LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்

தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி

தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி  

                                                        -ஜோதிஜி திருப்பூர்

1980-களில், 'இதுதான் இலக்கியம்' என்று சிலபலர் எழுதி எழுதி பம்மாத்து செய்துக் கொண்டிருக்கையில் அந்த மாயையை உடைக்க ஒரு கலகக்கூட்டம் புறப்பட்டது. ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிற மாய பிம்பங்களை கலைத்துப் போடுவதுதான் அந்த கூட்டத்தின் நோக்கம். இதன் மூலம் ஒரு மாற்று இலக்கியம் புதுவெள்ளமென தமிழ் இலக்கியத்திற்குள் பாய இது ஏதுவாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. நாகார்ஜீனன், தமிழவன், கார்லோஸ், சாருநிவேதிதா போன்றோர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வடிவங்களை தங்களின் மாற்று இலக்கியத்தால் கலைத்துப் போட்டனர். ஆங்கிலத்தில் இம்மாதிரியான உடைப்புகள் காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தமிழில்தான் அவ்வப்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு குட்டையில் சுகமாக ஊறிக் கொண்டிருக்கிற எருமைமாடுகள் போல் நாம் ஒரேமாதிரியான இலக்கியத்தை வேறுவழியில்லாமல் சுகித்துக் கொண்டிருக்கிறோம்.

 

இதை உடைத்து எவர் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை உருவாக்கியதில் வலைபதிவுகளும் அதனை திரட்டித் தந்த திரட்டிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. முதல் முறையாக தமிழ் உலகத்திற்கு தமிழ்மணம் என்ற தானியங்கி திரட்டியை வடிமைத்த திரு, காசி ஆறுமுகம் அவர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். இவர் தற்பொழுது கோவையில் வாழ்ந்து வருகின்றார்.

 

 

திரட்டி என்ற வடிவம் அறிமுகமாவதற்கு முன் எழுதிக் கொண்டிருந்தவர்கள், குழும மின் அஞ்சலில் கும்மியடித்தவர்கள், உரையாடிக் கொண்டிருந்தவர்கள், வம்பு உருவாக்குவதை மட்டுமே கொள்கையாக வைத்திருந்தவர்கள், இலக்கிய ஆசான்கள், லேகிய மேதைகள், தாதாக்கள், என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் எவரும் இன்று காணாமல் போய்விட்டார்கள். அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

வயதானவர்களுக்கும் இளைஞர்களும் ஒரு பெரிய இடைவெளி உருவாகுமே? இதைப் போலத்தான் இணையத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் மாறுதல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் தனிப்பட்ட கருத்து ரீதியான கொள்கைகள் காலாவதியாகிப் போகின்றது. சூடம் போலக் கரைய வைத்து விடுவதால் எண்ணங்களும் மாறிவிடுகின்றது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் அவரின் மூர்க்கத்தனத்தைக் குறைந்து விடுகின்றது.

 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என உள்ளே வருவதும் போவதும் இடையூறாத சுழற்சியில் வருகின்றார்கள். சிலர் நிலைக்கின்றார்கள்.

 

பலரோ காணாமல் போய் லைக் பட்டனில் அடைக்கலமாகி விடுகின்றார்கள். சிலர் குறிப்பிட்ட சிலரின் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து "நாங்களும் இருக்கின்றோம்" என்று காட்டிக் கொள்கின்றார்கள். சிலரோ "உங்கள் காலம் பொற்காலம்" என்று கூலி வாங்காமல் கூவிக் கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

 

இவரை நம்மால் சந்திக்க முடியுமா? என்ற காலங்கள் போய்விடடது. அத்தனை பேர்களும் ஃபேஸ்புக்கில் வந்து அடைக்கலமாகி விட்டதால் கொஞ்சலாம், திட்டலாம், நடிக்கலாம். தற்போது புகழ் என்பது பொது மேடை. காரணம் நவீன தொழில் நுட்பம் தந்த வளர்ச்சி இது.

 

ஆனால் இன்று வரையிலும் தமிழ்மணத் திரட்டியை திட்டிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எவரொல்லாம் தமிழ்மணத்தின் மூலம் பலருக்கும் தெரியக்கூடியவராக அறிமுகமானார்களோ அவர்கள் தான் இன்று "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிறார்கள்.

