LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

தமிழிசையும் ஆபிரகாம் பண்டிதரும்

தமிழிசையும்  ஆபிரகாம் பண்டிதரும்

பேட்டி: இசை ஆய்வாளர் நா.மம்மது

சந்திப்பு: எழுத்தாளர் ஜெயமோகன்   

தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண வேண்டிய அவசியம் என்ன?

நமது கலாச்சார வரலாறு, முறைப்படி தொகுக்கப்படவில்லை.தமிழ் மொழியை இயல், இசை நாடகம் என்று பிரிக்கிறோம்.இதுவரை அறிஞர்களால் திரட்டப்பட்டு நமக்கு கிடைப்பது இயல் மட்டுமே.நாடகம் கிடைக்கவில்லை.இசை குறித்த வரலாறே நம்மிடம் இல்லை.நம்முடைய பாடப்புத்தங்கள் கூட பாடவரையறை செய்யும் போது ‘இசைப்பகுதி நீங்கலாக’ என்று தான் குறிப்பிடுகின்றன.

இசை ஒரு நிகழ்கலை.நுண்கலைகள் ஐந்து.சிற்பம், சித்திரம, கட்டிடம், நடனம், இசை.இவற்றில் முதல் மூன்று கலைகளும் பருவடிவில் காலத்தில் நீடித்து நிற்கும்.எவரும் எப்போதும் பார்க்கலாம். மற்ற இரு கலைகளும் அவை நிகழும் போதுதான் அனுபவிக்க முடியும்.எழுதியோ சொல்லியோ காட்ட முடியாது.(இப்போது பதிவு செய்து வைக்க ஒலி, ஒளி ஊடகங்கள் உள்ளன என்பது உண்மைதான்) ஆகவே தொடர்ச்சியான ஒரு ஓட்டம்,மரபு இல்லை என்றால் இக்கலைகள் நீடிக்க முடியாது.ஒரு தலைமுறைக்கால இடைவெளி விழுந்தால் கூட சில கலைகள் முற்றிலும் அழிந்துவிடக் கூடும்.இக்கலைகளின் இயல் பகுதி தனித்து செயல்பட முடியாது, கூடவே நிகழ்த்தியும் காட்டப்பட வேண்டும்.ஆகவே நிகழ்கலைகளின் இயல் பகுதியைத் தொடர்ந்து அக்கலைகளுடன் தொடர்புபடுத்தி புதுப்பித்தப்படியே இருக்கவேண்டியுள்ளது.

நம் இசையியல் நூல்கள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவை.அவற்றுள் முற்கால மரபின் தொடர்ச்சி இல்லாமலிருக்கிறது.இன்று நாம் இந்த இசையியல் நூல்களைப் பார்க்கும் போது இயல் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.எப்படிப் பாடப்பட்டது என்று தெரியவில்லை.பிற்கால வளர்ச்சியும் அறுபட்டிருக்கிறது.

ஆய்வு செய்து பார்க்கும்போது தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், தேவாரம் முதலிய பண்டைய இலக்கியப்படைப்புகளில் பண், சுரம் முதலியவற்றின் இயல்பு கள் குறித்த தகவல்களை உதிரியாகக் காண முடிகிறது. தேவாரப் பண்களை ஒரளவு பாடலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது. பிற்கால இசையியலுடனும், சமகால இசை நிகழ்வுகளுடனும் இணைத்துப் பார்த்து நமது இசைமரபு குறித்த ஒரு சித்திரத்தை இப்போது நாம் உருவாக்கிக்  கொள்கிறோம்.

இப்படி ஆய்வு செய்து பார்க்கும் போது தமிழிசையே இப்போது தென்னிந்திய இசை என்றும் கர்நாடக சங்கீதம் என்றும் வழங்கப் படுகிறது என்று தெளிவாகிறது.வடஇந்திய இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை இந்தத் தமிழிசையின் ஒரு வளர்ச்சி நிலையே என்றும் தெரியவருகிறது.

