LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நிர்மலா ராகவன்

தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன்

தீபாவளி நெருங்கிவிட்டதை அறிவிப்பதுபோல் பட்டாசு சத்தம். இரவில்லை, பகலில்லை, எந்நேரமும் பேரொலி.

புவனாவின் பருத்திருந்த வயிற்றுக்குள்ளும் அது எட்ட, அதைத்தாங்காத கரு அவளை எட்டி உதைத்தும், வேகமாக உருண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருந்தது.

“என்ன இது! சித்தேமுந்தி இந்தப்பக்கம் நீட்டிக்கிட்டு இருந்திச்சு, இப்போ அந்த இடம் சப்பையா இருக்கே!” என்று சிறுபிள்ளையைப்போல் அதிசயித்த பாஸ்கரின் கரத்தைப்பற்றி, முன்னால் துருத்திக்கொண்டிருந்த வயிற்றுப் பகுதியில் வைத்தாள்.

அவளது புன்சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. அவன் கைபட்ட அதிர்ச்சியில் குழந்தையின் தலை இன்னொரு பக்கம் தாவ, “என் பையன் இப்பவே என்ன ஓட்டம் ஓடறான்!” என்று பெருமிதம் கொண்டான்.

“பிரசவத்தை இங்கேயே வெச்சுக்கலாம், புவனா. நீ இல்லாம, வீடு வீடாவே இருக்காது!” கெஞ்சலாகச் சொன்னான். “ஒங்கம்மாவை ஒத்தாசைக்கு இங்கே வரச் சொல்லலாம், என்ன?”
“நல்லா வருவாங்களே, எனக்காக!எந்த வேளையில என் தம்பி பிறந்தானோ, அதிலிருந்தே எங்கம்மா என்னை..,” பொருமினாள். ”நான் அந்த வீட்டிலே வேலைக்காரியா, ஆயாவாகத்தான் இருந்தேன்!”
தன்மீது அன்பைப் பொழியும் மனைவிக்கு, தன்னைப் பெற்ற தாயின்மேல் அப்படி என்ன வன்மம்? பாஸ்கருக்குப் புரியத்தான் இல்லை.

முதன்முதலில் அத்தாயையும், மகளையும் கோயில் பிராகாரத்தில் பிரதட்சணம் பண்ணும்போது பார்த்தபோதே, ` இவர்களுடன் முன்பே எங்கோ இணைந்திருக்கிறோம்!’ என்கிற நெருக்கம் உண்டாகவில்லை?

தீப ஆராதனை, அர்ச்சனை எல்லாம் முடிவதற்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்ந்தவனாக, தனியாக, தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்த முதியவளிடம் வந்து, “வணக்கங்க!” என்று ஆரம்பித்தான்.

“என்னம்மா இது, அநியாயமா இருக்கு! முன்பின் தெரியாத ஒருத்தர் வந்து, `ஒங்க மகளை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்’னு சொன்னா, நீங்களும் ஒடனே, `சரி’ன்னுடறதா?’

பொறுமையுடன் பேசினாள் லட்சுமி. “புவனா! நம்ப குடும்பம் இருக்கிற இருப்பிலே, ஒனக்கு `கல்யாணம்’ அப்படின்னு ஒண்ணு ஆகுமான்னு நான் பயந்துக்கிட்டிருந்தேன். வாரம் தவறாம, சிவன் கோயிலுக்கு வந்து, விசேஷ அர்ச்சனை செய்யறது எதுக்காக?” கடவுளே இப்படி ஒரு வரனைக் கொண்டு சேர்த்திருக்கிறார் என்று மகிழ்ந்து, சற்று நேரம் அந்த நினைப்பில் திளைத்திருந்தாள்.
புவனாவும் யோசித்தாள்.

அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவராமே!

ஏன் அப்படி?

பெற்றவர்கள் கொடுமைப்படுத்தியதால், சட்டபூர்வமாக அவர்களிடமிருந்து சிறுவயதிலேயே பிரிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் வளரவென அங்கு விட்டிருப்பார்களோ?

ஒருவேளை, திருமணம் ஆகுமுன்பே பிறந்ததால், எவளாவது தறுதலை ஒரு கிழிந்த துணியில் மூட்டையாகக் கட்டி, குப்பைத்தொட்டியில் போட்டுவிட்ட சிசுவோ?