 

இன்று தினந்தோறும் உறவே எங்கள் திரட்டியில் இணைந்து பயன்படுத்துங்கள் என்கிற விளம்பர வாசகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தத் திரட்டி என்ற வடிவத்தைத் தமிழிலில் முதல் முறையாக உருவாக்கியவரின் முகத்தை நான் நினைத்துக் கொள்வதுண்டு.

 

அவரைச் சமீபத்தில் சந்தித்தேன்.

கிராமங்களில் வாழ்ந்தவர்கள் சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு போன்றவற்றை இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தெருவிளக்கில் படித்தவர்களும் அதிகமே. 1879 ஆம் ஆண்டுத் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் நமக்கு இயல்பாக இன்று இருப்பதைப் போல உள்ளடங்கிய கிராமங்கள் வரைக்கும் பயன்பாட்டுக்கு வர நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 84 வயது வரை வாழ்ந்து எடிசன் இன்று மறைந்து 72 ஆண்டுகள் முடிந்து விட்டது.

 

இன்று நாம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது எடிசனை நினைத்துக் கொள்கின்றோமோ?

 

இன்று தமிழ்நாட்டில் நிலவி கொண்டிருக்கும் மின்தடையை நினைத்து தான் நம் எரிச்சலை காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

 

ஒரு கண்டுபிடிப்பின் பரிணாமம் வளர வளர கண்டுபிடித்தவர் அஸ்திவாரம் என்ற நிலையில் மறந்து போய்ப் பயன்பாட்டில் உள்ள நவீனம் மட்டுமே தான் பேசப்படும். இது தான் நவீன தொழில் நுட்பம் உணர்த்தும் பாடம். மற்றக் கண்டுபிடிப்புகளை விட மின்சாரம் என்பதை கண்டுபிடிக்காத பட்சத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?

 

இதைப் போல இன்றைய வலைபதிவுகளின் வளர்ச்சியென்பது திரட்டி இல்லாதபட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.

 

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் நமக்குச் சுகம் தரும் வரையிலும் "இனியெல்லாம் சுகமே " என்று குதுகலிக்கின்றோம். ஒரு மணி நேரம் மின் தடை உருவாக ஆட்சியாளர்களின் மேல் நாம் எரிச்சலை காட்டுவதைப் போலத்தான் நம் பதிவு பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கின்றதே என்று வலைபதிவுகளைத் திரட்டும் திரட்டிகளைத் திட்டத் தொடங்கி விடுகின்றோம்.

 

தமிழ் எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குழும மின் அஞ்சலில் தங்களின் கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டிருந்தவர்கள் அடுத்தக் கட்டமாகத் தாங்கள் உருவாக்கிய வலைபதிவுகளில் தங்களின் கருத்துக்களை எழுதத் தொடங்கினர். மேலைநாட்டினர் உருவாக்கிய வலைபதிவின் தன்மையும் படிப்படியாக மாறிக் கொண்டேயிருந்தது.

 

ஆங்கிலத்தில் தொடங்கியவர்களின் பயணம் படிப்படியாகத் தமிழுக்கு நகர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு வலைபதிவுகளை உருவாக்கிக் கொண்டு தமிழிலில் எழுதத் தொடங்கினர்.

 

ஆனால் அது அங்கங்கே சிதறிக்கிடந்த எவருக்கும் பயன்படாத சில்லுகள் போலவே இருந்தது. குறிப்பிட்ட சிலரின் பார்வையில் மட்டும் பட எழுதியவர்களுக்கும் சோர்வு வர இந்தச் சமயத்தில் தான் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழுக்கென்று ஒரு திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற யோசனை ஒருவரின் மனதில் உருவானது.

 

அவர் கற்ற எந்திரவியலுக்கும் கணினி சார்ந்த நிரலி மொழிகளுக்கும் எட்டு காத தூரம். ஆர்வமே வழிகாட்டி. அந்த ஆர்வமே அவரை ஓய்வு நேரத்தில் உழைக்க வைத்து இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் திரட்டியின் அஸ்திவாரம் உருவானது.

