற்கொள்ளாமல், பிறர்க்கு என்று பொதுநல முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சீரியோர் சிலர் உண்மையிலேயே உலகியல் இருந்து வருவதேயாகும்!'' என்று தன்னலங் கருதாது பொதுநலம் பேணும் பண்பாட்டை, "" உண்டால் அம்மஇவ் வுலகம்!...தமக்குஎன முயலா நோன்தாள்,பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே!'' -புறம் 182என்று கூறுகின்றார். நக்கீரர் என்னும் புறநானூற்றுப் புலவர் செல்வத்தினால் எய்தக் கூடிய பலன் என்ன என்பதை வரையறுத்துச் சிறப்பித்துக் கூறுகிறார். அதனை அவர் உணர்த்தும் போது,"" செல்வத்தின் பயன் எது என்றால், பிறர்க்கு உவந்து வழங்குதலேயாகும். பிறர்க்கு ஈயாமல் தாமே அதனை நுகருவோம் என்று எவரேனும் எண்ணிடுவாரேயானால், அதனால் ஏற்படும் இழப்புகளும் தவறுகளும் பலப்பலவாகும்!'' என்று ஈதல் பண்பாட்டை, "" செல்வத்துப் பயனே ஈதல்!துய்ப்பம் எனினே, தப்புந பலவே!'' - புறம் 189என விளக்குகின்றார்.

நண்பனின் பக்கத்தில் இருந்து அவனைப் பலவாறாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஒருவன், நண்பன் இல்லாதபோது மற்றவர்களிடையில் அவனைப் பற்றிப் பழிதூற்றிக் கொண்டிருப்பானேயானால், அவன் இழிந்த மகன் நன்று நகையாடப்படுவான் என்று, கலித்தொகை நட்பின் பண்பாடற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. நண்பனை எதிரில் புகழ்ந்து கூறிவிட்டு, மறைவில் பழிக்கக்கூடாது என்ற பண்பாடு, "" சிறப்புச்செய்து உழையராய்ப் புகழ்போற்றி மற்றவர் புறக்கடையே பழிதூற்றும் புல்லர்!'' - கலித்தொகை என்று உணர்த்தப்படுகிறது.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.