அவளது யோசனையைப் புரிந்துகொண்ட தாய் மேலும் வாதித்தாள்: “அவரைப் பாத்தா ரொம்ப நல்லமாதிரியாப்படுது. அந்தக் கண்ணிலே கபடமில்ல.எதிரே இருக்கிறவங்களோட கண்ணை நேருக்கு நேர் பாக்கற உண்மை இருக்கு!”

எப்படித்தான் அம்மாவுக்கு மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் துல்லியமாக எடைபோட முடிகிறதோ என்று புவனா வியந்தாள்.

“அதோட,” தாய் தொடர்ந்தாள். “சின்ன வயசிலே பாசத்துக்கு ஏங்கினவங்க மத்தவங்ககிட்ட ரொம்ப அருமையா நடந்துப்பாங்க!”

புவனாவுக்கு வேறொரு சந்தேகம் எழுந்தது. “தம்பியைப்பத்தி அவர்கிட்ட சொன்னீங்களாம்மா?”

“மறைக்கிற விஷயமா இது?” பெருமூச்சுடன் வெளிப்பட்டது பதில் கேள்வி.

நாற்பது வயதுக்குமேல் பிறந்த ஒரே மகன்! அவன் நான்கு வயதாகியும் சரியாகப் பேசவோ, பிடித்துக்கொள்ளாமல் நடக்கவோ முடியாமல் போனபோது பயம்தான் உண்டாயிற்று.

`நெருப்பு சுடும்’ என்று எவ்வளவு முறை சொன்னாலும் விளங்கிக்கொள்ளாது, நீலப் பிழம்பில் கையை வைத்துவிட்டு அலறுவானே!

`முன்வினை! நீ எப்போதோ செய்த பாவத்தைத் தொலைப்பதற்காக உனக்கு இந்தப் பிறவியில் இப்படி ஒரு துன்பம்!’ என்றார்கள் சிலர்.

மருத்துவர்கள், `இது மூளைக் கோளாறில்லை. ஆடிசம் என்ற வியாதி!’ என்று சொன்னார்கள்.

லட்சுமிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஆயுள் பரியந்தம் மகனை விவரம் தெரியாத குழந்தையாகப் பாவித்து, ஒவ்வொரு கணமும் கட்டிக் காக்க வேண்டும்!

நாளடைவில், அதிர்ச்சியும், சோகமும் சிறுகச் சிறுக மறைய, அளவிலா அன்பும், அமைதியும் அவ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. மாற்ற முடியாததை ஏற்கும்போதுதானே விவேகம் பிறக்கிறது!

மகனையே எந்நேரமும் கவனிக்க வேண்டியிருந்த லட்சுமியால் கணவனின் எதிர்பார்ப்பின்படி ஒரு ஆதர்ச மனைவியாக நடந்துகொள்ள முடியவில்லை.

“இத்தனை வருஷம் கழிச்சு ஒரு ஆம்பிளைப் பிள்ளையைப் பெத்தியே! அதையாவது ஒழுங்கா செஞ்சியா?” என்று, ஏதோ அவள் செய்த தவற்றால்தான் தன் வாரிசு இப்படி அவமானகரமாக இருக்கிறான் என்று குமைந்தவன், `பெற்றவளே படட்டும்!’ என்று நினைத்தவனாக, ஒரு நாள் எங்கோ போய்விட்டான்.

எதையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கவில்லை லட்சுமி. எத்தனை வயதானாலும், தவழ்ந்தபடியே அவளிடம் வந்து, அருமையாக காலைக் கட்டிக்கொண்ட மகன்! தான் சிறிது கோபமடைந்துவிட்டாலும் பரிதவித்துப்போய், கன்னத்தில் முத்தமாரி பொழியும் மகன்! அவனுக்காகவே வாழ நிச்சயித்தாள்.

ஆனால், குழந்தையாகவே இருந்த அவனை ஒவ்வொரு வினாடியும் மேற்பார்வை பார்க்க வேண்டியிருந்தது எளிதாக இருக்கவில்லை.

`புவனா! தம்பி என்ன செய்யறான், பாரு! தண்ணித் தொட்டியில விழுந்துடப்போறான்!’

