LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

கொடுக்கல் வாங்கல் உயிருள்ள மொழிகள் வழக்கில் இருக்கும்போது கொடுக்கல் வாங்கல் இருக்கவே செய்யும். பல பொருள்கள் ஒரு மொழி பேசுபவரிடையே சிறந்திருக்கும். அவற்றை மற்றொரு மொழி பேசுவோர் பயன்படுத்த வருவது உலக இயற்கை. ஆங்கிலேயர் வழியாக "மோட்டார் கார்' நம் நாட்டிற்கு வந்தது; அதனோடு "கார்' என்ற சொல்லும் தமிழுக்குள் நுழைந்தது. எனவே கொடுத்தும் வாங்கியும் வாழ்வது மக்கள் பண்பாட்டு வளர்ச்சியையே காட்டுகிறது.


வடமொழி
"மயில்' இந்திய நாட்டுப் பொருள். திராவிட மொழியைச் சேர்ந்த சொல். இது தெய்வீகம் என்று கருதப்படுகின்ற வடமொழியிலும் மயூரம் எனப் போய்ப் புகுந்ததும் இயல்புதானே! இந்திய-ஐரோப்பிய மொழியில் இதற்கு ஒரு பெயர் அப்போது இருந்ததில்லை. மயிலின் அழகில் சொக்கியவர்கள் இதன் பெயரையும் கேட்டு மகிழ்ந்து அதனையே தம் மொழியிலும் வழங்கினார்கள். இப்படியே இன்னும் எத்தனை எத்தனையோ மொழிகள் வடமொழியில் போயுள்ளன. அப்போது வடமொழியில் இருந்தும் உயிருள்ளவையாய் வழக்கில் இருந்த சொற்கள் தமிழில் வந்துதானே வழங்கும்! இந்திய மத ஒருமைப்பாடு எழுந்தபோது இவ்வாறு பல சொற்கள் பொதுச் சொற்களாக ஆகிவிட்டன. புத்தர், அருகர் முதலியோர் கொள்கைகள் தமிழ் நாட்டில் பரவியபோது இந்தக் கொள்கையில் பழகிவந்த சொற்கள் தமிழ் மொழியில் எத்தனையோ வந்துவிட்டன. புத்தர் என்ற பெயர் தமிழல்ல என்று தள்ள முடியுமா? இவையெல்லாம் சங்க காலத்திலேயே தமிழில் புகுந்துள்ளன. தமிழிற் புகுந்த வடசொற்களை எண்ணி முடியாது. இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கும் தொடர்களை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

முண்டா
வடமொழி இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்பு "முண்டா' இனத்து மொழிகள் இந்தியாவில் வழங்கியிருத்தல் வேண்டும். அம்மொழிகளைப் பேசுவோரோடு தொடர்புகொள்ள வந்தபோதெல்லாம் ஒருசில சொற்களேனும் அவர்களிடமிருந்து தமிழில் நுழையாதிருக்க முடியுமா? வழுதுணங்காய், தவளைக்காய், மீசை முதலியன அத்தகையன என்று கருதுகிறார்கள். இளநீர் என்று சொல்லுகிறோமே அந்தப் பெயரை எண்ணிப் பார்த்தோமோ? இளந்தேங்காய் என்பதுதானே அதன் பொருள். அப்படியானால் "நீர்' என்பது தேங்காயை அல்லவா குறிக்க வேண்டும். அப்படி, தேங்காய் என்ற பொருளிலேயே "நீர்' என்ற சொல் "முண்டா' மொழியில் வழங்குகிறது.

கீழை நாடுகள்
பிற நாட்டினரோடும் நம்முடைய தமிழ்நாடு பழங்காலத்திலிருந்து உறவு கொண்டாடியது. கீழைத் தீவுகளிலிருந்து பல நறுமணப் பொருள்கள் நம் நாட்டில் வந்து நம் மக்கள் மனத்தையும், மூக்கையும் கவர்ந்தன. தக்கோலி, அருமணவன் முதலியவை அந்நறுமணப் பொருள்களில் ஒருசில. இவை, தாம் விளையும் இடத்தின் பெயரையே தம் பெயராகக் கொண்டவை என்று அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டுகிறார். இவற்றை எப்படி ஒழித்துத் தள்ளுவது? நாம் நம்முடைய பண்பாட்டை அங்கெல்லாம் பரப்பினோம் என்பதற்கு நிலையான சின்னங்களாக அங்கிருந்து வந்த சொற்கள் இன்றும் விளக்குகின்றன. நாம் மிகமிக இன்று விரும்பிச் சுவைக்கும் முருங்கைக்காய் சாம்பாரில் விளங்கும் "முருங்கை', சிங்களவர்கள் நமக்குக் கொடுத்த அன்பின் காணிக்கை. இப்படி வாங்கிக் கொள்வதற்கு ஈடாக எவ்வளவு மொழிகளை அவரவர்கட்குக் கொடுத்திருக்கிறோம். சீனர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. படகு வகையைச் சேர்ந்த "சம்பான்' சொல்லும், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் "காங்கு' என்ற சொல்லும், "பீங்கான்' என்ற சொல்லும் நாம் விரும்பும் சீனப்பட்டைப்போலச் சீன நாட்டிலிருந்து வந்தவையே ஆகும்.

கிரேக்கர்
நம்முடைய "தந்தமும் முத்தும்' மேனாட்டிற்குப் போனதுபோல, கிரேக்க மொழிச் சொற்களும் தமிழில் வந்துள்ளன. சாட்டையைக் குறிக்கும் "மத்திகை' என்பதும், தரைக்குள்ளே செல்லும் வழியைக் குறிக்கும் "சுருங்கை' என்ற சொல்லும், "கன்னல்' என்ற நாழிவட்டிலின் பெயரும், இரண்டரை நாழிகையைக் குறிக்கும் "ஓரை' என்பதும் கிரேக்கச் சொற்களேயாம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் 891 அரபிச் சொற்கள் வந்துள்ளன. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சொற்களும் இவற்றில் நிறைய வருகின்றன. வசூல், தபா (முறை), ரஜா, இமாம், இலாகா, பிஸ்மில்லா, உருசு, காயம் (உறுதி), ஜேப்பி, சைத்தான், தகவல், தாக்கீது, தவாலி, நகரா, மக்கர், மால் (மகால்) முதலிய பல சொற்கள் அன்றாடப் பேச்சில் புகுந்து தமிழோடு தமிழாய் வழங்குகின்றன.

பாரசீகம்
முகமதிய அரசு தமிழ் நாட்டிலும் பரவியபோது ஏறக்குறைய 65 சொற்கள் பாரசீகத்திலிருந்து தமிழிற் புகுந்துள்ளன. இவற்றில் சில - சுபேதார், முலாம் முதலியவை அரபியிலிருந்து வந்தவை. "துப்பாக்கி' என்பது துருக்கிய மொழியிலிருந்து பாரசீக மொழி வழியாகத் தமிழ்நாட்டில் புகுந்தது. சிப்பந்தி, தாவாலி, தம் பிடித்தல், தர்கா, நாஸ்தா, மஜா, மாலீசு, மோரை, லங்கர், லுங்கி, ஜமுக்காளம், ஜன், சால் (வை), ஜோக்கு, சர்க்கார் முதலியவை தமிழாகவே ஆகிவிட்டன. "சுமார்' என்ற சொல்லைத் தமிழென்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் அது பாரசீகச் சொல்.

உருது
தென்னிந்தியாவில் முஸ்லீம்கள் ஆண்டபோது தெக்காணி உருது அவர்களால் ஓங்கியது. இதன் பயனாக 961 உருதுச் சொற்கள் தமிழில் வந்துள்ளன. இங்கே நாம் உருது மொழியை இந்தியிலும் வேறாகக் கொள்ளவில்லை. அக்கப்போர், அக்கரகாரம், அக்கு, சல், ஆசாமி, ஆசாரவாசல், அண்டா, அணா, அபினி, அம்பர், அம்பாரம், அம்பாரி, அமுல், அலக்கலக்காக, அலாதி, அமீன், இந்துஸ்தான், ராஜினாமா, ராட்டினம், லங்கோடு, இனாம், ஊதா, ஊதுவத்தி, ஐவேஜு, கச்சா, கச்சேரி, கஜானா, கசகசா, கசாப்பு, குத்தகை, குலாம், சந்தா, சப்பரம், சர்க்கா, சராசரி, சாமான் முதலிய எத்தனையோ சொற்களை ஒவ்வொரு நாளும் பேசி வருகிறோம்.

