LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

தமிழர்களின் திருமண முறைகள் (Tamil Marriage System)-4

தமிழர்களின் திருமண முறைகள் (Tamil Marriage System)-4

அரசாணிக்கல் : 

 திருமண வைபவங்களுக்கு முற்காலத்தில்  அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.


அங்குரார்ப்பணம் : 

 அங்குரார்ப்பணம் என்பது வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் மூன்று அல்லது ஐந்து சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமையவேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும்.

 

இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்) : 

 காப்புக் கட்டுதல் என்பது சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் ஆகும். தொடங்கிய கருமம் நிறைவுபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ,துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது.


ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரச மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.


மணப்பெண்ணை அழைத்தல் : 

 தோழிகள் மணமகளை மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார்.

  மணமக்களின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.


கன்னிகாதானம் : 

 கன்னிகாதானம்  என்பது மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதே ஆகும். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் மூன்று முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கு பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும்.


 பிறகு மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம்,குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.


தாலி கட்டுதல் : 

 கூறை புடவை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்தநேரத்தில்  மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்


“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”


‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.


தாலி – மாங்கல்யத்தில்  சிவலிங்கம், விநாயகர்  அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ....) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.

 

மாலை மாற்றுதல் : 

 மணமகள் எழுந்து இறைவனை வடக்கு நோக்கி தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மணமகளை தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.

 பிறகு மணமகன் வீட்டில் கொண்டுவந்த மங்கலப் பொருட்களாகிய  மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள்,  சீப்பு,  கண்ணாடி  முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.

 

பால்,பழம் கொடுத்தல் : 

 பால், வாழைப்பழம் ஆகியவற்றை மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு நடைபெறுகிறது.

 

கோ தரிசனம் : 

 இல்லறவாழ்வு தொடங்கும் மணமக்கள் வாழ்விற்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.

 

கைப்பிடித்தல் : 

 திருமணம் தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம்(கைப்பிடித்தல்) என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள்.


நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்


என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும்.

ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பிறகு ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.

 

ஏழடி நடத்தல் : 

 பெண்ணின் வல காலை மணமகன் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.

 

1.உனது வாழ்க்கையில் உணவு குறைவில்லாமல் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.

2.உடல் வலிமை பெற இறைவன் பின் தொடரட்டும்

3.விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.

4.சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்

5.பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.

6.சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.

7.வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்.


ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.

 

அம்மி மிதித்தல் : 

மணமகன் கையால் பெண்ணின் வலதுகாலை தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

 தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.

 

கணையாழி எடுத்தல் : 

 அக்கினியை மூன்றாம் முறை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் கணையாழி தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

 

அருந்ததி பார்த்தல் : 

 வேள்வியை சுற்றும் மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.



நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன் என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வளத்தையும் பெறுவதற்கேயாகும்.

 வசிட்டரின் மனைவி அருந்ததி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் பண்டைய புராணங்கள் கூறுகின்றன.


 அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும் என்பதாகும்.

 பொரியிடல் : 

 மணமக்கள் அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு ஓம் குண்டத்தில் இடுவார்கள். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.


 அக்கினி பகவானிடம் சேர்க்கும் சகல திரவியங்களும் அக்கினி பகவான் அஷ்ட தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஹோமம்.


அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.


ஆசிர்வாதம் : 

 கிழக்கு முகமாக மணமக்களை நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனை செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.


அட்சதை : 

 அறுகரிசி என்பது முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே ஆகும். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்

 

நிறைவு : 

 மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் சேர்த்து வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.

 

ஆரத்தி : 

 மணமக்கள்  தரப்பில் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன.பிறகு விருந்துபசாரமும் நடைபெறும்.  


 மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லத்திற்கு செல்வார்கள். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.

 

பூதாக்கலம் : 

 மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார்கள். மணமக்கள் வலது கால் எடுத்து உட்சென்று பூஜை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.

 

சில தத்துவங்கள் : 

தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இந்த நிகழ்வு மணமகள் மனமகனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.


மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல்,அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களின் காதிற்கு கேட்க கூடாது என்பதற்காக.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.


  • முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
  • இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
  • மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்


  அட்சதை மணமக்களை தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிக்க தாலி கட்டும்போது தூவப்படுகிறது. தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். மற்றொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.


திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?

 மணமகள் கழுத்தில் தாலி ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை என்பது முக்காலத்தில் இருந்தே இருக்கிறது. எனவே மணமகளை   முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.

 

அட்சதை : 

 அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்பது பொருள். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

 

ஆரத்தி  : 

 ஒரு தாம்பூல தட்டில் மூன்று வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்த்தோ நிற்க வைத்து அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டை வலம் சுழியாக சுற்றவேண்டும்.


 மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே மூன்று முறை செய்யவேண்டும். கீழே மூன்று தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.


திருமணத்தில் அறுகரிசி(அட்சதை) இடும்முறை : 

 இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை பெரியோர்கள் தங்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவியப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர 3 முறை  தூவி வாழ்த்த வேண்டும்.

 மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இலக்கியங்களில் இவ்விரண்டு விதமான வருணணைகளையும் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.


சுயமரியாதைத் திருமணம் : 

 சுயமரியாதைத் திருமணம்  என்பது சடங்களுக்கு முக்கியத்துவம் தராமல்,சாத்திரங்கள், சாதகங்கள் பார்க்காமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணம் ஆகும்.

 

வரலாறு : 

 இந்தியாவில் இந்து மதத்தினர் மணமக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படி செய்யப்படும் திருமணத்தில் ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனதில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. முதன் முதலில் இந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் பகுத்தறிவுத் தந்தையாகப் போற்றப்பட்ட பெரியார் ஈ.வே.ரா  அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

சட்டம் : 

இந்தியப் பாராளுமன்றத்தில் 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்த அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 17-01-1968ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 20-01-1968ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது


 

இன்றைய திருமண முறைகள் (Modern Tamil marriage process)

தமிழகத்தில் பெரும்பாலும் கீழ்காணும் மூன்று விதமான திருமண முறைகள் தற்கால நடைமுறையில் உள்ளது. 



1. பதிவுத் திருமணம் (Register Marriage)

2. பண்டைய ப்ரோகிதர் திருமண முறை (Traditional mantra System)

3. சுயமரியாதை தமிழ் திருமணம் (Without Mantra, without Thaali)

4. ஒதுவார் முறை தமிழ் திருமணம் (Without Mantra, with Thirumurai paadalgal and Thali)


இதில் மதம், ஜாதி, வாழும் ஊர் போன்றவைகளுக்கு ஏற்ப சில பழக்கவழக்கங்களுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் தாலி கட்டுதல், சமஸ்கிரத மந்திரம் சொல்லுதல், தமிழ் பாடல்கள் பாடுதல், ஊர் பெரியவர் அல்லது அரசியல் தலைவர் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்தல் என்பதைப் பொறுத்து மேற்கண்ட நான்கு விதமான திருமண முறைகள் தற்காலத்தில் நடைமுறையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.



இவை ஒவ்வொன்றையும் விரிவாகக் காண்போம்.

by   on 24 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்! செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!
தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1    -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1 -இராம.கி
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள்
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது..... சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும் விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும்
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.