LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

தவறுகள் திருத்தப்படும்

சில நாட்களாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போதே பேப்பரை பிடுங்கிச்செல்லும் மகன் பாலு நான் பேப்பர் படிப்பதை சட்டை செய்யாமல் அவன் பாட்டுக்கு அம்மா கொடுத்த காப்பியை வாங்கி குடித்துவிட்டு, சென்று விடுகிறான்.

எனக்கு சங்கடமாக இருந்த்து, எப்பொழுதும் என்னிடம் வம்புக்கு இழுத்து சண்டை போடும் பாலு இப்பொழுதெல்லாம் முகத்தில் சோகக்களையோடு இருப்பது மனதை என்னவோ செய்கிறது.அவன் அம்மா இதை எல்லாம் கவனிக்கிறாளா
தெரியவில்லை, நானாவது அவளிடம் சொல்லலாமா என்று நினைத்துப்பார்த்து வேண்டாம் அவள் உடனே இதை பெரிது படுத்திவிடுவாள், அவன் அலுவலக விசயமாக இருந்தால் அப்புறம் என் மீது வருத்தப்படுவான். இந்த அப்பா ஒண்ணுமில்லாத விசயத்தை பெரியது பண்ணிவிட்டார் என்று.

அரசு அலுவலகத்தில் சாதாரண உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பத்திரிக்கை படிப்பது, அப்புறம்,ஒரு நடை நூலகம் செல்லுதல் அங்கு சில பத்திரிக்கைகளை வாசித்தல், பின் மதியம் வீடு வந்து சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம், மாலை பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடை, அங்கு உள்ள நண்பர்களுடன்
ஒரு அரட்டை உள்ளூர் விசயங்கள் முதல் அனைத்து நாடுகள் விசயங்கள் வரை ஒரு அலசல், இப்படியாக என்னுடைய ஓய்வு வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.

ஒரே மகன் பாலு பட்டப்படிப்பு முடித்து ஒரு கம்பெனியில் சாதாரண உத்தியோகத்தில் சேர்ந்து நான்கு வருடங்களில் நல்ல பதவிக்கு வந்துவிட்டான். காலை வீட்டிலிருந்து கிளம்பி மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட வசதியிருந்தும், வரமாட்டான். அங்குள்ள காண்டீனிலே சாப்பிட்டு வேலையை தொடர்வான். மாலை வீடு வந்து சேர எப்படியும்
ஏழு மணி ஆகிவிடும்.

கல கலப்பானவன், ஒரு நண்பனைப்போலவே என்னிடமும், அவன் அம்மாவிடமும் பழகுவான். நாங்கள் இருவருமே அவனை அப்படித்தான் வளர்த்தோம். அவளாவது சில நேரங்களில் மகனிடம் கடிந்து கொள்வாள், நான் நிதானமானவனாகவே இருப்பேன். இதனால் என்னிடம் பல நண்பர்கள் தங்களுடைய குறைகளை வந்து சொல்வர்.

இவனும் பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பான்.அதனைப்பற்றி நானும் அவனும் கூட அலசியிருக்கிறோம்.

அப்படிப்பட்டவன் சில நாட்களாக ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியவில்லை, மெதுவாக மனைவியிடம், என்னம்மா! பாலு இப்பவெல்லாம் ராத்திரி லேட்டா சாப்பிடற மாதிரி இருக்கே, மெதுவாக பேச்சை தொடங்கினேன்.எடுத்தவுடன் அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றால் அவள் மிரண்டுவிடுவாள்.

இல்லையே ஒன்பது மணிக்கு டாண்ணு சாப்பிட்டறரானே, நீங்கதான் வெளிய போய்ட்டு உங்க நண்பர்கள் கிட்ட பேசிட்டு, இப்பவெல்லாம் ஒன்பது மணிக்கு மேல வர்றீங்க, பதிலை என்மீது கேள்வியாக பாய்ச்சினாள்.அப்படியானால் அவன் அம்மாவிடம் தன் கவலையை காண்பிக்கவில்லை, இருந்தாலும் என் மனது குறு குறுத்துக்கொண்டே
இருந்தது,என் மகனைப்பற்றி எனக்கு தெரியும், இருபத்தி ஏழு வருடங்களாக அணுஅணுவாய் பார்த்து பார்த்து வளர்த்தவனுக்கு அவனுடைய மாற்றங்கள் புரியாமல் இருக்குமா. இதை எப்படி இவனிடம் தெரிந்துகொள்வது