0000

காசி ஆறுமுகம் அவர்களின் வார்த்தைகளில்....

எனக்கும் சரித்திரக் கதை எழுத ஒரு ஆசை. உண்மையில் 'அக்கினிச் சிறகுகள்' மாதிரி ஒரு சுய சரிதம் எழுத ஆசைதான். அதற்கு, முதலில் அப்துல் கலாமாக இருக்க வேண்டுமே. சுய சரிதம் எழுவதற்கு என்று யாரும் தகுதி நிர்ணயிக்கவில்லை என்பதனாலேயே நானெல்லாம் எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா? இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூற விரும்புகின்றேன்.

சிறுவயதில் எனக்கு இருந்த ஏக்கங்களுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்யும்வகையில் எனக்கு வழிகாட்டிகளும், வாழ்வளித்தவர்களும் அமைந்தனர். என்னை வஞ்சித்தவர்கள் என்று யாரும் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் உதவி செய்தவர்கள், என்னைக் கைதூக்கிவிட்டவர்கள் என்று பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக வருகிறது

பள்ளிப் பருவம் முடிந்து, பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், 'செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா' என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.  நீளமான கான்பரன்ஸ் ரூமில் நடந்தது நேர்முகத்தேர்வு.

'ஏம்ப்பா, இங்கே லேத் மிஷினில் எல்லாம் வேலை செய்யணும், நீ என்ன இவ்வளவு பொடியனா இருக்கிறே, உன்னால் முடியுமா?'

'ஓ, செய்வேனுங்க'

'சரி, எங்கே இந்தச் சேரைத் தூக்கிக் காமி பாக்கலாம்', பக்கத்தில் இருந்த எஸ்-வடிவ பின்னல் நாற்காலியைக் காட்டினார் ஒருவர்.

மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்கினேன். சிரித்துக் கொண்டே ஓகே என்றார்கள்.

1981 மே மாதம்.

எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி. 'கண்ணுங்களா, இனிமே கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு, வேலை தேடிப் பிழைச்சுக்குங்க' என்று, தாய்க் கோழி வளர்ந்த குஞ்சுகளைக் கொத்தித் துரத்துமே, அதுபோல துரத்திவிட்டார்கள்.


அது ஒரு சிறிய கம்பெனி. குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த இருவர் சுயமாகத் தொடங்கிய ஒன்று. எம் ஐ டி ஐப்பற்றியெல்லாம் பிறகு தான் தெரிந்து கொண்டேன். அப்போது இவர்கள் நமக்கும் மேல் படித்தவர்கள் என்று மட்டும் தெரியும். வேலைக்குச் சேர்ந்தாச்சு. 200 ரூபாய் சம்பளம். ஆறு மாதம் பாத்துட்டு அப்புறம் உயர்த்துவோம்'. 'சரிங்க'. ' என்றேன். அப்புறம் சாயந்திரம் கரெக்டா அஞ்சு மணிக்குப் போகணும்னு பாக்கக் கூடாது, வேலை இருந்தா கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகணும்'. என்றார்கள். அதற்கும் 'சரிங்க' என்றேன். இந்த இரண்டாவது சமாசாரம் பிறகு பெரிய நெருடலாகிப் போனது. ஆறுமாதத்திற்குப்பின் 250 ருபாய் ஆனது. ஆனாலும் தினமும் எப்படியும் 2 மணி நேரமாவது கூடுதல் வேலை, அதற்கு ஓவர்டைம் எல்லாம் கிடையாது. லீவு எடுக்க முடியாது. 25 பேர் வேலை செய்யும் அந்த சிறு இடத்தில் முன்னேற்றத்துக்கு என்ன வழி என்று தெரியாது. எனவே எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு விட்டுப்போனது. ஆனாலும், அங்கு கிடைத்த, லைட் எஞ்சினீரிங் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு பரவலான அறிவு, பின்னால் பெரிதும் பயன்பட்டது. மேலும், லேத், மில்லிங் மெஷின் போன்ற நிறைய மெஷின்களில் கைப்பட வேலை பார்த்தது நம்பிக்கையளித்தது. சில உப கருவிகளை வடிவமைத்தது மனதுக்கு திருப்தியும் தெம்பையும் கொடுத்தது.


கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சனல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள்.


எனக்கு மிகவும் பிடித்த டிசைன் டிபார்ட்மென்டில் போட்டார்கள். 300 ரூபாய் ஸ்டைபன்ட், சம்பளம் என்று சொல்வதில்லை. எப்படியோ மூன்றுமாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டு, வழக்கமான ட்ரெய்னீயாக 450 ரூபாய் சம்பளத்தில் எடுத்துக் கொண்டார்கள். அதிலும் 50 ரூபாய் பிடித்தம் உண்டு. வருடம் 50 ரூபாய் உயர்வும் உண்டு.

1983 மேமாதம் ஒருநாள்

'பார்ட் டைம் பி.ஈ. அட்மிஷனுக்கு இந்த வருடம் நாம் அப்ளை பண்ணமுடியும், தெரியுமா?'

'பார்ட் டைம் பி.ஈ.? அதைப்படித்து என்ன ஆகப் போகிறது? படிக்க எவ்வளவு செலவாகும்?...',

பகுதி நேரமாக கல்லூரிக்கும் செல்வது குறித்த எனக்குள் இருந்த சந்தேகங்கள் தீர்த்து, என் பணி அனுபவச் சான்றிதழ் கிடைக்க தாமதமாகவே என் நண்பரின் உதவியால்தான் கடைசி நேரத்தில் தான் கிடைத்தது. பிறகு இன்டர்வியூக்கு கூப்பிட்டார்கள். அதற்குப்பின் நடந்ததுதான் சோகம். அந்த வருடம் என்னை சாதி ரீதியான முன்னேறிய வகுப்பினர் என்ற பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். என் நல்ல நேரம் எனக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமானதாக இருந்துவிட, எனக்கு ஒபன் கோட்டா பிரிவில் இடம் கிடைத்தது.


என்னுள் இருந்த எஞ்சினீயரை முழுதாய் வெளியே கொண்டுவந்தது எவரெஸ்ட் எஞ்சினீரிங் வொர்க்ஸ் பணிதான். முதல் வருடத்திலேயே 'டெவெலப்மென்ட்' என்ற ஒரு சிறப்புப் பணிக்கு இழுத்துக்கொள்ளப்பட்டேன். இயந்திரங்கள் பற்றி இயற்கையிலேயே இருந்த ஆர்வத்தையும், எண்ணியதை, அடுத்தவர் விளக்குவதை, நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து எளிதில் செய்யும் அளவுக்கு தெளிவான வரைபடங்களாக வெளிப்படுத்தும் திறமையையும் அடையாளம் கண்டு என்னை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர், நிறுவனத்தின் முழு உரிமையாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள்.


ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள கருவிகள் என் வடிவமைப்பில் உருவாகும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். பெரும்பாலும் என் பணி தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவோ, உடல் உழைப்பைக் குறைக்கவோ தேவைப்படும் சிறு கருவிகள், எஸ் பி எம் எனப்படும் விசேஷ தன்னுபயோக எந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, மூலப்பொருட்கள் சேகரித்து, செய்யும் இடத்தில் ஒருங்கிணைத்து, சோதனை செய்து, பணியில் ஈடுபடுத்துவது வரை தொடரும். இத்தனையும் நான் மட்டும் செய்யவில்லை. ஆனால் இத்தனை செய்பவரையும் ஒருங்கிணைக்கும் பணி, முக்கியச் சிக்கல்களைக்களையும் பணி, என்னுடையது.

இந்தப் பணி என் பி.ஈ. பகுதி நேரப்படிப்புக்கு ஒரு அருமையான ஆய்வுக்களமானது. உதாரணமாய் அன்று தான் மோட்டாருக்கு வி-பெல்ட் எப்படித் தேர்வு செய்வது என்று படித்திருப்பேன், அடுத்த நாள் அலுவலகத்தில் அதையே பணியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்னொரு நாள் மோட்டாரின் குதிரைத்திறன் கண்டு தேர்வு செய்திருப்பேன். அடுத்த நாள் மாலை அதையே படிப்பேன். இப்படி பாடத்துக்கும், பணிக்கும் தொடர்புடன் படித்தால் படிப்பு எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை அனுபவித்தாலே புரியும். ஜெர்மனியில் இத்தகைய கல்விமுறை இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜெர்மன் எஞ்சினீயர்கள் உலகளவில் சிறந்த எஞ்சினீயர்களாக இருப்பத்ற்கு இதுவும் காரணம் என்று நினைக்கிறேன்.