`புவனா! தம்பியோட கால்சட்டை நனைஞ்சிருக்கே! மாத்தக்கூடாது?’

ஓயாமல் தொணதொணத்த தாய்மேல் வெறுப்புதான் மூண்டது புவனாவுக்கு. தன்மீது எப்போது இத்தனை கரிசனம், இத்தனை பரிவு காட்டியிருக்கிறாள்! மூன்று வயதிலிருந்தே தானாகக் குளித்து, சாப்பிட்டு...!

திருமணமாகி, தனிக்குடித்தனம் வந்தபின்பும் அவளுடைய ஆற்றாமை குன்றவில்லை.

தாய்க்கு நேர் எதிரிடையாக கணவன்! இத்தனை காலமும் இலக்கு இல்லாது தேக்கி வைத்திருந்த பாஸ்கரின் அன்பு இப்போது பிரவாகமாகப் பெருக்கெடுத்தது.

`குங்கும்பபூ வாங்கிட்டு வந்தேனே! குடு, பாலிலே கரைச்சுத் தரேன்!’

`படுத்தா எழுந்திருக்க முடியாம திண்டாடறியே! சாய்வு நாற்காலி வாங்கிட்டு வந்திருக்கேன், புவனா. சாய்ஞ்சு ஒக்காந்து, அப்படியே தூங்கிடலாம்!’

எதிர்பாராது கிடைத்த அளப்பற்ற பரிவு புவனாவுக்கு உவகையாக இருந்தது. அதே சமயம், அச்சத்தையும் விளைவித்தது.தான் இத்தனை அன்புக்கும் தகுதிதானா!

ஒரு நாள், தன்னையும் அறியாமல் அழுதுகொண்டிருந்த புவனைப் பார்த்துப் பதறிப்போனான் பாஸ்கர். “என்ன புவனா? ஏம்மா?”

“என்னை விட்டுட்டுப் போயிட மாட்டீங்களே?”

“என்ன ஒளர்றே?”

“பிறக்கப்போற குழந்தை.. தாய் மாமன்மாதிரி இருந்துட்டா?”

நிதானம் தவறாது அவளருகே வந்து, தோள்களை அரவணைத்தபடி அமர்ந்தான். “பைத்தியம்! இதெல்லாம் நம்ப கையிலேயா இருக்கு? அப்படியே இருந்தாத்தான் என்ன? நம்ப சந்தோஷத்துக்குச் சாட்சி இது! கையில பிள்ளையை எடுத்தா, அதுதான் தோணும்!”

யாரோ பொறியில் அறைந்தாற்போன்ற உணர்வு ஏற்பட்டது புவனாவுக்கு.

பக்கத்திலிருப்பவனும் ஓர் ஆண்மகன்! கணப்பொழுதின் உணர்ச்சி வேகத்தில், தன் காதலுக்குப் பாத்திரமானவளுக்குள் தன் வித்தை நட்டுவிட்டான். அதுகூட, இயற்கையின் விளைவாக, அவனுக்கே தெரியாமல் நடந்ததுதான். அவனுக்கே இன்னும் பிறவாத மகவின்மேல் இவ்வளவு பாசம்!

அப்படிப் பார்த்தால், விழித்துக்கொண்டோ, தூங்கிக்கொண்டோ இருக்கும் தாயிடம் ஒவ்வொரு வினாடியும் தான் அவளுள் இருப்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறதே, கரு! அது கண், காது, தலைமுடி என்று முழு உருவமாக வெளியே வரும்போது, ஒரு தாய் அதனை அளவின்றி நேசிப்பத்தில் என்ன தவறு?

கட்டிய கணவன்கூட அம்மாவுக்குப் பக்கபலமாக இருக்கவில்லை, பாவம்!

புவனாவின் அழுகை பலத்தது. அலறலும், கேவலுமாக வெளிப்பட்டது அவள் குரல்: “எங்கம்மாவை இப்பவே பாக்கணுங்க!”

(தமிழ் நேசன், 1992)

- நிர்மலா ராகவன்

by Swathi   on 07 Feb 2015  0 Comments
Tags: நிர்மலா ராகவன்   நிர்மலா ராகவன் சிறுகதைகள்   தனக்கு   Nirmala Raghavan   Nirmala Raghavan Short Stories        
 தொடர்புடையவை-Related Articles
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩ புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.