போர்த்துக்கீசியம்
மேல் நாட்டார் 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டில் தலைகாட்டத் தொடங்கினார்கள். முதலில் வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். அவர்கள் கொண்டுவந்த பொருள்களில் பலவற்றின் பெயர் இன்று "பறங்கி' என்ற முந்து நிலையோடு வழங்குகின்றன. பறங்கிக்காய், பறங்கிச்சக்கை, பறங்கிப்பட்டை, பறங்கிமா முதலியவற்றில் காண்க. ஊர்களின் பெயரிலும் போர்த்துக்கீசியத் தொடர்பைப் பறங்கிமலை, பறங்கிப்பட்டை முதலியவற்றில் காணலாம். அலமாரி, கோப்பை, ஜன்னல், அன்னாசி, கடுதாசி, அல்பனாத்தி, கிராத்தி, கொரடா, த்ராவி, பாதிரி, பீப்பாய், மேசை, மேஸ்திரி, வராந்தா முதலிய சொற்கள் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து வந்தவையே. ஆங்கிலத்திலிருந்து வந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறும் சொற்களில் பிஸ்கோத்து, புனல், பொத்தான் முதலியன போர்த்துக்கீசிய மொழியின் உச்சரிப்போடு ஒத்துள்ளன.

டச்சும் பிரெஞ்சும்
அவர்களுக்குப்பின் டச்சுக்காரர்கள் வந்தார்கள். இவர்கள் வழியாகத்தான் கக்கூஸ், சாக்கு, துட்டு, பம்பிளிமாஸ் முதலிய சொற்கள் தமிழுக்குள் புகுந்தன. பின்னே ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வந்தார்கள்.
23 சொற்கள் பிரெஞ்சிலிருந்து தமிழில் வந்த கதையைப் பல்கலைக்கழக அகராதி வெளியிடுகிறது. ஆசு, குசினி டாக்குத்துரை, பீரோ, லாந்தர் முதலியவை பிரெஞ்சு மொழியிலிருந்து நாம் பெற்ற பேறுகள்.

ஆங்கிலம்
பல்கலைக்கழக அகராதி 219 சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்தனவாகக் குறிக்கிறது. ஆனால், இன்று மாணவர்கள் பேசும் பேச்சில் இவற்றைவிட எத்தனையோ மடங்கு ஆங்கிலச் சொற்கள் வழங்கி வருகின்றன. ஆடுதன், ஆர்மோனியம், இஞ்சினியர், உயில், ஊக்கு, ஏக்கர், ஓட்டல், ஒயின், காப்பி, காரட்டு, கிறிஸ்துமசு, கிளாவர், கோச்சு, கோட்டு, சம்மன், சவரன், சிமிட்டி, சினிமா, சீல், மோதிரம், டாலர், டை, தார், நம்பர், பவுண்டு, பாங்க், பிராந்தி, பேப்பர், போலீஸ், மைல், மைனர், மோட்டார், வெல்வெட்டு, லீவு முதலிய பல சொற்கள் இன்றியமையாத தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன.

மராத்தியர்
மராத்தியர்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் சிலகாலம் ஆண்டார்கள். அவர்கள் விரும்பிய உணவு வகைகள், உடை வகைகள் முதலியன இன்றும் நமக்கு இனிக்கின்ற சொற்களாக வழங்குகின்றன. அட்டவணை, கைலாகு, கச்சாயம், அபாண்டம், காமாட்டி, கில்லாடி, குண்டான், கேசரிபாத், கோகும்பரி, சாம்பார், சவுக்கார், சாவடி, சேமியா, பட்டாணி, பேட்டை, லாவணி, ரசவாங்கி, வில்லங்கம், சொஜ்ஜி முதலிய பல சொற்கள் மராட்டியர் வளர்ந்த பண்பாட்டை இன்னும் பேசி வருகின்றன. இந்த வகையில் 60-க்கு மேற்பட்ட சொற்கள் வழங்குவதாகப் பல்கலைக்கழக அகராதி கணக்குக் கொடுக்கிறது.

கன்னடம்
கன்னட மொழியிலிருந்து 38 சொற்கள் தமிழில் வந்த கதையைப் பல்கலைக்கழக அகராதி பாடுகிறது. அட்டிகை, இதா, எகத்தாளம், எட்டன், சமாளித்தல், ஒரு "சிறை', அரிசி, சொத்து, பட்டாக்கத்தி, பம்பு (மூங்கில்), பீக்கலாட்டம் முதலானவை கன்னடச் சொற்களேயாம்.

