LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1191 - கற்பியல்

Next Kural >

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை. (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதா யிற்று.)
மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலரும் ஆற்றாராய்க் கடிதின் வருவர். நீ அவரொடு பேரின்பந் துய்ப்பாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) (இ-ரை.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர்-தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் பெற்றவரே ;காமத்துக் காழ் இல் கனி-பெற்றாரன்றோ கொட்டையில்லா நறுமணஇன் சுவைச் செழுஞ்சதைக் காமவின்பக்கனி நுகர்ச்சி! பெறுதலருமை நோக்கிப் ’பெற்றவர்’ என்றும், பேரின்பமாதல் பற்றி ’காழில் கனி’ என்றும், கூறினாள். நம் காதலர் பிரிந்துபோனதொடு திரும்பிவராமலுமிருத்தலின், யாம் அக்கனியைப் பெற்றிலேம் என்பதாம். காமம் என்பதை மரத்தின் பெயராகக் கொள்ளின், அத்துச்சாரியை வேற்றுமை வழியில் வந்ததேயாம். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
Translation
The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtains.
Explanation
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ? .
Transliteration
Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare Kaamaththuk Kaazhil Kani

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >