LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்

தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை,  வரலாறு அன்றும் இன்றும்

டாக்டர். வை. பழனிச்சாமி,  

தமிழ்நாடு முன்னாள் மாநில தேர்தல் ஆணையாளர்

 

நம் தாய்த் தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, நாட்டிய-நாடக வரலாறு ஆகியவைகளைப் பற்றி ஆழ்ந்து  ஆராய்வோ மாயின், பல அற்புதமான வரலாற்றுச் செய்திகளை நாம் அறிய முடியும்.  முத்தமிழின் நடுநாயகமாக விளங்கும் தமிழ் இசைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு உள்ளது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியம், இயற்றியவர் தொல்காப்பியர்.  தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர்.  1610 சூத்திரங்களை உள்ளடக்கிய தொல்காப்பியம் அகவற்பாவில்  எழுதப்பட்டது.  எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள்.  ஒரு அதிகாரத்திற்கு 9 இயல்கள் என 27 இயல்கள் கொண்டது.

சங்க காலம்: கி.மு. 500 முதல்

கி.பி. 250 வரை (மூவேந்தர் காலம்).

சங்க காலத்தில் பண்டைத் தமிழரின் வீரம், காதல், மன்னரின் வெற்றிச் சிறப்பு, கொடைத் தன்மை, மான வாழ்க்கை, செங்கோன்மை, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைத் தேனினும் இனிய செஞ்சொற்பாக்களாகப் பெரும் புலவர்கள் பாடியுள்ளார்கள்.

முதல் சங்கம் - தென் மதுரையிலும், இடைச் சங்கம் - கபாடபுரத்திலும், கடைச் சங்கம் - இன்றைய மதுரையிலும் இருந்ததற்கான ஆதாரங்களை சின்னமனூர் செப்பேடுகள் வாயிலாக அறிகிறோம்.

சங்க இலக்கியங்கள் பதினென் மேற்கணக்கு நூல்கள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

இவ்விரண்டு பிரிவில் பதினென் மேற்கணக்கு நூல்களை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரண்டு பிரிவாகப் பிரித்தனர்.

எட்டுத்தொகை:

     நற்றினை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,

     ஒத்த பதிற்றுப் பத்து, ஒங்குபரிபாடல்,

     கற்றறிந்தோ ரேத்தும் கலியோ டகம்,புறம் என

     இத்திறத்த எட்டுத் தொகை.

பத்துப்பாட்டு:

     முருகு, பொருனாறு, பாணிரண்டு, முல்லை,

     காஞ்சி, நெடுநல்வாடை, பாலை, குறிஞ்சி,

     மலை படுகடாம் பத்து

     என்ற இவ்விரண்டு வெண்பாக்கள் மேற்கணக்கு நூல்களின் பெயர்களை நமக்குத் தெரிவிக்கின்றன.

கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா:-

     நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்

     பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்

     இன்னிலை சொல் காஞ்சியுடன், ஏலாதி என்பவே

     கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

கடைச்சங்க நூல்களுள் முக்கியமான நூலாகிய திருக்குறள் உலகப் பொதுமறை எனப் பல நாட்டு அறிஞர்களும் போற்றிப் புகழும் பெருமையைப் பெற்றுள் ளது.

கி.பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாகக் கருதப்படும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்று நூலையும், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்ற நூலையும் இயற்றினர்.  இவை ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.  இவை இரண்டும் தனித்தமிழ் காப்பியங் களாகும்.   

கி.பி. 2ம் நூற்றாண்டிற்குப் பிறகு மெல்ல மெல்ல வடவர் நாகரிகமும் தென்னவர் நாகரிகமும் ஒன்றோ டொன்று கலக்கத் தொடங்கின.

கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் 7ம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர்.  இந்த காலகட்டத்தில் எந்த ஒரு இலக்கிய மும் தோன்றவில்லை.  இது தமிழகத்தின் இருண்ட காலம். 

கி.பி. 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவார மூவரும், பன்னிரு ஆழ்வார்களும் பக்தி இலக்கியம் தோன்றக் காரணமாயினர்.  தனி மனிதனைப் பாடும் சங்க இலக்கியப் போக்கு மாறி, தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கியங்கள் தோன்றலாயின.  இந்நூல்களில் ‘பன்னிரு திருமுறைகளும்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தமும்’ முக்கிய இடம் பெறுகின்றன.

பக்தி காலம்

தமிழகத்தில் 2ம் நூற்றாண்டு முதலே சமண பௌத்த மதங்கள் பரவத் தொடங்கின.  மன்னர்களும் அந்த மதங்களைப் பின்பற்றினர்.  இவ்விரண்டு மதங்களாலும், களப்பிரர்களாலும் தமிழ் இனம் தனது தனித்தன்மையை இழந்துபோனது.

தமிழையும், தமிழ் இனத்தின் தனித்தன்மையையும் மீட்டெடுக்க உதவியது ‘பக்தி மார்க்கம்’.  சைவ மும், வைணவமும் புத்துயிர் பெறலாயின.

‘அறுபத்தி மூன்று நாயன்மார்கள்’ சைவ மதத்தைப் போற்றிப் பாடல்கள் எழுதினர்.  அவை பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.  அதுபோலவே ‘பன்னிரண்டு ஆழ்வார்கள்’ தோன்றி வைணவ மதத்தைப் புகழ்ந்து பாக்கள் இயற்றினர்.  அவை நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப் பெயர் பெற்றது.

நாயன்மார்களும், ஆழ்வார்களும், தமிழ்மொழிக்கும் தமிழ் இசைக்கும் ஆற்றிய தொண்டு மிகப்பெரிய தொண்டாகும்.

·    ஆழ்வார்களுக்குப் பின் தோன்றி வைணவத்தை வளர்த் தவர்கள் ஆச்சார்யார்கள்.

·    ஆச்சார்யார்களில் தலைமை யானவர் நாதமுனிகள்.

·    நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள்.

·    நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் ‘திராவிட வேதம்’ எனப்படுகிறது.

·    நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.

சைவ, வைணவ சமய நூல்கள் கடவுள் அன்பை வெளிப்படுத்திப் பாடப்பட்டுள்ளமையால் அவை பக்திப் பாடல்கள் என்று அழைக்கப் பட்டன.  இவைகளின் காலம்

கி.பி. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டா கும்.

பக்தி இலக்கியங்களில் ஒன்றான நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் புரட்சியாளர் ராமானுசர் ‘திராவிட வேதம்’ எனச் சிறப்பித்தார்.  அதை எழுதியவர்கள் தமிழர்கள் என்பதால் அது ‘திராவிட வேதம்’ எனப்பட்டது.  தங்களுக்குத் தேவையான வேதத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் தமிழ்ர்களுக்கு உண்டு என்பதை இது காட்டுகிறது.  பக்தி இயக்கத்தால்தான் தமிழர்களை ஒருமைப்படுத்தித்  தூக்கி  நிறுத்துகின்ற  முயற்சி  நடந்தது; வெற்றியும் பெற்றது.

சாதியால் தமிழினம் “மேல் கீழ்” என பிளவுபட்டுக்  கீழமைப்பட்டிருந்த பொழுது, அதைப் போக்குவதற்கான முயற்சி சிவனையும், பெருமாளையும் முன் வைத்து நடைபெற்றது.

‘உயர் நிலை அடைவதற்கு சாதி ஒரு தடையில்லை’ என்று முழக்க மிடப்பட்ட பக்தி இயக்கத்துக்குப் பிறகும், சாதிகள் நீடித்தன என்றாலும், அவற்றின் மையமான உயர்வு, தாழ்வு  சைவ, வைண வங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டன.

பௌத்தத்துக்கும், சமணத்துக்கும் எதிராக நடந்த இந்தப் போரில் பக்தி இயக்கத்தால் ஏற்பட்ட தலையாய பயன், தமிழர்கள் ஒருமைப்பட்டது தான் என்றால் அது மிகையாகது.

வடமொழியைத் தழுவியும், தழுவாமலும் தோன்றிய காதை நூல்கள், பெரியபுராணம், கம்பராமாயணம்.  இக்காலம் கி.பி. 10 முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு முடியவாகும்.

வால்மீகியின் வடமொழி காப்பியத்தைத் தமிழில் ‘ராமாயணம்’ என்று கம்பரும், வியாச முனிவரின் மகாபாரத காப்பியத்தை தமிழில் ‘மகாபாரதம்’ என்று வில்லிபுத்தூராரும் மொழி பெயர்த்தனர்.

சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலம்:

கி.பி. 11ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கியங்கள் பல தோன்றின.

கலம்பகம், பரணி, பள்ளுப்பாட்டு, தூது, உலா, குறவஞ்சி, கோவை, பிள்ளைத்தமிழ், பதிகம், சதகம் மற்றும் அந்தாதி என்ற தலைப்புகளில் ஏராளமான சிற்றிலக்கியங்கள் தோன்றின.

தமிழ் இசை:

முத்தமிழின் நடுநாயகமாக விளங்கும் இசைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு உள்ளது.  தமிழ் இசை பல்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய நாட்டிய உலகில் நடனம் எப்படி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறதோ, அது போலவே தமிழிசையும் வெகு வேகமாக வளர்ந்திருக்கிறது.

கி.பி. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்காழியில் பிறந்த ‘முத்துத்தாண்டவர்’ கீர்த்தனை வடிவ இசைப்பாக்களை இயற்றினார்.

பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு), சரணம் (முடிப்பு) என மூன்று பாகங்களைக் கொண்ட இசைப்பா வடிவத்தின் (பிதாமகன்) தோற்றுநர் முத்துத்தாண்டவரே.  இவருக்குப் பின்னர் ‘அருணாசலக் கவிராயர்’, ‘மாரிமுத்தாப்பிள்ளை’ கீர்த்தனை வடிவப் பாடல்களை எழுதினர்.  இவர்களை ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என அழைக்கலாயினர்.

கி.பி. 19ம் நூற்றாண்டில் தோன்றிய கோபாலகிருஷ்ணபாரதியாரும், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையும் கீர்த்தனை வடிவப் பாடல்களை பிரபலப்படுத்தினர்.  இவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் தான் வள்ளல் பெருமான்.

இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

·    பிறந்த நாள்     -    05.10.1823

·    பிறந்த ஊர் -    மருதூர்

·    வாழ்ந்த ஊர்     -    வடலூர்

·    நூல்கள்   -    திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்,

மனுமுறை கண்ட வாசகம்

·    சமரச சன்மார்க்கம் கண்டவர், ஓதாது உணர்ந்த பெருமான், அருட்பிரகாசர் என்பன பிற பெயர்கள்.

·    வடலூரில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.

அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங் கருணையாகித் திகழ்கின்ற திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய ‘திரு அருட்பா’, பாடப்பாட வாய் மணக்கும்;  உள்ளம் குளிரும்; உயிர் வளரும்; அன்பும், ஆன்ம நேயமும், இரக்கமும், இறை உணர்வும் தழைத்தோங்கும்.  ‘திரு அருட்பாவைக்’ கற்கக், கற்கக் களிப்பு உண்டாகும்.  அருள் இன்பத்தை வாரி வழங்கும்.  எனவே நினைத்து, நினைத்து; உணர்ந்து, உணர்ந்து; நெகிழ்ந்து, நெகிழ்ந்து; திரு அருட்பாவை தினசரி பாராயணம் செய்து அதன்படி நடப்போமாக.

இயற்றமிழில் அருட்செங்கோல் ஆட்சி நடத்துகின்ற வள்ளல் பெருமானார் இசைத் தமிழிலும் தனி அருட் செங்கோல் ஆட்சி நடத்துகின்றார்கள் என்பதற்கு திரு அருட்பாவிலுள்ள 1000-க்கும் மேற்ப்பட்ட “இசைப் பாடல்களே” சான்றுகளாகும்.  வள்ளலாரின் திரு அருட்பாவில், இசைத் தமிழ் கொஞ்சி விளையாடுவதை, திரு அருட்பாவில் திளைப்போர், உணர்ந்து பரவசம் அடைவதைப் பார்க்கலாம்.  எல்லாக் கலைகளிலும் வல்லவரான வள்ளல் பெருமான், இசையோடு பாடும் இயல்பினர் என்பதை அறிகிறோம்.

இவருடைய பாடல்கள் இன்று நாட்டியக் கலைஞர்களாலும் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருவது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஆடல் - (நாட்டியக்) கலை

இன்று இசைக்கலையை விட மிக வேகமாக வளர்ந்து வருவது ஆடற்கலை (நாட்டியக் கலை).

ஆடற்கலையின் இலக்கணத்தை தமிழ்ப்பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் விரித்துக் கூறுவது போல வேறு எந்த நூலும் தெளிவாகக் கூறவில்லை.

சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரமாகிய மாதவியின் நாட்டியம் அரங்கேற்றப்படுவதை இளங்கோ அடிகள் ‘அரங்கேற்றக்காதையில்’ பதிவு செய்துள்ளார்.

சங்க இலக்கியப்பாக்கள் அகம், புறம் என்று பிரிக்கப்பட்டுள்ளதைப் போல நாட்டியமும் வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

வேத்தியல் என்பது இறைவனின் முன்பும், அரசரின் முன்பும் புகழ்ந்து ஆடப்படுபவை.

பொதுவியல் என்பது மக்களின் வீரம் முதலியவற்றை விளக்குவதாகும்.

பதினோரு வகைக் கூத்து சிலம்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

கை, கால், கண், முகம், உடல் என ஐந்து வகை இயக்கம் பேசப்படுகிறது.

ஒற்றைக் கைப்பிடிப்பு 15-ம், இரட்டைக் கைப்பிடிப்பு 33-ம் என (ஹஸ்தம்) கைப்பிடிப்பு 48 வகை விளக்கப்படுகிறது.

மேலிருந்து கீழ் இறக்கப்படும் திரை, பின், கீழிருந்து மேல் ஏற்றப்படும் திரை, இருபுறமும் விலக்கப்படும் என திரைச்சீலைகளையும், மேடையின் அளவுகளையும், சிலப்பதிகாரம் மிக மிகத் தெளிவாக விளக்குகிறது.

இவ்வாடற்கலையைப் பேணி வளர்க்க மாமன்னன் இராசராசன் தஞ்சை பெரிய கோவிலில் 400 ஆடற் பெண்டிர்களை அமர்த்தினான்.

நமது ஆடற்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்த தெய்வமே ஆடல்வல்லான் என்ற நடராஜர்.

தமிழகத்தின் ஆடற்கலை கூத்து என்றும் சதிர் என்றும் அழைக்கப்பட்ட நிலை மாறி, இன்று ‘பரதம்’ என்ற பெயரில் உலகில் கொடி கட்டிப் பறந்து வருகிறது.

நம் தாய்த் தமிழ் மொழியின் சிறப்பம்சமான இசை, நம்முடைய நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளின் அடையாளமாகத் திகழும் பல்வேறு கலைகளில் மிகச் சிறப்பான இடத்தை இன்று தமிழ் இசை பெற்றுள்ளது.  எனவே தான் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துக் கொள்ள இசை ஆர்வலர்கள் வருவது இன்று மிகப் பெரும் நிகழ்வாக அமைந் துள்ளது.

நமது தமிழ் இசை, நாட்டிய கலைஞர் களும் பல்வேறு சபாக் களில் ஆயிரக்கணக் கான ரசிகர்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்விக்கிறார்கள்.

நமது தமிழ் இசை, நாட்டிய விழாக்களை மார்கழி மாதத்தில் நடத்திடும் வகையில் அனைத்து வசதி களையும் பெற்றுள்ள நகர மாக நமது தலைநகர் சென்னை விளங்குவது நமக் கெல்லாம் பெருமை தருவதாகும்.

நமது தமிழ் இசையின் சிறப்பை விளக்கும் வகையில் இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர், அறங்காலவர் அன்பிற்குரிய திருபுவனம்  ரீ.ஆத்மநாதன் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழிசை, நாட்டிய, நாடக விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் நடைபெறும் இசைவிழாவில், 3 நாட்கள் தமிழ் இலக்கிய பாடல்களில், குறிப்பாக வள்ளலாரின் அருட்பா இசை விழாவாக நடைபெறும்; அடுத்த 2 நாட்கள் தமிழ் இசை விழாவாக நடைபெற்று வருகிறது. 

ஆண்டுதோறும் சுமார் 50 இளங்கலைஞர் கள் பங்குகேற்கும் வகையில் அதற்குரிய தளம் அமைத்து கொடுத்து வருகிறார்,  தமிழ் இசையைப் பாடும், குறிப்பாக, வள்ளலாரின் அருட்பா இசையை அற்புதமாக பாடிவரும், திருபுவனம்  ரீ.ஆத்மநாதன் அவர்கள்,  வளரும் இளம் கலைஞர்களின் எதிர்கால நன்மையைக் கருதி, தொடர்ந்து தொய்வின்றி இந்த இசை, நடன விழாவை நடத்தி வருவது நம் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

by Swathi   on 28 Jan 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்! சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது .. 
திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம் திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்
தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்  தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம் 
"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்" -தேசியக் கருத்தரங்கம்
குணங்களுக்கேற்ற  இராகங்கள் குணங்களுக்கேற்ற இராகங்கள்
புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும்  ஆவணப்படம் – தொடக்கவிழா புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா
தொல்லிசையும் கல்லிசையும்  ஆவணப்படம் - தொடக்கவிழா! தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா!
கருத்துகள்
04-May-2019 11:03:06 விஸ்வநாதன் இ கே said : Report Abuse
உங்கள் பணி வளர்க வாழ்க வளமுடன் விசு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.