LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்

31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 2015-16ம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்.
 
1. புதிய கணித்தமிழ் கொள்கை

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கம் கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடவும், ஆராய்ச்சியாளர்கள், அரசு அலுவலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு உகந்த சூழலை உருவாக்கிடும் நோக்கோடு தமிழ்நாடு அரசு புதிய கணித்தமிழ் கொள்கை ஒன்றை வெளியிடும். அக்கொள்கையினைச் செம்மையாக வடிவமைத்திட மூத்த தமிழறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், கணித்தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

2. தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

தமிழ் மொழித் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மொழி ஆய்வு மென்பொருள்கள் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு பயனளிக்கும் வகையில் உலக தரத்திலான மதிப்பீட்டுக் கருவிகள்; முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம்; அரிய தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், ஓவியங்கள் ஆகியவற்றின் மின்னுருவாக்கம் தமிழ் மொழியியல் தரவகம் மற்றும் மின் அகராதி; கணினி, அலைபேசி மற்றும் திறன்பேசியில் தமிழ் பாடங்கள்; இலக்கணம் மற்றும் அகராதி ஆகியவற்றை கற்பிப்பதற்கான குறுஞ்செயலிகள் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்படுத்த ரூபாய் 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள்

கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும், அதன் முக்கியத்துவத்தை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும், கணித்தமிழ்ப் பேரவைகள் கல்லூரிகள் தோறும் உருவாக்கப்படும். அவற்றிக்கு ஊக்கமளித்திடத் தேவையான ஆதார நிதியினைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிடும்.

4. அரிய நூல்கள், ஆவணங்களின் மின்னுருவாக்கம்

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘தகவலாற்றுப்படை’ திட்டத்தின் கீழ், நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் உட்பட தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் அனைத்துப் படைப்புகளையும் மின்னூருவாக்கம் செய்திடும் ஓர் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கானத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை உலகத்தரத்தினை ஒட்டி வகுத்திடவும், தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புகழ்பெற்ற அமைப்புகளின் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளையும் இணைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

5. தமிழ்99 விசைப்பலகை, யூனிகோடு, TACE பயன்பாடு.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்99 விசைப்பலகை மற்றும் யூனிகோடு, தமிழ் அனைத்து வரியுருக்களுக்கான குறியீடு (TACE16) ஆகியவற்றின பயன்பாட்டை அரசு அலுவலகங்களிலும் பொதுவெளியிலும் பரவலாக்குவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அரசுத் துறைகள் மற்றும் அரசு சார் நிறுவனங்களின் இணையதளங்களில் தமிழ்ப் பயன்பாட்டை முழுமையாகக் கொண்டு வரவும், அவற்றில் யூனிகோடு/ தமிழ் அனைத்து வரியுருக்களுக்கான குறியீடு (TACE16) பின்பற்றிட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

6. மொழித் தொழில்நுட்ப ஆய்வு

தமிழ் மொழித் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மொழி ஆய்வு நோக்கில் நீண்ட கால ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சொல்லாளர், பிழைதிருத்தி, ஒளி வழி எழுத்தறிவான் ஆகிய மென்பொருட்களைச் செம்மையாக்குவது மட்டுமின்றி, உரை உணர்தல், உரைச்சுருக்கம் தருதல், மனிதன்-கணினி உரையாடல், தானியங்கு மொழிபெயர்ப்பு போன்ற பலவகைப் பயன்பாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படும்.

7. தரவகம் மற்றும் மின் அகராதி

தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்குப் பெருமளவில் உதவிடத் தேவையான தரவகம் மற்றும் மின்-அகராதி ஆகியவற்றை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

8. மென்பொருள் உருவாக்கம்

கணினி, அலைபேசி மற்றும் திறன்பேசி உட்பட அனைத்து மின்னணு தகவல் தொடர்புச் சாதனைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்கப்படும்.
மென்பொருள் நிறுவனங்களின் தமிழ ்மென்பொருள் உருவாக்கங்களுக்குப் பயன்படும் தமிழ் நிரலாக்கங்கள் உருவாக்கப்படும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான நவீன மொழியாக்கக் கருவிகள் உருவாக்கப்படும்.

9. பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ந்துப் பயன்பெறும் வகையில் தமிழை இரண்டாம் மொழியாக மற்றும் அந்நிய மொழியாகக் கற்பிக்கும் வகையிலும் அந்தந்த நாட்டுக்கு ஏற்ற சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

10. வெளிநாடுவாழ் தமிழாசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு அறிமுகம்

வெளிநாடுகளில் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திடும் தன்னார்வலர்களுக்கு முறையான ஆசிரியர் பயிற்சி இல்லாததைக் கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் தமிழாசிரியர்களுக்கான பட்டயப் படிப்பு ஒன்று புதிதாய் அறிமுகம் செய்யப்படும்.

11. கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான முழுமையான மேலாண்மைத்தளம்

மொழித்திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் உலகத்தரத்தில் மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்கிடவும், கணினி வழிக்கற்றல் மற்றும் கற்பித்தலை உள்ளடக்கிய பல்ஊடகப் பயன்பாட்டின் வழி ஒரு முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம் ஒன்று உருவாக்கப்படும்.

12. குறுஞ்செயலிகள் உருவாக்கம்

மாணவர்களை எளிதில் கவர்ந்திடும் வகையில் தமிழ்மொழிப் பாடங்கள், இலக்கணம், அகராதி ஆகியவற்றை பல்ஊடகப் பயன்பாட்டின் துணைகொண்டு அலைபேசி மற்றும் திறன்பேசியில் பயன்படுத்தும் வகையில் குறுஞ்செயலிகளாகப் படைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

13. செய்தி மடல் மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்

பழம்பெரும் அரிய நூல்கள் மற்றும் உலகத் தமிழருக்குப் பயன்தரும் பல செய்திகளை உள்ளடக்கியவாறு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் மெருகூட்டப்படும். மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக மாதமொருமுறை செய்திமடல் ஒன்றும் காலாண்டு பன்னாட்டு ஆய்விதழ் ஒன்றும் வெளியிடப்படும்.

14. விக்கிபீடியாவுடன் இணைந்து விழிப்புணர்வுப் பரப்புரை

இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரித்திடும் நோக்கோடு தமிழ் இணையக் கல்விக்கழகம், ‘விக்கிபீடியா’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்த்துதல், மாணவர்களுக்கிடையே கணித்தமிழ்த் திறனை ஊக்குவித்திடப் பல்வேறு போட்டிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

15. படைப்பாக்க பொதும உரிமங்கள்

தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் அதன் மூலம் வெளியிடப்பட்ட படைப்பாக்கம், கல்வி மற்றும் அறிவியல் உள்ளடக்கங்கள், பல்வேறு மென்பொருட்கள் மற்றும் அவற்றின் வழிமுறைகள் அனைவருக்கும் தடையின்றிச் சென்று சேரும் விதமாக, அவையனைத்தும் படைப்பாக்க பொதும உரிமங்களின் கீழ் வெளியிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 

by Swathi   on 07 Sep 2015  2 Comments
Tags: Tamil Virtual Academy   TVA   Tamil Virtual Academy 2015   தமிழ் இணையக் கல்விக்கழகம்   கணித்தமிழ்   அரிய நூல்கள்   விசைப்பலகை  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்
கருத்துகள்
14-Nov-2015 06:27:41 s.kiruthika said : Report Abuse
very good idiya, u gave a good life for tamil,i love tamil, i am a tamil mediam studen, i am very happy,thank u for your srvice
 
22-Oct-2015 09:08:33 முனைவர் தே .அலெக்சாண்டர் said : Report Abuse
தமிழின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. வளர்ந்து வரும் அறிவியலோடு இணைந்து தமிழும் வளர்ந்தால்தான் எதிர்காலத்தில் தமிழ் மொழி மேலும் புதுப்பிக்கப்பட்டு இளமை குன்றாமல் வாழ முடியும். இன்றைய கணினி வளர்ச்சி அபாரமானது. இது இன்றைய இளையத் தலைமுறை மக்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது. இவர்கள் தமிழோடும் இணைந்திருக்கத் தமிழ் மொழி கணினி வளர்ச்சியோடு இணைந்து செயல்படனும். உங்கள் முயற்சிக்கு நன்றி .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.