ஒரு வழியாக பி.ஈ. படிப்பு முடிவுக்கு வந்தது. எவரெஸ்ட் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்கள் தாக்குப்பிடித்தால் எப்படியும் பி.ஈ.-ஐ வைத்து வேலை கிடைக்கும் என்று எப்படியோ இழுத்துப் பிடித்து ஓட்டினோம். கோவையில் வேறு வேலை கிடைப்பது அரிதாய் இருந்தது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை பார்த்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தேன். எவரெஸ்ட்டின் போட்டிக் கம்பெனிகளுக்கும் போட்டேன். பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் அடுத்து 5 வருடங்களுக்கு வேறு வேலைக்குப் போக மாட்டேன் என்று' ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கக் கேட்டார்கள், மாட்டேன் என்று வந்துவிட்டேன். இன்னொரு கல்லூரியில் ஒப்பந்தம் இல்லாமல் கிடைத்தது. சரி என்று போய்விட்டு ஒரு மாதம் கழித்து விலகிக் கொண்டேன். அதற்குக் காரணம் பூனாவில் ஒரு வேலை கிடைத்ததுதான். ஆனால் அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்குள் ஹிந்து பேப்பர் பார்த்து அப்ளை பண்ணியிருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கிடைத்தும் விட்டது.


1987 ஜனவரியில் கோவையை விட்டு திருவள்ளூருக்குப் பயணமானேன்.

திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது. வேலைக்கு வெளியே நிறைய நேரம் கிடைத்தது. எனக்கு அங்கு மிகவும் பிடித்த விஷயம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கிடைத்த வசதிகள். CAD எனப்படும் கணினி உதவியுடன் வடிவமைக்கும் வசதி அங்கு அப்போதுதான் வந்திருந்தது. கோவையில் மாலையில் படிப்புக்காக செலவிட்ட பழக்கம், பெரிய நட்போ, சுற்றமோ இருந்து நம் நேரத்தை எடுத்துக் கொள்ளாததால் செய்ய ஒன்றுமில்லாமல் வீட்டில் இருந்தது, எளிதில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி புதியன கற்றுக் கொள்ளும் ஆர்வம், எல்லாம் சேர்ந்து என்னை கணினியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தின.


அங்கு எனக்குக் கிடைத்த Godfather தான் திரு. ராஜகோபாலன் அவர்கள். ஆர்ஆர் என்று சொல்லப்படும் அவர் பழைய எம்.ஐ.டி. ஆட்டோ பட்டதாரி. அங்கு எம்.ஐ.டி. யில் படித்த படையே உண்டு. அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் உண்டு. மோட்டார் கம்பெனி என்பதால் அந்த சிறப்புப் படிப்பு ஒரு கூடுதல் தகுதியை வழங்கியது (என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்!) ஆனால் அங்கு செய்யப்பட்ட இயந்திரங்கள் மோட்டார் வாகங்கள் அல்ல, மோட்டார் வாகன அமைப்புகளின்மேல் கட்டப்பட்ட இயந்திரங்கள். ஆகவே மோட்டார் வாகனவியலுக்கு இணையாக எந்திரவியலுக்கும் வேலை இருந்தது. இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ஆர்ஆர்.