அதற்கான சமயத்தை நானே மறு நாள் காலையில் உருவாக்கிக்கொண்டேன். நான் பேப்பர் படித்துக்கொண்டிருந்த பொழுது என்னை தாண்டி சென்றவனை நானே கூப்பிட்டு பாலு இந்தா பேப்பர், இப்பவெல்லாம் எங்கிட்ட பேப்பரே கேட்கறதில்ல, என் மேல கோபமா?என்னப்பா நீ பேப்பருக்கெல்லாம் கோபிப்பாங்களா?நீங்க படிங்கப்பா என்று விலகிப்போக நினைத்தவனை, வலுக்கட்டாயமாக பேச்சுக்கொடுத்தேன். ஏதாவது பிரச்சனையா பாலு உனக்கு? கேட்ட என்னை உற்றுப்பார்த்தவன் அப்படி ஒண்ணும் இல்லையேப்பா, குரலில் உறுதியில்லாமல் இருந்தது.பரவாயில்லை அப்பாவிடம் சொல்லலாம் என்றால் தாராளமாக சொல் என்றேன். ஒரு நிமிடம் யோசித்தவன் சாயங்காலம்
காந்திபார்க் பக்கம் வாப்பா, அங்கே பேசலாம்.

நான்கு மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டேன்.பார்க்குக்குள் சில சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருந்தனர், என்னைப்போல  சிலர் அங்கு போடப்பட்டிருந்த சிமிண்ட் பலகையில் அமர்ந்திருந்தனர். அடர்த்தியான
மரங்களின் மேல் பறவைகளின் சத்தம் கேட்க இனிமையாக இருந்த்து. மனம் மட்டும் பையனைப்பற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

திடீரென யாரோ தோளை தொட்டது போல உணர்ந்து நிமிர்ந்து பார்க்க பாலு நின்று கொண்டிருந்தான்.சா¡¢ப்பா ரொம்ப நேரமா காக்க வச்சுட்டனா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல பாலு, சும்மா வீட்டுலதான இருக்கேன், அப்படியே எனக்கும் பொழுது போகணுமில்ல.

என் அருகில் உட்கார்ந்து கொண்டவன் ஒரு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தான். பின் மெதுவாக காதலை பத்தி என்ன நினைக்கிறப்பா? மெல்ல அவன் முகத்தைப்பார்த்தேன். நீ யாரையாவது காதலிக்கறியா? கேள்வியை
அவனிடமே வீசினேன்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், ஆமாப்பா,நான் எங்க ஆபிசுல வேலை செய்யற பொண்ணை காதலிச்சேன், ஆனா அந்தப்பெண் என்னைவிட பெட்டரா ஒருத்தர் கிடைச்சவுடனே, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு எங்கிட்டயே
பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு வரச்சொல்றா, அதெப்படி எங்கூடவே

இத்தனை நாளா பேசிப்பழகிட்டு சட்டுன்னு இன்னொருத்தன் கூட கல்யாணத்துக்கு ஒத்துக்கறாங்க, ஆணையும், பொண்ணையும், சேர்த்துத்தான் சொல்றேன். இதனால சம்பந்தப்பட்டவங்க மனசு எவ்வளவு பாடுபடும்.

கண்ணை மூடி உட்கார்ந்திருந்தேன். உண்மைதான் மனசு மிகவும் கஷ்டப்படும்.ஆனால் அந்தப்பெண்ணின் சூழ் நிலை அப்படி செய்ய வைத்திருக்கலாம் அல்லவா, பையனிடம் மெதுவாக சொன்னேன்.அந்த சூழ்நிலை வரும் என்று முன்னரே தெரிவித்திருக்கலாம் அல்லவா, பையன் என்னிடமே  திருப்பினான்.நானும்

ஓரளவு மனதை திடப்படுத்தி இருப்பேனே, நீ இதனால மனசு ரொம்ப கஷ்டப்பட்டுட்டயா? நான் முதல்ல கஷ்டப்பட்டுட்டேன் ஆனா இப்ப மனசை தேத்திக்கிட்டேன், நான் கேட்டது என்னன்னா, இந்த மாதிரி நடந்துக்கறவங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறதுதான்.

