LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மின்வெட்டு - உண்மையான காரணம் என்ன?

து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.    தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.


 மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.

 

கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.

 

நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?

 

புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.

 

ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக,     பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.

 

இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!

 

காரணத்தைத் தேடுகிறது அரசு!

மின்சாரம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் சா.காந்தி, தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர். மின் துறைச் சீர்கேடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்.

 

''அரசு மின் வாரியங்கள் - ஊழியர்களின் திறமையற்ற செயல்பாடுகள் தானே மின் துறை         தனியார்மயமாக்கப்படக் காரணம்?''

''இவ்வளவு பெரிய நாட்டில் வலு வான மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியது யார்... அரசு மின் வாரியங்கள்தானே? தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 1971-ம் ஆண்டிலேயே 99 சதவிகிதக் கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்றுவிட்டோம். 1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''

 

''அப்படி என்றால் மின் வாரியங்களின் நஷ்டத்துக்கு என்னதான் காரணம்?''

''அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம். பத்து ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி மூன்று ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என்றால், நஷ்டம் வராமல் என்ன செய்யும்? முதலில் இது லாப - நஷ்டக் கணக்கு பார்க்கும் வணிகத் துறை இல்லை. உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''

 

''நவீன உலகின் உயிர்நாடியான மின் துறையை அரசு தனியார்மயமாக்க விரும்புகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''  

''தனியார்மயத்தின் வருகைக்குப் பிறகுதானே 1.76 லட்சம் கோடி ஊழல், 1.86 லட்சம் கோடி ஊழல்களை எல்லாம் பார்க்கிறோம்? தனியார்மயம் எங்கு புகுத்தப்படுகிறதோ, அங்கே ஊழல் திளைக்கும். மின்சாரம் என்பது காசு கொழிக்கும் வளம்!''

 

நன்றி: விகடன்

by Swathi   on 09 Oct 2012  0 Comments
Tags: Tamilnadu Electricity                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.