அவர் சிரமப்பட்டு நல்ல வேலைகளை எனக்கு பெற்றுத்தந்தார். என்னை நன்றாக முன்னிறுத்தினார். இரண்டு வருடத்தில் நல்ல பேர் எடுத்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னை மேற் கொண்டு படிக்கச்சொல்லித் தூண்டியவரும் அவரே. முதலில் எம்.ஐ.டி.யில் மாலை நேர எம்.ஈ. வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். அது ஒரு கொடுமையான அனுபவம். எனக்கு சென்னைக்கு வீட்டை மாற்றவும் தயக்கமாய் இருந்தது. நல்ல வேளையாக அடுத்த வருடம் ஐஐடியில் எம்.டெக். வகுப்புக்கு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாரும் சொன்ன கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் எனக்குப் பிடித்த எஞ்சினீரிங் மெக்கானிக்ஸ் இரண்டுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குள் யாரோ குளறுபடிசெய்து எங்கள் துறைத்தலைவரிடம் நமக்கு எதுக்கு கம்பியூட்டர் சயன்ஸ்? என்று (சரியாக) கேட்கவும் அவர் என்னை எஞ்சினீரிங் மெக்கானிக்ஸில் சேரச் சொல்லிவிட்டார். எனக்கு வருத்தமில்லை.


ஐஐடியில் ஒருவருடம் சொல்லப்போனால் எட்டுமாதம்தான், எளிதில் ஓடியது. பிறகு மீண்டும் இரு வருடங்கள் திருவள்ளூரில் கழித்துவிட்டு, கோவைக்குப் பயணமானதும், அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஏழு வருடம் பணிபுரிந்ததும், பிறகு இரண்டரை வருடமாக அமெரிக்காவில் வசிப்பதும்...காலம் ஓடிக்கொண்டே இருந்தது.


நான் தொழில்முறையில் கணினியில் மென்பொருள் எழுதுபவனல்ல. அதாவது வேறு ஒருவருக்காக, தேவைகளை கேட்டு, எழுதிக்கொடுத்தல் நான் செய்ததில்லை. ஆனால் அதற்காக ப்ரோகிராம் எழுதியதே இல்லை என்று அர்த்தமில்லை. என் (அலுவலக) சொந்த தேவைகளுக்காக பல மொழிகளில் சிறு நிரல்கள் எழுதுவேன். ஆனாலும் இடையில் ஒரு 7 ஆண்டுகள் என் பணியில் சுத்தமாக எழுதாமல் இருந்தேன். அலுவலக ரீதியான பணியில் அவ்வப்போது எழுதுவேன். அலுவலகத்தில் நான் பயன்படுத்தும் மொழிகள் வேறு, அவற்றை குறிப்பிட்ட மென்கலனுக்கு வெளியே கேள்விப்பட்டே இருக்கமுடியாது.


தமிழ்மணம் தளத்தை அமைக்க PHP என்னும் மொழியைக் கற்றேன். இயங்கு வலைப்பக்கங்களைக் (dynamic webpages) கொண்டு அமையும் இணையத்தளங்களை இந்த மொழியைக்கொண்டு சிறப்பாகக் கையாளமுடிந்தது. அத்துடன் திறமூல (Opensource) இயக்கங்கள் இந்த மொழியில் நிறைய நிரல் தொகுப்புக்களை பலரும் இலவசமாகப் பயன்படுத்த அளிக்கின்றன. தமிழ்மணம் தளத்தில் செய்தியோடை திரட்டும் வேலை அப்படிக் கிடைத்த ஒரு இலவச நிரல்தொகுப்பின் மூலமே செய்யப்பட்டது.


உண்மையிலேயே நான்  கற்றுக்கொண்ட PHP மொழியறிவு என் அலுவலகத்திலும் பயனாக ஆரம்பித்துவிட்டது. புதிதாக நான் இறங்கிய ஒரு வேலையில் இரு சாத்தியங்கள் இருந்தன: சி++/ஜாவா போன்ற மேசைத்தளத்தில் நிறுவக்கூடிய கருவியாக செய்வது ஒன்று. ஒரு வழங்கியில் நிறுவப்பட்டு இணைய உலாவி வழியாக இயங்கும் கருவியாக செய்வது ஒன்று.  தமிழ்மணம் மூலம் கிடைத்த அனுபவம் எனக்கு இரண்டாவது வழியின் அனுகூலங்களை உணரச்செய்ததோடு, பிறர் உதவியின்றி நானே செய்யவும் வகைசெய்தது. ஆக வலைப்பதிவுகளில் ஈடுபடுவது வெறும் பொழுதுபோக்கில்லை, எழுத்தாளராக இருந்தால் எழுத்து வளம்பெறும், பொறியாளராக இருந்தால் கருவிகள் கூர்மைப்படும். மேலாளராக இருந்தால் தகவல் மேலாண்மைவின் வீச்சும் வீரியமும் புலப்படும்.


தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.


இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன். இத்தனைக்கும் ப்ளாக்கர்.காம் வலைப்பதிவுகளில் மறுமொழிச் சேவை இல்லாததால் என் வலைப்பதிவுக்கு backblog.com என்ற, வெளியிலிருந்து இயங்கும் மறுமொழிச் சேவையைப் பெற வருடம் $10 சந்தா கட்டினேன். தமிழ்மணம் திரட்டி இலவசமாக அளிக்கும் சேவைகள் விலை கொடுத்துப் பெற்ற இந்த சேவையின் வேலைத்திறனை விட பல மடங்கு இருக்கும் என்பது கண்கூடு.


சுரதாவின் முயற்சியில் ஒரு வலைத்திரட்டி உருவாவது அறிந்து அவருடனும் தொடர்பு கொண்டு தமிழ்மணம் உருவாவதைப் பகிர்ந்துகொண்டபோது இரண்டும் வேறுவேறு நுட்பத்தில் இயங்குவதை விளக்கி, தமிழ்மணம் இயக்கும் நுட்பத்தின் கூடுதல் சிறப்பைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டினார். அத்துடன் தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான பல ஆலோசனைகளை வ்ழங்கி மேம்படுத்தலுக்கும் உதவினார்.


முகுந்த்தும் ஒரு திரட்டியை தன்னுடைய தளத்தில் நிறுவியிருந்தார். ஆனால் சரியாக அதை வளர்த்து சீராட்டுவதன் தேவையை உணராததாலோ என்னவோ அது பிரபலமாகாமலேயே போய்விட்டது.

இன்றும் நான் தெளிவாகவே இருக்கிறேன்: வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளருக்கோ, பத்திரிகையாளருக்கோ என்றும் போட்டியாக முடியாது. அவர்கள் அளவுக்கு (வலைப்பதிவில் மட்டும் நாட்டமுள்ள) ஒரு வலைப்பதிவருக்கு எடுத்த பொருளில், இயக்கத்தில் தீவிரம் இருப்பது அரிது. அதே நேரத்தில் வலைப்பதிவு என்ற வடிவத்திலும் ஒருவர் உச்சத்தைத் தொடமுடியும், அவர் புத்தகம் போடவேண்டியதில்லை, பத்திரிகைக்கு எழுதவேண்டியதில்லை. எப்படி வானொலியில், தொலைகாட்சியில் செய்தி வாசிக்க ஆரம்பித்தாலும் செய்தித்தாளின் முக்கியத்துவம் குறையவில்லையோ, எப்படி தொலைக்காட்சியில் நாடகங்கள் வந்தும் திரைப்படத்தின் தாக்கம் குறையவில்லையோ, அப்படியே வலைப்பதிவுகளின் வருகையால் மற்ற எழுத்து வடிவங்களுக்கும் எந்தப் பாதிப்பும் வரும் என்று நான் நம்பவில்லை. கட்டிலில், ரயிலில், சாப்பிடும்போது ஒற்றைக் கையில் என்று ஒரு புத்தகம் படித்த அனுபவம் அதன் இ-வடிவத்தில் கிடைக்குமா? ஏகப்பட்ட இடைநிறுத்தங்கள், கவன இழப்புகளோடு டிவியில் படம் பார்ப்பது அரங்கில் முழு இருட்டில் படம் பார்ப்பதுபோல வருமா? அதுபோலவேதான் வலைப்பதிவும். காலம் இதை தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

கட்டுரைத் தொகுப்பு  ஜோதிஜி திருப்பூர்

(தகவல்கள் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் வலைபதிவில் திரட்டப்பட்டதன் அடிப்படையாகக் கொண்டது)

http://kasiblogs.blogspot.in/2006/07/12.html?m=1

 

           

by Swathi   on 14 Mar 2014  0 Comments
Tags: Tamil Aggregator   Tamil Aggregator Websites   Tamilmanam   Tamilmanam Aggregator   Kasi Arumugam   தமிழ் மனம்   காசி ஆறுமுகம்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.