இவ்வாராய்ச்சிக்கு முன்னோடி யான இசையியலாளர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.இவர் எழுதிய ‘கருணாமிர்த சாகரம்’ இசையியலில் முதல்நூல் என்று கூறத்தக்கது. விபுலானந்தர் எழுதிய ‘யாழ்நூல்’’, எஸ்.ராமநாதனின் ‘சிலப்பதிகார இசை நுணுக்க விளக்கம், சாம்பமூர்த்தியாரின் ‘தென்னிந்திய இசை’ (ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ விusவீநீ) ‘தமிழிசை வளம்’, தமிழிசை இயல் இலக்கண விளக்கம்’ கோதண்டபாணி அவர்கள் எழுதிய  ‘பழந்தமிழ் இசை’, டாக்டர் சேலம் ஜெயலட்சுமி எழுதிய ‘சிலப்பதிகாரத்தில் இசைச் செய்திகள்’ இப்படி பல முக்கியமான நூல்கள் பிறகு வந்திருக்கின்றன.   

இசையியலில் இப்படி ஒரு இடைவெளி எப்படி ஏற்பட்டது?

தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்.கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப் பட்டு வந்தது.இடைக்கால சோழர் ஆட்சியும் இடைக்கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிதான்.

?அப்போதும் சமஸ்கிருதம்தான் அதிக முக்கியத்துவம் பெற்றிருந் தது...

ஆம்.இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.பல்லவர்கள் வடமொழிக் கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.பிறகு மராட்டியரின் காலகட்டம்.இந்தக் காலகட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சோர்வும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

இலக்கியத்திலும் கட்டிடக் கலை களிலும் சிற்பக் கலைகளிலும் அத்தகைய தொடர்ச்சியின்மை இருந்ததாகத் தெரியவில்லையே?

      இலக்கியத்தில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் நிரம்பிய காலகட்டங்கள் பல உண்டு.ஆனால் இலக்கியம் எழுதி வைக்கப்படுகிறது.எப்போது வேண்டுமானாலும் அது தொடர்ச்சி பெற முடியும். நுண்கலைகள் அப்படி அல்ல. இசைபோன்ற நிகழ்த்துக்கலைகளுக்கு இடைவிடாத தொடர்ச்சி தேவை.

 பிற மொழியினர் ஆட்சிக் காலத் தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது.தெலுங்கு ஆட்சிமொழி.இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல. வடமொழியும் தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன.ஆட்சியாளர்களை அனுசரித்து பொருளாதார நன்மை பெறவும் அவை பயன்பட்டன.

இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.அரசசபை தெலுங்கிற்கும் வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும்போது பாடகர்களும் பாடலாசிரியர் களுக்கும் வேறு வழி இல்லை.

அப்படி உருவானதுதான் இப்போது நமக்கு இருக்கும் இசையின் உடனடியான இறந்த காலம்.நூற்றைம்பது வருடங்களாக தெலுங்கில் பாடிப்பாடி மெருகேற்றப் பட்டது இப்போதைய மரபிசை.இப்போதும் ஏன் தெலுங்கிலே பாடுகிறார்கள் என்றால்  தமிழ் மீதான வெறுப்பினால் என்று நான் கருதவில்லை.சமீப காலமாக ஏராளமாக தமிழ் இசைப் பாடல்களை எல்லாப் பாடகர்களும் பாடுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தெலுங்குப் பாடல்களைப் பாடுவது எளிது.இரண்டு காரணங்கள், ஒன்று பாடல் நிகழ்ச்சியில் ஏற்கனவே கேட்டுப் பழகிய புகழ் பெற்ற பாடல்களைப் பாடினால் நமக்கு உடனடியாகப் பிடிக்கிறது.அதில் சங்கதிகள், பிர்கா எல்லாம் போட்டு பாடி அனைவரையும் எளிதில் கவரமுடியும். தியாகராஜ சுவாமிகளின் பாடல்கள்  சுவரப் படுத்தப்பட்டு மெருகு ஏற்றப்பட்டுத் தயாராக இருப்பது இரண்டாவது காரணம். தமிழ் இசைப்பாடல்களை அப்படி சுரப்படுத்தி பாடி பிரபலப் படுத்த வேன்டும்.அதற்கு கற்பனையும் உழைப்பும் மிகவும் தேவை.இப்போது விகடன் போன்ற இதழ்களில் கூட ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை பாடல்களைப் பாடும்படி விமரிசகர்கள் எழுதுகிறார்கள்.ஆனால் எளிய வழியில் போகவே பலரும் முயல்கிறார்கள்.அது இயல்பு.ஆனால் இன்னும் சில வருடங்களில் நிறைய மாற்றம் இருக்கும்.

வழக்கமான கேள்வி, இசைக்கு மொழி முக்கியமா? இசையே ஒரு மொழி தானே?

      உங்கள் கேள்வியிலே ஒரு உண்மை இல்லாமல் இல்லை.நமது இசை ஆலாபனையை அடிப்படையாகக் கொண்டது.ஆலாபனைக்கு குரல் போதும், மொழி தேவையில்லை.நம் இசை சொற்களை அதிகம் சார்ந்து இல்லைதான்.அனால் மொழி என்றால் சொற்கள் மட்டுமல்ல, கலாச்சாரமும் கூடத்தானே?தமிழ் இசை என்று கூறும்போது தமிழ்ப் பண்பாட்டு இசை என்றுதான் பொருள் கொள்கிறோம்.நம் மரபிலே ஆலாபனை, ஆளத்தி என்று கூறப்படுகிறது.அதில் இரண்டு வகை நிற ஆளத்தி, காட்டாளத்தி, ராகம் அல்லது பண்ணின் வடிவத்தை உயிரெழுத்துக்கள் மூலம் ஆலாபனை செய்வதே நிற ஆளத்தி.இது வண்ணப்பட்டடை என்றும் கூறப் படுகிறது. இது தாளத்துக்கும் மொழிக்கும் கட்டுப்படாதது. த, ந, எனும் எழுத்துக்களும் மகர ஒற்றும் பாடப்படுகிறது.‘‘மகரத்தின் ஒற்றால் சுருதி, விரவி’’ ‘‘தவ்வும் நவ்வும்’’ என்பவை ஆளத்தி இலக்கணங்கள்.இது சிலப்பதிகாரம் கூறும் செய்தி.அதாவது சொற்களின்றி ஆலாபனை செய்யும் முறை தமிழ் மரபில் பிறந்து வளர்ந்தது.இன்று வரை தொடர்ந்து வருவது இந்த முறைதான்.

தமிழிசை ஆய்வாளரான நா.மம்மது கணிதம் இளங்கலையும் மதத்தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகே யுள்ள இடைகால் (கவிஞர் கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.121946இல் பிறந்தவர்.பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடை யவர்.தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

by Swathi   on 28 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழா நீ பேசுவது தமிழா தமிழா நீ பேசுவது தமிழா
தமிழிசையின் அரிய நூல்கள்! தமிழிசையின் அரிய நூல்கள்!
பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை... பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை...
‘முத்தமிழ் இசைத்திலகம்’  :கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணர் ‘முத்தமிழ் இசைத்திலகம்’ :கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணர்
புலம்பெயர்  மண்ணில் தமிழிசை!  தேவகி பச்சமுத்து புலம்பெயர் மண்ணில் தமிழிசை! தேவகி பச்சமுத்து
தமிழிசையைப் பாடுவதே பிராணாயாமம் செய்வது போலத்தான்! தமிழிசையைப் பாடுவதே பிராணாயாமம் செய்வது போலத்தான்!
இசைக்கடலின் (சங்கீத் சாகர்) எழுச்சியும் வளர்ச்சியும் இசைக்கடலின் (சங்கீத் சாகர்) எழுச்சியும் வளர்ச்சியும்
தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை,  வரலாறு அன்றும் இன்றும் தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.