தெலுங்கு
பல்கலைக்கழக அகராதியின்படி 335 சொற்கள் தெலுங்கிலிருந்து தமிழில் வந்துள்ளன. அக்கடா, அந்தரங்க வைபவம், அட்டி, அண்ணு, டாப்பு (அட்டவணை), இண்டிமாமா, ரெட்டி, ரவிக்கை, ராயசம், காவடம், ரேக்கு, லஞ்சம், லாகிரி, உத்தி, உப்பசம், உம்மச்சு, ஒட்டாரம், ஒயில், கட்டடம், கட்டப்பாறை, கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பந்தம், கம்பல், கரிசை, கலப்படம், கவுனி, காட்டம் (காரம்), குப்பம், கும்பு, கெடுவு, கொப்பி (கும்பி), கொலுசு, சந்தடி, சலவை, ஜளிப்பு (ஜலதோஷம்), சிட்டிகை, சிமிளி, உருண்டை, சுங்கு, ஜண்டை(சதை), சொக்கா, சொட்டு, சவுத்தி, த்ராபை, தடவை, திப்பி, திமிசு, தும்பு, தெப்பல் (அடி), தெலுங்கு தொட்ட(பெரிய), தோவத்தி(வேட்டி), நீச்சு (மீன்நாற்றம்), பட்டறை, பண்டைப் பேச்சு, பலப்பம், பவிசு, வாணலி, பால்மாறுதல், பிருடை, பூஞ்சைக் காளான், வெல்தி, ஜப்பை, ஜாஸ்தி, சந்து, சுளுவு முதலியன எல்லாம் தமிழ் நாட்டிற்கு வந்த கெட்டிமாரோடும், நாயக்கர்மாரோடும், தெலுங்கு நாட்டுப் பார்ப்பனரோடும் தமிழ் நாட்டில் குடியேறிய சொற்கள்.

மலையாளம்
மலையாள மொழி திராவிட மொழி இனத்தைச் சேர்ந்தது. கச்சவடம், காலன், கொச்சி, சொக்கன் (குரங்கு), தளவாடம், நெரியல், பிரதமன் (பாயாசம்), வஞ்சி முதலியன மலையாளத்திலிருந்து வந்த சொற்கள். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி 26 சொற்கள் மலையாளத்திலிருந்து தமிழில் வந்திருக்கின்றன என்று காட்டுகிறது.

வீண் ஆரவாரம்
தமிழில் இல்லாத சொற்கள் மேலே கண்டபடி எல்லாம் வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு ஆங்கில அறிவையோ, வடமொழி அறிவையோ காட்டுவதற்காக மட்டும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது கேலிக்கூத்தாகும். தண்ணீர் இருக்கும்போது ஜலம் என்று சொல்வானேன்? ஆனால், தெய்வீக நீர் என்று உணர்த்தத் "தீர்த்தம்' என்று சொல்வதில் பொருளுண்டு. இடத்திற்கு ஏற்றபடி சில சொற்களை எந்த மொழியிலிருந்து வந்தனவென்று பாராமலே பயன்படுத்துவது ஓர் அழகாகலாம். "பயம்' என்பது வடமொழிச் சொல்தான்; ஆனால், ஆழ்ந்த நிலையைக் குறிக்காமல் குழந்தையின் பொருளற்ற பயத்தையும் குறிக்கலாம். ஆகவே ஆழ்ந்த நிலையைக் குறிக்க பாரதியார் பயத்தையும் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று பாடினார். அந்த ஆழ்ந்த நிலையைக் குறிக்காதபோது "ஜயமுண்டு பயமில்லை மனமே' என்றே பாடினார். எனவே, வடமொழிச் சொல்லாக இருந்தாலும், தூய தமிழ்ச் சொல்லாக இருந்தாலும் இடமறிந்து பயன்படுத்தும் அழகை நாம் உணர வேண்டும்.

பொதுமக்கள்
ஆனால், பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் நிறைய பிறமொழிச் சொற்களே இருக்குமானால் அவர்களுக்கு என்ன விளங்கும்? கல்லூரிப் பாடநூல்கள் வேறு; பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு; பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி விளக்க வேண்டும். இங்கே மணிப்பிரவாளம் பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர் கொள்ளாது மறைந்து விட்டது. இலத்தீனில்தான் கருத்துக்களைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டனும் எழுதினார். இப்போதோ அந்த நிலை மாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் வந்துள்ளது. அந்த நிலை தமிழில் ஓராண்டு ஈராண்டில் வராது. கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வளரும். அது வரையிலும் ஆங்கிலத் - தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டுதான் வரும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.