எதற்கு இந்தக்கேள்வியை என்னிடம் கேட்கிறான் என்பது போல அவனைப்பார்த்தேன். பாலு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களுக்கு பாதகமா இருக்கும்போது, தனக்கு இதுதான் வேணும்,கிடைக்கலயின்னா ஏதாவது பண்ணிக்குவேன், அப்படீன்னு நினைக்கறது, இல்லயின்னா பெத்தவங்களை பிளாக்மெயில் பண்ணறது, இதெல்லாம் நியாயம்னு நினைக்கிறீயா?

அப்ப அவங்களை நம்புனவங்களை கைவிட்டுட்டு சந்தர்ப்ப சூழ்நிலை அப்படீன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு அவங்களை கழட்டி விட்டுடறது மட்டும் எப்படி நியாயம்? உண்மைதான் பாலு கண்டிப்பா அவங்களுக்கு மனசுல பெரிய காயம் உண்டாகும்,ஒத்துக்கறேன்.

அதுக்கு என்னதான் மருந்து?

காலம் கடந்து போன பின்னால, நாம செஞ்ச காரியத்துனால அவங்க பாதிக்கப்பட்டிருந்தாங்கன்னா அதுக்காக மனதார மன்னிப்பு கேட்கறத தவிர வேற வழியில்ல.

அப்ப நீங்க சுமித்ரா ஆண்டிய காதலிச்சுட்டு அம்மாவை கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களே அதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க. திக்பிரமையடைந்துவிட்டேன். சா¢யான கேள்வி, இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு
முன்னால் தூரத்து உறவான சுமித்ராவையே மணமுடித்துவிடலாம் என இவர்கள் வீட்டார் நினைத்துக் கொண்டிருக்க,தானும் அவளும் வரம்பு மீறாமல் பேசிப்பழகிக்கொண்டிருக்க, விதி தனக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்து பெண்ணையும் தர தயாராயிருந்த உறவினர் ஒருவருக்கு சம்மதம் கொடுத்துவிட்ட நான்  மற்றும் என் வீட்டார் செய்தது, அந்த சுமித்ராவுக்கு பெரிய துரோகமல்லவா?

எதுவும் பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்த என்னிடம், சாரிப்பா நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க அவங்களுக்கு உங்களைவிட பெட்டரான மாப்பிள்ளையே கிடைச்சு இப்ப அவங்க நல்லா இருக்காங்க. இந்த விசயம் கூட
அவங்க வீட்டுக்காரர்தான் எங்கிட்ட சொன்னாரு.

நீ எப்படி அவரை சந்திச்சே? மறுபடியும் ஒரு சாரிப்பா, நான் ஒரு பொண்ணை விரும்பறேன்னு சொன்னனில்ல, அந்தப்பொண்ணு சல்யாணப்பத்திரிக்கை கொடுத்துச்சுடுச்சுன்னு சொன்னது பொய். ஏண்ணா அந்தப்பொண்ணு சுமித்ரா ஆண்டியோட பொண்ணுதான், பேரு ரம்யா

அவங்க வீட்டுக்கு போனப்பத்தான் என்னையப்பத்தி விசாரிச்சுட்டு அவங்களே இந்த விசயத்தை சொன்னாங்க.

நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவீங்கன்னு நம்புறேன், கேட்டுவிட்டு என் முகத்தை பார்த்தவனின் கைகளை ஆதரவாய் பற்றினேன்.

correction of mistakes
by Dhamotharan.S   on 03 May 2016  1 Comments
Tags: Thavaru   Thirutham   தவறுகள்   திருத்தம்           
 தொடர்புடையவை-Related Articles
தவறுகள் திருத்தப்படும் தவறுகள் திருத்தப்படும்
கருத்துகள்
17-May-2021 12:49:47 மீனாட்சி said : Report Abuse
சிறப்பு மிக சிறப்பு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.